வேரில் பழுத்த பலா
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
வேரில் பழுத்த பலா
சாகித்திய அக்காதமி பரிசு பெற்ற படைப்பு
சு. சமுத்திரம்
13, தீனதயாளு தெரு
தி. நகர், சென்னை - 17.
| முதற் பதிப்பு | : | ஏப்ரல் | 1989 |
| இரண்டாம் பதிப்பு | : | 1994 | |
| மூன்றாம் பதிப்பு | : | (வானதி) டிசம்பர் | 2002 |
| நான்காம் பதிப்பு | : | (வானதி) ஜூலை | 2003 |
இதனுள்...
1. வேரில் பழுத்த பலா – 1
2. ஒருநாள் போதுமா – 83
விலை: ரூ 50.00
| 🞸 Title | : | VERIL PAZHUTHA BALAA |
| 🞸 Author | : | Su. Samuthiram |
| 🞸 Subject | : | Novel |
| 🞸 Language | : | Tamil |
| 🞸 Edition | : | Fourth Edition, July, 2003 |
| 🞸 Pages | : | xii + 148 = 160 |
| 🞸 Publication | : | Vanathi Pathippakam 13,Deenadayalu Street Thyagaraya Nagar Chennai - 600017 |
| 🞸 Price | : | Rs. 50-00 |
ஒளி அச்சு : ஏகலைவன், சென்னை — 600 041.
Printed at: Mani Offset, Chennai - 5 ✆: 28555249, 28588186
அடையாளங்கள்
தோழர் வலம்புரிஜான் எழுத்தாக...
(“மெட்டி” இதழ் 1983 நவம்பர்)
கதைதான் ஒரு எழுத்தாளனை கவிழ்ந்து போகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். பேர் வாய்ந்த எழுத்தாளராக இருந்தாலும், சீர் வாய்ந்த கதையாக இல்லாவிட்டால், ஒரு எழுத்து தன்னை எழுந்து நடக்கவிட்ட எழுத்தாளனுக்குப் பெருமை சேர்ப்பதாக இருக்காது. சு. சமுத்திரம் போன்ற சில எழுத்தாளர்கள், மக்களின் மன மண்டபங்களில் மகுடாதிபதிகளாக இருப்பதற்குக் காரணம், அவர்களின் எழுத்து மனிதனைத் தொடுகிறது. தொட்டு அவனைத் தூக்குகிறது என்பதுதான். அவரது மைக்கூட்டிற்குள் நீலம் பூத்து திமிருகிறபோது, மண்ணுக்காக குரல் கொடுக்கிற அவரது மகத்துவம்தான் ‘தாள் மேடைகளில்’ தளிர்நடை போடுகிறது, எழுத்து என்ற வேள்வித்தீயில் எழுந்திடும் நீலப்பூவாக இருக்கிறவர் சு. சமுத்திரம் அவர்கள்.
நான் விரும்பி அடைந்த நண்பர்களில் அவர் முதல் வரிசை மனிதர். ஒரு கவிஞனுக்குரிய வெள்ளை மனமும், வேகப் பிளிறலும், ஒரு சமுதாய விஞ்ஞானிக்கு வாய்க்க வேண்டிய அடங்காத சினமும், ஆழமான அணுகலும், பாரம் சுமக்கிற மக்களுக்காக தனது எழுதுகோலைப் பகிர்ந்து கொள்கிற பக்குவமும், நீண்ட நாள் நிலைத்திருக்கப்போகிற தீர்க்க தரிசனமும் எழுத்தாளர் சு.சமுத்திரத்தின் அடையாளங்களாகும்.
அவரது எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் பெரிதான இடைவெளி ஒன்றும் இல்லை. கனமான நாவல்களுக்காக காலம் அவரைக் கௌரவப்படுத்தும்.
நுரைக்கிற சமுத்திரத்தின் நூதனமான கதை இது!
“கலைமகளின்” வாழ்த்தாக... (1994-ஜனவரி)
“பழுத்த பலாவுக்குப் பரிசு”
இந்த ஆண்டு சாகித்திய அக்காதெமிப் பரிக, ‘வேரில் பழுத்த பலா’ என்ற தமிழ் நூலுக்குக் கிடைத்திருக்கிறது. பலாவுக்கே இனிப்பும் சுவையும் மிகுதி. அதுவும் வேரில் பழுத்தால் சுவைக்குக் கேட்க வேண்டுமா? இரண்டு குறுநாவல்கள் இணைந்த நூல் இது. இதனை எழுதியவர் அன்பர் திரு. சு. சமுத்திரம் அவர்கள், தொலைக்காட்சி, வானொலித்துறையில் பணியாற்றும் திரு. சு. சமுத்திரம் அவர்களின் எழுத்தில், சமூகத்தின் அடித்தள மக்கள், போராடியும், தங்கள் நியாயமான உரிமைகளைப் பெற முடியாமல் அவதிப்படும் நிலையைக் காணலாம். கிராமப்புற மக்களின் வஞ்சனையற்ற உழைப்பு, பேச்சு, செயல்களையும், நகர்ப்புற மக்களின் டாம்பீகப் போலித்தனத்தையும், இவர் எழுத்துக்கள் பிரதிபலிக்கும். பழகுவதற்கு இனிய நண்பரான இவர், மேலும் பல பரிசுகள் பெற வாழ்த்துகிறோம்.
ஆய்வு ஏடுகள் வழியாக...
வேரில் பழுத்த பலா
உயர்ந்த நாவலில் படைக்கப்படும் கதைமாந்தர், உண்மை மனிதர்போல் ஆகிவிடுகின்றனர். கற்பனை மாந்தர் இவ்வாறு உயிரும் உணர்ச்சிமிக்க வாழ்வும் பெறுமாறு செய்தல், படைப்பவரின் அரியதிறனே ஆகும்.
நயங்கள் :
“உடை என்பது உடலை உடைத்துக்காட்ட அல்ல... மறைத்துக்கொள்ளவே.”
“நான் போட்டிப் பரிட்சை எழுதி வேலைக்கு வந்தேன். வேலைக்குன்னு பேனாவைத்தான் தொட்டேன். எவன் காலையும் தொடல.”
நல்லதுக்கும் கூட இன்னொருத்தன் அதிகாரத்தை எனக்காக பயன்படுத்தக்கூடாது.”
“படித்த அரிசனங்ககோளட திறமை, வெட்டி எடுக்கப்படாத தங்கம். தூசி படிந்த கண்ணாடி. தங்கத்தை வெட்டி எடுக்கும்போது, ஏதோ ஒரு பித்தளை இருக்குதுன்னு தங்கத்தை புதைச்சிடப்படாது. கண்ணாடியை துடைத்துப் பார்க்கணும். கைக்கண்ணாடி போதுமுன்னு அதை உடைச்சிடப்படாது.”
“சம்பளம் சிகரெட்டுக்கு, கிம்பளம் வீட்டுக்குன்னு பேசறாங்க... நீ இன்னார் தம்பி என்று நியாயம் தவறாமல் நடக்கவேண்டும். நேர்மை வேற... கடவுள் வேற இல்ல... கடவுள் கைவிடமாட்டார்.“
“கிராமத்துக்கு சேரி குனிகிறது மாதிரி, இங்கே குனிந்தால்... (அலுவலகத்தில்) பூமியில் வந்துதான் முன்தலை இடிக்கும். சிரிக்கிறவங்களைப் பார்த்து சீறணும். சீறுறவங்களைப் பார்த்து அலட்சியமாய் சிரிக்கணும்.”
“என் வாழ்க்கையே ஒரு திறந்த புத்தகம். ஆனால், அதில் நான்தான் எழுதுவேன். யார் வேண்டுமானாலும் படிக்கலாம்.”
“இந்த நாட்டில் இருந்து லாட்டரிகளும், கிரிக்கெட்டும் துரத்தப்பட்டால் ஒழிய, நாடு முன்னேறாது..”
“என்றைக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அரசியல்வாதி, கவிஞன், பத்திரிகை ஆசிரியன்னு ஒருவருக்கு பட்டம் வருதோ, அப்போ அவன் தன்னோட சாதிப் பட்டத்தை துறந்துடணும்.”
“உண்மையான காதலுக்கு உட்படுகிறவங்க, ஒருத்தரை ஒருத்தர் காதலிக்கணுமுன்னு பழகமாட்டாங்க... அவங்களுக்கு பழக்கத்துலதான் காதல் வரும். எப்படி காதலிக்கணும் என்கிறதைவிட, எப்படியெல்லாம் காதலிக்கக்கூடாது என்கிறதே முக்கியம்.”
“அலுவலகம் என்று மரத்தின் உச்சாணிக் கிளையில், அணில் கடித்த பழங்களையும், பிஞ்சுப் பழங்களையும் பிடுங்காமல் பார்த்த சரவணனுக்கு, ‘வேரில் பழுத்த பலாவாகிய அன்னம் (ஆரம்பத்தில்) பார்வையில் படாமல் போய்விட்டது.”
க. ரேவதி - இராணிமேரி கல்லூரி, சென்னை-4. (ஏப்ரல் 1992)
ஒருநாள் போதுமா?
அந்நியர்களிடமிருந்து விடுதலை பெற்றாலும், அதிகார வர்க்கத்தினரால் அடிமைகளாக நடத்தப்பட்டு, உரிமைகளையும், அடிப்படை சுதந்திரத்தையும் இழந்த மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தை சித்தரிக்கின்ற நாவல்களுள், சு.சமுத்திரம் அவர்களின் நாவல்கள், சிறப்பிடம் பெறுகின்றன.
“சிப்ஸ் போட்டு மேல்தளம் பூசணும். அஞ்சு பெரியாள், அஞ்சு சித்தாள் வேணும். ஐந்தல்ல ஐந்தைந்து இருபத்தைந்து பேருக்கும் அதிகமாக அவரைச் சூழ்ந்து கொண்டார்கள்.” என்ற காட்சி-விளக்கம் மூலம், கட்டிடத் தொழிலாளர்களிள் நிரந்தரமில்லா வேலை நிலைமைகளையும், அவர்களின் பொருளில்லா வாழ்வின் அவல நிலைமையையும் காட்டுகின்றார். கட்டிடத் தொழிலில் நாற்பது வருட அனுபவம் இருந்தாலும் கூட, நோய் நொடியோடு வயதாகிப்போன தொழிலாளர்களை கழித்துவிட்டு, திடகாத்திரமான தொழிலாளர்களை எடுக்கும் நிலையை, இங்கு சுட்டிக்காட்டுகின்றார்.
“நீ அந்தாண்ட போ... போன வாரம் ஒண்ணுக்கு போற சாக்குல, ஒரு மணி நேரத்த வேஸ்ட் பண்ணுன..”
பெண் கட்டிடத் தொழிலாளர்கள், மேற்பார்வையாளர்கள், மேஸ்திரிகள், காண்டிராக்டர்கள் ஆகியோர்களின் காம கண்ணோட்டத்திற்கும், இரட்டை அர்த்தப் பேச்சுக்களுக்கும், மறைமுக அழைப்புகளுக்கும் ஆளாகின்றனர்.
“ஆமா... நீ எருது, நான் உன்மேல உட்காரப் போற காக்கா...”
கட்டிடத் தொழிலாளர்கள் அன்றைய தினம் உழைத்த பின்பே அவர்களுக்குக் கால்வயிறு கஞ்சியாவது கிடைக்கும் என்ற நிலையில் உள்ளனர். எனவே அத்தொழிலாளர்களின் பகல் நேர உணவு எத்தகையது என்பது,
“வெற்றிலை சப்பாத்தியாம்.. கொட்டைப்பாக்கு உருளைக்கிழங்காம்... உமிழ்நீர் சாம்பாராம்... வாயே வயிறாம்.”
முந்நூறு குடிசைகள் உள்ள பகுதியில் கூலித்தொழிலாளர்கள் வசிக்கின்றனர். ஆனால் அங்கோ, அதற்கேற்ப எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் வாழ்கின்ற அவல நிலையினை சு. சமுத்திரம் அவர்களின் வருணனைத்திறம் வெளிக்காட்டுகிறது.
“குழாயல்ல, கார்ப்பரேஷன் ஒரு கழிசடை என்பதற்கான அடையாளம். அருகிலேயே கக்கூஸ். அங்கே கார்ப்பரேஷன் குழாய் நீர், வெட்கப்பட்டு, நுழைய மறுத்ததுபோல் வாசனை, வெளியே ஒவ்வொருவருடைய மூக்கிலும் நுழைந்து கொண்டிருந்தது. மொத்தம் முந்நூறு குடிசைகள் உள்ள அந்தப் பகுதியில் இரண்டே இரண்டு தண்ணீர் குழாய்கள்”.
பணிச்சுமையின் காரணமாக உயிரிழந்த வேலு என்ற கட்டிடத் தொழிலாளியின் குடும்பத்திற்கு தகுந்த இழப்பீட்டுத்தொகை கொடுக்காமல், குறைந்த தொகையைக் கொடுத்து மூடி மறைத்திட நினைக்கும் முதலாளிகளின் நயவஞ்சகத் தன்மையை எதிர்த்துப் போராடத் தயாராகிறார்கள் என்பதை, “நாங்களே காண்டிராக்டரை மிரட்டி உருட்டி நஷ்ட ஈடு வாங்கித் தந்துடலாம். அது பெரிய காரியமல்ல. ஆனால் இது ஒரு முன்னுதாரண கேஸாய் இருக்கதுனால... லேபர் கோர்ட்ல போடலாமுன்னு இருக்கோம். கேஸ் தோற்றுப்போய்ட்டால் மேலும் பலமா போராடலாம்... விடப்போறதில்லை.” என்று பெயிண்டர் பெருமாள் என்ற பாத்திரத்தின் மூலம் போராட்டமே இதற்கு ஒரே தீர்வு என்பதை உணர்த்துகிறார்.சு. சமுத்திரம், தம் நாவல்களில் தொழிலாளர்களின் இன்னல்களுக்கெல்லாம் தீர்வாக போராட்டங்களை கருவியாக்கி, திரண்டெழும் மக்கள் சக்தியின் ஆற்றலை வெளிப்படுத்தி உள்ளார். நாவல்களில், சமுதாயத்தின் அவலநிலையை சித்தரிப்பது மட்டும் படைப்பாகாது. அதற்கான காரணங்களையும், நிரந்தர தீர்வுகளையும் தருவதே ஒரு ஒப்பற்ற எழுத்தாளனின் கடமையாகும். அவ்வகையில், சு. சமுத்திரம் அவர்கள், சிக்கலுக்கான தீர்வை கூறுவதோடு, நம்மைச் சிந்திக்கவும் வைக்கின்றார்.
ப. தேன்மொழி - செல்லம்மாள் மகளிர் கல்லூரி, சென்னை - 32.
(டிசம்பர் 2001)
--------------------
வாசகக் கடிதங்களில் சில...
(1983 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மெட்டி இதழில் வெளியானவை)
பொய், பித்தலாட்டங்களிடையே உண்மை எதிர்நீச்சல் போட்டு வெற்றி காணப் புறப்படுவதாக, சரவணனை மனம் தளர்ந்து விடாமல் கதையை முடித்திருந்த விதம் நிறைவாக இருந்தது.
- எஸ். கணேசன், திருநெல்வேலி - 627 001.
சமுத்திரம் பொங்கியதால், சமுதாய சகதிகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.
- வடுகை. மணிசேகரன், ப. வடுகபாளையம்.
சு. சமுத்திரம் அவர்களின் “வேரில் பழுத்த பலா”, சமுதாயச் சீர்கேடுகளையும், நாகரிகமான காதலையும், அழகாக, மிக அழுத்தமாக வெளிப்படுத்துகிறது.
- எஸ். சுப்பிரமணியன், சென்னை - 12.
சமுதாயப் பிரக்ஞை உள்ள இதுமாதிரி கதைகள் மேன்மேலும் வந்தால்தான் நம் இளைஞர்கள், “இந்த உலகம் - உலகமல்ல. ஒரு கோலிக்குண்டைப்போல உங்கள் உள்ளங்கையிலே நீங்கள் உருட்டி விளையாடுகிற காலம் வரும்” என்ற தங்களது கனவை நனவாக்குவார்கள்.
- ஆர். நஜீர் அகமத், கோவில்பட்டி,
பெண்களின் சதைகளைக் கருவாகக் கொண்டு எழுதும் எழுத்தாளர்கள் மத்தியில் சு. சமுத்திரம் ஒரு வித்தியாசமான எழுத்தாளர்தான். அவரது ‘வேரில் பழுத்த பலா’ எங்கள் உள்ளத்தின் உள்ளுணர்வுகளைத் தொட்டது.
- ஸ்ரீ ரங்கம் வைத்தியநாதன், கி.பி. செல்வராசு, சென்னை -34.
வருஷத்திற்கு இரண்டு நாவல்களாவது ‘வேரில் பழுத்த பலா’ மாதிரி கொடுங்கள். ஒரு சராசரி நேர்மையான மனிதனுக்கு ஏற்படும் சோதனைகளை சு. சமுத்திரம் அழகாக, அருமையாக விளக்கி இருக்கிறார்.
- கே. குமார், சென்னை - 21.
காலப் பதிவுகள்
என்னுரை (ஏப்ரல் 1989)
சக்தியுள்ள படைப்புகளாகக் கருதப்படுபவைகளுக்கு சாகித்ய அகாதமிப் பரிசுகள் கொடுக்கப்படுவது வழக்கம். இந்த நாவலுக்கு பரிசு கிடைத்த பிறகுதான், எனது ‘சக்தியும்’, இந்த நாவலின் சக்தியும் எனக்கே புரிந்தன. இந்தப் பரிசு கிடைத்ததும், ஒரு கோவிலில், எல்லா வேளைப் பூஜைகளும் ஒரே சமயத்தில் ஒட்டு மொத்தமாக நடப்பது போல-அப்படி தொடர்ந்து மூன்று மணிநேரம் ஒலித்துக்கொண்டே இருந்தது. இடையிடையே மந்திரம் போல் ‘உங்களின் அன்பு-ஆசீர்வாதம்’ என்று நான் சொல்லி முடிக்கவும், ஆலயமணிபோல் டெலிபோன் மணி மீண்டும் ஒலிக்கும். அதோடு, தமிழகத்தில் இருந்தும் பிற மாநிலங்களிலிருந்தும் ஏராளமான வாழ்த்துக் கடிதங்களும், நான் இன்னும் சிறப்பாக எழுத வேண்டுமென்ற விமர்சனக் கடிதங்களும் குவிந்தன. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், இலக்கிய வீதி உட்பட பல இலக்கிய அமைப்புகள், பல்வேறு பாராட்டுக் கூட்டங்களை நடத்தி, என்னைக் கெளரவித்தன. புது தில்லியில், தில்லித் தமிழ்ச் சங்கம், பாவேந்தர் பாசறை உட்பட பல அமைப்புகள் பல்வேறு வரவேற்பு நிகழ்ச்சிகள் நல்கின. தமிழில் சாகித்திய அகாதமிப் பரிசு பெற்ற எந்த எழுத்தாளருக்கும் இல்லாத அளவிற்கு, எனக்குப் பாராட்டு நிகழ்ச்சிகள் கொடுக்கப்பட்டன.
இந்தப் பாராட்டுகளுக்குக் காரணம், இந்த நாவலின் இயல்பு மட்டுமல்ல; இதில் உள்ள இலக்கிய நயங்களுக்காகவும் அல்ல; மாறாக, தாழ்வுற்று, வறுமைப்பட்டு, பிற்படுத்தப்பட்டு, அவலமுறும் அடித்தள மக்களைப் பற்றி எழுதுகிற ஒருவனுக்கு, ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்றுதான், அத்தனை தோழர்களும், இந்தப் பரிசு தங்களுக்குக் கிடைத்தது போல் மகிழ்ச்சியுற்றனர். என்றாலும் இந்த எழுத்துக்குக் கிடைத்த வெற்றி, இந்த எழுத்தில் வரும் ஏழைகளுக்கு வெற்றியாக மாறும்போதுதான் எனது படைப்புகள் பரிபூரணமாகும் என்று எண்ணுகிறேன்.
புதுதில்லி வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில், சிறந்த எழுத்தாளரும், தில்லி தொலைக்காட்சி செய்திப் பிரிவின் தலைமைச் செய்தி ஆசிரியருமான பிரபு செல்வராஜ், நான், இலக்கியத்திற்கு என்று வைத்துள்ள இலக்கணங்களை உடைத்துவிட்டு, புது இலக்கணத்தை உருவாக்கி இருப்பதாகக் குறப்பிட்டார். உண்மைதான். ‘எழுத்து வியாபாரிகளிடம் இருந்தும்’ இலக்கியத் ‘தான்தோன்றிகளிடம் இருந்தும்’ மாறுபட்டு, எழுதுவதாகவே நினைக்கிறேன் நமது மக்களின் ஆசைகளையும், நிராசைகளையும், யதார்த்தக் கண்ணோட்டத்தோடு படைக்கிறேன்.
எனது அரசு அனுபவம் ‘வேரில் பழுத்த பலா’ என்ற குறுநாவலாகவும், நான், சென்னை நகரில் கண்ட கட்டிடத் தொழிலாளர்களின் துன்பங்கள், துயரங்கள், ‘ஒருநாள் போதுமா’ என்று குறுநாவலாகவும், இந்தப் படைப்பில் உள்ளடங்கி உள்ளன. எனக்குத் தெரிந்தமட்டில், “சாகித்திய அக்காதெமி”ப் பரிசு பெற்ற நாவல்களில், இது ஒன்றுதான், எந்த இடத்திலும் யதார்த்தக் குறைவு இல்லாமல் வந்துள்ள படைப்பு என்று எண்ணுகிறேன். இதனாலேயே ‘திருஷ்டி’ பரிகாரம் போல, பாராட்டுகளுக்கு மத்தியில், சில “இலக்கிய” வெத்துவேட்டுச் சத்தங்களும் ஒலித்தன.
என்றாலும் ஒரு படைப்பில் ஒருத்தியைக் கொண்டு வந்து, அவள் கற்பு எப்போது வேண்டுமானாலும் பறிக்கப்படலாம் என்று ஒரு சஸ்பென்சை ஏற்படுத்தி, அந்த சஸ்பென்சின் இடையே, ஒரு பிரச்சினையைச் சொல்லிக் கொண்டே போவது எனது வேலை அல்ல. இதனால் எந்த மக்களைப் பற்றிச் சித்தரிக்கிறோமோ, அவர்கள் பக்கம் கவனம் போகாது. ஆகையால்தான் எனது படைப்புக்கள் எதிலும், செக்ஸ் உப்பை கரைப்பதில்லை. இந்த ஒரு தனித்துவமும், இந்த சமூகத்தை மனதார நேசிக்கும் நேயமும், என் படைப்புகளுக்கு ஒரு அங்கீகாரத்தைக் கொடுக்கிறது என்று நம்புகிறேன்.
அலுவலகங்களில் அவமானப்பட்டு, ஆயாசப்பட்டு, திறமையை முளையிலேயே கிள்ளி எறிய விட்டுவிட்டு, தவிக்கும் அன்னம் போன்ற படித்த ஏழைப் பெண்களைப் பற்றி எழுதப்பட்ட நாவல் இது. அரசு அலுவலகங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கும், முற்படுத்தப்பட்டோருக்கும் இடையே இலை மறைவு காய் மறைவாக நடக்கும் போராட்டத்தைச் சித்தரிக்கும் படைப்பு இது.
இந்த நாவல் ஒரு சில கல்லூரிகளில் பாட நூலாக வைக்கப்பட்டிருப்பதாக அறிகிறேன். எனது பல படைப்புகள் பல்கலைக் கழகங்களில் பாட நூல்களாக இருந்தாலும், இந்த படைப்பு பாட நூலாக இருப்பதில் அதிக மகிழ்ச்சி ஏற்படுகிறது. காரணம், நாளை, அரசு ஊழியர்களாகவும் அதிகாரிகளாகவும் விளங்கப் போகிற மாணவ சமுதாயம், அரசு அலுவலகங்களிலுள்ள ‘நல்லது கெட்டதுகளை’ சிந்தித்து, சீர்தூக்கி, இந்தச் சமுதாயத்திற்கு நலன் விளைவிக்கும் வகையில், தங்களைத் தாங்களே இப்போதே தயார்படுத்திக் கொள்ள, இந்த நாவல் உதவும்.
‘வேரில் பழுத்த பலா’வை மாத நாவலாக வெளியிட்டு “கனமான நாவல்களுக்காக காலம் அவரை கெளரவப்படுத்தும்” என்று தீர்க்க தரிசனமாக எழுதிய என் இனிய நண்பரும், வார்த்தைச் சித்தருமான வலம்புரி ஜான் அவர்களுக்கு என் நன்றி.
பிற்சேர்க்கை (டிச 2003)
நான் எழுதிய முன்னுரையை நானே ஒரு வாசகன் போல் படித்தபோது நல்லதும் கெட்டதுமான நினைவுகள் மேலோங்கிப் பொங்குகின்றன.
நாளையும், கிழமையையும் துல்லியமாகக் குறிப்பிட முடியாவிட்டாலும், இன்னும் எனக்கு நன்றாகவே நினைவு இருக்கிறது. 1992 ஆம் ஆண்டு... டிசம்பர் மாதம் 15-ஆம் தேதிக்குள் இருந்து இருபதுக்குள் இருக்கும்.
அந்தக் காலத்தில், சென்னை வானொலி நிலையத்தின் செய்தி ஆசிரியராகப் பணியாற்றிய நான், சைதாப்பேட்டையில் மாலையில் நடைபெற்ற நரிக்குறவர்கள் சந்திப்பில் பங்கேற்றுவிட்டு, அவசர அவசரமாக வானொலி நிலையத்திற்குத் திரும்பினேன். அப்போது, எனது அலுவலக சகாக்கள் ‘கங்ராஜுலேஷன் சார்’ என்றார்கள். அந்தச் சமயத்தில் எனக்கு பதவி உயர்வு வரப்போவதாக ஒரு பேச்சு அடிபட்டது. உடனே அவர்களிடம் ‘எந்த இடத்துலப்பா என்னப் போட்டுருக்காங்க’ என்று கேட்டேன். உடனே சகாக்கள், எனக்கு ‘வேரில் பழுத்த பலா’ என்ற நாவலுக்காக சாகித்திய அக்காதெமி பரிசு கிடைத்து இருப்பதாகக் கூறி, செய்தி நிறுவனங்களான யு.என்.ஐ., பி.டி.ஐ., ‘கட்டுகளை’க் காண்பித்தார்கள்.
விருதுக்கு முன்னே
இந்த விருது பற்றிய அறிவிப்பு வெளியாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, எனது இனிய நண்பரும், சிறந்த எழுத்தாளரும், சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தின் முன்னாள் இயக்குநருமான ஏ. நடராசன் அவர்கள், எனக்கு இந்த விருது கிடைக்கலாம் என்றார். உடனே நான் ‘நம்பள மாதிரி ஆட்களுக்கு எல்லாம் கொடுக்கமாட்டாங்க அண்ணாச்சி’ என்றேன். சில நாட்களுக்குப் பிறகு எழுத்தாளர் மாலன் அவர்கள், “சாகித்திய அக்காதெமி”யின் பரிசுப் பட்டியல் நாவல்களில் ஒன்றாக ‘வேரில் பழுத்த பலா’ தன்னுடைய பரிந்துரைக்கு வந்திருப்பதாகத் தெரிவித்தார். அப்போதும், அவர் சொன்னதை கேட்டுக் கொண்டேனே தவிர, ‘நீங்கதான் பார்த்துச் செய்யணும்’ என்று ஒரு வார்த்தைகூட கேட்டதில்லை.
விருதுக்குப் பின்னே...
இப்படிப்பட்ட சூழலில், நானோ, எனது நாவலோ பரிசுக்குரியதல்ல என்று சில சிற்றிதழ்கள் எழுதியதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. காரணம் என்னைப் பற்றியும் என் எழுத்தைப் பற்றியும் எனக்கு நன்றாகவே தெரியும். அதே சமயம் நானே விருதை சாமர்த்தியமாக வாங்கிக் கொண்டதாக, அப்போதைய ஆரம்ப கால எழுத்தாளரும், இப்போதைய சிறந்த படைப்பாளியுமான ஜெயமோகன் ‘இந்தியா டுடே’ பத்திரிகையில் எழுதியபோது, நான் துடித்துப்போனேன்.
இதுபோதாது என்பதுபோல், “கணையாழி”, எனக்கு விருது வழங்கியதை, “இலக்கியத்தில் இடஒதுக்கீடு வந்துவிட்டது” என்று வர்ணித்தது. (இந்தக் “கணையாழி”யின் ஆசிரியரான கஸ்தூரிரங்கன், தன்னை ஆசிரியராகக் கொண்ட “தினமணிக் கதிரில்”, ‘ஒரு சிறந்த இலக்கியவாதிக்கு பரிசு கிடைத்து இருக்கிறது’ என்று கேள்வி பதிலில் குறிப்பிட்டார்.) இந்த “கணையாழி” வர்ணனை, மிகப்பெரிய இலக்கியப் பரபரப்பை ஏற்படுத்தி, என்னையும், நான் சார்ந்திருக்கும் முற்போக்கு மற்றும் தேசிய முழக்க இயக்கங்களையும் ஆவேசப்படுத்தியது. மனிதநேயத் தலைவர் ஜி.கே. மூப்பனார் அவர்கள் கூட, இந்த வர்ணனையால் மிகவும் வருந்தினார். இதற்காகவே ஒரு பாராட்டுக் கூட்டம் நடத்தினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், 1960-களில் நான் எழுதிவந்த தேசிய முழக்கப் பத்திரிகை சகாக்கள் தில்லித் தமிழ்ச் சங்கம், அகில இந்திய எழுத்தாளர் சங்கம் போன்ற அமைப்புகள் என்னைப் பாராட்டி மகிழ்ந்தன. மகிழ்வித்தன.
விசித்திரங்கள்...
இந்த விருது பற்றிய விவகாரங்களில் பல விசித்திரங்கள் அடங்கியுள்ளன. முதலாவதாக, அரசு அலுவலகங்களில் இட ஒதுக்கீடால் ஏற்பட்டிருக்கும் மாறுதல்களை மையமாகக் கொண்ட இந்த நாவலுக்கான விருதினை, “இட ஒதுக்கீடு” என்று வர்ணித்ததுதான். இதில் உள்ளடங்கிய “ஒருநாள் போதுமா?” என்ற குறுநாவல் விமர்சிக்கப்படாதது, இந்த விசித்திரத்தில் ஒரு துணை விசித்திரம்.
இரண்டாவது விசித்திரமாக, இந்த நாவலுக்கான விருதைக் கண்டித்து “சாகித்திய அக்காதெமி”க்குத் தந்தி கொடுக்க வேண்டுமென்று புலம்பிய நெல்லைக் கல்லூரிப் பேராசிரியர் ஒருவரை, புதுவையில் ஒரு கருத்தரங்கில் சந்தித்தேன். இந்தப் படைப்பு இரண்டு குறுநாவல்களைக் கொண்டது என்பதுகூட, அந்தப் பேராசிரியப் புலிக்குத் தெரியாது. பிற்படுத்தப்பட்ட எழுத்தாளர்களைச் சாடினால்தான் இலக்கிய மேட்டுக்குடியின் அங்கீகாரம் கிடைக்குமென்று தப்பாகவோ, சரியாகவோ நினைத்த அந்த அப்பாவிக்காக நான் அனுதாபப்பட்டேன்.மூன்றாவது விசித்திரமாக, “சாகித்திய அக்காதெமி”யின் இலக்கிய இதழான ‘லிட்ரேச்சர்’ என்ற ஆங்கிலப் பத்திரிகையில், நானே கூசும் அளவிற்கு வானாளவப் புகழ்ந்து தள்ளிய ஒரு கூலிக்காரத் திறனாய்வாளர் தமிழ் இதழ்களில் இந்த நாவலைக் கடுமையாகக் கண்டித்தார். “கணையாழி”யிலும் கண்டித்தார். நானே அவர் எழுதியதைக் “கணையாழி”யில் வெளியிட்டு இவரது முகமே ஒரு மூடி என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டியதாயிற்று.
நான்காவதாக, எந்த தலித் மக்களுக்காக நான் எழுதினேனோ, அவர்களில் ஒரு சிறுபான்மையினர் நடத்திய பத்திரிகை ஒன்று, என்னை தாறுமாறாக விமர்சித்தது. என்றாலும், “கணையாழி”யின் இந்த வர்ணனைதான், “தலித் இலக்கியம் தமிழகத்தில் தனித்து இயங்குவதற்கு ஒரு காரணம்” என்று மனித நேயக் கவிஞர் பழமலய் அவர்கள், என்னிடம் தெரிவித்தது ஆறுதலாக இருந்தது.
விசித்திராதி விசித்திரம்
என்றாலும், இந்த விசித்திரங்களை எல்லாம் மூடி மறைக்கும் அளவிற்கு ஒரு பெரிய இலக்கிய விசித்திரம், இந்த பத்தாண்டு கால இடைவேளையில் என்னைப் பொறுத்த அளவில் நிகழ்ந்திருக்கிறது. ‘சுபமங்களா’ பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் ‘சமுத்திரத்தின் மீதும், சமுத்திரத்தின் இலக்கிய முயற்சிகள் மீதும் எனக்கு மரியாதை உண்டு’ என்று கஸ்தூரிரங்கன் தெரிவித்தார். நாளடைவில், இதே “கணையாழி” என்னை, சிறுகதை அனுப்பும்படி கேட்டுக் கொண்டது. ஓரிரு கதைகளும் வெளியாயின. இப்போது, எனது படைப்புக்களை இலக்கியத்தரமாகக் கருதி விமர்சிக்கிறது.
இதேபோல் என்னைச் சாடிய எழுத்தாளர் ஜெயமோகனை, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, கோவையில் விஜயா பதிப்பக வேலாயுதம் அவர்கள் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். நான் எடுத்த எடுப்பிலேயே, அவர் என்னை சாகித்திய அக்காதெமி விருதை “வாங்கியதாக” எழுதியதை சுட்டிக்காட்டினேன். எவரையும், எதற்கும் வேண்டுவது எனது ரத்தத்தில் இல்லாதது என்றும், அவருக்குச் சுருங்கக் கூறி விளங்க வைத்தேன். உடனே, எந்த தயக்கமும் இல்லாமல் அந்த இளைஞரும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அப்படி எழுதும்படி சிலர் தூண்டிவிட்டதாகவும், அதற்குப்பிறகு, என் இயல்பைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொண்டதாகவும், மீண்டும் பெருந்தன்மையாக வருத்தம் தெரிவித்தார்.
ஜெயமோகனின் வருத்தம், எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. இதோடு விடாமல், ஜெயமோகன், என்னிடம் வருத்தம் தெரிவித்து ஒரு நீண்ட கடிதம் எழுதினார். ‘முயலுக்கு மூன்றே கால்’ என்ற வீம்புத்தனம் இல்லாமலும், சிலரைப் போல் தான் எழுதியது சரிதான் என்பது மாதிரி வேசித்தனமாகப் புன்னகைக்காமலும் ஜெயமோகன் நேர்மையாக நடந்து கொண்டார். இதனால்தான் இப்போது ஜெயமோகனின் இலக்கிய வளர்ச்சி நாம் நிமிர்ந்து பார்க்கும் அளவிற்குப் போகிறது.
அப்போது ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய’ அந்த தலித் பத்திரிகை, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையில் நடந்த உலகளாவிய தமிழ் படைப்பாளிகள் மாநாட்டிற்கு, கோணங்கி, சு. சமுத்திரம் போன்றவர்களை ஏன் கூப்பிடவில்லை என்று மாநாட்டு அமைப்பாளர்களிடம் துண்டு பிரசுரம் மூலமாக குற்றம் கண்டது. ஆக, வெந்த புண்ணில் பாய்ந்த வேலே, பழம் நழுவி பாலில் விழுந்தாற்போல் ஆயிற்று.
ஆக மொத்தத்தில் ‘நல்லவன் செய்வதை விட நாள் செய்யும்’ என்ற பழமொழி என்வரையில் உண்மையாகி, எனக்கும் ஒரு இலக்கிய முதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.
‘வேரில் பழுத்த பலா’வையும், ‘ஒருநாள் போதுமா’வையும் ஆய்வேடுகள் மூலம் அருமையாக அடையாளம் காட்டிய க. ரேவதி, ப. தேன்மொழி அவர்களுக்கும் எனது நன்றி. அந்தக் காலத்தில் இந்தப் படைப்பைப் படித்துவிட்டு உடனடியாக கடிதம் எழுதிய வாசகர்களுக்கும் என் நன்றி உரித்தாகும்.
இந்த இரண்டு குறுநாவல்களையும் உள்ளடக்கிய இந்த நூலை அருமையாக வெளியிட்டிருக்கும் பெரியவர், வானதி திருநாவுக்கரசு அவர்களுக்கும் அவரது புதல்வர் ராமு அவர்களுக்கும் நான் நன்றியுடையேன்.
-சு. சமுத்திரம்
அத்தியாயங்கள்
- வேரில் பழுத்த பலா
- வேரில் பழுத்த பலா/002
- வேரில் பழுத்த பலா/003
- வேரில் பழுத்த பலா/004
- வேரில் பழுத்த பலா/005
- வேரில் பழுத்த பலா/006
- வேரில் பழுத்த பலா/007
- வேரில் பழுத்த பலா/008
- வேரில் பழுத்த பலா/009
- ஒருநாள் போதுமா?
- வேரில் பழுத்த பலா/011
- வேரில் பழுத்த பலா/012
- வேரில் பழுத்த பலா/013
- வேரில் பழுத்த பலா/014
- வேரில் பழுத்த பலா/015
- வேரில் பழுத்த பலா/016
- வேரில் பழுத்த பலா/017
- வேரில் பழுத்த பலா/018
