வேரில் பழுத்த பலா/014
5
காலம் ஓடிக்கொண்டிருந்தது. அங்குமிங்குமாக ஓடியாடி வேலை செய்த அன்னவடிவின் வயிற்றில் ஒரு திட்டைக் காட்டியது.
ஊரில், ஓலை வீட்டில் இருந்தாலும் திறந்த வெளியையும் பரந்த பூமியையும் அனுபவித்த அவளுக்கு ஆரம்பத்தில் அந்தக் குடிசையில் வசிக்க என்னவோ போலிருந்தது. நெருக்கித் தள்ளிய குடிசை வரிசைகளில் கால் நீட்ட இடமில்லாத மண் தளத்தில் கூனிக்குறுகிக் கிடக்கும் மக்களைப் பார்க்கப் பார்க்க இப்போது அவர்களை விட்டு அகலவே மனம் வரவில்லை. காலைக்கடனைக் கழிக்கக் காத்துக் கிடப்பதும், நீர் பிடிக்க பழிகிடப்பதும் பழக்கமாகிவிட்டது. கட்டிட வேலையில் சூப்பர்வைஸரை மாதிரி பல பேர்வழிகளின் நேர்வழியான கிண்டல்களையும் மறைமுகமான அழைப்புகளையுங்கூட அவளால் சகித்துக் கொள்ளும் அளவிற்குப் போய் விட்டது. கூட வேலை செய்யும் இதர பாட்டாளிகள் இருக்கும்போது, தனக்கு எதுவும் ஏற்படாது என்ற தன்னம்பிக்கை ஏற்பட்டது. ஒரு தடவை அலுப்போடு தாயம்மாவிடம் சொன்னபோது, “ஆம்புள கிண்டல் பண்ணுனாத்தான் ஒரு பொண்ணு வெட்கப்படணும். இல்லன்னா துக்கப்படணும். இவனுக ஆம்புள வேடம் போட்டப் பொட்டப் பயலுவ. இவனுவளோட “பலா” சமாச்சாரத்த இவங்களோட சம்சாரங்ககிட்ட கேட்டாத் தெரியும் சேதி. சொந்தப் பெண்டாட்டியக் கூட திருப்திப்படுத்த முடியாத பொட்டப்பயலுவ பேச்சை பெரிசா எடுத்துக்காதே. மிஞ்சிப் போனால் நம்ம கோவிந்தன் கீறான். கட்டையில போறவனுக்கு பிளேடுன்னா அல்வா சாப்பிட்டது போல” என்று ஆறுதல் சொல்லிவிட்டாள்.
ஆனால் அப்படி ஆறுதல் சொன்னவள், இப்போது ஆறுதல் வேண்டிக் கிடக்கிறாள். கையில் பணம் இல்லாமல் அரசாங்க ஆஸ்பத்திரிக்குப் போன தாயம்மாவை டாக்டர்கள் பல நாள் இழுத்தடித்தார்கள். எக்ஸ்ரே என்றார்களே தவிர, அது எடுத்து முடிந்த பாடில்லை. சிறுநீரைச் சோதிக்க வேண்டும் என்றார்களே தவிர, அந்தச் சோதனையின் முடிவு சொல்லப்படவே இல்லை. ஒரு நாள் வேதனை தாளாது துடித்த தாயம்மாவை பெயின்டர் பெருமாளும் வேலுவும் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். அங்கே கிழிந்த பாயில் அந்த கிழிந்துபோன மூதாட்டி தரையோடு தரையாகக் கிடக்கிறாள். அன்னம்மா அவளுக்குக் கஞ்சி கொண்டு போகிறாள்.
தாயம்மாவின் மகன் கோவிந்தன் அம்மாவுக்கு ஏற்பட்ட துக்கத்தை மறக்க அதிகமாய் குடிக்கிறான். அவ்வளவு ஏன்? வேலுவின் பீடிக்கு காசு கொடுக்காத அன்னவடிவே தன் முன்னால் வந்து தலைகவிழ்ந்து நிற்கும் இவனிடம் ஒரு ‘கிளாஸ்க்கு’ பணம் கொடுத்திருக்கிறாள். ஒருநாள் மனம் பொறுக்காமல் “தம்பி, நீ செய்யிறது நல்லா இல்லே. அம்மாவோட நிலைமையைப் பார்த்தியா? இப்போ அவங்க பிழைப்பாங்களா மாட்டாங்களா என்ற நிலைமைபோய் சீக்கிரமாய் அவஸ்தப்படாம போய்ச் சேரட்டுமுன்னு நினைக்கிற அளவுக்கு ஆயிட்டுப்பா” என்று சொல்லிக் காட்டியபோது, கோவிந்தன் அழுதுவிட்டான். இப்போது அப்பப்போ ஆஸ்பத்திரிக்குப் போகிறான். அதற்கான பஸ் சார்ஜை அன்னவடிவே தான் கொடுக்கிறாள். அவன் தனக்களிக்கும் மதிப்பாலும் அடைக்கலம் கொடுத்தவளை அம்போ என்று விடலாகாது என்ற நன்றிப் பெருக்காலும் அன்னவடிவு வேறு குடிசை பார்க்கவில்லை.
ஆறு மாத காலத்தில் அவள் கையில் நூறு ரூபாய் சேர்ந்தது. தனக்கு ஒரு நூல் புடவையும் வேலுவுக்கும் கோவிந்தனுக்கும் நாலு முழ வேட்டியும் வாங்கிய பிறகும், ஐம்பது ரூபாய் இருந்தது. ஆனால் நான்கு நாளாக விடாமல் பெய்த மழை. பத்துநாள் மண்வேலையில் மண்போட்டு விட்டது. மழை, ஒன்று தூறலாக வந்திருக்க வேண்டும் அல்லது பேய் மழையாகப் பிடித்திருக்க வேண்டும். ஆனால் அந்த மழை, அரசாங்கம் கவனத்தில் எடுத்துக் கொள்ள முடியாத அளவிற்கும், குடிசை மக்கள் ‘கண்டுக்க’ வேண்டிய அளவிற்குமான ‘சகுனி’ மழை. குடிசைப் பகுதிகளில், இரண்டே முக்காலடி நீர் பெருகியது. ஆனாலும் (மூன்றடி பெருகினால்தான், சர்க்கார் வரும்) குடிசைகளில் ஒரு சாண் அளவிற்கு நீர் நின்றது. மக்கள், ஜன்னல் சுவரிலும் டிரங்க் பெட்டிகளிலும், வாசல் கதவை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். புதைமண் போன்ற சேரும் சகதியும்; தெருவில் படுத்தவர்கள், திண்ணையில் உட்கார்ந்தபடியே தூங்க வேண்டிய கட்டாயம்.
வேலை நின்றுவிட்டது. ஐம்பதும் போய்விட்டது.
நல்ல வேளையாக, அந்தக் கட்டிட வேலை. மீண்டும் துவங்கிவிட்டது. அதைத் திறப்பதற்கு, அமைச்சரோ அல்லது தலைவரோ தேதி கொடுத்து விட்டாராம். ‘கல்’ வேறு அடிக்கப்பட்டு விட்டதாம். குறைந்தபட்சம், கட்டிடத்தின் முன்பக்கத்தையாவது முடிக்க வேண்டுமாம். மேஸ்திரி சொன்னதை வேலு சொன்னதும் தலைப்பிள்ளை பெறப்போகும் இயற்கை விதியால், அளவுக்கு மீறிய ‘மசக்கை’யில் அல்லாடிய அன்னவடிவு, தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொண்டு ‘பாண்டுக்கூடையை’ எடுத்து வைத்துவிட்டு, கடப்பாரையை கணவனிடம் நீட்டினாள். நான்கு நாள் ஊத்துக்கோட்டைக்கு ஒரு லாரியில் வெளியூருக்கு கையாளாகப் போயிருந்த வேலு, அன்று காலையில்தான் திரும்பியிருந்தான். அப்போதுதான் மனைவியை தனிமையில் பார்க்கிறான். கையும் காலும் குறுகுறுத்தன.
அவள் தோளில் தன் வலது கையைப் போட்டபடியே “அன்னம் ஒட்காருமே” என்றான்.
“எப்போ ஒமக்கு இந்த ‘மே’ வந்தது? எருமமாடு மாதிரி கூப்புடுற வேல வாணாம்...”
“எப்போ ஒனக்கு ‘வாணாம்’ வந்ததோ, அப்போ”
சூரியகாந்திப் பூப்போல அன்னவடிவு சிரித்தாள். அதைச் சாக்காக வைத்துக்கொண்டு அவன் அவளைச் சாய்வாக இழுத்தான்.
“இதுல்லாம் ராத்திரிக்கு, இப்போ வேலைக்குப் போறோம். போவும் போது...”
“அது எனக்குத் தெரியாதாமே. தப்புத் தப்பு. தெரியாதா பிள்ள? ஒரே ஒரு முத்தம் மட்டும் கொடுக்கிறேன் வாங்கிக்க. இல்லன்னா கொடு, வாங்கிக்கிறேன்.”
“இந்த கொடுக்கல் வாங்கல் எல்லாம் நைட்ல.”
“ஒனக்கு என்ன பிள்ள கஷ்டம்?”“முகதரிசனத்துல முக்கால் ஆசை போயிடுமாம். எனக்கு நீரு ராத்திரில முழு ஆசையோட வரணுங்கற ஆசை.”
அன்னவடிவு, நாணத்தால் தலைகவிழ்ந்தபோது, வேலு பொய்க் கோபத்தோடு, தலைநிமிர்ந்து, “ஒன்னை நான் ஏங்க வைச்சு வேடிக்கை பார்க்கேனா இல்லியான்னு பாரு. அய்யாவுக்காக நீ ஏங்கணும், அப்போ கூட அசைய மாட்டேன். பார்க்கலாமா?” என்றான். அவன் நிஜமாகவே கோபப்படுகிறான் என்று நினைத்து அவள் “சரி ஒண்ணே ஒண்ணு கொடுத்துத் தொலையும்” என்றாள். அவன், அதற்காகத் தன்னை ஆயத்தம் செய்யப்போனபோது மேஸ்திரி, “எதைத் தொலைக்கப் போறீங்க” என்று சொல்லிவிட்டு, பிறகு “என்ன வேலு, ஒன்னை வீட்ல வந்து வெத்லபாக்கு வச்சுக் கூப்பிட்டால் தான் வருவியா?” என்றார்.
வேலுவும் “கூப்பிடுறீரோ இல்லியோ, வெத்லபாக்குத் தாரும். அதையாவது ருசிபார்க்கலாம்” என்று அன்னவடிவை நோக்கி, கண்களால் சிமிட்டிப் பார்த்துக் கொண்டே, மேஸ்திரிக்குப் பதிலளித்தான்.
அன்னவடிவு நாணப்பட்டாள். கண்களை கைகளால் மூடிமூடித் திறந்தாள். இரவின் வருகைக்காக ஏங்கி, பகலை வேகமாகக் கழிக்க விரும்புகிறவள் போல பாண்டுக் கூடையுடன் வெளியே வந்தாள்.
கடப்பாரை ஏந்திய வேலுவும், பாண்டுக்கூடை சுமந்த அன்னவடிவும் கேடயமும் ஈட்டியுமாக நடந்தார்கள்.