வேரில் பழுத்த பலா/017
8
எல்லோருக்கும் பொதுவாகத்தான் பொழுது விடிந்தது. ஆனால் தினமும் விடியும் அந்தப் பொழுது அன்னவடிவுக்கு வேறு விதமாகத் தோன்றியது. கோழிகள் மாரடித்தன. குழாய்ச் சத்தம் ஓலமாயின. அந்தக் குடிசையே மயானமானது.
அன்னவடிவு நிலையிழந்ததால், நினைவு இழந்து, கிடந்தாள். சில பெண்கள் அவள் காதில் சுக்கு வைத்து ஊதினார்கள். ஒருத்தி, வலுக்கட்டாயமாக அவள் வாயில் கஞ்சியை ஊற்றினாள். இன்னொருத்தி, அவிழ்ந்த புடவையைக் கட்டி விட்டாள்.
அன்னவடிவு படுத்துத்தான் கிடந்தாள். எழுந்திரு பிள்ள என்று சொல்பவன் எழமுடியாமல் போய்விட்டான். ‘என் ராசாத்தி! நான்தான் ஒன்னை தூக்கி விடுவேனாம்’ என்று படுத்துக் கிடந்தவனை தூக்கி விடுபவனைத் தூக்கி வர, ஆட்கள் போய்விட்டார்கள். ‘டாக்டருங்க, கழுத்து பிசகனுதுலதான் இறந்திருக்கார், மாரடைப்பு கிடையாதுன்னு ரிப்போர்ட்ல எழுதியிருக்காங்களாம். நம்ம சங்கத்துக்கு பயந்துதான் டாக்டருங்க நியாயமா எழுதியிருக்காங்க. இந்த காண்டிராக்டர் பயல சும்மா விடப்படாது’ என்று வெளியே அடிப்படும் பேச்சு அவள் காதில் விழுந்தது. ‘என்ன எழுதி என்ன செய்ய? என் ராசா போனவர் போனவர்தான். அவர ஆரால கொண்டு வர முடியும்?’
நீர் கோர்க்கும் கண்களோடு, நினைவுகள் கலக்கும் நெஞ்சோடு அவள், நெடுஞ்சாண்கிடையாய் கிடந்தபோது, ஒருவர் உள்ளே வந்தார். முதலில் பிளாட்பாரத்தில் அவளையும் அவள் கணவரையும் உதறிவிட்டபடி நடந்தாரே அந்த ‘உள்ளூர் மாமாதான் - நாயகத்தின் நண்பர். விவகாரம் பெரிதாகலாம் என்பதை இன்ஸ்பெக்டர் நடுநிலையோடு இருக்க விரும்புவதில் இருந்து புரிந்து கொண்ட நாயகம், அன்னவடிவுக்கு சொந்தக்காரர் யாராவது உண்டா என்று ‘ஆய்வு’ செய்தார்.
நல்ல வேளையாக, அன்னவடிவின் மாமாவே அவருக்கு நண்பர். பலவிதத்தில் பிளாக் மார்க்கெட்டுகளில் இருந்து பிராஸ்டிடூட்டுகள் வரைக்கும் இருவருக்கும் உறவுண்டு. கோர்ட்டுக்கு வேலுவின் விவகாரம் போனால் கள்ளத்தனமாக சிமெண்ட் மூட்டைகளை ‘பிளாக்கில்’ விற்றது வெளிச்சத்துக்கு வரலாம், நாயகம் பயந்து நண்பரை நாடினார். இந்த நண்பருக்கும் ஒரு ஈடுபாடு நாயகத்திடம் இருந்தது. ‘பிளாக்கில்’ சிமெண்ட் வாங்கி, ‘டார்க் பிளாக்கில்’ விற்கும் வாடிக்கையாளர்களில் அவரும் ஒருவர். அந்த லாரியில் விழுந்த மூட்டைகளில் இருபது இவருடைய வீட்டிற்குள் இருக்கிறது. விவகாரம் தனக்கும் தலைவலியாகிவிடக்கூடாதென்று, அவர் உபதேசியாகவும் உபகாரியாகவும் வந்தார்.
அன்னவடிவு, தலையைத் தூக்கி அவரை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, மீண்டும் தன் தலையை தரையில் போட்டபோது, அவர் பக்குவமாகப் பேசினார். அவளை ஓரக்கண்ணால் பார்த்தபடி, தேள் கொட்டுவதுபோல சூள்கொட்டிப் பேசினார்.
“விஷயத்தைக் கேள்விப்பட்டதும் மாமாவுக்கு கையும் ஓடல காலும் ஓடல. ஒன்னை எப்படி தேத்துறதுன்னும் புரிய மாட்டக்கு நேரா அந்த நாயகத்துக்கிட்டே போனேன். நாயப் பேசுனது மாதுரி பேசினேன். “யாரோட பிள்ளன்னு நினைச்சடா?” கோர்ட்டுக்கு என் மருமகள் வரமாட்டாள். நான்தான் வருவேன்னு மிரட்டுனேன். பயந்துட்டான். ‘ஆயிரம் ரூபாய் கொடுத்துடுறேன். விஷயத்த விட்டுடுங்கன்’னு கெஞ்சினான். அதோட ஒன்னத் தூண்டி விடுறவங்க தின்னிப் பயலுவ. ஒன்னை ஏவிவிட்டு அதுல பணம் பண்ணப் பாக்காங்க. அதனால நாயகமும் யோசிக்கான். ஆயிரம் ரூபாய் தந்துடுவான். ஆனால் ஒரு கண்டிஷன். நீ இந்த மெட்ராஸ்ல இருக்கப்படாதாம். ஒன்ன இந்தப் பயலுவ தூண்டிக்கிட்டே இருப்பாங்கன்னு பயப்படுறான். அவன் சொல்றதும் நியாயம் மாதுரிதான் எனக்குப் படுது.”
அன்னவடிவு, தலையை சிறிது உயர்த்தி, சுவரில் சாய்ந்தபடி அவரையே பார்த்தாள். மாமாவுக்கு மகிழ்ச்சி. சிறிது சத்தம் போட்டே பேசினார்.
“நம்ம நிலையையும் யோசிக்கணும், நீ அறியாப்பொண்ணு, சின்னஞ்சிறு வயசு. நாயகம் பொல்லாதவன். அடியாள் வச்சிருக்கான். பணம் வச்சிருக்கான். ஒன்னைக் கொலை பண்ணிவிட்டால்... கொலைகூட பரவாயில்லை. எங்கேயாவது தூக்கிட்டுப்போய் ஏதாவது பண்ணிவிட்டால் மாமாவால தாங்க முடியுமா? இல்லன்னா இருபத்து நாலு மணிநேரமும் ஒனக்குக் காவலுக்குத்தான் இருக்க முடியுமா? உன் இஷ்டம். பணம் வேணுமுன்னால் இப்பவே மாமா தாரேன். அப்புறமாய் அவன்கிட்ட வாங்கிக்கிறேன். என்ன சொல்றே? நாமும் காலத்த அனுசரித்து நடந்துக்கணும் பாரு. என்ன சொல்றே?”அன்னவடிவு எதுவும் சொல்லவில்லை. அவள் அருகே நின்ற ஒரு பெண்ணை தன்னருகே வரச் சொன்னாள். அவள் காதில் எதையோ சொல்லிவிட்டு, தலையை தரையில் சட்டென்று போட்டுவிட்டு, அவருக்கு முதுகைக் காட்டியபடி, சுவரோடு முகம் உரச, திரும்பிப் படுத்துக் கொண்டாள். அந்தப் பெண் அவரைப் பார்த்துக் கத்தினாள்.
“யோவ்! நீயும் ஒன் முகரக்கட்டயும், பேரமா பேசவந்தே? ஒன்னை மரியாதியா இடத்தக் காலி பண்ணும்படி அன்னவடிவு சொல்லச் சொன்னாள். இன்னுமா உட்கார்ந்திருக்கே?”
ஆனானப்பட்ட ‘உள்ளூர் மாமா’, திடுக்கிட்டு எழுந்தார். அந்தப் பெண்ணையே பார்த்துவிட்டு, பின்னர் வேகமாக வெளியேறினார்.
அரைமணி நேரத்திற்குப் பிறகு, சத்தம் கேட்டு, அன்னவடிவு திரும்பிப் பார்த்தாள்.
கோவிந்தன், செந்தழல் கண்களோடு, சிந்தும் மூக்கோடு, அவளையே பார்த்தபடி நின்றிருந்தான். அன்னவடிவு மெல்லக் கேட்டாள்:
“ஆஸ்பத்திரிக்குப் போனீயா? அம்மாவுக்கு எப்படி இருக்கு? விஷயத்த சொன்னீயா?”
கோவிந்தன் சலிப்போடு சொன்னான்:
“போனேன். அம்மா சொல்றத வாங்குற நிலையில் இல்ல. இப்போ, தம்பி, அக்காவுக்கு ஆறுதல் சொல்றான். இன்னும் இரண்டு நாளையில, அக்கா, தம்பிக்கு ஆறுதல் சொல்றது வரும்.”
அன்னவடிவு, கண்களை அகல விரித்தாள். கோவிந்தன் படபட வென்று பேசினான்:
“ரெண்டு நாளைக்கு மேல தாங்காது, வீட்டுக்கு தூக்கிக்கினு போன்னு ஆஸ்பத்திரில சொன்னாங்க. நானுதான் ‘எங்க குடிசையில ரெண்டு பிணத்தை வைக்க இடமில்ல’ன்னு சொல்லிவிட்டு வந்துட்டேன்.”
கோவிந்தன், அவளின் துக்கத்தைப் பகிர வேண்டிய சமயத்தில் தன் துக்கத்தை சுமத்தக்கூடாது என்று நினைத்தவன் போல் தன்னைக் கட்டுப்படுத்த முடியாதவனாய் வெளியே ஓடினான். அன்னவடிவு குப்புறப்படுத்தாள். இரண்டு கண்களில் ஒன்று இறந்தவனுக்காகவும், இன்னொன்று எப்போது எந்தச் சமயத்திலும் இறக்கப் போகிறவளுக்காகவும் குடமெடுத்தன. நெஞ்சு கொள்ளி போல் எரிந்தது. உடம்பு அஸ்திபோல் குழைந்தது.அரைமணி நேரத்திற்குப் பிறகு அங்குமிங்குமாக வந்து போன கூட்டத்தில் பெயிண்டர் பெருமாள் வந்தார். அவள் எழுந்திருக்கப் போனபோது அவளைப் படுத்துக்கொள்ளும்படி கையசைத்தார். பிறகு எல்லோரையும் வெளியே போகச் சொல்லிவிட்டு தழுதழுத்த குரலில் பேசினார்.
“ஒன்கிட்ட ஒரு சமாச்சாரம் பேச வந்தேன் அன்னம். இந்தச் சமயத்துல பேசறது தப்புத்தான்; என்ன பண்றது. ஏழை எளியவங்களால கால நேரத்தப் பார்க்க முடியாது. தக்கபடிதான் நாம நடந்துக்கணும்.”
“ஒன்னோட சொந்தக்காரர் வந்து ஒனக்கு ஆயிரம் ரூபாய் தாரதாய் சொன்னதாய்க் கேள்விப்பட்டேன். விட்டுப் பிடிச்சால் ரெண்டாயிரமும் கிடைக்கும். நாட்ல அனாதையா இருக்கிறவங்க கட்டிடத் தொழிலாளர்களும் விவசாயக் கூலிகளுந்தான். இதுல நம்ம பொழப்பு சர்க்கஸ் பொழப்பு. நமக்கு இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி இல்ல. அப்படி இருந்தா, இருந்தால் தாயம்மா அப்படி ஆகியிருக்கமாட்டாள். நமக்குன்னு சரியான சட்ட திட்டம் இல்ல. வேலைக்குத் தக்கபடி நாம இயங்கணும். நமக்குத் தக்கபடி வேலை இயங்காது. சம்பளத்துலயும் விதிமுறை இல்ல. காண்டிராக்டருக்குத் தக்கபடி ரேட்டு. வாரத்துல நாலு நாளைக்கு வேல இல்ல. ஒன் புருஷன் மாதுரி விபத்துல இறந்தால் கேட்க நாதியில்ல. நாய் இறந்தாக்கூட கார்ப்பரேஷன் புதைக்கும். ஓடம்பை விற்கிற தாசியை விட உழைப்பை விற்கிற நம்ம பிழைப்பு மோசமான பொழப்பு.”
“இந்தப் போக்குக்காகத்தான் சங்கம் வச்சோம். ஒன் புருஷனோட சாவுல காண்டிராக்டர், சப்-காண்டிராக்டர், சர்க்கார் எல்லோருமே சம்பந்தப்பட்டிருக்கு. இப்போ டாக்டருங்களும் விபத்துல இறந்ததாய் எழுதிட்டாங்க. நாங்களே காண்டிராக்டரை மிரட்டி உருட்டி நஷ்ட ஈடு வாங்கித் தந்துடலாம்; அது பெரிய காரியமல்ல. ஆனால் இது ஒரு முன்னுதாரண கேஸாய் இருக்கதுனால... லேபர் கோர்ட்ல போய் வழக்கு போடலாமான்னு நினைக்கோம். இதுல ஒரு நல்ல தீர்ப்புக் கிடைச்சால் பலருக்குப் பலன் கிடைக்கும். எந்தத் தொழிலாளி குடும்பமும் அனாதையாகாது. ஒருவேளை கேஸ் தோற்றுப் போய்விட்டால் மேலும் பலமா போராடலாம்; விடப்போவதில்லை.”
“சங்கம் எடுத்த முடிவைத்தான் ஒன்கிட்ட சொல்றேன். நாங்களே மறியல் செய்து ரெண்டாயிரம் மூவாயிரம் ஒனக்கு வாங்கித் தரட்டுமா? இல்ல லேபர் கோர்ட்டுக்குப் போகலாமா? இதுல ஒன் இஷ்டம் தான் முக்கியம். ஒனக்கு எந்த வகையிலும் உதவத் தயார். மறியலா, கோர்ட்டான்னு நீதான் உத்தரவு போடணும். இன்னொன்றையும் சொல்லிடுறேன். கோர்ட்டு வழக்குன்னு முடிவெடுத்தா நீ மாசம் ஒருதடவ அப்புறம் வாரம் ஒரு தடவன்னு அலைய வேண்டியிருக்கும். ஏழைங்களுக்கு தீர்ப்பவிட வாய்தாக்கள்தான் எதிரிங்க. இப்படிப்பட்ட சிரமத்த சகிச்சாகணும். உனக்கு நஷ்டஈடு கிடைத்தாலும் உண்டு. கிடைக்காவிட்டாலும் உண்டு. அதே சமயத்தில் ஒன்னை நாங்க அனாதையா விடமாட்டோம். என்ன சொல்றே?”
அன்னவடிவு விம்மினாள். பெயிண்டர் பதைபதைத்து அவள் அருகே போனார். “என்னம்மா, என்ன சொல்லிட்டேன்? ஏன் அழுகிறே?” என்றார்.
அன்னவடிவு, விம்மலுக்கிடையே கேவிக் கேவி சொன்னாள்:
“என்னை பணத்துக்கு ஆசைப்படுபவள்னு நினைச்சிட்டியரே அண்ணாச்சி! ஒங்க சொல்லுக்கு உசத்தியா எது இருக்க முடியும்? எங்க ஊர்க்காரன் ரூபாய் ஆசையைக் காட்டினான். அவனைத் துரத்தினது தெரிஞ்சும் உங்க வாயில இருந்து இந்த மாதிரி வார்த்த வரலாமா? என்னை சுயநலக்காரியா நினைக்கலாமா? பிளாட்பாரத்துல நின்ன என்னை கருணையோடு பார்த்த உங்களை மறக்க முடியுமா? என்னக் காணாதவள் மாதிரி போன ஊர்க்காரனை நினைக்க முடியுமா? என் புருசனோட சாவில எனக்கு என்ன வரும் என்கிறது முக்கியமல்ல அண்ணாச்சி. நீங்க எந்த முடிவு எடுத்தாலும் அது எனக்காக மட்டும் இருக்கப்படாது. எல்லோருக்காகவும் இருக்கணும். அப்படி எல்லோருக்குமே ஒரு நன்மை ஏற்பட்டால் என் புருஷன் சாவிலயும் ஒரு அர்த்தம் இருக்குன்னு நினைப்பேன். அவுக செத்தது இப்பப் பெரிசில்ல; அவுகள மாதிரி நம்ம ஆளு இனிமேலும் சாகாம இருக்கதுதான் பெரிசு. கோர்ட்டுக்குப் போறதுக்கு எதுலயாவது கையெழுத்துப் போடணுமா அண்ணாச்சி?”
பெயிண்டர் பெருமாளால் பேச முடியவில்லை. அவளை நோக்கிக் கையெடுத்துக் கும்பிட்டார். “நீ விதவையாக அல்ல. எங்களுக்குத் தாயாய் மாறிட்டே... வெந்தத தின்னு விதி வந்தா சாகுறதுன்னு மட்டுமே நினைக்கிற நம்ம வர்க்கத்துக்கு ஒரு மரியாதையை, ஒரு அந்தஸ்தை கொடுத்திட்ட தாயே.”
பெயிண்டர் பெருமாளால் மேற்கொண்டு பேச முடியவில்லை. அவள் முன்னால் அழுது, அப்போதுதான் அழுது ஓய்ந்த அவளை மீண்டும் அழவைக்க விரும்பாமல் கண்ணீர்த் துளிகள் தரையில் தெறிக்கும்படி வெளியே ஓடினார்.