உள்ளடக்கத்துக்குச் செல்

வேரில் பழுத்த பலா/015

விக்கிமூலம் இலிருந்து

6


முன்பு எந்த இடத்தில் வேலை பார்த்தாளோ, அங்கேதான் அன்னவடிவு வேலை பார்த்தாள். வேலுவுக்கும் அங்கேயே வேலை.

அது ஒரு ஆஸ்பத்திரிக்கான கட்டிடம். இக்கட்டிடம் துவங்கிய நாளில் இருந்து, உச்சியில் இருந்து இரண்டு பேர் விழுந்து. இப்பொழுது இன்னொரு ஆஸ்பத்திரியில் தாயம்மா மாதிரியே கவனிக்க எந்த டாக்டரும் இல்லாமல் துள்ளத்துடிக்கக் கிடக்கிறார்களாம். அரசுத்துறை ஒன்றிடம் இருந்து லோவஸ்ட் கொட்டேஷனில் காண்டிராக்ட் வாங்கிய ‘மூர்த்தி அண்ட் மூர்த்தி கன்ஸ்டிரக்ஷன் லிமிடெட்’டின் உரிமையாளர் நாயகமும் ஒரு லோவஸ்ட் பேர்வழி என்று பேசிக் கொள்கிறார்கள். முன்பு இவர் அரசாங்கத்திற்குக் கட்டிக் கொடுத்த ஒரு கட்டிடம் விழப்போனதாம். பி.டபிள்யு.டி என்ஜினியர்கள் அதை முட்டுக் கொடுத்துத் தாங்கிக் கொண்டார்களாம்.

எப்படியோ விவகாரம் பத்திரிகைகளுக்குப் போய்விட்டதால் நாயகத்தின் கம்பெனியான ‘விநாயகம் லிமிடெட்’ ‘பிளாக்லிஸ்ட்’ செய்யப்பட்டதாம். அதாவது அந்தக் கம்பெனிக்கு காண்டிராக்ட் கொடுக்கப்படாது என்று தள்ளி வைக்கப்பட்டதாம். இதனை சிபாரிசு செய்தது, சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு தணிக்கைக் கமிட்டியாம். ஆனால், பணபலமும், பிணபலமும் (அதாவது பலரை பிணங்களாக்கும் பலம்) அரசியல் செல்வாக்கும் கொண்ட அந்த மனிதர், தன் மகன் பெயரில் ‘மூர்த்தி அண்ட் மூர்த்தியை’ துவக்கி நடத்துகிறாராம். எல்லோருக்கும் தெரியுமாம்.

ஆகையால், நாயகம் ஒரு மூட்டை சிமென்டும், ஐந்து மூட்டை மணலும் கலந்து போட வேண்டிய சுவர்பூச்சில், சிமென்டை பாதியாக்குவாராம், ‘பீமிற்குள்’ ஒரு சிமென்ட் மூட்டை, இரண்டு மணல் மூட்டை, நான்கு ‘முக்கால் இஞ்ச்’ ஜல்லிக் கலப்பதற்குப் பதிலாக, மண்ணைக் கூட்டி, சிமென்டைக் குறைப்பாராம். கான்கிரீட் கலவைக்காக சட்டப்படி நான்கு பெட்டி ஜல்லியும், இரண்டு பெட்டி மணலும், ஒரு மூட்டை சிமென்டும் போட வேண்டும். என்றாலும், அவர் ஜல்லியையும் சிமென்டையும் சட்டமில்லாதபடி குறைப்பாராம். இதனால் அவர் வளர்ந்திருக்கிறாரே தவிர, குள்ளப்படவில்லையாம். அவரை மேய்க்கும் அதிகாரிகளோ அல்லது அவர் மேய்க்கும் அரசியல்வாதிகளோ இதனால் கூடித்தான் போனார்களாமே தவிர, குறைந்து போகவில்லையாம். கொட்டுவதை என்ன விகிதத்தில், யார் யாருக்குக் கொட்ட வேண்டும் என்று தெரிந்த மனிதராம்.

இந்த நாயகம், சப்-கான்டிராக்டர், மேஸ்திரி மூலம் கான்டிராக்டர், கொத்தனார் மூலம் கான்டிராக்டர், மஸ்டர் ரோல், பீஸ்ரேட் என்று பல்வேறு விதவிதமான வகைகளில் தொழிலாளர்களிடம் வேலை வாங்கப்பட்டதால், எந்த தொழிலாளியாவது விபத்துக்கு ஆளானால், அவருக்கு நஷ்ட ஈடு என்பது, குதிரைக் கொம்பாம். அந்தத் தொழிலாளியே பணமிருந்தால் செயற்கைக்கால் பொருத்திக் கொள்ள யோசனை கூறுவாராம். கண்ணிழந்த தொழிலாளிக்கு வேண்டுமானால் அந்தக் கண்ணை மறைக்க ஒரு கருப்புக் கண்ணாடி வாங்கிக் கொடுப்பாராம். அதுவும் கைரேகைப் படாமல் இருப்பதற்காக மேஸ்திரி மூலமாகக் கொடுத்து அனுப்புவாராம்.

இந்தப் பின்னணியில் எப்போதோ முன்னணிக்கு வந்த மூர்த்தி & மூர்த்தி லிமிட்டெட்டின் சார்பில், அங்கே வேலை நடந்து கொண்டிருந்தது. கற்குவியல்களும், மண்குவியல்களும், சிமென்ட் குவியல்களும் சேர்ந்து கான்கிரீட்டாகி விட்டன. மோல்டுகள் பொருத்தப்பட்டுக் கொண்டிருக்க, சித்தாள் பெண்கள், பூச்சு வேலை செய்யும் கொத்தனார்களுக்கு, சாரத்தில் ஏறி. சுண்ணாம்புக் கலவை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ‘பெரியாள்கள்’ கதவுகளைத் தூக்கி நிறுத்திக் கொண்டிருந்தார்கள். ஒருவர் நீர்குழாயை அரைவட்டமாகத் தூக்கிக் கொண்டு, ஒரு சுவரை நனைத்துக் கொண்டிருந்தார். அத்தனை மனிதர்களும் அந்தக் கட்டிடத்தின் ஜன்னல்கள் போல, கதவுகள் போல, ஆங்காங்கே நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள்தான் அங்கே வசிக்கிறார்கள் என்பது போன்ற பிரமை. சாரங்களில் நின்ற சித்தாள் பெண்கள், திருஷ்டிப் பரிகார பொம்மைகள் போல தோன்றியதையும் மறைப்பதற்கில்லை.

பெயிண்டர் பெருமாள், வெளிச்சுவருக்கு டிஸ்டம்பர் அடித்துக் கொண்டிருந்தார். அன்னவடிவு, மேல் தளத்திற்கு செங்கல் ஜல்லிகளை சாரத்திற்கு மேல் சாரம் ஏறி சுமந்து கொண்டிருந்தாள். தனக்குப் பிறக்கும் பிள்ளைக்கு என்ன பெயரிடலாம் என்று நினைத்துக் கொண்டே சுமந்து போனாள். பெண் என்றால் தாயம்மா... ஆண் என்றால் குலதெய்வம் சுடலைமாடனோட பெயர்... சீ! சுடலைமாடன் என்னத்தக் கிழிச்சான்? ஊர்விட்டு ஊர் விரட்டுனதுதான் மிச்சம்... பேசாம கோவிந்தன் பெயரை வெச்சிடலாம்... அவன்தான் தாய்மாமன்... அவருகிட்டே ராத்திரிக்குக் கேட்கணும். பொல்லாத மனுஷன். எனக்கு ரெட்டப் பிள்ளை பிறக்குமுன்னு சொல்லுறார். நான், இந்த வயித்தோட படுறபாடு அவருக்கு எப்படித் தெரியும்... தெரியாமலா இருக்கும்? ஒரு முத்தம் கொடுக்க ஆசையோட வந்த மனுஷனுக்கு முத்தங்கொடுக்காத பாவி நான். கொடுத்துத்தான் இந்த கதி? இப்போ பிள்ளை எதுக்கு? பரவாயில்லை, என் பிள்ளை கொடுத்து வச்சது. பிறக்கும் முன்னாலேயே மூணு மாடி கட்டிடத்தில உச்சிக்கு வந்துட்டு... அப்பன மாதிரியே... துருதுருன்னு இருக்கும். இப்பவே வயித்தக் குடையுது பாரு. இது அப்பனும் அப்படித்தான்... பாவி மனுஷன், சொன்னால்தான் கேட்பாரா? நான்தான் சொல்லியிருக்கேனா?

அன்னவடிவு, பாண்டுக்கூடையுடன் இரண்டாவது மாடியில் நின்றபடி கணவனைத் திரும்பிப் பார்த்தாள். பிறகு வெட்கப்பட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டு மூன்றாவது மாடிக்குப் போய்க் கொண்டிருந்தாள்.

வேலு, மேஸ்திரியின் பொறுப்பில் வந்தாலும் அன்று கான்டிராக்டரின் மஸ்டர் ரோலில் - அதாவது கம்பெனியின் ஆளாக வேலை பார்த்தான். அரசாங்கக் கட்டிடம் என்பதால் அரசே, காண்டிராக்டர் நாயகத்திற்கு ஆயிரக் கணக்கான சிமெண்ட் மூட்டைகளையும் டன் கணக்காக எஃகையும் கொடுத்திருந்தது. நாயகத்திற்கு நாயாக அலைய வேண்டிய வேலை மிச்சம். மிச்சம் மட்டுமல்ல சொச்சம். மூட்டை ஒன்றுக்கு ரூ. 27.92 பைசா ரேட்டில் கிடைத்த சிமெண்ட் மூட்டைகளில் இருநூறு மூட்டைகளை இப்போது பட்டப்பகலில் நாற்பது ரூபாய் ரேட்டிற்கு ‘பிளாக்கில்’ விற்பதற்கு அட்வான்ஸ் வாங்கிவிட்டார். அவற்றை ஏற்றிப்போக லாரி வந்து விட்டது. லாரிக்கும் சிமெண்ட் ஸ்டோர் ரூமிற்கும் இடையேயுள்ள பாதை சமீபத்தில் பெய்த மழையால் புதை மண்ணாய் போய்விட்டது. வேலுவும் இன்னும் சிலரும் தலையில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றியபடி மாறி மாறிப் போய் வந்து கொண்டிருந்தார்கள். இவற்றை லாரியில் ஏற்றிவிட்டு டன்னுக்கு நாலாயிரம் ரூபாய் ரேட்டில் கிடைத்த எஃகு பாளங்களில் சிலவற்றையும் ஏற்ற வேண்டும்.

வேலு, மற்றவர்களைவிட வேகமாக இயங்கினான். அவர்கள் இரண்டு தடவை போய் வந்தால் அவனோ மூன்று தடவை போய் வந்துவிட்டான். காண்டிராக்டரின் மஸ்டர்ரோலில் சேர்ந்துவிட்ட ஆனந்தம் அவனுக்கு. படிப்படியாக முன்னேறி விடலாம் என்ற நம்பிக்கை. அப்படி முன்னேறும்போது சகாக்களையும் கைதூக்கி விடவேண்டும் என்ற உறுதி.

குட்டி அறையில் இருந்து யதேச்சையாக வெளிவந்த நாயகம் வேலுவை விநோதமாகப் பார்த்தார். தயிர் மத்துப் போல் இயங்கிய அவன் கால்களைப் பார்த்தார். ஒரு மூட்டை சிமெண்டை அனாவசியமாகத் தூக்கி, அதை ஆட்டுக்குட்டி மாதிரி தோளில் போட்டபடி ‘தம்’ பிடித்த அவன் தோரணையைப் பார்த்தார். மூட்டையை துவளாமலேயே சுமக்கும் தோள்களைப் பார்த்தார். சுமை இருக்கும்போது மற்றவர்களைப் போல் பற்களைக் கடிக்காமல், நாடி நரம்புகளை வெளிப்படுத்தாமல் தோள்மாலை அணிந்தவன் போல் காணப்பட்ட வேலுவை பிளாக் செய்து தன் கம்பெனி முத்திரையாகப் போடலாம் என்பது போல் பார்த்தார். எல்லோரும் அவனைப்போல் இருந்தால். கால்வாசி ஆட்களை நிறுத்தி பணம் பண்ணலாமே என்று ஏக்கத்தோடு பார்த்தார். அப்படி நிறுத்தினால் எவ்வளவு பணம் தேறும் என்பதுபோல் மனதில் கணக்குப் போட்டார். கூட்டல் கணக்கல்ல, பெருக்கல் கணக்கு. பிறகு தன் அந்தஸ்தையும் மீறி வேலையாட்களுடன் சுந்தரம் மூலமாகப் பேசும் நாயகம் இப்போது சொந்தக் குரலில் பேசினார்.

“ஒன் பேரு என்னப்பா?”

“வேலுங்க.”

“வேல் மாதிரி பாயாண்டாமா? ஒன் உடம்புக்கு ரெண்டு மூட்டையைத் தூக்க வேண்டாமா? தூக்கிப் பாரு பார்க்கலாம். ஏய்! இவன் தலையில் இன்னொரு மூட்டையை ஏத்துங்கடா. நல்ல பையன் மாதிரி தோணுது. நல்லா வேலை பார்த்தால் நல்லா முன்னுக்கு வரலாம். சீக்கிரமாய் ஏத்துங்கடா.”

வேலு மறுக்கப் போனான். இன்னொரு மூட்டையை சுமப்பது அவனுக்கும் பெரிய காரியமல்ல. ஆனால் தன்னைக் காரணமாகக் காட்டி இதர தொழிலாளர்களை அவர் வற்புறுத்தக் கூடாதே என்ற எண்ணம். இதற்குள் நான்கு பேர் அவன் தலையில் மூட்டையை சுமைதாங்கிக் கல்லில் வைப்பது போல் வைத்துவிட்டார்கள். காண்டிராக்டர் சொன்னதற்காக அந்த ஒரு தடவையும் லாரிக்குப் போய்விட்டு என்னால ரெண்டு மூட்டைய சுமக்க முடியலிங்க என்று சொல்லிவிடுவது என்று தீர்மானித்தான். சிறிது நேரத்திற்கு முன்புவரை மஸ்டர்ரோல் மூலம் முன்னேற நினைத்தவன் இப்போது, முன்னேற்றம் என்பது ஒட்டு மொத்தமாக எல்லோருக்கும் வந்தால்தான் முன்னேற்றம் என்றும் நினைத்துக் கொண்டான்.

கான்டிராக்டர், அவனை அங்கீகாரத்தோடு பார்த்தார். அவரைப் பார்த்ததும் பார்க்காதவன் போல் அவன் நடந்தான். கிராமத்தில் கூடையை தலையில் வைத்து மண்வெட்டியை தோளில் போட்டு அதற்குமேல் வட்டை வைத்து அதற்குமேல் புல்லுக்கட்டையும் வைத்து அனாவசியமாக நடப்பவனுக்கு அந்தச் சுமை சிறிது அழுத்தியது கண்டு ஆச்சரியப்பட்டான். பிறகு விறுவிறுப்பாய் நடந்தான்.

திடீரென்று, ஒரே ஒரு நிமிடத்தில் புதைமண் போலிருந்த சகதிப்பாதையில் நடந்தவன் திடீரென்று மண்டியிட்ட நிலையில் அப்படியே நின்றான். ஒரு மூட்டை கழுத்தில் சரிந்து அவன் முகத்தைத் திருப்பியது. இன்னொரு மூட்டை பிடரியில் விழுந்து திருப்பிய முகம் திரும்ப முடியாதபடி அழுத்திக் கொண்டிருந்தது. அவன் கைகளையும் கால்களையும் உதறுவது போலிருந்தது. வாயில் வெள்ளை வெள்ளையாக நுரை வந்து கொண்டிருந்தது. கம்பீரமான யானை அங்குசக் குத்தலால் அதிர்ந்து மண்டியிட்டது போன்ற நிலை; முதலையின் வாயில் தன்னை விடுவிக்க முடியாமல் மதயானை ஒன்று தவிப்பது போன்ற தவிப்பு. மனைவியை பாசத்தோடு பார்க்க விரும்புகிறவன் போல் முகத்தைத் திருப்பப்போனான். முடியவில்லை. மரணத்தின் முன்னால் மண்டியிட விரும்பாதவன் போல் முடங்கிய காலை எடுக்கப் போனான். இயலவில்லை.

எல்லோரும், அங்கே வந்தார்கள். சித்தாள்களும் பெரியாட்களும் தாவி வந்தார்கள். மேஸ்திரிகள் ஓடி வந்தார்கள். காண்டிராக்டர் நாயகமும் சூப்பர்வைசர்களும் வேகமாக நடந்து வந்தார்கள்.

யாரோ ‘அன்னம் அன்னம்’ என்று கத்துவது கேட்டு, பாண்டுக் கூடையுடன் இரண்டாலது மாடியில் நின்ற அன்னவடிவு திரும்பிப் பார்த்தாள். சுற்றி நின்ற கூட்டத்திற்கு மத்தியில் நிலைகுலைந்து நின்றவனை நான்குபேர் தூக்குவது தெரிந்தது. அனிச்சையாகக் குதிக்கப் போனவளை ஒரு கொத்தனாரும். சித்தாள் பெண்களும் அசைக்க முடியாதபடி பிடித்துக் கொண்டார்கள். அவளைக் கைத்தாங்கலாகக் கீழே கொண்டு வந்தார்கள். அன்னவடிவு கத்திக்கொண்டே திமிறினாள்.

“என் சாமி! என் ராசா! என் தெய்வமே! ஒமக்கு என்ன ஆச்சு, ராசா?”

அன்னவடிவு தளத்திற்கு வந்ததும் அவளை விட்டார்கள். அவள் தலையில் அடித்தபடி முகத்தில் அறைந்தபடி ஓடினாள்.

வேலு, தார்ப்பாயில் கிடத்தப்பட்டிருந்தான். யாரோ ஒருவர் விசிறியால் வீசிக்கொண்டிருந்தார். அன்னவடிவைப் பார்த்ததும் அவன கண்களில் நீர் பெருகியது. பேசுவதற்காக வாயைத் திறந்தான்; நுரைதான் வந்தது. அவள் முகத்தைப் பார்த்தபடி தன் மார்பைப் பிடித்தான். முதுகை வளைத்தான். கைகால்கள் வெட்டின. வாய் கோணியது. கண்கள் அவளை நோக்கியே நிலைகுத்தி நின்றன.

அன்னவடிவு அவனைத் தன் மடியில் இழுத்துப் போட்டுக் கொண்டாள். அவன் கேட்டுக் கொடுக்காத முத்தங்களை, அவன் வாயிலும் முகத்திலும் மாறி மாறிக் கொடுத்தபடி “என் ராசா, நீ முழிக்கதப் பாத்தா பயமா இருக்கே! நீரு துடிக்கதப் பார்த்தால் எப்படியோ இருக்கே! என்னைவிட்டுப் போயிடாதே ராசா. என் ராசா. என் தெய்வமே! என்னை மடியில வச்சு கொஞ்சி விளையாடுன மவராசா! நாம் இதுக்காகவா மெட்ராஸ் வந்தோம்? ஒன்னை இந்தக் கோலத்தில் பார்க்கவா நான் பாவி பிறந்தேன்... பேசு ராசா... ஒன் செல்லக் கிளிகிட்ட ஒரு வார்த்தை பேசு ராசா. ‘நீ ஒருத்தியே போதும்... எனக்கு சொத்தும் சுகமும் வேண்டாமு’ன்னு சொன்ன என் துரையே... என்னை விட்டுட்டுப் போயிடாதே. போறதாய் இருந்தால் என்னையும் கூட்டிக்கிட்டுப் போயிடு... போயிடு..”

வேலு, தனியாகப் போக விரும்புகிறவன் போல் அவளைப் பார்த்தான். பிறகு அவளை விட்டு அகல விரும்பாதவன் போல் தன் கையை அங்குலம் அங்குலமாகச் சிரமப்பட்டுத் தூக்கி அவள் கையோடு இணைத்தான். அன்னவடிவு கூப்பாடு போட்டாள். சித்தாள் பெண்கள் அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டு கத்தினார்கள்.

இதற்குள் டாக்ஸி வந்தது. வேலு பின் இருக்கையில் கிடத்தப்பட்டான். அவன் தலையை மடியில் வைத்தபடி அன்னவடிவு விக்கித்து உட்கார்ந்திருந்தாள். அவளோடு, இன்னொரு சித்தாள் பெண்ணும்,

பெயின்டர் பெருமாளும் உட்காந்திருந்தார்கள். முன்னிருக்கையில் இன்னொரு பெரியாளும். நாயகத்தின் வலது கையான சுந்தரமும் அமர்ந்திருந்தார்கள், சுந்தரத்தைத் தனியாகக் கூப்பிட்டு நாயகம் ஏதோ சொன்னார். அவன் தலையாட்டினான். ‘சீக்கிரம், ஒவ்வொரு நிமிஷமும் முக்கியம்’ என்று அதட்டினார் பெருமாள்.

டாக்ஸி புறப்படப் போனபோது, சுற்றி நின்ற வேலைப் பட்டாளத்தைப் பார்த்து “உம்... போய்... ஒங்க வேலயப் பாருங்க” என்றார் நாயகம்.

டாக்ஸி சென்னை மாநகரின் பல சாலைகளைக் கடந்து குறுக்காக நெடுக்காக விரைந்து கொண்டிருந்தது. வேலு, அன்னவடிவின் மடியில் ஆகாயக் கட்டல் போல் மிதந்து கொண்டிருந்தான். அவள், அவன் முகத்தைப் பார்ப்பதும் தன் முகத்தைத் துடைப்பதுமாய் இருந்தாள். ஆஸ்பத்திரியின் நுழைவாயிலுக்குள், டாக்சி போனபோது திடீரென்று வேலுவின் கால்கள் வெட்டின. கைகள் உதறின. மூச்சு விடமுடியாமல் வாயைப் பிளந்தான். அன்னவடிவு “என் ராசா!” என்று சொல்லி அவனைப் பார்த்துக் குனிந்தபோது, அவள் கண்ணில் நின்ற நீர் அவன் வாயில் விழுந்தது.

கண்ணீரே பாலானது போல் அவன் பார்த்தான். பார்த்துக் கொண்டே விறைத்துப் போனான். அன்னவடிவு அழுகையின் உந்துதலால் வாயைத் திறந்தாள். ஒலி வரவில்லை. அப்படியே அவன் மீது சாய்ந்தாள். டாக்ஸி நின்றது. சித்தாள் பெண், அவளைத் தூக்கி அணைத்து, தன் மடியில் சாய்த்த போது, பெயிண்டர் ஒரு சோடா வாங்கிக் கொண்டு வந்து அதை அவள் முகத்தில் தெளித்தார். அவள் மலங்க மலங்க விழித்தபடி கணவனைப் பார்த்தாள். பிறகு காதோடு சேர்த்து தன் தலையைப் பிடித்துக் கொண்டாள்.

எமர்ஜென்சி வார்டுக்கு வேலு எடுத்துக் கொண்டு போகப்பட்டான். அவன் செத்துப் போனதை டாக்டர்கள் ஊர்ஜிதப் படுத்தினார்கள். பிறகு, “இது வேல செய்யும்போது ஏற்பட்ட மரணம். போலீஸ்ல போய் ஒரு சர்டிபிகேட் வாங்கிட்டு வாங்க, பரிசோதனை பண்ணலாம்” என்றார்கள்.

அந்த டாக்ஸி, பிணத்துடனும். பிணம்போல் இருந்த அன்னவடிவோடும், போலீஸ் நிலையத்தைப் பார்த்து ஓடியது. வழியில், சுந்தரம் இறங்கிக்கொண்டான். முப்பது வயதில் ஐம்பதைத் தாண்டியவன் போல் பேசினான். “நீங்க போலீஸ் ஸ்டேஷனுக்குப் போங்க. நான் இதோ பின்னாலேயே ஒரு ஆட்டோவுல வந்துடுறேன்” என்று சொல்லிவிட்டு பதிலுக்குக் காத்திராமல், ஒரு டெலிபோன் கூண்டைப் பார்த்துப் போனான்.

போலீஸ் நிலையத்திற்குள் டாக்ஸி நின்றதும், அன்னவடிவை. சித்தாள் பெண் கைத்தாங்கலாகப் பிடித்தபடி உள்ளே கூட்டிக் கொண்டு போனாள். “இந்தம்மாதான் அன்னவடிவா?” என்று சொன்ன கான்ஸ்டேபிளைப் பார்த்து, இன்ஸ்பெக்டர் கண்களால் எரித்தார்.

இன்ஸ்பெக்டர் எந்தவித சலனமும் இல்லாமல் பேசினார்.

“என்ன நடந்தது?”

பெயின்டர் பெருமாள் விளக்கினார்.

இன்ஸ்பெக்டர் தீவிரமாகச் சிந்திப்பதுபோல் முகத்தைச் சுழித்தார். பேப்பர் வெயிட்டை உருட்டினார். தோள்பட்டையில் மின்னிய ஸ்டார்களை ஊதிவிட்டுக் கொண்டார். பிறகு ஒரு காகிதத்தை எடுத்து “இந்தாம்மா இதுல ஒரு கையெழுத்துப் போடு. போடத் தெரியுமா?” என்றும் கேட்டார். அவர் நீட்டிய காகிதத்தை ஒன்றும் புரியாமல் அன்னவடிவு பார்த்தபோது, ரைட்டர், அவள் கையில் பேனாவைத் திணித்தார். அவள் ஏதோ கோடுகள் போட்டாள். இன்ஸ்பெக்டருக்குத் திருப்தி பிறகு ரைட்டரிடம் எதையோ சொன்னார். அவர், எதையோ சொல்லச் சொல்ல அவர் அதையே எழுதினார். எழுதியதில் கையெழுத்துப் போட்டு இன்ஸ்பெக்டர் கான்ஸ்டபிளிடம் நீட்டினார்.

வேலு என்ற பெயரிழந்த பிணத்தோடு போன டாக்ஸி, கான்ஸ்டபிளோடு அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு விரைந்தது. யார் யாரிடமெல்லாமோ கையெழுத்து வாங்கினார்கள். அத்தனையும் முடிந்த பிறகு வேலு என்ற பிணம் பிணக் கிடங்கிற்குக் கொண்டு போகப்பட்டது. அவனைத் தூக்கும்போது மட்டும் அன்னவடிவு மெல்ல முனங்கினாள்.

“என் ராசா, காலையில்தான ஒனக்காக என்னை ஏங்க வைப்பேன்னு சொன்னியே! அசையாம இருப்பேன்னு சொன்னே. அது மாதிரி ஆயிட்டே... ஆயிட்டே.”

அன்னவடிவின் ஒப்பாரிக்கு ஒத்துப்பாட ஆஸ்பத்திரியில் யாருமில்லை. வாழ்நாள் முழுவதும் உழைப்புத் தவிர ஒன்றும் புரியாமல் போன ஒரு மனிதப் பிணத்திற்கு அங்கே மரியாதை இல்லை. மரியாதை கிடக்கட்டும்; அவமானமாவது இல்லாமல் இருக்கலாம். ஏதோ கரிமூட்டையைத் தூக்கிப் போடுவதுபோல் அவனைத் தூக்கிப்போட்டு விட்டு, “நாளைக்கு வந்து பிணத்தை வாங்கலாம்” என்றார்கள். பிரியும் போது கான்ஸ்டபிள் கையைச் சொரிந்தார். பெயின்டர் பெருமாள் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, அவர் கைக்குள் ஒரு ஐந்து ரூபாய் நோட்டைத் திணித்துவிட்டு ‘ஒங்க சகாயத்துக்காகக் கொடுக்கல சார். ஒரு தொழிலாளி சாகும் போது ஒருவனுக்குக் கஞ்சி ஊத்துவான்னு காட்டுறதுக்காகத்தான் கொடுத்தேன் பேஷா வச்சுக்கோ” என்றபோது போலீஸ்காரர் சிரமப்பட்டார். வாங்கியதை வைக்கவும் முடியவில்லை. கொடுக்கவும் இயலவில்லை.

அந்தப் பிணத்தைப் போட்டுவிட்டு டாக்ஸி திரும்பியது. கான்ஸ்டபிள் இறங்கிக் கொண்டார். சிறிது நேரம் போனதும் பெயின்டர் பெருமாள் இறங்கப் போணர். சிறிது யோசித்துவிட்டு, கையில் இருந்த ஐம்பது ரூபாயை சித்தாள் பெண்ணிடம் கொடுத்துவிட்டு, “இன்ஸ்பெக்டர் அன்னவடிவான்னு கேட்டதில் இருந்தும், அவசர அவசரமாய் கையெழுத்து வாங்குனதில் இருந்தும் ஏதோ சூழ்ச்சி நடக்கிற மாதிரி தெரியிது. வழில இறங்குன சுந்தரம் வரவே இல்லை. நான் நம்ம சங்கத்துக்குப் போயிட்டு வாரேன். அன்னவடிவை பத்திரமாய் இறக்கிவிடு அன்னம், கவலைப்படாதேம்மா! நம்ம காலம் வாரது வரைக்கும் நமக்கு காலன் எப்போ வேணுமுன்னாலும் வரலாம்” என்று சொல்லியபடியே கண்களைத் துடைத்தபடி நகர்ந்தார்.

அன்னவடிவு, வேலு கிடந்தது மாதிரியே சித்தாள் பெண் மடிமீது கிடந்தாள். நிலை குத்திய பார்வை; மூச்சற்ற நிலைமை; ஏங்கி ஏங்கி விம்மும் மார்பு.

அந்தக் குடிசைப் பகுதிக்கு டாக்ஸி வந்ததும் எல்லோரும் சூழ்ந்து கொண்டார்கள். தாயம்மா வீட்டில் சொல்ல முடியாத கூட்டம். அன்னவடிவை பல பெண்கள் கைத்தாங்கலாக இறக்கியபோது, எங்கிருந்தோ வந்தவன் போல் தாயம்மாவின் மகன் கோவிந்தள் ஓடி வந்தான். அன்னவடிவின் கைகளைப் பிடித்துக் கொண்டு “அக்கா! அக்கா... மாமா போனவரு வரமாட்டாருக்கா. நானு ஒன்ன கூடப்பிறந்த பொறப்பா கவனிச்சுக்கிறேன், அக்கா!” என்று சொல்லி விட்டு டாக்சியிலேயே தன் தலையை வைத்து மோதினான்.

அன்னவடிவு அந்த உடன்பிறவாப் பிறப்பை உற்றுப் பார்த்தாள். துக்கம், இயலாமை கரைகளை உடைத்து, வெள்ளப் பெருக்கோடு வெளிப்பட்டது. அவள் ஒப்பாரியாய் ஓலமிட்டாள்.

“என் ராசா! என் சீமைத்துரையே! ஒம்ம மச்சினன் சொல்லுறதை ஒருதடவை வந்து கேட்டுட்டுப் போவும். ஒரு தடவையாவது வந்துடும்! வரமாட்டீரா? வரமாட்டீரா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=வேரில்_பழுத்த_பலா/015&oldid=1860378" இலிருந்து மீள்விக்கப்பட்டது