உள்ளடக்கத்துக்குச் செல்

வேரில் பழுத்த பலா/010

விக்கிமூலம் இலிருந்து

ஒருநாள் போதுமா?


ஒரு கூட்டத்தைப் பார்த்தவுடனேயே, அது எப்படிப்பட்ட கூட்டம் என்று இலக்கணப்படுத்தி விடலாம். அரசியல்வாதிகள், தங்களின் கொள்கை முழக்கங்களுக்கு ஏற்ப ‘தொண்டர் கூட்டம்’ ‘குண்டர் கூட்டம்’ என்று ஒரு கூட்டத்தையே தங்கள் போலித்தனங்களுக்கு ஏற்ப போலியாக்கினாலும், பொதுவாக சென்னை நகரில் ஒரு கூட்டத்தை அடையாளம் கண்டுபிடிப்பது பொதுமக்களுக்கு மிகவும் எளிதான காரியம். இன்னும் சொல்லப்போனால் இது ஒன்றுதான் அவர்களுக்கு எளிதான காரியம். ஆனாலும் இதற்கு விதிவிலக்குப் போல அதாவது விதியே, எக்கேடாவது கெட்டு, எப்படி வேண்டுமானாலும் போங்கள் என்று தங்களை விலக்கு செய்தது போல் - இதோ இந்தப் பரந்து விரிந்து பருத்த சென்னை மாநகரில், எல்டாம்ஸ் சாலை மவுண்ட்ரோடில் வந்து சங்கமிக்கும் இடத்திற்கு சிறிது தொலைவில் திருமுருகன் ஆலயத்திற்கு அருகே பெருந்திரளாய் கூடி நிற்கும் அந்தக் கூட்டத்தை எப்படி அடையாளப்படுத்துவது? எந்த வகையில் சேர்ப்பது?

அந்த முருக கோவிலுக்கு அருகே நின்றதால் மட்டுமல்ல, பெரும்பாலானவர்களின் கரங்களில் திருவோடு மாதிரி இருந்ததால், அது பண்டாரக் கூட்டம்போல் தோன்றும். ஆனால் இரும்பாலான வட்ட வடிவமான ஓரளவு பெரிய அந்த ‘பாண்டு’க் கூடையைப் பார்த்த கண்ணோடு அந்த மக்களைப் பார்ப்பவர்கள் அப்படிச் சொல்லமாட்டார்கள். சின்னத் திருவோடு பண்டாரங்களின் வயிறுகளில் இருந்து பல பானைகளை - சதையாலான பானைகளைச் - செய்ய முடியும். ஆனால் இந்தப் பெரிய திருவோடு கூட்டத்தினருக்கு வயிறு தவிர மீதி எல்லா உறுப்புகளும் இயங்குகிறதோ இல்லையோ, அவை இருப்பதை உடம்பில் காட்டின. ஒரு சிலர் வாயில் குதப்பும் வெற்றிலையையும் சாலையில் தெறித்த சிவப்புத் துளிகளையும் வைத்து, அவர்களை, கல்யாண விருந்துக் கூட்டம் என்றும் சொல்லலாம். உற்றுப் பார்த்தால் அப்படியும் சொல்லமுடியாது. கல்யாணக் கூட்டம் சாப்பிட்டுவிட்டு வெற்றிலை போடும். ஆனால் இந்தக் கூட்டத்து மனிதர்கள் வெற்றிலையையே சாப்பாடாக மென்றுப் பார்ப்பவர்கள். வெற்றிலை சப்பாத்தியாம். கொட்டைப்பாக்கு உருளைக்கிழங்காம். உமிழ்நீர் சாம்பாராம். வாயே வயிறாம்.

ஒருவேளை இவர்களை இழவுக் கூட்டம் என்று சொல்லலாமா? தலை காய்ந்த தோற்றத்தையும் வெறுமையான கண்களையும் பொறுமையான கால்களையும் வைத்துக் கணக்குப் போட்டால் மரணக் கணக்கிற்கு இதுவரை கேள்வியாக இருந்து, இப்போது பதிலாகிப் போன ஒரு சடலத்தின் இழவுக்காக நிற்பவர்களைப் போல் இவர்கள் தோன்றினாலும், ஒரு சின்ன வித்தியாசம். இவர்களில் ஒவ்வொருவரும், தானே செத்து, தனக்குத்தானே இழவு நடத்திப் பார்ப்பவர்கள் போல் தோன்றினார்கள். இந்த வகையில் இவர்கள் சுயம்புச் சவங்கள், ஆகையால், இவர்களை எப்படிப்பட்ட கூட்டம் என்று வசதி வாய்ப்பு உள்ளவர்களால் எளிதில் கண்டுபிடிக்க இயலாது; பார்ப்பவர்களுக்கு மட்டுமல்ல, பார்க்கப்படுகிறவர்களுக்கும், ஆனாலும், தமிழனின் தனிப் பண்புப்படி, இவர்களுக்கு ஏதாவது முத்திரை குத்த வேண்டுமே. என்ன முத்திரை குத்தலாம்?

மனிதக் கூட்டம் என்று மட்டும் சொல்லலாமா? மனிதன் என்றால் இன்னொரு அர்த்தமும் உண்டு என்பதை ஒப்புக் கொள்வதற்காக இருந்தால், அப்படி அழைக்கலாம். எப்படி அழைத்தாலும், அவர்கள் கவலைப்படமாட்டார்கள். பல்லவனில் போகும், மத்திய தர மைனர்கள், ‘வரவர நாடே கெட்டுப் போச்சு’ என்று இந்தக் கூட்டத்தைப் பார்த்துப் பேசிக்கொள்கிறார்கள். சாலையில், கார்களில் சவாரி செய்பவர்கள், கூட்டத்தைப் பார்க்கிறார்களே தவிர, அந்தக் கூட்டம் எதற்காக அப்படி நிற்கிறது என்று யோசித்துப் பார்க்க மறுக்கிறார்கள். தங்களின் பொன்னான நேரத்தை வீணாக்க விரும்பாதவன்போல் போகிறார்கள். அவர்களில் ஒரு சில ‘பிஸிகள்’ இந்தக் கூட்டத்தால் காரை வேகமாகச் செலுத்த முடியவில்லையே என்பது மாதிரி, முறைப்பது போல்கூட போகிறார்கள். சில படித்த பெண்கள் அவர்களின் அழுக்கு தங்களின் புடவையில் பட்டுவிடக் கூடாதே என்பதுபோல் விலகிப் போகிறார்கள். ஒரு சில உறவுக்கார நடுத்தர வர்க்கக்காரர்கள். தங்களிடம் சம்பந்தப்பட்டவர்கள் கடன் கேட்டுவிடக்கூடாதே என்று தங்களுக்குத் தாங்களே ஒரு கற்பனையை உருவாக்கிக்கொண்டு, அவசரமாய் போகிறவர்கள் போல் போகிறார்கள்.

எல்லாருமே அந்த போக முடியாதவர்களைப் பார்த்து, ஏதோ ஒரு எதிர்மறை உணர்வில் போய்க் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள்-

ஒருவனை வீரனாக்க ஒன்பது பேரைப் பேடியாக்கும் சினிமாக்காரனைப் போல், இதையே எழுதும் சரித்திர நாவலாசிரியப் பொய்யர்களை போல் பட்டணத்துப் பங்களாக்களின் மவுசையும் மதிப்பையும் “கொச்சைப்படுத்துவது போல்” தோன்றும், தலை தட்டும் குடிசைகளில் இருந்து, காலையில் ஆறு மணிக்கே அங்கு வந்து முருகன் கோவிலில் உச்சிக்கால பூஜை நடத்தப்படும் இந்தச் சமயம்வரை, அங்கேயே தவமிருக்கிறார்கள். இவர்களின் தலைகள், அங்குமிங்குமாகச் சுழல்கின்றன. ஒரு சிலர் அந்தக் கூட்டத்தின் இலக்கணப் படியான ‘பிரபுக்கள்’, சிங்கிள் டீயைக் குடித்துவிட்டு பீடியைத் தின்பது போல் உறிஞ்சுகிறார்கள். கட்டம் போட்ட கிழிசல் சட்டையைக் கொண்ட ஒரு அறுபது வயதுக் கிழவர் பொறுமையோடு எழுந்து சிறிது தூரம் நடந்து மீண்டும் இருந்த இடத்திலேயே வந்து அமராமல், இடம் பெயர்ந்து உட்கார்ந்தாலாவது ‘கிராக்கி வருமா’ என்பதுபோல் இன்னொரு இடத்தில் உட்காருகிறார். ஒரு சில நடுத்தர வயது மனிதர்கள் தாடி வைத்திருக்கிறார்கள். தாடி என்று சொல்வதைவிட அதை வறுமையின் முள்ளென்று சொல்லலாம்.

முருகன் கோவிலுக்கு எதிர்த்தார்ப் போலிருந்த சாலையை அணைத்து, பிளாட்பாரத்தின் தளம் தெரியாதபடி நெருங்கி உட்கார்ந்த இந்தக் கூட்டத்தில் சிறுவர்களுக்கும் குறைவில்லை. பாண்டுக் கூடையைச் சுற்றிவிட்டுக் கொண்டே பசியின் தலைச் சுற்றலை மறக்கப் பார்க்கிறார்கள். ஆனால் கூடை சுற்றச்சுற்ற அவர்கள் தலைகள் முன்னிலும் வேகமாகச் சுற்றுவது போல் உணர்கிறார்கள். ஓய்வு பெற்ற உத்தியோகக்காரர்களை விட அதிக வயது கொண்ட கிழவிகளின் எண்ணிக்கை முப்பதுக்கும்மேல் போகும். பல் போனாலும் வயிறு போகாத பாவத்தால் அவர்களும் உட்கார்ந்து பார்க்கிறார்கள். இவர்களைவிட அதிகமான இளம் பெண்கள் தார்ப்புழுதி அப்பிய கால்களைத் தரையில் ஊன்றி, முதுகை வளைத்து ஒருக்களித்து உட்கார்ந்து தொலைவில் தெரிகின்ற ஒவ்வொருவரையும் மேஸ்திரியாகப் பாவித்து, நேரத்தால் வீணடிக்கப்பட்டவர்கள் போல் கசிந்த கண்களோடு ‘பசி’ யோகத்தால் நிஷ்டையில் இருப்பவர்கள்போல், கண்களை விலக்காமல் கால்களை நகர்த்தாமல் காத்திருந்து காந்திருந்து, காத்திருப்பதே புரியாமல் வாழ்க்கைக்குக் காத்திருக்கிறார்களா அல்லது மேஸ்திரிக்குக் காத்திருக்கிறார்களா என்பது அறவே தெரியாமல் அப்படியே இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பெற்ற சின்னஞ்சிறு செல்வங்கள் அவர்களின் கால்களையே தொட்டிலாய் நினைத்து அமர்கின்றன. பல்லவன் பஸ்களையே சிறு தேர்களாய் நினைத்து கை கொட்டுகின்றன. ஒடும் கார்களை ஆனை கட்டிப் போரடித்த தாய்மாமன்களின் சீதனச் சிறப்பு வண்டிகளாய் நினைத்து கண் சிமிட்டுகின்றன. என்றாலும் சில குழந்தைகள் முடங்கிக் கிடக்கின்றன. அடித்துப் போட்ட நாயின் உப்பிய வயிறுபோல் வீங்கிய வயிற்றைத் தாங்கும் வழி தெரியாது குப்புறக் கிடக்கின்றன.

அத்தனைக் கண்களும், ஒரே ஒரு திசையைப் பார்த்து மொய்க்கின்றன. அன்று யாரும் வரவில்லை. இதற்குள் ஏழெட்டு மேஸ்திரிகள் வந்திருக்க வேண்டும். யாரையும் காணவில்லை. இனி வந்தாலும் பாதி நாள் வேலைதான். பாதி நாளானாலும் போக வேண்டும். வயிற்றில் பாதி நிரம்பினாலாவது போதும்... ஆனால், நிரப்புபவர்களைக் காணவில்லை... இவர்களைப்போல் கூடியிருக்கும் ராயபுரத்திற்கும், சூளைக்கும், சைதாப்பேட்டைக்கும் சொல்லி வைத்ததுபோல் போய் விட்டார்களா? நாளைக்காவது வருவார்களா?

கட்டாஞ்சுவர் போன்ற மேனியில் கிழிந்த பனியனும் நைந்த டவுசரும் போட்டிருந்த ஒட்டர்கள் சுண்ணாம்பாய் குழைந்து போய் நின்றார்கள். ‘மண் வேலையில்’ கை தேர்ந்த இந்த சேலத்து மனிதர்கள். அருகருகே நின்ற தத்தம் மனைவிகளை ஆதங்கமாகப் பார்த்துக் கொண்டார்கள். கையோடு பிடித்து காலோடு அணைத்திருந்த கடப்பாரையை தொடைகளில் உருட்டிக் கொண்டார்கள். ‘பாண்டுக் கூடையை’க் கவிழ்த்து விளையாடப் போன ஐந்து வயது மகளை ஒரு ஒட்டப் பெண் தலையில் குட்டினாள். அந்தக் குழந்தை அழாமல் பரிதாபமாகப் பார்த்தது. ஒருவேளை காலையில் கஞ்சி குடித்திருந்தால் அழுதிருக்கும்.

உத்திராட்சக் கொட்டையைப்போல், இரண்டு ‘மடங்கு’ பெரிய நூல் கட்டிய வட்டக் குண்டை வலது கையில் பிடித்தபடி மணியாஸ் கட்டையையும், ‘லெவல்’ பார்க்கும் மூலமட்டத்தையும் பிளாட்பாரத்தில் போட்டு அவற்றை இடக்கையால் குழந்தையை தடவுவது போல் தடவிவிட்டுக் கொண்டிருந்த கொத்தனார்களில் பலர் வயிற்றுக்கும் தொடைக்கும் இடையிலுள்ள உடல் பாகத்தை மணியாஸ் கட்டையாலும் ‘எல்’ வடிவத்தில் அமைந்த மூலமட்டத்தாலும் அமுக்கிக் கொண்டார்கள். ‘பைப் ரிஞ்சையும்’ ‘ஆக்‌ஷாபிரேமையும்’ கையோடு வைத்திருந்த பிளம்பர்களின் கண்கள் வெள்ளிப்பழங்கள் போல் கருவிழி போனதாய் காட்சியளித்தன. கூர்க்கம்பிகளாய் முடிந்த வாளையும், திருகாணி போன்ற உழைப்பாயுதங்களையும் வைத்திருந்த ஆசாரிகள், தலைப்பாகைகளை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டார்கள்.

மாயமோ, மந்திரமோ, மண்ணாங்கட்டியோ, அன்று எந்த மேஸ்திரியும் வரவில்லை. இன்று கான்கிரீட் போடுவதற்குக் கட்டிடம் இல்லையா? கதவு போட, கட்டிய வீடு இல்லையா? பெயிண்ட் அடிக்கக் கதவில்லையா? வாணம் வெட்ட, கிரவுண்ட் இல்லையா? கலவைப் போட, சிமெண்ட் இல்லையா? என்ன இல்லை? நேற்று. இங்கே ஒரு கலாட்டா நடந்தது உண்மைதான். சோடா பாட்டில்கள், சுக்கு நூறாக உடைந்ததும் உண்மைதான். சில கூலிக்காரர்கள் ‘நாங்கள் ஏமாளியல்ல சாமி... வேலைக்கு ஆள் கொண்டு போறவருக்கு ஐம்பது ரூபாய் தேறுமுன்னா, எங்களுக்கு ஒரு இருபது தேரப்படாதா’ என்று கேட்டதும் உண்மைதான். இந்த கேள்விக்கும், சோடா பாட்டில் வீச்சுக்கும் சம்பந்தமில்லை என்பதும், மனிதர்களை வாங்க வந்த மேஸ்திரி-மனிதர்களுக்கும் தெரியும், ‘இனிமேல்... இந்த ஏரியாவுல கால் வச்சால்... என்பேரை மாத்திக் கூப்பிடுன்’னு ஒரு மேஸ்திரி கூப்பாடு போட்டாலும், அவர், தன் வார்த்தைகளை, சொல்கிற வேகத்திலேயே மறக்கக்கூடிய மனிதர் என்பது, அங்கே இருப்பவர்களுக்கும் தெரியும்.

உழைப்பால் ஏற்படும் களைப்பைவிட, உழைப்பை விற்பதற்காய் நின்ற களைப்பு மேலோங்க, ஒரு சிலர் எழுந்தார்கள். எழுந்தவரில் ஒரு வாலிபப் பையனுக்கு, வயிற்றுக்குள் இருந்த வாயு, இடுப்பில் ‘திருகாணி’ போல் பிடி போட, ‘எப்பாடி’ என்று முனங்கிக் கொண்டே பைசா நகரத்துக் கோபுரம் போல் வளைந்த அவன், மேலே நிமிர முடியாமலும் கீழே உட்கார முடியாமலும் நெளிய, அவனோடு சேர்ந்து எழுந்த கொத்தனார் கொண்டையா, ‘இன்னாடா... குழி குளிக்கப் போறவன் மாதிரி நெளியுறே?’ என்றார். மெளனத்தின் உருவகமான அந்தக் கூட்டத்தில் முதல் ஒலியாக முழங்கிய அந்தக் கிழவரை அந்த வாலிபன் சங்கோஜத்துடன் பார்த்தான். பிறகு இடுப்பை நிமிட்டி விட்டுக் கொண்டே கேட்டான்:

“நீ ஏன் பேசமாட்டே? ஒனக்கு வந்தா தெரியும்...”

“ஒன்னோட வலி மேஸ்திரி வந்தா பூடும்... இது வாயு வலியில்லை... வாழ்வோட வலி... இன்னா முத்து... நான் சொல்றது சர்த்தானா?... இவன் மாதிரிதான் எனக்கும் வலிக்குது, ஒனக்கும் வலிக்குது...”

‘பெரியாள்’ முத்து அவரை வெறித்துப் பார்த்துவிட்டு பிறகு எழுந்து பதிலளித்தார்.

“நீ சொல்றதும் சரிதான்... ஆனா... ஒனக்குப் பொருத்தமில்ல...”

“இன்னாடா சொல்றே?”

“நாங்க... பெரியாள் வேலைக்குப் போறவங்க... கம்மனாட்டிங்க... மிஞ்சி மிஞ்சிக் கொடுத்தால் பன்னிரண்டு ரூபாய் தர்வான்... அதுலயும் சில சமயம் ரெண்டு ரூபாய் முள்ளங்கி பத்த மாதிரி... மேஸ்திரி மவராசனுக்கு அழுகணும். ஒனக்கு இருபத்திரண்டு ரூபா. ஒனக்கும் வலிக்கின்னா இன்னா அர்த்தம்? எண்ணக் குடம் போட்டவனும் தண்ணிக்குடம் போட்டவனும் ஒரே சீரா பொலம்புனா... இன்னா அர்த்தம்?”

உதிரிப்பூக்கள் போல், தலைமுடிக் கற்றையை ஒழுங்கு படுத்தாமல், மேலும் கீழுமாக அப்பி வைத்தபடி, கழுத்தின் மேல் பகுதியைச் சொறிந்து கொண்டிருந்த தாயம்மா, சல்லடைபோல் படர்ந்த தேம்பல் உடம்பை குலுக்கிக் கொண்டே, அதட்டினாள்.

“ஏய்... இன்னாசி! எண்ணெய் குடந்தான் உசத்தின்னு பேசாதடா... நம்மள மாதிரி ஏழைங்களுக்கு தண்ணிக் குடந்தான் ஒசத்தி... ஒரு கரண்டி எண்ணெயில... ஒடம்ப தேச்சுக்க முடியுது... ஒரு செம்பு தண்ணி கிடைக்குதாடா? கார்ப்பரேஷன் கம்மனாட்டிங்க, வூட்டு வரிக்கி மட்டும் வந்துடுறாங்க...”

“ஒன்காவது குட்ச கீது... எனிக்கி, அதுகூட இல்ல.”

“ஒன்பாடு தேவலம்மே... இந்தப் பிளாட்பாரத்துலயே படுத்துட்டு... இங்கேயே வேலக்கி காத்திருக்கலாம். நானு எம்மாந் தொலவு நடக்கணும்.”

“எக்கா... நீ அறிவோட பேசறியா? பணக்காரங்க, ‘குடிசை ஜனங்க தேவல... சாப்பாடு தவிற வேறு பிரச்சினை இல்ல... நம்மள மாதிரி பிள்ளைங்களுக்கு நகை நட்டு பண்ற கவல இல்ல... தெவசம் கிவசம் என்கிற பிரச்சினை இல்லை’ன்னு சொல்றது மாதுரியே நீயும் பேசுறியே... பேசாம இங்க வந்து குந்து... நானு... ஒன் குடிசைக்கு பூடுறேன்...”

“இன்னாம்மே நீ... ஒரு பேச்சுக்குக் கூட... உன்னண்ட பேசப்படாதா?”. இதற்குள், சேலத்து ஒட்டர், தெருவில் குதிரைக்கொண்டையுடன், ‘பிரா’ மார்பகத்துடன் தொப்புளுக்குக் கீழே புடவைபட அலுக்கிக் குலுக்கி நடந்த ஒரு பெண்ணையே வாயைப் பிளந்தபடி பார்த்தார். அவர் வாயையே பார்த்து, தன் வாயை மென்று கொண்ட கொத்தனார், அவரை அதட்டுவது மாதிரியான பொய்க் கோபத்துடன் பேசினார்:

“டேய்... மாரி... அந்த ஜோர்ல மயங்கிடாதடா... இதுங்கல்லாம் ரேட்டுங்களாக் கூட இருக்கும்.”

“என்ன சாமி... நீ ஒன் வயசுக்கு தோதுவா பேசமாட்டே?”

“நான் ஒன் வயசுக்கு தோதுவா பேசுறேண்டா...”

“நீ வேற... அவனவன் குழி வேலைக்கிக் கூப்பிட ஆளில்லையேன்னு தவிக்கான்... நீ ஒன்னோட ஆசய... என்னோட ஆசயா வச்சுப் பேசுறே...”

“விட்டேன்னா ஒரு குத்து... பின்ன ஏண்டா... கம்மனாட்டி அதைப் பார்க்கிறே?”

“நீதான் விடமாட்டீயே சாமீ... என்னோட டவுசரை தொப்புளுக்குக் கீழே இழுத்துப் போடுறேன். ஏன்னா... டவுசர் பட்டை கிழிஞ்சிட்டு... கீழே இழுத்தால்தான் மானத்தை மறைக்கலாம். ஆனால் அந்தம்மா... மானத்தை இழுத்துக் கீழே போடுறது மாதிரி சேல இழுத்துப் போடுறாங்களே... ஒரே காரியத்த ரெண்டு பேரு செய்யறப்போ... எவ்வளவு வித்யாசம் இருக்குன்னு நெனச்சேன்... நீ என்னடான்னா...”

ஒட்டரின் மனைவி கணவரை அதட்டினாள்.

“அறிவுலாம பேசாதய்யா... ஜாம்பஜாரு டைய்லரன்டா போயாவது பாரு... இல்லன்னா... மானம் பூடும்... இப்ப காட்டியே... ஒன் டவுசர்ல... ஒட்டுப்போட்டு தச்சிருக்கு... பேசுது... பெரிய பேச்சா...”

மனைவி சொன்னது சரியெனப்பட்டதுபோல், முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க அந்த ஒட்டர், மண்வெட்டியை தோளில் போட்டுக்கொண்டு நடக்கப் போனார். அவரோடு சேர்ந்து இன்னும் பலர் நடக்கத் துவங்கினார்கள். கொத்தனாரான கொண்டையா, வட்டக் குண்டை இடுப்பில் செருகிக் கொண்டு பூணுல் மாதிரி தெரிந்த கயிற்றை மடியில் செருகிக் கொண்டு நடக்கப் போனார். ஒட்டர் அவரைப் பார்த்துச் செல்லமாகக் கண்டித்தார்.

“நீ... ஏன் சாமி பொறப்படுறே? தொழில்காரன் நீ... மூணு மணிக்குக்கூட... மேஸ்திரி வந்து... ராசா மாதிரி கூட்டிப் போவான்... நீ ஏன் வார?”

“பேசாதடா... இன்னிக்கி... பெரியாளாய் கூட... வேலப் பார்த்தாகணும்.”

இடுப்புப் பிடியில் இருந்து மீண்ட ‘வாயு’ வாலிபன், பரிகசித்த குரலோடு, முதுகை வளைக்க முடியாமல் வளைத்து, சிரிக்க முடியாமல் சிரித்துப் பேசினான்:

“பொல்லாத கெயவன்யா... சம்பாதிக்கிறதெல்லாம் இன்னாயா பண்றே? இன்னிக்கு ஒரு நாள் ரெஸ்ட் எடுத்தா குடியா முழுகிடும்.”

“ஆமாண்டா... நான் தெனமும் வேல கெடச்சு... தெனமும் இருபது முப்பது சம்பாதிச்சு, குடிசையில் கொட்டி வச்சுருக்கேன்... இப்போ குட்ச தாங்க முடியல... நீ வாணுமுன்னா வந்து வாரீக்கின்னு போறியா?”

“ஒன் காசு, பிசாத்து காசு, எனக்கு எதுக்குய்யா? தள்ளாத வயசுல ஏன் பணம் பணமுன்னு அடிச்சுக்கிறேன்னு சொல்லங் காட்டி...”

“டேய் சோமாறி... வாணுமுன்னா என் வீட்ட வந்து பாருடா... ஒன்னோட குடிசையிலயாவது ஒன் நயினா நார்க்கட்டுல வாங்கி போட்டுகினான். என்னோட வீட்ல ஒக்கார ஒரு பலகக்கூட கெடயாது. இரண்டு பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிவச்சேன். ஒரு மொவளயாவது படிக்க வைக்கலாமுன்னு ஸ்கூல்லே சேத்தேன். போன மாசம் முப்பது நாளில் இருபது நாளா மொடங்கிக் கிடந்தேன். வாத ஜூரம், ஒனக்கு நானு சம்பாதிக்கறதுதான் கண்ணுலபடுது... கஷ்டப்படுகிறது தெரியமாட்டேங்கிறது பாரு...”

“அய்ய இன்னா வாத்யாரே டமாஷ்க்கு சொன்னால் கோவிச்சுக்கிறியே... உன் கிட்ட டமாஷ் பேசாம நானு யார்கிட்ட டமாஷ் பேசுவேன்.”

“வயசுப் பொண்ணுக்கிட்ட பேசு.”

“சாரத்துல ஏறி, பாண்டுல கல்லு மண்ணை கொண்டு போற பேஜார்ல, வயசுப்பொண்ணு நெனப்பும் வரல... நானு வயசுப் பையன் என்கிறதும் வரல... ராத்திரிக்கு கெனாவுல கூட கல்லுமண்ணு சுமக்கறாப் போலவும்... சாரத்துல இருந்து கீழே விழுந்து காலு ஒடிவது மாதிரியும் தோணுது... சீ... இன்னாய்யா பொய்ப்பு... கஷ்டப்படுறவனுக்கு கனாவுல கூட கஷ்டந்தானா வரணும்?”

தாயம்மா குறுக்கிட்டாள்.

“கொத்தனாரே, எனக்கு ஒரு ஐடியா தோணுது... இந்த அறியாத வயசுப் பொண்ணுங்கள... கோட்டாப் பண்ற காலேஜ் பசங்கள... சாரத்துல ஏத்தி, பாண்டுவ தலையில கொடுத்துட்டாப் போதும். பொண்ணுங்க தாராளமாய் நடமாடலாமுன்னு நெனக்கிறேன்.”

“பசங்களக் கோட்டா பண்ற பொண்ணுங்கள என்ன பண்றது?”

“எந்தப் பொண்ணும் வலியப் போகமாட்டாள், நெனச்சுக்கோ...”

“நீ அன்னாடம் காய்ச்சிப் பொண்ணுங்கள மன்சில வச்சுப் பேசுறதாயம்மா. நம்மள மாதுரி கஷ்டப்படுறவனோட பொண்ணுங்க தலையில இருக்கிற பாராங்கல்ல தூக்கிச் சுமக்க, மார்ப தம்பிடிச்சு நிமிர்த்துறத, வாயப்பிளந்து பார்க்கிற கம்மனாட்டிப் பயலுவ கீராங்க... சினிமாக்காரங்களோட போட்டோக்களை எங்கெல்லாமோ வெச்சுக்கிட்டு அவங்க வீட்டுப்பக்கம் காத்துக்கிடக்கிற கஸ்மால முண்டங்களும் இருக்காங்கோ, தெரிஞ்சுக்கோ...”

“எனக்கென்னமோ... உடம்புல உழைப்பு இல்லாட்டி மனசுல கோளாறு வருமுன்னு தோணுது... நீ... இன்னாம்மே ஸ்ரீதேவி மாதிரி குழையுற?”

தொலைவில் மேஸ்திரி யாரும் தென்படுகிறாரா என்று துழாவிய கண்களோடு பார்த்துவிட்டு சலித்தவள் போல் முகம் சிலுக்கப் பார்த்த சித்தாள் பெண் ஒருத்தியைப் பார்த்து தாயம்மா அப்படிக் கூறியதும், அதுவரை வட்டம் போலிருந்த மோவாயில் எல்லைக் கம்பிகள் போல் தாடி படர, கழுத்தைச் சற்று நீட்டி கண்களை சிறிது துருத்தி உதட்டில் பற்கள் பட ஏதோ ஒரு போருக்கு ஆயத்தமானவர் போல், தொலை நோக்காய் பார்த்துக் கொண்டிருந்த நாற்பது வயது மதிக்கத்தக்க பெயிண்டர் பெருமாள் கைகால்களை வெட்டி உதறிப் போடுகிறவர் போல் உதறிக் கொண்டு எழுந்து பேசினார்.

“அண்ணாநகர்... ஹவுஸிங் போர்ட் கட்டுற இடத்துல ஒரு சித்தாள் பொண்ண கான்டிராக்டர் ஜாடைமாடையாய் கிண்டல் பண்ணியிருக்கான். அந்தப் பொண்ணு கண்டிச்சிருக்காள். ஒருநாள் ஸ்டோர் ரூம்ல அந்தப் பொண்ணு சிமெண்ட் மூட்டையைத் தூக்கச்சே, கான்டிராக்டர் அவள் கையைப் பிடிச்சு இஸ்துக்கிறான். அவள் கூப்பாடு போட... வாட்ச்மேன் அங்கே போய் கான்டிராக்டரை கண்டிச்சிருக்கான். ஒரு வாரத்துல அந்த வாட்ச்மேனை... எதையோ திருடிட்டான்னு சொல்லி, காண்டிராக்டர் போலீஸ் லாக்காப்புல போட்டு, கடைசில அவனை ஒரு வருஷம் ஜெயிலுல போட வச்சுட்டானாம்... அந்தப் பொண்ணு தூக்குப் போட்டுச் செத்துட்டாளாம். இந்தச் சங்கதி நம்ம வாயில வர்ல... ஸ்ரீதேவியோ... கிரிதேவியோன்னு பேசறோம்.”

பேசிய வாய்கள் அடைத்துப் போயின. மேஸ்திரிகளின் வருகையைப் பார்த்த கண்கள் பிரமித்து நின்றன. சில சித்தாள் பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட அல்லது ஏற்படவிருந்த அபாயங்களை நினைத்துப் பார்த்து நெஞ்சச் சுமையில் பெருமூச்சு விட்டார்கள். பெயிண்டர் பெருமாள் கேள்விப்பட்ட சம்பவத்தை நினைத்துப் பார்க்க முடியாதவர் போல் அங்குமிங்குமாக நடைபோட்டார். அங்கிருந்த எல்லாமே அஸ்தமித்தது போல் ஆகாயத்தையே அண்ணாந்து பார்த்த தாயம்மா வெறுமையோடு பேசினாள்.

“பொண்ணா பிறக்கறது தப்பு... அப்படியே பொறந்தா காட்டியும் சித்தாள் பொம்மனாட்டியா பிறக்கறது ரொம்ப தப்பு. பாவம்... யாரு பெத்த பொண்ணோ? அவளுக்காக சப்போர்ட் பண்ணுன மவராசன்... இப்போ ஜெயிலில் எப்படி வாடுறானோ?”

பெருமாள் உலவிக் கொண்டே பேசினார்:

“நம்மள மாதுரி சாதாரண ஜனங்களோட நிசமான கவனத்த திருப்புற விதத்தில் நாட்டில் பத்திரிகைகளும், பாட்டும் நடக்குது. நடிகை ஷோபா செத்துட்டாள்னு நாம் பேசுகிறோம்... நம்ம பொண்ணுங்க செத்தால்... பிணம் போன பொறவுதான், துக்கம் விசாரிக்கப் போறோம்... போன வாரம் இப்படித்தான் அந்தக் கிழவி ரோஸம்மாவ...”

தாயம்மா இடைமறித்தாள்:

“அதைச் சொல்லாதீங்க, பெயிண்டர். நீங்க இன்னொரு வாட்டிச் சொன்னால் நானும் இந்த சணத்துலேயே செத்தாலும் செத்துடுவேன். வாணாம் மவராசா அந்தக் கத.”

பெருமாளும் உணர்ச்சி வசப்பட்டவர்போல், கைகளை பின்புறமாகக் கட்டிக் கொண்டு நின்றார். டீக்கடையில் ஒருவர் மாற்றி ஒருவராக டீக்குடித்துக் கொண்டிருக்கிறார்கள். பெருமாள், யாருக்கோ போட்டு வைத்திருந்த கண்ணாடி டம்ளர் டீயை எடுத்து, தாயம்மாவிடம் நீட்டினார். அவள் “இதைவிட வெத்தல பாக்கு...” என்று இழுத்த போது. அவர், தன் சைட் பைக்குள் இருந்த பையை எடுத்து, அகல விரித்து, வெற்றிலையையும், பாக்குத் தூளையும் நீட்டினார்.

திடீரென்று கிழக்குப் பக்கமாக இரண்டு வாலிப உருவங்கள் வருவது தெரிந்தது. அவர்கள் அங்குமிங்குமாகப் பார்த்துக் கொண்டு, அகன்ற கண்களோடு, விரிந்த கால்களோடு வருவதைப் பார்த்ததும், தாயம்மாவும், பெருமாளும், அவர்கள் சென்னைக்குப் புதிது என்பதைக் கண்டு கொண்டவர்கள்போல், ஒருவரை ஒருவர் புதிதாய் பார்ப்பது போல் பார்த்தபோது, கொத்தனார் கொண்டையா, “பெருமாள் தம்பி... ஜெயிலுல இருக்கிற வாட்ச்மேனுக்கு நாம ஏதாவது பண்ண முடியாதா” என்றார். தாயம்மா, தொலைவில் தெரிந்த உருவங்கள் மீது நாட்டிய கண்வீச்சை கொத்தனார் மீது போட்டுக் கொண்டே பேசினாள்.

“நம்மள மாதுரி ஏழை பாளைகளால என்ன பண்ண முடியும்? நமக்குள்ளதான் ஒற்றுமை கீதா?... பெயிண்டரைப் பார்த்து, கொத்துக்காரர் வயிரெறியுது; கொத்துக்காரர் மேல பிளம்பருக்குப் பொறாமை; பிளம்பர் மேல, ஆசாரிக்கு; பெரியாளுக்கு சித்தாள் மேல; அவ்வளவு ஏன் போகணும்? இப்போ எனக்கு ஐம்பத்தஞ்சு வயசு ஆவது. நாற்பது வருஷமா... சித்தாளாய் கீறேன். என்னால கான்கிரீட் பூடமுடியும்; லெவல் பார்க்க முடியும்; மோல்ட சரியா பண்ணமுடியும். நானு ஆம்புளையா இருந்தால்... இந்நேரம் கொத்தனாராய் மாறி இருபத்திரண்டு ரூபா சம்பாதிச்சிருப்பேன். என்ன பண்றது? போறாத காலம் பொம்மனாட்டியா பொறந்துட்டேன். எட்டு ரூபாய் சம்பளத்துலே... நாற்பது வருஷமாய் சித்தாளாவே கீறேன்... எங்கே காட்டியும் ஒரு பொம்மனாட்டி மேஸ்திரியாவோ கொத்தனாராவோ கீறாளா? நமக்குள்ள ஆயிரம் போறாம. பெயிண்டர் அடிக்கிற நிறத்துல, ஆசாரி போடுற கதவுல, ஒட்டர் தோண்டுற வாணத்துல... கொத்தனார் கட்ற சுவர் - ஒரு கட்டிடம் அப்படியே நிக்குது. ஆனால் எங்கெல்லாமோ சிதறிக் கிடக்குற சாமான்களை உயிரைக் கொடுத்து ஒரே இடமாய் ஆக்குற நாம். அந்த வீடு மாதிரி நிக்கோமோ? பிறகு, ஏன்... காண்டிராக்டர் பொம்மனாட்டி கையைப் பிடிக்க மாட்டான்? வாட்ச்மேன் ஏன் ஜெயிலுக்குப் போகமாட்டான்?”

தாயம்மாக் கிழவி பேசி முடித்துவிட்டு பெருமாள் தன்னைப் பாராட்ட வேண்டும் என்பது போல் அவரைப் பார்த்தாள். அவரும் ஒரு பார்வையாலேயே அவளைப் பாராட்டியிருப்பார். அல்லது மற்றவர்களைப் பார்க்கிற தோரணையின் மூலம் அவளின் உத்வேகத்தை அங்கீகரித்திருப்பார். அதற்குள் அந்த இரண்டு உருவங்களும் வந்து விட்டன. அங்கே கூடியிருக்கும் கூட்டத்தைப் பார்த்ததும் மனம் போன போக்கில் நடந்தவர்கள், மனம் நின்றது போல நின்றார்கள். பிறகு மீண்டும் நடக்கப் போனார்கள். ஏனோ நடக்கவில்லை.

அந்த உருவங்களில் ஒன்று ஆண், முப்பது வயது என்று சொல்வதே அதிகம். ‘கான்க்ரீட்’ கலவை மாதிரி உடம்பின் அணுக்கள் ரத்தத்துடன் பிசையப்பட்டு அழுத்தமாக இறுக்கப்பட்டது போன்ற உடம்பு. அவன சற்று ஒல்லியாகத் தெரிந்தாலும் போன் வெயிட் ஆசாமி. கூர்மையாக முற்றுப் பெற்ற மூக்கு. கறுப்பாக இருந்தாலும் பளபளப்பான கறுப்பு. கடைந்தெடுத்த தேக்குத் தூண்கள் போன்ற கால்கள். இன்னொன்று பெண். அவளுக்கு இருபத்திரண்டு வயது இருக்கலாம். தலையே ஒரு பாரமாகி, அதைத் தாங்க முடியாதவள் போல துவண்ட உடம்பு. அளவான எலும்பமைப்பு உள்ளதால், அந்தக் குழைவே ஒரு நளினமாகத் தெரிந்தது. சுட்ட செங்கல் நிறம். அழுத்தமான புருவங்கள். ஆனாலும், எடுத்தெறிந்து பார்ப்பது போலான பார்வை. கர்வமான பார்வையல்ல. கர்வபங்கப் பார்வையும் அல்ல.

இருவரும், தயங்கியபடி நின்றார்கள். எல்லோரும் அவர்களைப் பார்த்துக் கண்களை விரிவாக்கினார்களே தவிர, வாயைத் திறக்கவில்லை. இறுதியில் அவனே பேசினான். பேசிவிட்டு, அவர்கள் தன்னை கிண்டல் செய்யப் போகிறார்களோ என்பது மாதிரி தன்னையும் கூட்டத்தையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டான்.

“இங்க... ஏதாவது விசேஷமா?”

கொத்தனார் கொண்டையா, எகத்தாளமாகச் சொன்னார்:

“நாங்கதான் விசேஷம்.”

“இல்ல... கூட்டமா நிக்கியளேன்னு கேட்டேன்.”

“ஏன் நிற்கப்படாதா?”

“நான் என்ன மவராசாவா? இல்ல மந்திரியா? உத்திரவு போட... நானே பஞ்சம் பிழைக்க வந்த பன்னாடை...”

பெயிண்டர் பெருமாள் பின்புறமாகக் கட்டிய கைகளை முன்புறமாக வீசிப் போட்டுவிட்டு, அன்பு ததும்பக் கேட்டார்:

“தம்பிக்கு எந்த ஊரு?”

“திருநெல்வேலி ஜில்லாவுல ஆலங்குளத்துக்கு பக்கத்துல ஒரு கிராமம்... நேத்துதான் மெட்ராஸ் வந்தோம்...”

“என்ன விசேஷம்?”

“ஊர்ல... வயல் வேலைக்குப் போவேன்... இவள் நாற்று நடவுகளை எடுக்கன்னு போவாள்... இப்போ மணல் தேரி மாதிரி ஆயிட்டு... வெயிலுல நிலமெல்லாம் பொசுங்கிட்டு...”

“ஒனக்கு நிலம் உண்டா?”

“கடன்தான் உண்டு.”

“பிறகு ஏன்... ஏதோ பத்து ஏக்கர் நிலம் வச்சிருக்கிற விவசாயி மாதிரி வயலப்பத்தி இப்படி வருத்தப்படறே?”

“நீங்க சொல்லுறது நியாயமாப் படல... கிராமத்துல, நிலம் வச்சுருக்க விவசாயி ஒரு வருஷம் மழை பெய்யாட்டாலும்... விதை நெல்ல குத்தியாவது சாப்புடலாம்... வயலுல விளையாட்டாலும் கருப்பட்டி காச்சாவது பிழைச்சிக்கிடலாம்... ஆனால் கூலிக்கு விவசாய வேலைக்குப் போற என்னை மாதிரி ஆளுவளுக்குத்தான்... குளம் ரொம்ப முக்கியம். வெளிப்படையா சொல்லப்போனால்... நிலம் பிறத்தியாருக்குன்னாலும், அந்த நிலத்தோட அருமை... எங்களுக்குத் தான் தெரியும்... அந்த நிலத்துல விளைச்சல் இல்லாட்டா, நாங்க முளைக்க முடியாது.”

“அதாவது... பங்களாம்மா பையனோட அருமை... அந்த வீட்ல வேலை பார்க்கிற ஆயாவுக்குத் தெரியறது மாதிரி” என்றார் கொண்டையா.

விவசாய ஆயாவான அந்த இளைஞன் அவர் சொல்வது புரியவில்லையானாலும் ஏதோ தன் நிலைக்கு இரங்கிப் பேசுகிறார் என்று நினைத்து திருப்தியோடு புன்னகை செய்தான்.

தாயம்மா ஒரு சந்தேகப் பிரேரணையைக் கொண்டு வந்தாள்.

“ஆமா, ஊர்ல இருந்து... நீயும் ஒன் சம்சாரமும் வெளியேறுறதுக்கு பஞ்சம் மட்டுந்தான் காரணமா?”

அவன் ஏதோ சொல்லப் போனான் அந்தக் கூட்டத்திடம் முறையிடப் போவதுபோல் தோளில் கிடந்த தனது துண்டை எடுத்து முழங்கையில் போட்டுவிட்டு, விருத்த வியாக்கியானங்களோடு பேசப்போகிறவன் போல் உட்காரப் போனான். உடனே அவன் மனைவி அவன் விலாவில் இடித்து மின்வெட்டுப் போல உதட்டைச் சுருக்கி, கண்களை மேல்வாக்கில் தூக்கிப் போட்டாள். அவன் பெட்டிப் பாம்பானான்.

அவனிடம், மேற்கொண்டு யாரும் எதையும் கேட்கவில்லை. அவன் மனைவியையே அகன்ற வாயோடு பார்த்த தாயம்மா ‘ஒன் அயவுக்கு சினிமாவுல நடிச்சா லட்சம் லட்சமாகச் சம்பாதிக்கலாம், சினிமாக்காரன் பார்த்தாமுன்னா விடமாட்டான்’ என்று சொல்லப் போனவள், பெயிண்டர் பெருமாளைப் பார்த்ததும் வாயை மூடிக்கொண்டாள். பிறகு அவளுடைய பெயரைக் கேட்டாள்.

“வச்ச பேரு அன்னவடிவு, சிலரு அன்னமுன்னு கூப்பிடுவாங்க. சிலரு வடிவுன்னு கூப்பிடுவாங்க.”

“ஒன் ஆம்படையான் எப்படிக் கூப்பிடுவான்? அட வெட்கத்தைப் பாரு! ஒன் ஆம்படையான் பேரு என்னம்மா? கொத்தனாரே! இந்தப் பொண்ணு வெட்கப்படறதைப் பாரு! திருநெல்வேலி பொம்மனாட்டிங்க கட்டின ஆம்படையான... ‘நாயே’ ‘பேய’ என்று கூப்பிட்டாலும் கூப்பிடுவாங்க, ஆனால் பேர் சொல்லி மட்டும் கூப்பிடாதுங்க. எனக்குத் தெரியும். அதனால்தான் கேட்டேன். ஏம்மே! ஒன் ஆம்படையான் பேரை சும்மா சொல்லு. நீ இப்போ இருக்கிறது மெட்ராஸ். சும்மா சொல்லும்மா...”

முன்பு வாயுப் பிடியில் அல்லாடிய அதே பையன், இப்போது சிரிப்புப் பாதியும், கோபம் மீதியுமாய் கேட்டான்:

“ஆயா, நீ என்ன கவர்மெண்ட் மஸ்டர்ரோல எழுதிப் படிக்கது மாதிரி பேர் கேக்குற. பாவம், நாட்டுப்புறங்களைப் போய் டபாய்க்கிறயே.”

“என்னோட சர்வீஸ்க்கு... நானு மஸ்டர் ரோல் கூட எழுதலாண்டா?”

“நீ எழுதுனால்... அது கார்ப்பரேஷன் மஸ்டர் ரோல் மாதிரி பூடும்?”

“இப்ப மட்டும் என்னவாம்?”

திடீரென்று பேச்சு நின்றது. எல்லாரும் பார்க்காத சமயத்தில் ஒருவர் அங்கே வந்து நின்று பார்த்தார். இரண்டாக மடித்துக் கட்டிய லுங்கி; கையில் கடிகாரம். இன்னொரு கையில் தூக்குப்பை. கவிழ்த்துப் போட்ட மீசை, தெனாவட்டான பார்வை... மேஸ்திரி... அந்த அடிமைகளின் உழைப்பை விலை பேச வந்திருக்கும் தரகர். அவர்களுக்கு அவர்தான் மந்திரி, போலீஸ்காரர்... இவர்களுக்கு அடுத்தபடியாக வரும் ஆண்டவன். எல்லோரும் எழுந்து, அவரை மொய்த்துக் கொண்டார்கள். அவர், அவர்களை மேலும் கீழுமாகப் பார்த்தார்.

“சிப்ஸ் போட்டு... மேல்தளம்... பூசணும்... அஞ்சு பெரியாள்... அஞ்சு சித்தாள் வேணும்...”

ஐந்தல்ல; ஐந்தைந்து இருபத்தைந்து பேருக்கும் அதிகமாக அவரைச் சூழ்ந்து கொண்டார்கள். கண்களால் கெஞ்சியவர்கள். அவரது கண் பார்வைக்காக அது போகிற இடமெல்லாம் தன் பார்வையை மோத விட்டவர்கள். முன்னாலும் பின்னாலுமாக முண்டியடித்தவர்கள். மொத்தத்தில் பிச்சைக்காரர்கள்கூட, அப்படி மொய்க்க மாட்டார்கள். உழைப்பை பிச்சையிலும் படுபிச்சையாய் வழங்கியும், அது தெரியாத அந்த உழைப்புச் சதைகள், தங்களை விற்கக் குழைந்தார்கள். கம்பீரமான உடல்கள், கத்தாழைபோல் துவண்டன.

மேஸ்திரி சிறிது விலகி நின்று பேசினார்:

“காண்டிராக்டர் மோசமான கஞ்சன்... வழக்கப்படி பெரியாள் சித்தாள் கூலி கிடையாது... பாதி நாளைக்கு... பெரியாளுக்கு நாலு ரூபா... சித்தாளுக்கு மூணுரூபா தான் தரமுடியும். இஷ்டம் இருந்தால் வாங்க... இல்லன்னா நடையைக்கட்டுங்க. அப்புறம் இசக்கு மசக்கு பேசப்படாது.”

“ஒரு சிலர் நகன்றார்கள். பெரும்பாலோர், வேலை முக்கியம் கூலியல்ல என்பதுபோல், நின்ற இடத்திலேயே நின்றார்கள். மேஸ்திரிக்கு இன்னும் ரேட்டைக் குறைத்திருக்கலாமே என்று ஒரு ஆசை... தன் முன்னால் குழைந்த குழைவுக்கும், குழைந்தவர்களின் உடல் பலத்திற்கும் ஒரு விகிதாச்சாரத்தை ஏற்படுத்திக்கொண்டு ஒவ்வொருவராகப் பார்த்து, தன் பக்கம் நிற்கச் சொன்னார். அந்தக் கூட்டத்தோடு கூட்டமாகப் போய் நிற்கப்போன் தாயம்மாவைப் பார்த்து அதட்டினார்.

“நீ அந்தாண்ட போ... போன வாரம்... ஒண்ணுக்குப் போற சாக்குல ஒரு மணி நேரத்த வேஸ்ட் பண்ணுனே... ஒன் உடம்புக்கு முடியாது, ஒத்திப்போ...”

தாயம்மா கெஞ்சினாள்:

“அப்படிச் சொல்லப்படாது மேஸ்திரி... இன்னிக்கு வேலைக்குப் போனாத்தான்... நாளைக்கு டாக்டராண்ட போவலாம். பத்தோட பதினொண்ணா சேர்த்துக்கோ.”

“அந்தக் கத வாணாம்.”

“நீயே தள்ளுனா... நானு யார் கிட்ட போவேன்? சொல்லு நயினா...”

“ஆமா... நீ வயசுப் பொண்ணு... ஒன்னைத் தள்றேன். ஏம்மா, நீ ஊருக்குப் புதிசா? கட்டிட வேல தெரியுமா?”

அன்னவடிவு கணவனைப் பார்த்துவிட்டு, அவன் அனுமதி கிடைத்த அனுமானத்தில் பதிலளித்தாள்.

“கட்டிட வேல பழக்கமில்ல. இவுகளை வேணுமுன்னா கூட்டிக்கிட்டுப் போங்க.”

“நீ வாறீயா? அதுதான் கேள்வி.”

“சரி வாறேன்.”

“கட்டிட வேலை பழக்கமில்லன்னு சொன்னே.”

“செத்தால்தானா சுடுகாடு தெரியணும்? ஏழைங்களுக்கு வீட்ல இருக்கது, சுடுகாட்ல இருக்கறது மாதிரி தானே.”

“பரவாயில்லையே... நல்லாத்தான் பேசுற... இப்படி வா...”

அன்னவடிவு புருஷனைப் பார்த்தாள்... பிறகு “இங்கேயே லாந்துங்க. நான் வாரது வரைக்கும் வெளியில் போவப்படாது” என்று சொல்லிக்கொண்டே மேஸ்திரி நின்ற பக்கமாக நகர்ந்தாள்.

பப்ளிக் சர்வீஸ் கமிஷன் சேர்மன் மாதிரி, மேஸ்திரி முன்னால் நடக்க, அவரோடு தொங்கிக் கொண்டு போகிறவர்கள்போல் தேர்ந்தெடுத்த ‘பெரியாள்’களும், ‘சித்தாள்’களும் நடந்தார்கள். அன்னவடிவு, கணவனைத் திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டே நடந்தாள். திடீரென்று அவளோடு வந்து சேர்ந்த கணவன் “நான் நீ வேலை பார்க்கிற இடத்துக்குப் பக்கத்தில் வந்து நிக்கேன்” என்றான். அவனை அதட்டப்போன மேஸ்திரிக்கு அதட்டுவதற்கு இன்னொரு ஆள் கிடைத்தது.

தாயம்மா, கெஞ்சிக் கொண்டே ஓடிவந்தாள்.

“மேஸ்திரி... இன்னிக்கு மட்டுமாவது கூட்டிட்டுப் போ மேஸ்திரி... நாளைக்கு எப்படியும் டாக்டராண்ட போகணும்.”

“நீ... ஒண்ணுக்குப் போறதுக்கா?”

அந்தப் பக்கமா நடந்துவந்த பெயிண்டர் பெருமாள் அதட்டினார்:

“யோவ், நீயில்லாம் மனுஷனாய்யா? அந்த அம்மாவுக்கு என்ன கோளாறோ? ஒன்னோட மூணு வருஷமா வேலைக்கு வர்ர பொம்மனாட்டி... நாற்பது வருஷமா சித்தாளாய் வேலை பாக்குறவள். இந்த நாட்ல யானைக்குக்கூட பென்ஷன் கொடுக்கறாங்களாம். ஆனால் யானையைவிட அதிகமா வேல பார்த்த அம்மாவுக்கு பென்ஷன் வாணாம், வேல கூடவா கொடுக்கப்படாது? அந்த அளவுக்கா நெஞ்சில ரப்பு ஏறிட்டு? உன்னைச் சொல்லிக் குற்றமில்லய்யா? எல்லாத்துக்கும் எங்களச் சொல்லணும். அட... நீ வேல கூட கொடுக்க வேண்டாம். பேச்சாவது மனுஷத்தன்மையாய் இருக்கப்படாதா?”

நடந்து கொண்டிருந்த மேஸ்திரி, சிறிது நின்றார். பெயிண்டர் பெருமாளைப் பார்க்கும் போதெல்லாம் அவருக்குப் பயம். கூடுமான வரை, அவரை வேலைக்குக் கொண்டுபோகமாட்டார். வேலையில் குறையும் சொல்ல முடியாது. அவர் கேட்கிற கேள்விகளை தள்ளவும் முடியாது. கொள்ளவும் முடியாது.

மேஸ்திரி, தயங்கி நின்ற போது. பெருமாள் நிதானமாகக் கேட்டார்.

“நீய இந்த அம்மாகிட்ட எத்தனையோ வாட்டி கட்டிட வேலைக்கு ஐடியா கேட்டிருக்கே... அந்தம்மா கொடுத்த அத்தனை ஐடியாவையும்... என்ஜினியருங்களே ஆச்சரியப்பட்டு அமல் செய்து இருக்காங்க. முன்னாலே மாதிரி, ‘இதால’ வேல பார்க்க முடியாட்டியும், ஒன்பதோட பத்தா நீ நெனச்சால் சமாளிக்கலாம். அப்புறம் ஒன் இஷ்டம்.”

மேஸ்திரி தயங்கியபடியே பதிலளித்தார்:

“இப்போ ஆளுங்கள எடுத்திட்டேன்... இதற்கு மேல கூட்டிகிட்டுப் போனால் காண்டிராக்டர் கத்துவான்... ஒங்க முகத்துக்காக நாளைக்கி வேணுமுன்னால் கூப்பிடுறேன். இப்போ யாரை கழிக்க முடியும்?”

அன்னவடிவு கணவனைப் நிமிர்ந்து பார்த்தாள். தாயம்மாவை - அவளின் தள்ளாத இயலாமையைப் ஏறிட்டுப் பார்த்தாள். பிறகு தோளை நிமிர்த்தியபடி சொன்னாள்:

“நான் வேணுமுன்னால் நின்னுக்கிறேன். இந்தம்மாவ கூட்டிக்கிட்டு போங்க..”

வேறு வழியில்லாமல், மேஸ்திரி, தாயம்மாவைச் சேர்த்துக் கொண்டார்.

“நீயும் வா... பரவாயில்லை...” என்று அன்னவடிவைப் பார்த்துச் சொல்லப்போனார். பிறகு குற்ற உணர்வாலோ அல்லது பெருமாளுக்குப் பயந்தோ, நினைத்ததைச் சொல்லவில்லை. தாயம்மா, அன்னவடிவின் கைகளைப் பிடித்துப் பாசம் பொங்க அழுத்திவிட்டு. மேஸ்திரியின் பின்னால் நடந்தாள். பெயிண்டர் பெருமாள் அந்தக் கிராமத்துப் பெண்ணை நிமிர்ந்து பார்த்தார். பிறகு “நாளைக்கு அந்த டீக்கடைப் பக்கம் வாங்க. எந்த மேஸ்திரி கிட்டயாவது சேர்த்து விடுகிறேன்” என்று சொல்லிவிட்டு, வேகமாக நடந்தார்.

அன்னவடிவும், அவள் கணவனும் டீக்கடைப் பக்கமாக நடந்தார்கள். கணவனின் பக்கத்தில் இருந்த கோணி மூட்டையை அவள் வாங்கப் போனாள். அவன் கொடுக்க மறுத்தான்.

இருவரும் டீக்கடையை நெருங்கியபோது, பிளாட்பாரத்தில் உழைப்பை விற்பதற்காக உட்கார்ந்து, உட்கார்ந்து எழமுடியாமல் போன ஒரு மனிதர் திடீரென்று வாந்தியெடுத்தார். அன்னவடிவு டீக்கடையில், பாய்லருக்கு அருகே இருந்த பாதியளவு நீர் நிறைந்த டம்ளரை, கடைக்காரரிடம் கேட்காமலே எடுத்துக் கொண்டு, அந்த மனிதரைப் பார்த்து ஓடினாள்.

காலையில் டீயையும், பீடியையும் மாறிமாறித் தின்று வேலைக்குப் போகவேண்டும் என்ற மனோ திடத்தால், பித்த மயக்கத்தைக் கட்டுப்படுத்திய அந்த உழைப்பாளி, இப்போது உழைப்புப் போனதால் எல்லாம் போகட்டும் என்பதுபோல், வயிற்றை விட்டுப் பிடித்தார். அது வாந்தியின் வடிவில் ஒப்பாரி ஒலியோடு வெளிப்பட்டது. அவர் -

வாந்தியெடுத்துக்கொண்டே இருந்தார்.

அதில் வறுமையின் நிறமான மஞ்சள் இருந்தது.

இயலாமையின் மயக்கமான பித்தம் இருந்தது.

வறுமையை உண்ட வயிறு இப்போது அதனை வாந்தியாகத் திருப்பிக் கொடுத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=வேரில்_பழுத்த_பலா/010&oldid=1860354" இலிருந்து மீள்விக்கப்பட்டது