உள்ளடக்கத்துக்குச் செல்

வேரில் பழுத்த பலா/016

விக்கிமூலம் இலிருந்து

7


இரவு எட்டு மணி இருக்கும்.

காண்டிராக்டர் நாயகம் சுழல் நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். இன்னும் இரண்டு மூன்று பேர் ஸோபா செட்டில் ஒடுங்கிப் போய் உட்கார்ந்திருந்தார்கள். வலதுகை சுந்தரம் பௌவியமாக ஒரு நாற்காலியில் சாயாமல், அதன் முனையில் உட்கார்ந்திருந்தான். அவனைப் பார்த்து “அவ்வளவு ரூபாய் செலவாயிட்டா?” என்று நோட்டம் போட்டு நாயகம் கேட்டபோது, “நாங்க உள்ளே வரலாமா?” என்ற குரல் கேட்டது. பெயிண்டர் பெருமாளுடன் நான்கைந்து பேர் வந்திருந்தார்கள். அவர்களில் ஒருத்தி பெண். முப்பது வயதிருக்கலாம். கழுத்திலும் காதிலும் அணிகலம் ஏதும் இல்லாதவள். அதுவே அவளுக்கு அணியாக இருந்தது.

நாயகம் அவர்களை உட்காரச் சொல்லுமுன்னாலேயே, அவர்கள் உட்கார்ந்தார்கள். பிறகு அந்தப் பெண் “நாங்க கட்டிடத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள்” என்று சொன்னபோது “அடடே, அப்படியா?” என்று சொல்லிவிட்டு பிறகு “சுந்தரம், ஏதாவது காபி, கீப்பி வாங்கிட்டு வா” என்று கண்ணடித்துப் பேசினார். அதை அந்தப் பெண் கவனித்தாலும், கேட்கவில்லை. எப்படிக் கேட்பது? கண்ணடிப்பது அவர் உரிமை; காபி வாங்கப்போவது அவன் கடமை.

அந்தப் பெண் எடுத்த எடுப்பிலேயே பேச்சைத் துவக்கினாள்.

“இன்னைக்கு, ஒங்களிடம் வேலை பார்த்த வேலு இறந்ததுக்கு நஷ்ட ஈடு பற்றிப் பேச வந்திருக்கோம்.”

விநாயகம் குழைந்தார்.

“மொதல்ல... காபி சாப்பிட்டுப் பேசலாமா?”

“இழவு நடந்திருக்கும்போது நாங்க எதுவும் சாப்பிட விரும்பல. வேலுவோட மனைவி கர்ப்பிணிப் பெண். இன்னும் இரண்டு மாதத்துல அவங்களால் வேலை பார்க்க முடியாது. தகப்பன் இல்லாமப் பிறக்கப்போற பிள்ளைக்கு ஒருவழி பண்ணணும். அந்த அம்மா வாழறதுக்கும் ஒருவழி பண்ணணும்.”

விநாயகம் சுழல் நாற்காலியில் இருந்து எழுந்து அவர்களுக்கு அருகே இருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டார். பிறகு கண்களை எப்படியோ கலங்கவைத்துக் கொண்டார். தலையைக் கவிழ்த்துப் போட்டுக்கொண்டார். மெல்ல துக்கம் தாளாமல் விக்கிப் பேசினார்.

“ஒங்களுக்குப் பணம் வேணுமேன்னு கவலை. எனக்கு அநாவசியமாய் ஒரு உயிரு போயிட்டேன்னு கவல. எப்படி வேல பார்க்கிற வாலிபன் தெரியுமா? நீங்க நம்புனாலும் சரி. நம்பாட்டியும் சரி, என்னால மத்தியானம் சாப்பிட முடியல. மனுஷன்னா அவனுல்லா மனுஷன். அந்தமாதிரி வாலிபனை இனிமேல் பார்க்கவே முடியாது.”

“பார்க்கமுடியாதுன்னு எங்களுக்கும் தெரியும். அதனால்தான் நீங்களும் துக்கம் தாங்க முடியாமல் தவித்து கட்டிட வேலை நடக்கறதப் பார்த்தாவது கவலய மறக்கலாமுன்னு எல்லாத் தொழிலாளிங்களையும் வேல பார்க்கச் சொல்லி இருப்பீங்க! இதோ இப்போ கூட, மின்சார வெளிச்சத்தில் பலர் வேல பாக்கிறாப்போல இருக்கு. அதுகூட... வேலு செத்த கவலயில... ராத்திரிக்குத் தூக்கம் வராமத் தவிக்காமல்... இப்படியாவது வேல நடக்கறதப் பார்த்து. கவலய மறக்கத்தான் அப்படி ஏற்பாடு செய்திருக்கீங்கன்னு நினைக்கேன்.”

திடீரென்று, போலீஸ் வேன் உள்ளே வந்தது. ஏழெட்டு ஜவான்கள் லத்திக் கம்போடு, உள்ளே வந்தார்கள். என்னமோ ஏதோவென்று வந்தவர்கள், சுமூகமான நிலையைப் பார்த்துவிட்டு, தங்கள் முகத்தை சுருக்கிக் கொண்டார்கள். விநாயகத்தின் முகம் இப்போது இறுகியது. சுந்தரம், ஏதும் தெரியாதவன் போல், சர்வர் கொண்டு வந்த காபி டம்ளர்களை நீட்டினான். அந்தப் பெண் அமைதியாகப் பேசினாள்.

“நாங்க... வன்முறைக் கூட்டமில்லை... இந்த சமூக அமைப்பை உதைக்காமல், உங்களை உதைக்கிறதுல அர்த்தமில்ல என்கிறத தெரிஞ்சவங்க. போலீஸ கூப்பிட்டிருக்க வேண்டாம். அவங்க வந்ததுனால தப்புமில்ல... ஒங்ககிட்ட இருந்து எங்களுக்கும் பாதுகாப்பு வேண்டாமா?”

விநாயகம் அதட்டலாகக் கேட்டார்:

“இப்போ என்ன வேணும்?”

“அதுகூட சொல்லித்தான் தெரியணுமா? இறந்தவர் குடும்பத்துக்கு நஷ்டஈடு தரணும்... பிளேன்ல இறங்கிறவனுக்கு ஒரு லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு... ஆனால் பிளேன் மாதிரி அந்தரத்தில் நின்று வேலை பார்த்து, கீழே விழுந்தவனுக்கு எதுவுமில்லன்னா... அது அனர்த்தம். இதுக்கு அர்த்தம் கண்டுபிடிக்கத்தான் வந்திருக்கோம்”

“முதல்ல... நீங்க ஒண்ணு தெரிஞ்சுக்கணும்... வேலு என்னுடைய எம்பிளாயி இல்ல...”

பெயிண்டர் பெருமாள் இடைமறித்தார்:

“மஸ்டர்ரோல்ல... அவரோட பேரு இருந்துதே? பெயிண்ட் எடுக்க வந்தப்போ நானே பார்த்தேன்.”

“நீங்க ஆயிரம் பார்ப்பீங்க. அதுக்கு நான் பொறுப்பில்ல. இந்தாப்பா சுந்தரம், மஸ்டர்ரோல எடு... உம் இந்தாங்க, நீங்களே பாருங்க.”

மஸ்டர்ரோலில், வேலுவின் பெயரைக் காணவில்லை. அந்தப் பெயரை அடித்து எழுதிய அடையாளம் கூட இல்லை. பெருமாள் கோபத்தில் துடித்தார். அந்தப் பெண் சற்று காரமாகப் பேசினாள்.

“ஒங்களால... எது வேணுமின்னாலும் செய்ய முடியுமுன்னு எங்களுக்குத் தெரியும்... எல்லாக் கட்சிக்கும் நீங்க நன்கொடை கொடுக்கிறவங்கன்னும் ஊர் உலகத்துக்கே தெரியும். எங்களுக்கு அதைப் பற்றிக் கவலையில்லை. அந்தக் குடும்பத்துக்கு நஷ்ட ஈடு தரணும் அவ்வளவுதான்.”

“ஏதோ பெண்ணாச்சேன்னு இரக்கப்பட்டுக் கேட்டால், ஒரேயடியாகப் பாயுறீங்களே! அவன் என்னோட எம்பிளாயி இல்ல. எந்த மேஸ்திரி கூட்டிட்டு வந்தானோ எனக்குத் தெரியாது. இன்னும் சொல்லப்போனால், லட்சக்கணக்கான முதல் போட்ட என் வேல நின்னுப்போனதுக்கு செத்தவன்தான் நஷ்டஈடு தரணும். ஏதோ போனால் போகுது. இழவுச் செலவுக்கு நூறு ரூபாய் தர்மம் பண்ணலாமுன்னு நினைச்சால், ஒரேடியாய்க் குதிக்கிறீங்க! ஒங்களால ஆனதைப் பாருங்க!”

“இதை எதிர்பார்த்துதான் நாங்க வந்தோம். எங்கே சந்திக்கலாமோ அங்கே சந்திக்கலாம்.”

“ஊரில் இருக்கவன் எல்லாம் மாரடைப்பால் சாவான், அதுக்கெல்லாம் நான் பொறுப்பேற்கணுமா?”

“நாட்ல அரசாங்கம் இருக்குகுதுன்னு, ஒங்களுக்கு தெரியுமோ தெரியாதோ எங்களுக்குத் தெரியும். வேலு மாரடைப்புல சாகல; சிமெண்ட் மூட்டைய அளவுக்கு மீறி தூக்குனதால் கழுத்துப் பிசகி, தொண்டை நரம்பு அறுந்து இறந்திருக்கார். நாளைக்குப் பிரேத பரிசோதனை ரிப்போர்ட்ல எல்லா சமாச்சாரமும் தெரியும். ஒங்க சுந்தரம், டாக்ஸியிலிருந்து இறங்கி உங்களிடம் கள்ளத்தனமாக போன் பேசியதும், நீங்க இன்ஸ்பெக்டருக்கோ அல்லது உள்ளூர் தலைவருக்கோ போன் போட்டதும் தெரியும். எங்க ஆட்கள் எல்லா இடத்துலயும் இருக்கிறதை மட்டும் மறந்துடாதீங்க.”

“சரி, இப்போ என்ன பண்ணணுமுன்னு நினைக்கீங்க?”

“அது உங்க கையில இருக்கு.”

“என் கையில இருந்து நயாபைசா புரளாது. வேணுமுன்னால் தர்மமாய்...”

அந்தப் பெண் எழுந்தாள். அவளைத் தொடர்ந்து, கூட வந்தவர்களும் எழுந்தார்கள். நாயகம், பெயின்டரைப் பார்த்து ‘நாளைக்கு வேலைக்கு வந்தால் ஒன் காலை ஒடிச்சுடுவேன்’ என்று மிரட்டப் போனார். பிறகு இது சொல்லாமல் செய்ய வேண்டிய காரியம் என்று நினத்து, மழுப்பலாகச் சிரித்தபடி வழியனுப்பி வைப்பவர் போல் எழுந்தார்.

அந்தப் பெண்ணும், இதர ஆடவர்களும், வெளியே வந்தார்கள். அவள் பெயிண்டரைப் பார்த்து. “நாங்க நேராய் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் வெள்ளைக் காகிதக் கையெழுத்து விவகாரத்தைக் கவனிக்கப் போறோம். நீங்க அன்னவடிவை டாக்ஸியில் கூட்டிக்கிட்டு ஸ்டேஷனுக்கு வாங்க. சீக்கிரமாய் வாங்கோ” என்றாள்.

போலீஸ் நிலையத்தில், இரண்டு கான்ஸ்டபிள்களையும் ரைட்டரையும் தவிர, வேறு யாருமில்லை. ‘லாக்கப்பில்’ நான்கைந்துபேர் வேர்க்க விறுவிறுக்க நின்றார்கள்.

படியேறி வந்தவர்களைப் பார்த்து, ரைட்டர், “ஒங்களுக்கு என்ன வேணும்?” என்றார் அதட்டலாக. இப்போது அந்தப் பெண் பேசவில்லை. அவருடன் வந்த ஒரு இளைஞர் பேசினார்.

“நான் அட்வகேட்... ஒங்க இன்ஸ்பெக்டரைப் பார்க்கணும். எப்போ வருவார்?”

“எப்போன்னு சொல்ல முடியாது. ஒங்களுக்குத்தான் தெரியுமே சிட்டில போலீஸ்காரன்பாடு. என்ன விஷயம்?”

“ஒண்ணுமில்ல, மத்தியானம் புருஷனப் பறிகொடுத்த பெண் கிட்ட ஒங்க இன்ஸ்பெக்டர் துக்கம் விசாரித்தாராம். அதாவது ஒரு வெள்ளைக் கடுதாசில கையெழுத்து வாங்குனாராம். என்ன விபரமுன்னு கேட்க வந்தோம். இப்பத்தான் அவரு இல்லியே. நேரா கமிஷனர் கிட்டப் போகப் போறோம்.”

ரைட்டர் யோசித்தார். தனிப்பட்ட முறையில், ‘இன்ஸ்பெக்டர் நல்லா மாட்டிக்கிட்டான்’ என்று மகிழ்ந்தவர் போல் காணப்பட்டார். பிறகு வேலூரில் எடுத்த பயிற்சி நினைவுக்கு வந்து, இலாகா விசுவாசம் மேலோங்க “இருங்க, போன்ல செக்கப் பண்றேன்” என்றார்.

வந்தவர்கள் உட்கார்ந்தார்கள்.

ரைட்டர் எங்கேயெல்லாமோ தொடர்பு கொண்டார். கால் மணி நேரத்திற்குப் பிறகு “இதோ வந்து விடுவார், உட்காருங்க...” என்றார்.

“நிச்சயமாகவா?" என்றார் அட்வகேட்.

“நிச்சயமாய்... கனமான பார்ட்டின்னு சொல்லியிருக்கேன்.”

“கனமான பார்ட்டின்னா? பார்ட்டிங்களெல்லாம் வித்தியாசமா? குற்றங்கள்ளதான் வித்தியாசம் இருக்கும்.”

ரைட்டர் சங்கடத்தோடு சிரித்தார். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, இன்ஸ்பெக்டர் மோட்டார் பைக்கில் வந்து இறங்கினார். வேகமாக உள்ளே வந்து தன் இருக்கையில் அமர்ந்தார். பிறகு லாக்கப்பில் இருப்பவர்களைப் பார்த்து, "வேட்டியை இழுத்து நேராய்ப் போடேண்டா சோமாறி” என்றார். ரைட்டரைப் பார்த்து, “அந்தப் பாவி எங்கேய்யா போயிட்டான்” என்று கத்தினார். ஒருவித பயப் பிரம்மையைத் தோற்றுவிக்கும் அந்தப் போலீஸ் டெக்னிக்கைப் புரிந்து வைத்திருந்த அட்வகேட் சிரித்தபடி, தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார். அட்வகேட் என்றதும் இன்ஸ்பெக்டருக்கு சிறிது நாடி தளர்ந்தது.

“என்ன விஷயம் சார்?”

“மத்தியானம் அன்னவடிவு என்கிற சித்தாள் பெண்கிட்ட வெள்ள காகிதத்தில் ஒரு கையெழுத்து வாங்கினீங்களாம். இதோ அந்தம்மாவே வந்துட்டாங்க.”

டாக்ஸியில் இருந்து இறங்கிய அன்னவடிவை இரண்டு பெண்கள் கிட்டத்தட்ட தூக்கிக் கொண்டே வந்தார்கள். ஒருவர் தன் நாற்காலியில் இருந்து எழுந்தார். அன்னவடிவை கூடவந்த சித்தாள் பெண்கள் அதில் உட்கார வைத்தார்கள். அவள் அங்கு இருப்பவர்களையோ, தான் இருப்பதையோ கவனிக்காதது போல், சூன்யத்தைக் காட்டுவது போல் கண்கள் சுடரிழந்து தோன்ற, நாற்காலியில் சாய்ந்து கொண்டாள்.

அட்வகேட், விஷயத்தோடு கேட்டார்.

“இந்தப் பாவப்பட்ட அம்மாவப் பாருங்க, இன்ஸ்பெக்டர்! நீங்க கூட இப்படிக் கஷ்டப்பட்ட அம்மா வயித்துலேதான் பிறந்திருப்பீங்க. இந்த அம்மாகிட்ட வெற்றுக் காகிதத்தில் கையெழுத்து வாங்கலாமா?”

இன்ஸ்பெக்டர் மழுப்பினார்.

“எனக்குத் தப்புப் பண்றதா தோணல. இந்தம்மா ஹஸ்பெண்ட் மாரடைப்பில் செத்துட்டதா பஞ்சாயத்தார் முடிவு பண்ணுனாங்க. அதை கன்பர்ம் பண்ண, கையெழுத்து வாங்குவேன். அது என் டூட்டி.”

“டூட்டின்னா விஷயத்தை விளக்காமல் மொட்டக் கையெழுத்து வாங்கறதா?”

“அந்தம்மா இருந்த துக்கத்துல அவங்களுக்குத் தெரிஞ்சதையே சொல்லி மேலும் துக்கப்படுத்தாண்டாமுன்னு வாங்கினேன். மொதல்ல பிணத்த எடுத்து அடக்கம் பண்ணுங்க ஸார். அது ஒரு மனிதனோட பிணமுன்னு நினையுங்க. மற்ற விவகாரம் அப்புறம்.”

இப்போது அந்தப் பெண் வெடித்தாள்:

“இந்த விவகாரத்துலதான் மற்ற விவகாரமே இருக்கு. அந்தம்மா புருஷன் மாரடைப்புல சாகல; சிமெண்ட் மூட்டை பிடறி நரம்புல பட்டதுல இறந்துட்டார். இதுக்கு, நீங்க உதவாட்டாலும் உபத்திரவம் செய்யாமயாவது இருக்கணும்”.

“நீங்க பேசறது நல்லா இல்ல மேடம்.”

“நீங்க வெறுங்காகிதத்தில் கையெழுத்து வாங்குனதுதான் நல்லா இல்ல. வேலுவை மாரடைப்புல இறந்ததாய் முடிவு பண்ணுன பஞ்சாயத்தார் கையெழுத்த நாங்க பார்க்கலாமா?”

“நீங்க கேட்டதை எல்லாம் காட்ட முடியுமோ? எங்களுக்கும் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் இருக்கு.”

“நாட்ல எல்லாப் பிரிவுக்குமே இருக்கு. ஆனால் இந்தப் பாவப்பட்ட கட்டிடத் தொழிலாளருங்களுக்குத்தான் ஒன்றுமில்ல. அனாதையா உழைத்து, அனாதையா விழுந்து...”

“இது என்னோட இலாகா இல்ல மேடம்... தொழிலாளர் நலத்துறை கவனிக்க வேண்டிய விவகாரம்.”

“ஒங்க இலாகாவையே நீங்க ஒழுங்காய் கவனிச்சால் போதும் சார். இதோ... இந்த... இரண்டு லேடீஸும் விபத்து நடந்த இடத்துல இருந்திருக்காங்க. இதோ... இவர் பெயர் பெருமாள். இவரும் இருந்திருக்கார். இந்தப் பஞ்சாயத்தார் கிட்டேயும் கேளுங்க சார்...”

“என்ன மேடம் இது? நாயகம் ஒரு பஞ்சாயத்தாரைச் சொல்றார். நீங்க ஒண்ணச் சொல்றீங்க. கடைசில எனக்குத்தான் பஞ்சாயத்து இல்ல. பேசாம மொதல்ல பிணத்த எடுத்து நல்லவிதமாய் அடக்கம் செய்யுறதை விட்டுப்புட்டு... நான் இதுல என்ன பண்ண முடியும்?”

“நீங்க என்ன பண்ணுறீங்களோ தெரியாது. நாங்க என்ன பண்ணுவோம் என்கிறதை மட்டும் சொல்லிடுறோம். நாங்க பயாப்ஸி ரிப்போர்ட் சரியா கிடைக்குமுன்னால பிணத்தை எடுக்கப் போறதில்லை. நாளைக்குக் கட்டிடத் தொழிலாளர் ஆயிரக்கணக்கில் இங்கே வந்து நியாயம் கிடைக்கும்வரை அமைதியாய் போராடப் போகிறோம். சாகும்வரைகூட உண்ணாவிரதம் இருந்தாலும் இருக்கலாம்...”

இன்ஸ்பெக்டர் தீவிரமாக யோசித்தார். முன்விளைவுகளையும் பின்விளைவுகளையும் சீர்தூக்கிப் பார்த்தார். இறுதியில் “ஆல்ரைட்! பயாப்ஸி ரிப்போர்ட் வரட்டும். அதன்படி ஆக்க்ஷன் எடுக்கலாம்” என்று சொல்லிவிட்டு ரைட்டரைப் பார்த்தார். அவர் வெள்ளைக் காகிதத்தை அவர்களிடம் காட்டிவிட்டுக் கிழித்துப் போட்டார்.

நிர்வாகிகளும் இதர தொழிலாளர்களும் அன்னவடிவை அனுதாபமாக நோக்கியபடியே காம்பவுண்டுக்கு வெளியே வந்தார்கள். திடீரென்று பெயிண்டர் பெருமாள் ஒரு யோசனை சொன்னார்.

“நம்ம தொகுதி எம்.எல்.ஏ.யையும் கட்சித் தலைவர்களையும் பார்த்து நியாயம் கேட்கலாம்.”

எல்லோரும் அவர் சொன்னதை ஒப்புக் கொண்டு முதலில் எம்.எல்.ஏயைப் பார்த்தார்கள். அவர் அன்னவடிவைப் பார்த்ததும் அழுதுவிட்டார். கண்களைக் கூடத் துடைத்துக் கொண்டார். பிறகு “அடடே! நாயகமா? நல்ல மனுஷனாச்சே. நான் சொல்லி நஷ்ட ஈடு வாங்கித் தாறேன்” என்று சொல்லிக் கொண்டே நாயகத்தை அப்போதே பார்க்கப் போகிறவர்போல் காரில் ஏறினார். கார் நாயகம் வீட்டுக்கு எதிர்திசையில் போனது.

நிர்வாகிகள் சளைக்கவில்லை. ஒருசில தலைவர்களைப் பார்த்தார்கள். ஒரு சிலர் ‘தனி மனித விவகாரம், தலையிட முடியாது’ என்றார்கள். இன்னும் சிலர் தட்டிக் கழித்தார்கள். ஒருவர் நாயகத்துக்கே வக்காலத்து வாங்கிப் பேசினார். நாயகம் கொடுத்த நன்கொடைகளின் கனபரிமாணத்திற்கு ஏற்ப, அவர்களின் சுருதியில் ஏற்ற இறக்கம் இருந்தாலும், அந்த சுருதி போட்ட அனுபல்லவி நாயகத்திற்கு உதவுவது மாதிரியே இருந்தது. கட்சிக்காரன் என்று ஒருவர் நழுவ, சககாண்டிராக்டர் என்று இன்னொருவர் நழுவ, ஜாதிக்காரன் என்று மற்றொருவர் நழுவ, நள்ளிரவு நழுவியது தான் மிச்சம். அவர்களைப் பார்த்து தெருநாய்கள் குலைத்ததுதான் சொச்சம். ‘என்ன விபரம்’ என்று பொறுமையாய்க் கேட்க மனமில்லாதவர்களாய், ஏதோ தலைபோகிற அவசரத்தில் துடிப்பவர்கள் போல், அவசர அவசமாகக் கேட்கும் தலைவர்களிடம் எதைச் சொல்வது? வாய்தான் வலிக்கும், கால்தான் நோகும்.

வாய் வலித்து, கால் நோவெடுக்க, தொழிலாளர்கள் அன்னவடிவை, அவள் குடிசையில் கொண்டு வந்து விட்டார்கள். “கவலைப்படாதீங்கம்மா. நீங்க அனாதையில்ல... நாங்க இருக்கிறோம்” என்று எல்லோருக்கும் சேர்ந்துச் சொல்வது போல், அந்தப் பெண சொன்னாள்.

அன்னவடிவு, அவர்களையே பார்த்தாள். கட்டிடத் தொழிலாளர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள அவளுக்குப் பரிச்சயமான அத்தனை பேரும் இருந்தார்கள். ஆனால் வேலுவைத்தான் காணவில்லை.

அன்னவடிவு, அந்தக் கூட்டத்தில், அவனைத் தேடுவது போல் உற்றுப் பார்த்தாள். ஓயாது பார்த்தாள். பிறகு யதார்த்தத்தை உணராமல் தேடிய கண்களைத் தண்டிப்பவள் போல் அவற்றை மூடிக்கொண்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=வேரில்_பழுத்த_பலா/016&oldid=1860382" இலிருந்து மீள்விக்கப்பட்டது