உள்ளடக்கத்துக்குச் செல்

வேரில் பழுத்த பலா/012

விக்கிமூலம் இலிருந்து

3


இருபது கிரவுண்ட் நிலத்தை, ராட்சதப் பல்லியோ அல்லது முதலையோ கால் பதித்து அப்பிக் கொண்டிருப்பது போன்ற கட்டுமானம். அந்த நிலத்தைச் சுற்றிப் போட்டிருந்த முள்வேலியும், அதை மறைத்த இரும்புத் தகடுகளும், அந்த ராட்சத மிருகத்தின் திறந்த வெளிச்சிறைச்சாலை போலத் தோன்றியது.

கிரஷ்ஷர் ‘யந்திரத்தின்’ அண்டாப்பகுதி, பூமி சுற்றுவது போல சுற்றிக்கொண்டிருந்தது. பெட்டிகளில் ஜல்லிக் கற்கள், மணல், சிமெண்ட் கலந்த கலவையை, சில தொழிலாளிப் பெண்கள் தூக்கிக்கொண்டு இருந்தார்கள். அந்த யந்திரம் வாயைத் திறக்கும்போது, அதனை இவற்றால் இட்டு நிரப்பவேண்டும். இன்னொரு பக்கம், ‘கண்’ கொண்ட ஜல்லடையில், இரண்டு மூன்று பெண்கள், ‘பாண்டு’வில் சுமந்துவந்த மணலைக் கொட்ட, கீழே தெளிந்து விழுந்த மண்ணை, இன்னொரு பெண் வாரிக் கொண்டிருந்தாள். சல்லடையில் தங்கிய சரல்களை, மற்றும் இன்னொருத்தி, வெளியே கொட்டிக் கொண்டிருந்தாள்.

கட்டுமான வேலைகளின் எல்லா அம்சங்களும், அங்கே இயங்கிக் கொண்டிருந்தன. மார்ச் மாத இறுதிக்குள் ‘பில்’ முடியவேண்டும் என்பதற்காக ‘பில்டிங்கை’ முடிப்பது என்று முடிவாகி விட்டது. செவ்வக வடிவில், நான்கு முறுக்கேறிய இரும்புக் கம்பிகள் வீதம் பல ‘காலம்கள்’ அடுக்கடுக்காக நின்றன. அவற்றைப் பார்க்கும்போது முறுக்கேறிய தொழிலாளிகள், நான்கு நான்கு பேராய்ச் சேர்ந்து நிற்பது போலத் தோன்றியது. இன்னொரு, பக்கம் கான்க்ரீட்டால் நிரப்பப்பட்ட ‘காலம்கள்’ மூன்றடி நீளமுள்ள இரும்புக் கம்பிகளைத் துருத்திக் காட்டின. நாலடுக்கு வரிசையில் மூன்று மூன்று காலம்களாக நிறுத்தப்பட்ட காலம்களில், சிலவற்றில் செவ்வக வடிவக் கம்பிகள் செலுத்தப்பட்டாகி விட்டன; கான்க்ரீட்தான் போட வேண்டும். இந்தக் கட்டுமானத்திற்குக் கீழேயும் மேலேயும் பல கம்பிகள் நடப்பட்டு, அந்தக் கட்டுமானமே ஆயிரங்கால் மண்டபம் போல் ஆனது. ஒரு இடத்தில் ‘வாண’ வேலையும் நடந்து கொண்டிருந்தது. இந்த வகை தொழிலாளர்களில் அடிமட்டமான ஒட்டர்களும் சில சித்தாள் பெண்களும், மண்வெட்டியாலும், கடப்பாரையாலும், தரையைக் கொத்திக்கொத்தி நான்கடிக்கும் கீழே போய்விட்டார்கள். அவர்கள் தலைகள்தான் தெரிந்தன.

ஆஸ்பெஸ்டாஸ் கொட்டகை போட்ட அலுவலகம்... சிமெண்ட் மூட்டைகளைக் கொண்ட ஸ்டோர் ரூம்... இவற்றைச் சுற்றி பக்கவாட்டில் போடப்பட்ட செவ்வக இரும்புக் கம்பிகளின் (பீம்கள்) உள்ளேயும் வெளியேயும் கான்கிரீட் போட்டு, அவை மறைந்து, அவற்றிற்கு மேலே செங்கல் சுவர்கள் வளர்ந்தபடி இருந்தன. இன்னொரு ஓரத்தில் கட்டி முடிந்த பகுதிக்கு, கொத்தனார் பூச்சு வேலை செய்து கொண்டிருந்தார். ஜல்லிக் கற்களின் குவியல்... அவை போதாதென்று பெரிய பெரிய பாராங்கல்லை ‘கையுடைப்பால்’ ஜல்லிகளாக்கும் ‘கல்லடுப்பு’ மனிதர்கள். பாளம் பாளமாக இறங்கிய மரமுண்டங்கள்; அவற்றைப் பகுத்தும், வகுத்தும் அறுக்கும் ஆசாரிகள்; பலகைகளில் ‘டிரில்’ போட்டும் திருகாணி போட்டும் ‘மேக்கப்’ செய்யும் கார்பென்டர்கள்; முற்றிலும் கட்டிமுடித்த அறைக்கு ‘டிஸ்டெம்பர்’ அடிக்கும் பெயிண்டர்கள். முடியாத அறையில் சிப்ஸ் கற்களையும், செங்கல் கற்களையும் போட்டு, பிறகு ‘கடுக்காய்’ தண்ணீர் தெளிக்கும் ‘சித்தாள்’ பெண்கள்... ரப்பர் குழாயை தூக்கிப் பிடித்து, நீர் பாய்ச்சும் வாலிபன்; அவனைப் பார்த்து உறுமுவது போல் ஊளையிடும் ஆயில் எஞ்சின். பல்வேறு வடிவிலான ‘மோல்டுகள்’; ‘கவ்வை’ போட்டுக் கொடுக்கும் ‘பெரியாள்கள்’; கற்களையும், மண்ணையும் சுமக்கும் பெண்கள்; ஜல்லிக் கற்களைக் கழுவும் பால்மணம் மாறா சிறுவர்கள்; மூலமட்டத்தாலும், குண்டாலும் ‘லெவல்’ பார்க்கும் கொத்தனார்கள். இவர்களை ‘லெவல்’ பார்க்கும் மேஸ்திரிகள்;

சாரம் கட்டி, ஏணிப்படிகளில் ஏறியபடியே தலையில் கல்லோ மண்ணோ ஏற்றி, தவழ்வது போல் உயரும் பெண்கள். பாசத்தால் கீழே புழுதியில் புரளும் தன் பிள்ளைகளைப் பார்த்து, ‘ஒன்னப் பார்த்து... கொஞ்சம் தவழத் தெரிஞ்சுக்கிட்டேன் பாத்தியா’ என்பது மாதிரியான அம்மாப் பார்வை. இப்படித் தவழ்ந்த நானு, ஒன்னை மாதுரி ஏணிப் படியில் தவழ்ந்து முன்னேற, எத்தனை நாளம்மா ஆகும்? என்பது போலான பிள்ளைப் பார்வைகள். வெயிலில் குடை பிடித்தபடி அங்குமிங்குமாக ஆட்களை ஆட்டும் காண்டிராக்டர்களின் காலாட்களான சூப்பர்வைசர்கள். வெளியே ‘டீ’ சாப்பிடப்போகும் தொழிலாளிகள் அந்தக் கட்டிடத்தையே தூக்கிக் கொண்டு போகலாம் என்றும், அப்படிப் போனால், தான் அனுமார் மாதிரி பறந்துபோய் அதைத் தூக்கி வந்து காண்டிராக்டர் காலடியில் சமர்ப்பிக்க வேண்டும், என்று நினைத்ததுபோல் “பறவைப் பார்வ” பார்க்கும் வாட்ச்மேன். அவரை வாட்ச் செய்யும் காண்டிராக்டரின் கையாள்.

மொத்தம் அறுபது பேருக்கு மேலிருக்கும் ஓரச்சுவரில் சாத்திய மர ஏணிகளில் மண் சுமையோடு ஏறி. குறுக்காய் போட்ட பலகை வழியாக நடந்து, ஒரு கால் மட்டுமே வைக்கும் படியான ஓரப் பலகையில் நடந்து தாவும் பெரியாள்களையும் சித்தாள் பெண்களையும் பார்த்து பூமாதேவியே, ‘பத்திரமாய் நடங்கள் என் பிள்ளைகளே! நீங்கள் இடறி விழுந்தால் என்னால் தாங்க முடியாது. நான் தாங்கினாலும் என்னோடயே நீங்க தங்க வேண்டியதாயிடும்’ என்று கார்பென்டரின் உளியோசை மூலமும், கல்லுடைக்கும் சுத்தி ஓசை மூலமும் எச்சரிப்பது போலிருந்தது. முன்பு இடறி விழுந்து, மனிதச் சதையில் இருந்து மண் சதைகளாகப் போன தன் பிள்ளைகளுக்காக ஆயில் எஞ்சின் ஒலியில், பூமாதேவி ஒப்பாரி வைப்பது போலவும், ரப்பர் குழாயில் பீறிடும் நீர் மூலம் அவள் கண்ணீர் விடுவது போலவும் தோன்றியது.

அந்த அடிமை எறும்புகள் சாரிசாரியாக சாரங்களில் ஏறி இறங்கிக் கொண்டிருந்தார்கள். மண்பட்ட மேனியில் எலும்புகள், பீம்கள் மாதிரியும், கால்கள் ‘காலம்கள்’ மாதிரியும் தோன்றின. இந்த அடித்தளப் பெண்களின் மேக்கப்பிற்குக் குறைச்சலில்லை. சுண்ணாம்பு பவுடர் முகம், பாண்டுவில் இருந்து ஒழுகிய கான்கிரீட் கலவையை டிசைன்களாகக் காட்டிய புடவை, சுடு மண்ணில் நடந்து நடந்து ஏற்பட்ட கன்னங்கரிய காய்ப்புகளை செருப்புகளாகக் காட்டிய கால்கள்.

தாயம்மா, தன் சக்தியையும் மீறி, சல்லடையில் மண்ணைக் கொட்டிக் கொண்டிருந்தாள். அன்னவடிவு, அதை சல்லடை முழுவதும் கைகளால் பரப்பிக் கொண்டிருந்தாள். பிறகு, தாயம்மா ஏதோ சொல்ல, அன்னவடிவு மண்கொட்ட, தாயம்மா அதைப் பரப்பிக் கொண்டிருந்தாள், சிறிது தொலைவில் வாணம் வெட்டும் தன் கணவனையே பரிதாபமாகப் பார்த்த அன்னவடிவு, அவன் உடம்பில் வழிந்த வேர்வையைத் துடைக்கப் போகிறவள் போல், துடித்தாள். ‘மெதுவாக வெட்டுங்க. நமக்கு இந்த உடம்புதான் மொதலு’ என்று அங்கிருந்தபடியே கூறப்போனாள். அதற்குள் தாயம்மா, அவளிடம் சொல்லிவிட்டு, ஒரு ஓரமாய்ப் போனாள். அவள் போனதும் அன்னவடிவு மண்ணைக் கொட்டி, அதை தன் கையாலேயே பரப்பினாள். கணவனைப் பார்த்து நேரத்தை வீணாக்க விரும்பாதவள் போல், தாயம்மாவுக்கும் சேர்த்துப் பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தாள்.

கால்மணி நேரம் ஆகியிருக்கலாம்.

அலுவலக ‘ஷெட்டில்’ கான்டிராக்டருக்கு ஏதோ விளக்கம் சொல்லிக் கொண்டிருந்த, சூப்பர்வைசர் ஒருவர், மண்ணில் இருந்து கிளம்பிய பூதம் போல அன்னவடிவின் முன்னால் தோன்றி அவளை அதட்டினார்.

“தாயம்மா எங்கே?”

“அதோ அந்தப் பக்கமா போயிருக்காவ.”

“அரைமணி நேரமா என்ன பண்றாள்.”

“என்னால் வெளிப்படையாச் சொல்ல முடியல. காரணம் இல்லாம போவல.”

“காரணமாவது மாரணமாவது.... வாங்குற சம்பளத்துக்கு வஞ்சகம் இல்லாமல் வேல பார்க்க வேண்டாமா? அரைமணி நேரம் ஆகுது ஆளக் காணலியே, என்ன பண்றாள்?

“என்னமும் பண்ணட்டுமே சாரே. அவிய வேலயயும் நான் சேத்துப் பார்க்கிறேன். இப்போ வந்துடுவாவ!”

“ஒன் முகத்துக்காக சும்மா போறேன்.”

“நீங்க ஒண்ணும் என் முகத்துக்காக போகவேண்டாம். என் வேலைக்காகப் போனால் போதும்.”

“ஒன் வேலையைப் பத்தி இனிமேத்தான் தெரிஞ்சிக்கணும். சீக்கிரம் தெரிந்தால் நல்லது.”

சினிமாக் கவிஞர்கள் மாதிரி இரட்டை அர்த்தத்தில் பேசிய அந்தப் பேர்வழியைப் பார்த்தபடி, அன்னவடிவு காறித் துப்பினாள். அவன் அதைப் புரிந்து கொண்டு அதற்குப் பதிலாக தன் அதிகாரத்தைத் துப்பத் தீர்மானித்தான்.

“அரைமணி நேரமா என்ன பண்றாள்? நான் சொன்னேன்னு அவளைக் கூட்டி வா.”

அவன் பேச்சைப் பொருட்படுத்தாததுபோல், அன்னவடிவு தன்பாட்டுக்கு மண்ணைக் கொட்டுவதும் அதைப் பரப்புவதுமாக தன்பாட்டுக்கு இயங்கினாள். வேறு வழியில்லாமல் உழைப்பின் முத்திரைகளாகத் தெரியவேண்டிய அவயவங்கள் அவன் ஊதாரி மனத்திற்குத் தீனியாகத் தோன்றின. அதட்டினான்:

“இந்தாம்மா ஒன்னத்தான்! அந்த அம்மாவக் கூட்டிட்டு வாறியா, இல்ல ஒனக்கும் சேர்த்து சீட்டுக் கிழிக்கணுமா?”

அன்னவடிவு, அவனை ஏறிட்டுப் பார்த்தாள். பிறகு அந்தப் பயலோட மூஞ்சியில் சில நிமிடங்களாவது விழிக்காமல் இருக்க நினைத்தவள் போல், தாயம்மா போன பக்கமாகப் போனாள். அதிகாரத்தைக் காட்டிவிட்டதால் அன்னவடிவு தன்னை விரும்புவாள் என்றும், ‘போசாரே’ என்று குழைவாள் என்றும் எதிர்பார்த்த சூப்பர்வைசர். அவள், அலட்சியமாகப் போவதை தனது ஆண்மைக்குறைவாக நினைத்து, ஆண்மைக் குறைவானவர்களுக்கு இயல்பாகவே ஏற்படும் ஆத்திரப் போதையில் நின்றான். ஐந்து நிமிடத்தில் தாயம்மாவும், அன்னவடிவும் திரும்பி வந்தார்கள். அவன் அதட்டினான்:

“அரைமணி நேரமாய் என்ன பண்ணினே...”

தாயம்மா, தவிப்போடு சொன்னாள்:

“பெத்த பிள்ள கிட்ட சொல்றது மாதிரி பினாத்துறேன் நாய்னா. ஆயாவுக்கு சரியா மூத்திரம் கழியமாட்டக்கு... பிட்டத்துல நோவெடுக்கு... ஒரே எரிச்சல்... அதனால்தான்...”

“அப்படின்னா... ஆஸ்பத்திரிக்குப் போகணும். இங்கே ஏன் வாரே? செத்துத் தொலைச்சால் யார் பொறுப்பு?”

ஏதோ சூடாகக் கேட்கப்போன அன்னவடிவின் வலது கையை தாயம்மா அவனுக்குத் தெரியாமலே பட்டும்படாமல் கிள்ளிவிட்டு “பொறுத்துக்கோ நாய்னா” என்றாள்.

“இனிமேல்... இப்படிப் போனால்... வெளில் போக வேண்டியதிருக்கும்... ஜாக்கிரதை. அந்த அம்மாவ மரியாதையா நடந்துக்கச் சொல்லு...”

தாயம்மாவிடம், ‘புரோக்கர்’ வேலையை சூசகமாகச் சொல்லி விட்டால், அவள் அன்னவடிவை சரிப்படுத்தி விடுவாள் என்ற நம்பிக்கையோடும், அப்படி அவள் சரியாகும் வரை, தாயம்மாவை விரட்டுவதென்றும், அப்படி அவளை விரட்டும் சந்தர்ப்பங்களைக் கொடுக்கும் வகையில், அவளுக்கு, சிறுநீர் கோளாறு அடிக்கடி ஏற்பட வேண்டும் என்றும் நினைத்தபடி சூப்பர்வைசர் போனான். அவன் போன கால்மணி நேரத்தில், தாயம்மாவால், தன்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒதுக்குப்புறமாகப் போய்விட்டாள்.

பத்து நிமிடமாயும், அவள் திரும்பாததைப் பார்த்து விட்டு, சூப்பர்வைசர் மிக்க மகிழ்ச்சியோடு போனான். அன்னவடிவு, அவன் அங்கே இல்லாததுபோல் இயங்கினாள். அதுவே அவனை ஆவேசனாக்கியது.

“அந்தம்மா பழையபடியும் போயிட்டாளா?”

அன்னவடிவு பதில் பேசவில்லை.

தாயம்மா. புடவையை நனைத்தபடி ஓடிவந்தாள்.

“மன்னிச்சிடு மவராசா. தீட்டு நின்னுட்டுன்னு சந்தோஷப்பட்ட வயசில இந்தக் கருமாந்திரம்.”

என்னம்மா நெனச்சிக்கிட்டே? தெரியாமத்தான் கேட்கேன்... இது என்ன ஒன் ஆம்புடையான் கட்டுற பில்டிங்குன்னு நினைப்பா? வேணுமுன்னால் ஷெட்டுல வந்து ரெஸ்ட் எடுக்கிறீயா, டாக்டருக்கு போன் போட்டு வரச் சொல்லவா?"

அன்னவடிவால், இயங்க முடியவில்லை.

“ஸாரே... மரியாதி குடுத்து மரியாதி வாங்கணும்... அந்தம்மா... வயசென்ன? ஒம்ம வயசென்ன? எருதுவுக்கு நோவாம், காக்காவுக்குக் கொண்டாட்டமாம்.”

“ஆமா... நீ எருது, நான் உன்மேல உட்காரப் போற காக்கா...”

தாயம்மா, தன்னை மறந்தாள்... ‘கிட்னி’ வேதனையை மறந்தாள். அன்னவடிவின் முகத்தைப் பார்த்து, அதில் படர்ந்த கோபத்தீயை தன் உடம்பெங்கும் பற்றவைத்துக் கொண்டவள் போல் கத்தினாள்.

“நீயெல்லாம் மனுஷனாடா? பேமானி! அம்மா வயித்துல இருந்து பிறந்தியா? இல்ல ஆகாயத்துல இருந்து குதிச்சியா? கஸ்மாலம்... கம்மனாட்டி... ஒரு பொம்பளகிட்ட எப்படிப் பேசணுமுன்னு தெரியாத நீ. கூடப்பிறந்த அக்காமேல கூட உட்காருவே. போடா பொறுக்கி.”

சூப்பர்வைஸர் தலைகுனிந்தபடியே நடந்தான். அலுவலக ஷெட்டுக்குள் நுழையும்போது மட்டும் அவர்களை கம்பீரமாகத் திரும்பிப் பார்த்துக்கொண்டே நுழைந்தான். சிறிது நேரத்தில் “தாயம்மா... தாயம்மா...” என்று ஷெட்டுப் பக்கத்தில் நின்றபடியே, மேஸ்திரி கைதட்டிக் கூப்பிட்டார். மேஸ்திரி நிற்கும் இடத்தை நோக்கி ஓடினாள்.

“என்னம்மா நீ... பேஜாரு பண்ற... வேல பார்க்கலன்னு சொன்ன சூப்பர்வைஸரைப் பார்த்து பொறுக்கின்னு சொன்னீயாம்...”

“எந்தப் பொம்மனாட்டியாவது... வேலையில மட்டும் குற்றம் சொல்றவனைப் பார்த்து அப்படிக் கேட்பாளா?”

“ஓஹோ! அப்படின்னா... நீ அவனைத் திட்டுனது நிசந்தானா? ஒன்னால எனக்குக் கெட்ட பேரு... ஒன்னை நிறுத்தாட்டால் காண்டிராக்டர் என்னை நிறுத்திடுவேன்னு சொல்றார்... இந்தா ஒன் கூலி... மூணு ரூபாய்... நல்லா எண்ணிக்கோ... இனிமேல் ஒன் வாடையே... வாணாம்.”

“மேஸ்திரி! என்ன நடந்ததுன்னு கேளு... நான் சொன்னது தப்புன்னா... அப்புறம் ஒன் ஜோட்டாலே என்ன அடி.”

“அந்தக் கதெல்லாம் வாணாம்... இந்தா ஒன் பணம்.”

தாயம்மா, பணத்தை வாங்க மறுத்தபோது. மேஸ்திரி அந்த நாணயங்களை அவள் கைகளில் திணித்தார். அவளுக்கு ஏதோ ஒரு ஆவேசம் வந்தது. அந்தச் சமயத்தில் மேஸ்திரி, அவள் காதில் முணுமுணுத்தார்.

“தப்பா நினைக்காதேம்மா... நானு புள்ள குட்டிக்காரன். சும்மா மேலுக்கு அதட்டினாலும் ஒன்மேலே எனக்குக் கோபமில்லே. ஆனால் காண்டிராக்டர், சூப்பர்வைசரை விட்டுக் கொடுக்கல... நீ சூப்பர்வைசர சொன்னது, காண்டிராக்டரை சொன்னது மாதிரியாம்... அதனால நான் இருக்கணும்னா நீ இருக்கப்படதாம். வேணுமின்னா போய் பேசிப் பாரு...”

“சரி... அந்த தர்ம மவராசன் கிட்டயே நான் பேசிக்கிறேன்...”

தாயம்மா அலுவலக ஷெட்டுக்குள் இருந்த குட்டியறைக்குள் தலைவிரிகோலமாக ஓடினாள்.

வெள்ளை முடியை டையால் கறுப்பாக்கி. விகார முகத்தை சிரிப்பாக்கி, சுண்ணாம்புப் பூச்சு பூசுபவர் போல் தோன்றிய ஐம்பது வயது மதிக்கத்தக்க காண்டிராக்டர், நான்கைந்து சகாக்களுடன், விஸ்கி வகையறாக்களுடன் சிக்கன் பிரியாணி வகையறாக்களையும் சிக்கனமாக அல்ல, சிக்கெனப் பிடித்தபடி வாயில் பிடித்துக் கொண்டிருந்தார்.

தாயம்மாவைப் பார்த்தவர்- தம் தலைக்குள் ‘ரம்’ பாய்ந்தது போல் துள்ளினார்.

“ஏய், யாரு நீ? ஒன்னை யாரு உள்ளே விட்டது? டேய் சுந்தரம், சுந்தரத்த எங்கேடா?”

தாயம்மா, பயபக்தியோடு பேசினாள்.

“தப்பா நெனைக்கப்படாது நயினா. இந்த சூப்பர்வைசர் பையன் ஏடா கோடமாய் பேசுனான். நானும் பேசிட்டேன். அதுக்காக என்னை வேலையில் இருந்து இஸ்டாப் பண்றேன்னு மேஸ்திரி சொன்னார். நானு, இந்த ரூபாய்லதான் அரிசி வாங்கணும். டாக்டரண்டே போகணும்; அதனாலதான் அய்யாகிட்டே...”

‘அய்யா’ விஸ்கி மயக்கத்தில் கத்தினார்.

“ஒன்னே யாருடி உள்ளே விட்டது? பன்னாட மாதுரி வந்து குதிக்கிறே. ஏய் மேஸ்திரி, அவன், மேஸ்திரியைக் கூப்பிடு...”

அவருடன் குடித்துக்கொண்டிருந்த ஒருவர், தள்ளாடியபடியே எழுந்து, வெளியே போய். மேஸ்திரியைத் தள்ளியபடியே உள்ளே கொண்டுவந்தார். காண்டிராக்டர் கொடுத்த தண்ணிக்கு வட்டி கட்ட வேண்டாமா? அந்த மேஸ்திரியிடம் ரோஷத்தைக் காட்டாவிட்டால், யாரிடம் காட்டுவார்? காட்டினார்.

“ஏய்யா... ஒனக்கு மூளை இருக்கா? இந்த சாவுக் கிராக்கிய எதுக்காக வேலைக்குக் கொண்டுவந்தே? இப்போவோ நாளையோன்னு இருக்கிறதெயெல்லாம் என் தலையில் ஏய்யா தள்ளுறே? இந்த தாயம்மா, இந்தக் கட்டிடம் முழுதும் ஒண்ணுக்கு இருந்து, அதை கரைய வச்சுடப் போறாள். மொதல்ல ஒன் சீட்டக் கிழிக்கணும்”.

தாயம்மாவுக்கு, தன்நோயே, அவன்களுக்கு கேலிக்கு உரியதாய் போனதை உணர்ந்தவளாய் நிமிர்ந்தாள். இனிமேல், அவன் அழைத்தாலும், இங்கே வேலை பார்க்கக் கூடாது. இன்றைக்கு மட்டுமே வாழ்ந்தாலும், மானத்தோடு வாழணும். வெளியே போனாலும் கம்பீரமாகப் போகணும். தாயம்மா, தன்மானத்தின் தாயாகி, கம்பீரப்பட்டு, கர்ஜித்தாள்.

“நாற்பது வருஷமா உழைச்ச எனக்கே இந்தக் கதின்னா, என்னோட உழைப்பை உறிஞ்சுன ஒன்ன மாதுரி பன்னடாட மனுசங்க கதி என்ன கதியோ? என் நோயப் பார்த்து, இரக்கப்படாம இளக்காரப்பபடுறியா? படு... படு. நீ படுக்கிற காலம் வரும். அப்போ...சீ! நான் என் வாயால சொன்னா அசிங்கம். அது நடக்கத்தான் போவுது.

“ஏய்... போலீஸ்ல போன் பண்ணணுமா? ஏய் சுந்தரம்!”

“அட சரிதான் போய்யா... மனசாட்சியுள்ள மனுஷனாய்யா நீ? வேலையை விட்டு நீக்கு, பரவாயில்லை... நான் என்ன சொல்ல வந்தேங்கிறதை கூட கேட்க விரும்பலியே. நீயுல்லாம் மனுஷன்னா? அந்த சூப்பர்வைசர் ஒன் சம்சாரத்தோடயும் வெண்ட வெண்டயா பேசப்போறான் இல்லாங்காட்டி அவள இஸ்துக்கினு பூடுவான், அப்போ புரியும் அன்னவடிவோட வேதனை. ஏழைக்கி எதுவும் பண்ணித் தொலையணுமுன்னு சொல்லல. ஆனால் அவங்க என்ன சொல்லவாராங்கன்னாவது கேட்க முடியாத அளவுக்கு நெஞ்சில மஞ்சா சோறா?”

‘பெரிய மனுஷியேன்னு பாக்கறேன்... இல்லேன்னா...’

“அதனாலதான் ‘டீ’ போட்டு பேசினீயா... ஒண்ணே ஒண்ண மட்டும் மறந்துடாத கண்ணா... நீங்க ஒவ்வொருவனும் குடிக்கிற விஸ்கி... ஒரு மேஸ்திரியோட கூலி... ஏழைங்க சாப்புடுற பிரியாணி, ஒரு பெரியாளோட சம்பளம்... நீங்க வாயில திணிக்கிற முந்திரிப் பருப்பு, ஒரு சித்தாளோட பணம். நீ விஸ்கி குடிக்கல. பிரியாணி தின்னல. வெயிலுல நின்னு ஆகாயத்துக்குத் தாவி உழைக்கிற ஏழைகளைத் தின்னுறே. இந்த ஏழைப்பாளைங்க ஒன்னையும் தின்னுற காலம் வரும். அதுவரைக்கும் இதோ இந்த பிசாத்து மூணு ரூபாய் வச்சுக்கோ. அப்புறமா கணக்குப் பார்த்து வாங்குற காலத்துல வாறேன்.”

தாயம்மா, கையில் இருந்த நாணயங்களை விசிறியடித்தாள். அவை காண்டிராக்டரின் ‘பிராண்டி பெக்கிலும்’ இதரர்களின் பிரியாணிகளிலும் விழுந்து எதிர்காலத்தில் நடக்கப் போவதைக் காட்டுவதுபோல மதுபானத்தையும், மற்றவற்றையும் சிதற வைத்தன.

தாயம்மாவின் ஆவேசத்தில் அகப்பட்டவர் போல், மேஸ்திரி, அவளை மெள்ள அணைத்தபடியே வெளியே கொண்டு வந்தார். அவள், அவரை ஏறிட்டுப் பார்க்காமலேயே ஆவேசமாக நடந்தாள். அவளைப் பார்த்து ஓடி வந்த அன்னவடிவை திரும்பிப் போகும்படி கைகளால் ஆணையிட்டு விட்டு, கால்களை நீட்டிப் போட்டாள்.

வெளியே வந்த தாயம்மாவுக்கு யதார்த்தம் சுட்டது. காசையாவது வீசியடித்திருக்க வேண்டாம் என்பதுபோல் நினைத்து டாக்டரிடம் போகவேண்டியதை நினைவுக்குகொண்டு வந்தாள். பிறகு வீசியடித்தது சரிதான் என்பது போல், வீதியில் நடந்தாள்.

விதியே வீதியானதுபோல் தரை சுட்டது. தரையே தன் நிலையானது போல் அவள் தாவித்தாவி நடந்தாள். மீண்டும் புட்டத்தில் வலி. தயிர்கடையும் மத்துப்போல் புட்டத்தின் இருபக்கமும் ஏதோ ஒன்று, ஏதோ ஒன்றைக் குடைவது போன்ற பெருவலி. நெருப்பே தாளாத எரிச்சல். கத்தித்தீராத - கத்த முடியாத - கடுப்பு. இத்துடன் நாற்பதாண்டு கால உழைப்பு, பிரசவமாகி இப்போது முதலும் முடிவும் அற்று முண்டமாய் அபார்ஷனாய் போன தவிப்பு.

தாயம்மாவைத் தாங்கிப் பிடிக்க யாரும் இல்லாததால் அவள் தன்னைப் பிடித்துக் கொண்டே நடந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=வேரில்_பழுத்த_பலா/012&oldid=1860364" இலிருந்து மீள்விக்கப்பட்டது