வேரில் பழுத்த பலா/013
4
அன்னவடிவு குடிசைக்குத் திரும்பிய போது, தாயம்மா தரையில் புரண்டு கொண்டிருந்தாள். அவளின் ஒரே சீமந்த புத்திரன் கோவிந்தனும், இன்னொரு பக்கம் குடித்துவிட்டுப் புரண்டு கொண்டிருந்தான். இருபத்திரண்டு வயது வாலிபன், ஆத்தாக்காரி கொண்டுவரும் காசை அவளுக்குத் தெரியாமல் எடுத்து, பலருக்குத் தெரியும்படி பட்டை போடுபவன்.
அன்னவடிவு, தாயம்மாவின் தலையைத் தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டு நெஞ்சை நீவிவிட்டாள். காண்டிராக்டரின் முன்னால்கூட கண்ணீர் விடாத அந்த மூதாட்டி, இப்போது வடிவின் மடியிலேயே குப்புறப் படுத்து அவள் புடவையில் தன் கண்ணீரைத் துடைத்தாள். பிறகு மெல்ல எழுந்து தரையில் புரண்ட மகனைப் பார்த்து ஓலமிட்டாள்.
“ஏய்... சோமாறிப் பயலே... தே... பாருடா... இது யாரு பெத்த பொண்ணோ என்னை எப்படிக் கவனிக்குதுன்னு பாருடா? ஒன்ன வயித்துல சொமந்து பெத்தேன். நான் நோவில துடிக்கையிலும் நீ பட்டச் சாராயமாடா போடுறே? பாடையில் போறவனே. நீ குடிச்சிட்டு கும்மாளம் பூடணும். நானு கல்லு மண்ணு சுமக்கணுமா? பாரு அன்னம்! போனவாரம் அடுக்களைப் பானையில்ல... அஞ்சு ரூபா வச்சிருந்தேன். டாக்டராண்ட போவதாய் இருந்தேன். இந்த கஸ்மாலம்... அதை எடுத்துப் பட்ட பூட்டுட்டான். இல்லான்னா அப்பவே டாக்டருட்ட போய், நோய் குணமாயிருக்கும். இன்னிக்கு அப்படி ஒதுங்கி இருக்கவும் வாணாம். அந்தப் பண்ணிப் பசங்ககிட்ட பேச்சும் வாங்கியிருக்காணாம். பாரு இந்த தத்தேரிய. இவன் ஒடம்பில் ரத்தம் ஓடல... பட்டச்சாராயம் ஓடுது. எனக்கு முன்னாடியே பூடுவான் போல...”
தாயம்மா கண்களைத் துடைக்காமல், விழிகளைத் தளர்த்தாமல் மகனையே பார்த்தாள். அங்குமிங்குமாகப் புரண்டு கொண்டிருந்த கோவிந்தன், தடுமாறி எழுந்தான். அன்னவடிவை, அப்போதுதான் பார்த்திருக்கிறான். திடுக்கிட்டு எழுந்தான். கொடியில் கிடந்த லுங்கியை எடுத்து, குடிசைக்கு வெளியே வந்து, கட்டிக்கொண்டு போய்க் கொண்டு இருந்தான். தாயம்மா “ஏ கஸ்மாலம், தோ கஞ்சி ஆவப் போவுது. குடிச்சிட்டு சாவு” என்றாள். அன்னவடிவு எதுவும் பேசாமல், துயரச்சாயலோடு, தாயம்மாவைப் பார்த்தபோது, அந்தக் கிழவி, பெருமை பிடிபடாமல் பேச்சால் ஆடினாள்.
“பாரு அன்னம்! ஒன்னப் பாத்தா பெட்டிப் பாம்பாய் ஆயிடுறான். ஒன்னைப் பாத்ததும் ஓடிட்டான். கட்டையில் போவான். நல்லவன்தான். எல்லாம் சேர்ப்பார் சேர்க்கை. பொறுக்கிப் பயலுக சவகாசம்.”
அன்னவடிவுக்கும், ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. இன்று காலையிலேயே சில பெண்கள் “சீக்கிரமா வீடு பாரு. அந்த கஸ்மாலம் குடிகார மொட்ட... ஒண்ணு கிடக்க ஒண்ணு நடந்துட்டா... அப்பால ஆரச் சொல்றது?” என்று உபதேசித்தார்கள். அன்னமும், பயந்து போனாள். ஆனால் அவனே, தன்னைப் பார்த்ததும், தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு போய் விடுகிறான்!
அன்னவடிவிற்கு, யோசிக்க நேரமில்லை. கஞ்சி காய்ச்சுவதற்காக, மண்பானையை எடுத்துக் கொண்டு குழாயடியை நோக்கி போனாள். அது குழாயல்ல, கார்ப்பரேஷன் ஒரு கழிசடை என்பதற்கான அடையாளம். அருகிலேயே கக்கூஸ். அங்கே கார்ப்பரேஷன் குழாய்நீர் வெட்கப்பட்டு நுழைய மறுத்ததுபோல் மறைந்திருந்து துர்வாசனையை, வெளியே ஒவ்வொருவருடைய மூக்கிலும் நுழைந்து கொண்டிருந்தது. மொத்தம் முன்னூறு குடிசைகள் உள்ள அந்தப் பகுதியில் மின்சார விளக்கே கிடையாது. இரண்டே இரண்டு தண்ணீர்க் குழாய்கள். அவற்றில் நீர் பிடிக்க பெண்கள் படும்பாடு தண்ணீர் படாதபாடு. ஓட்டுச் சாவடியில் கூடுவது போன்ற கூட்டம். ஆனால் அவர்களை ஏற்றிப்போக கார்கள்தான் இல்லை.
பெரும்பாலும் கட்டிட வேலைகளுக்குச் செல்லும் அந்தப் பெண்கள் மாலையில் வந்ததும் முதல் வேலையாக மளிகைக் கடைக்குப் போய் அரிசி வாங்குவார்கள். பிறகு லாந்தர் விளக்கை ஏற்ற மண்ணெண்ணெய் வாங்க வேண்டும். சமைப்பதற்குரிய சாமான்கள் ஏழுமணி முதல் ரெடியாகிவிடும். ஆனால் தெரு அடங்குவதற்குக் காத்திருந்து சமைப்பதற்கு ஒன்பது மணிக்கு மேலாகிவிடலாம். அடிவயிற்றில் நெருப்பைப் பிடித்துக்கொண்டே அவர்கள் குழாய் நீரைப் பிடிக்க வேண்டும். காலையில் அதிகாலையிலேயே எழுந்து வெளியே ஒதுங்க வேண்டும். கண்படும் காலை வந்து விட்டால் அவர்களால் காலைக்கடனைக் கழிக்க முடியாது. இருப்பது ஒரே ஒரு கக்கூஸ். அதுவும் துளி நீரில்லாதது. ஆண்களைப் போல் வெளியேயும் போகமுடியாது. உணவின் எச்சங்களை அடக்கி, அடக்கி, அவற்றை நோயாகவும், நொடியாகவும் கொண்ட பெண்கள் அத்தனை பேரும் குடங்களை வரிசையாக வைத்துக் கொண்டு காத்திருந்தார்கள் வேலைக்குத்தான் காத்திருக்கலாம். வேலையின் கூலியை உணவாக்கிவிடும் சமயத்திலயுமா?
அன்னவடிவு, ஒருத்தியை தன் பானையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, தாயம்மாவைக் கவனிக்க, குடிசையைப் பார்த்துப் போனாள். தாயம்மா தூங்கிக் கொண்டிருப்பதுபோல் தெரிந்தது. குழாய்க்குத் திரும்பி வந்த அன்னவடிவைப் பார்த்து ஒருத்தி பேசினாள்:
“ஒங்க நாட்டுப்புறம் மாதுரி வராதுல்லே? பாத்தியாமா எங்க நெலமய! தண்ணிக்காக எம்மா நேரம் காத்திருக்கோம்... இது சண்டை வாரது சகஜம்... இது புரியாம... சில பெரிய மனுஷங்க ‘குழாய்ச் சண்டை மாதுரி ஆகப்படாது’ன்னு பெண்டாட்டி பிள்ளீங்களுக்கு ரோசன சொல்றாங்க. இவங்கள ஜோட்டால அடிக்கணும். பொறுக்கிப் பசங்க... அவங்க பொண்ணுங்க இப்படிக் காத்து நின்னாத் தெரியும். இதே ஏரியாவுல இருக்கிற பங்களாங்கள்ல பாத்ரூம்ல ரண்டு குழாய், கக்கூஸ்ல ரண்டு, சமையல் அறையில ரண்டு, பூந்தோட்டத்திலே ரண்டுன்னு எத்தனையோ குழாய்ங்க. ஆனால் ஆயிரம் பேர் இருக்கிற இங்க ரண்டு குழாய். ஒவ்வொண்ணும் மாறி மாறி ஆப் எடுத்துக்கும். கக்கூஸ் நாத்தத்தைப் பாத்தியா? அங்க கிடக்கறதை எடுத்து கார்ப்பரேஷன் கட்டிடம் மேல வீசியடிக்கணும். அப்போதான் புத்தி வரும், பொறுப்புல இருக்கற பசங்களுக்கு...”
அந்தப் பெண், அப்படித் தீவிரமாகப் பேசியிருக்க மாட்டாள். அன்னவடிவு அவள் சொல்வது சரிதான் என்பதுபோல அனுதாபத்துடன் முன்னும் பின்னுமாக தலையை ஆட்டியதால், அவள் கொட்டிவிட்டாள். தன் பேச்சுக்கு மதிப்புக் கொடுத்த அவளுக்கு உதவுவது போல ஒரு பக்கெட்டில் பிடித்து வைத்திருந்த தண்ணீரை அன்னவடிவின் பானையில் ஊற்றினாள்.
குடிசைக்குத் திரும்பிய அன்னவடிவு அடுப்பைப் பற்ற வைத்தாள். தாயம்மாள் அவளுக்கு உதவுவதற்காக எழுந்திருக்கப் போனாள். அவள் அந்த முதியவளை சைகையால் தடுத்து விட்டாள். திடீரென்று வெளியே சத்தம். கோவிந்தனின் போர்ப்பரணி. தாயம்மா எழுந்து வாசலுக்கு வெளியே போனாள். அன்னவடிவு வாசலில், அதாவது தொங்கிக் கொண்டிருந்த கோணியைப் பிடித்துக் கொண்டு எட்டிப் பார்த்தாள். கோவிந்தன் ஒருவனின் தலைமுடியைப் பிடித்தபடி கத்திக் கொண்டிருந்தான்.
“சொன்னத இன்னொருவாட்டி சொல்லுடா கஸ்மாலம்? என் ஸிஸ்டரயா ‘யாருடா ஒன் வீட்ல இருக்கிற குட்டி? ஏதாவது கிராக்கியா’ன்னு கேக்குறே? சோதா... சோமாறி... என்ன பெத்த ஆத்தாள, தான் பெத்த மவளா கவனிக்கிற என் சிஸ்டரப் பார்த்தாடா கிராக்கின்னு கேட்டே? ஒன்கிட்ட இன்னா பேச்சு!”
கோவிந்தன், பேச்சை நிறுத்திவிட்டு, கை வீச்சையும் கால் வீச்சையும் துவக்கினான். இதற்குள், ‘விட்டுடுடா, கஸ்மாலத்த’ என்றனர். ‘விடாதடா சோமாறிய’ என்றார்கள். எப்படியோ அமர்க்களம் ஓய்ந்தது.
அன்னவடிவு அடுப்படிக்கு வந்தாள், தன்னால் இப்படிப் பல கலாட்டாக்கள் ஏற்பட்டு ‘ராமன் கெட்டதும் பெண்ணாலே, ராவணன் கெட்டதும் பெண்ணாலே’ என்று கெட்டுப்போனவர்கள் சொல்வது, தனக்கும் வருமோ என்று தவித்தாள். அதே சமயம் பெரும்பாலான குடிசை மக்கள், அந்தக் கஸ்மாலத்தைத்தான் கண்டித்தார்கள் என்பதை உணர்ந்தபோது அன்னவடிவு நிம்மதியடைந்தாள். வெளியே கோவிந்தன் புலம்பிப் புரண்டான்.
“என்னோட பிறப்ப எப்படிக் கேட்டுட்டான் பாரு! டேய்! ஒன்ன ஒன்ன... ஏண்டா கம்னாட்டி, அந்த அம்மாவப் பார்த்து ஒன் அம்மா ஞாபகம் தோணாண்டாம்? அக்கா ஞாபகம் தோணாண்டாம்? ஒனக்கு அப்படி தோணாதுதான்டா நாயே... நீ அவங்களையும் தப்பாப் பார்க்கிறப் பயல். பொயுது விடியட்டும். காலையில பாரு வேடிக்கையை.”
அடுப்புத்தீ பற்றி விறகுகளை சாம்பலாக்கிக் கொண்டிருந்தது. அன்னவடிவு, ஊரில் நடந்த நிகழ்ச்சியை நினைத்துப் பார்த்தாள். வசதி படைத்த காலிப்பயல் ஒருவன், கையைப் பிடித்தபோது கூட, சொந்தக்காரர்களே, ஏனென்று கேட்கவில்லை. அப்படி ஏனென்று கேட்டவர்களும், அவளைத்தான் சந்தேகப்பட்டு குறுக்கு விசாரணை செய்தார்கள். ஆனால், இங்கே இரண்டு நாள் பழக்கத்தில், அதுவும் தன் முகத்தை நேராய் நிமிர்ந்து பார்க்கக்கூடத் தயங்கும் ஒருவன், தன்னைப் பேசியவனை, தன்னையும் பணயம் வைத்து அடிக்கிறான். இது இந்த சகோதர பாசம், சொந்தக்கார மாமாவிடம் கிடைக்காத பாசம், இவர்களிடம் கிடைக்குதே. இதுக்குக் காரணம் என்ன? எது?
அன்னவடிவு, காரணகாரியத்தில் ஈடுபடாமல், பாசப் பெருக்கில் விம்மினாள். கண்ணில் இருந்து சுரந்த நீரும். ஊரில் அக்கரமத்தைக் கண்டுக்காதவர்களுக்காக அழுத நீரும், பாசத்தைக் கண்டுபிடித்ததில் ஏற்பட்ட ஆனந்த நீரும் கலவையாகி, துளித்துளியாகக் கீழே விழுந்து, கொழுந்துவிட்டு எரிந்த சுள்ளி நெருப்பை அணைக்கப் போனது.
கஞ்சிக் குடிப்புப் படலம் முடிந்தது.
அன்னவடிவு என்ன சொல்லியும் கேளாமல், தாயம்மா ஏதோ சாக்குப் போக்குச் சொல்லிவிட்டு, தெருவில் போய்ப் படுத்துக் கொண்டாள், கோவிந்தன் ஆளையே காணவில்லை. இதுவரை வீட்டுக்குள் படுப்பவன் அவன்தான். எங்கெல்லாமோ சுற்றிவிட்டு, சாப்பாட்டுச் சமயத்திற்கு வந்த வேலுவும், அவளும் குடிசைக்குள் தனியே விடப்பட்டார்கள்.
பாய் விரித்தாகி விட்டது. பக்கத்துக்கு ஒருவராக உட்கார்ந்து இருந்தார்கள்.
வேலு, மனைவியை ஆசையோடு நெருங்கினான். அவள் கையை இழுத்து தன்மார்பில் போட்டுக் கொண்டே “ரெண்டு வாரம்மா... பிரம்மச்சாரியா இருந்துட்டோம். எவ்வளவு நாளாச்சு? ஏன் பிள்ள ஒரு மாதிரி இருக்கே?” என்றான். அன்னவடிவு அடக்கிய ஆசை அமுங்கிப் போக பதில் சொன்னாள்.
“தாயம்மா பாட்டிய... வேல செய்யுற இடத்துல என்ன பாடு படுத்திட்டாங்க பாத்தியளா?”
வேலு, அவளுக்கு ஏற்பட்ட நிலைமையை, மனத்திற்குக் கொண்டு வந்து பார்த்தான். ஊனக்கண்ணில் அதிகமாய் படாதது ஞானக்கண்ணில் பட்டது. சலிப்போடு பதிலளித்தான்.“எல்லாம்... நம்ம நேரம் பிள்ள... நமக்கு ஒத்தாசை செய்யுறவங்களுக்கும் உபத்திரம் வருது பாரு...”
வேலுவின் ஆண்மைச் சக்தி அனுதாபச் சக்தியாகியது. அவனும் மனைவியைப்போல் ஒரு ‘சக்தியானான்’ வேறுபுறமாகத் திரும்பிப் படுத்துக் கொண்டான். அவனுடன் சேர்ந்து படுத்த அன்னவடிவு அவர் கோபப்பட்டுக் கொண்டாரே என்பதுபோல் அவன் கழுத்தில் கை போட்டாள். அவன் கோபப்படவில்லை. அவள் கையை எடுத்துத் தன் கையோடு சேர்த்துக் கொண்டான். கோபம் அவள் மீதல்ல.
சிறிது நேரத்திற்கு முன்பு வரை அவளை மெல்லக் கடித்து, சுவைக்கத் துடித்த வாய் இப்போது யாரையோ கடித்துக் குதறப்போவதுபோல் பற்களை நெறிக்க வைத்தன. அவளை அணைக்கத் துடித்த கரங்கள் யாரையோ நொறுக்கப் போவது போல் முறுக்கேறின. கடுஞ்சினத்திற்கு காதல் வழிவிட்டது.