உள்ளடக்கத்துக்குச் செல்

வேரில் பழுத்த பலா/018

விக்கிமூலம் இலிருந்து

9


திடீரென்று ஒரு பரப்பரப்பு.

பெண்கள் கூப்பாடு போட்டார்கள். கோவிந்தன் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டான். அன்னவடிவு நிமிர்ந்து பார்த்தாள்.

முகமோ அல்லது உடம்பின் எந்த பகுதியோ தெரியாதபடி வெள்ளை வெள்ளையான கட்டுக்களோடு பிணம் வந்தது. உடம்பின் ஒவ்வொரு உறுப்பும் அறுக்கப்பட்டு, அப்புறம் தைக்கப்பட்டிருந்தது. இந்தப் பிணத்தை எடுப்பதற்கு தொழிலாளிகள் கிட்டத்தட்ட, அறுபது ரூபாய்வரைக்கும் அழுதார்களாம். மனிதாபிமானம், அறுபது ரூபாய்க்கு மேல் விற்கப்படவில்லை.

வேலு, மூலையில் சாத்தி வைக்கப்பட்டான். பெண்கள் ஓலமிட்டார்கள். வாய் நிறையச் சிரித்து, ஒவ்வொருவரையும் அக்கா என்றும் தங்கச்சி என்றும் பாட்டி என்றும் வயதுக்குத் தக்கபடி அழைக்கும் அந்த வாலிபன், வயதாகும் முன்னாலேயே இறந்துவிட்ட சோகத்தில் எல்லாப் பெண்களும் தாய்மையின் தவிப்பால், தாங்கள் பெற்ற பிள்ளைகளை பறிகொடுத்தது போல் புலம்பினார்கள்.

அன்னவடிவால் எழுந்திருக்க முடியவில்லை. கைகளை ஊன்றியபடி தவழ்ந்தாள். உடனே இரண்டு மூன்று பெண்கள் அவளைத்தூக்கிக் கொண்டு போய் பிணத்தின் அருகே வைத்தார்கள். அவள் வீறிட்டுக் கத்தினாள்.

“என் ராசா! உன்னை உயிரோட இருக்கையிலே உடம்பு முழுவதும் வெள்ள வேட்டியும் வெள்ளைச் சட்டையுமா இந்தப்பாவி அழகு பார்க்கலேன்னு நினைச்ச... ஆஸ்பத்திரிக்காரங்க உன்னை சிங்காரிச்சு விட்டிருக்காங்களோ? வாழும்போது மொட்டயா இருந்த ஒனக்கு, செத்தபிறகு சிங்காரமா? இந்த சிங்காரத்தப் பார்க்கவா, நான் பட்டணம் வந்தேன்! அய்யோ. என் ராசாவோட முகத்தை மறைக்கிற கட்டுக்கள எடுங்களேன்! யாராவது எடுங்களேன்!! என் ராசாவோட - என் வைரக்கட்டியோட மொகத்த ஒரு தடவையாவது பாத்தாகணும்.”

அவளுக்கு என்ன தெரியும்? அந்தக் கட்டுக்களை அவிழ்த்தால் கண்களும் மோவாயும் நெற்றியும் தனித்தனியாக விழும் என்பதை அந்தப் பேதைக்கு எப்படிச் சொல்வது? எல்லோரும் தயங்கினார்கள். அன்னவடிவு, அவன் முகம் மறைத்த கட்டுக்களை ஆவேசத்தோடு அவிழ்க்கப் போனாள். தடுக்கப் போனவர்களை அடிக்கக்கூட போனாள். பிறகு பிணத்தோடு பிணமாக மயங்கிச் சாய்ந்தாள். யாரோ ‘சோடா’ என்றார். எவளோ ‘சுக்கு’ என்றாள். அன்னவடிவோ உடைந்துபோன சோடா பாட்டில் சிதறல்கள்போல, சுக்கு நூறான சுக்குத்துண்டுகள் போல, பிணத்தின் மேல் சாய்ந்தபடி கிடந்தாள்.

தேர் வந்து விட்டது. பூமாலைகள் தொங்கவிடப்பட்டன. மேளதாளத்தையும், சிலம்பக் கம்பங்களையும், தொழிலாளர்கள் வேண்டாமென்று தடுத்து விட்டார்கள். யாரோ ஒருத்தி “இந்தத் தேர் திரும்பி வரும். ஆனால், வேலு அண்ணன்...” என்று விட்ட இடத்தைப் பூர்த்தி செய்ய முடியாமல் அழுதபோது, அத்தனை பெண்களும் அழுதார்கள். பெயின்டர் பெருமாளுக்கும் மயக்கம் ஏற்பட்டது. ஒரு தூணில் தன்னையிழந்து சாய்ந்து கிடந்தார். கோவிந்தன் அழுகையால் விழுங்கப்பட்டவன்போல், உழைத்து உழைத்து, சிறுநீரகங்களின் உழைப்பு நின்று உழலும், தன் தாயின் மரணத்திற்கு அழுகையை சேமித்து வைக்க நினைத்தவன்போல், பைத்தியக்காரன் போல் கூட்டத்தைப் பார்த்தபடி நின்றான்.

ஆயிரக்கணக்கில் திரண்ட சங்க உறுப்பினார்கள்- கட்டிடத் தொழிலாளர்கள், தத்தம் கிளைச் சங்கங்களின் சார்பில், வேலு என்ற முன்னாள் தொழிலாளிக்கு மாலை போட்டார்கள். அந்தப் பிணத்திற்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த தாம்பாளத்தட்டில் யாரும் சொல்லாமலே இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் என்று போட்டுக் கொண்டிருந்தார்கள். நாணயங்கள் விழுந்து விழுந்து, தூங்காமல் தூங்குபவனை துயில் களைய முற்படுவதுபோல் தோன்றியது.

வேலு, ரதத்திற்குக் கொண்டு போகப்பட்டு, அங்கிருந்த சிம்மாசனத்தில் ஏற்றப்பட்டான். எளியவர்கள் சாகும்போதுதானே இப்படிப்பட்ட இருக்கைகளில் உட்காரமுடியும்? உட்கார்த்தி வைக்கப்பட்டவனைப் பார்த்து ஆண் பெண் அத்தனை பேரும் ஓலமிட்டனர். அன்னவடிவு தவிர அத்தனை பெண்களும் அழுதார்கள்.

தேர் நகர்ந்து கொண்டிருந்தது. தெருவே நகர்வது போன்ற தோரணை. தெரு முழுவதையும் மூடி மறைத்த மக்களின் மௌன ஊர்வலம். ஆலயத்தின் உற்சவ மூர்த்தியைச் சுமந்து செல்லும் தேருக்குப் பின்னால் போகும் உண்மையான பக்தர்கள்கூட, இந்த அளவிற்கு உணர்ச்சி வசப்பட்டிருக்க மாட்டார்கள். இந்த ‘சவ மூர்த்தியை’ ஏற்றிச் செல்லும் தேருக்குப் பின்னால் தொழிலாளர்களும், அவர்களின் தொழிலோடு சம்பந்தப்படாத பொதுமக்களும், நடக்க முடியாமல் நகர்ந்து கொண்டிருந்தார்கள். அவசரத்தில் ஊர்வலத்திற்கு போலீஸ் முன் அனுமதி வாங்கவில்லை. ஆனாலும், அந்த ஊர்வலத்தின் நிசப்தத்திற்குக் கட்டுப்பட்டு, பல்லவன் பஸ்கள் வழிவிட்டு நின்றன. ஆட்டோக்கள் அடங்கின. பொதுமக்களில் பலர் மிகப்பெரிய அந்த ஊர்வலத்தின் காரண காரியங்கள் புரியாமல் ஏதோ ஒரு உந்துதலில், அந்த மக்கள் வெள்ளத்தில் துளித்துளியாய்- ஆறுகள் ஆறுகளாய்ச் சங்கமித்தார்கள்.

தேருக்குப் பின்னால் வந்த கட்டிடத் தொழிலாளர்கள், ‘விபத்தில் இறந்தால் பத்தாயிரம் கொடு’ என்றோ, அல்லது ‘எங்கள் வேலையை ஒழுங்குபடுத்த சட்டம் இயற்று’ என்றோ கோஷம் இயக்கவில்லை. ‘மாடி மேலே மாடி கட்ட சாரம் கட்டி ஏறுகிறோம். தவறி விழுந்தால் சக்கையாவோம். தடுப்பதற்கு நாதியில்லை’ என்ற பழக்கப்பட்ட பாடலையும் பாடவில்லை. அந்தப் பாடலையும் அவர்களின் முழக்கங்களையும், பிணமான வேலு, சொல்லாமல் சொல்லிக் கொண்டு இருந்தான். காட்டாமல் காட்டிக் கொண்டிருந்தான்.

இரண்டு குடிசைப் பெண்களின் தோள்களில், கைபோட்டுத் தொங்குபவள்போல் நொண்டியபடி நடந்த அன்னவடிவு, அந்த ஜனசமுத்திரத்தைப் பார்த்தாள். அத்தனைப் பேரும்- அவர்கள் எங்கே பிறந்தவர்களோ, என்ன சாதியினரோ மதத்தினரோ - அங்கே கூடி, அவனுக்காக அழுவதை உணர்ந்தபோது, அவள் உள்ளம் லேசாகிக் கொண்டு வந்தது. இதுநாள்வரை, அம்மாவைக் கவனிக்காமல் இருந்துவிட்டு, இப்போது அதற்குப் பிராயச்சித்தம் செய்பவன் போல், தாய்ப்பாசத்தில் தவிக்கும் கோவிந்தன், தாயை மறந்து, தன் மச்சானை நினைத்து அழுகின்றான். அத்தனை பெண்களும் அழுகிறார்கள். ஏதோ ஒரு பாசம், அவர்களைக் குலுக்குகிறது. அதுதான் பாட்டாளி வர்க்கப் பாசமோ? அவளுக்குத் தெரியுமோ தெரியாதோ?

ஆனால் ஒன்று மட்டும் தெரிந்தது.

அவள் அனாதையல்ல... பாட்டாளி வர்க்கத்தில் ஒருத்தி... அந்த பாட்டாளி இனத்திற்காகப் பாடுபட வேண்டிய ஒருத்தி. தனிப்பட்ட தனது சோகத்தை, அவர்களிடம் சுமக்கக் கொடுக்காமல், அவர்களின் சுமையை சுமக்கும் அளவிற்கு, வாங்கிக் கொள்ள வேண்டியவள். தனக்கு ஏற்பட்ட நிலைமை, பிற குடும்பங்களுக்கு நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டியவள். இது ஒரு நாளில் தீரும் பிரச்னையல்ல. அவள், அது தீர்வது வரைக்கும், ஒருநாள் கூட ஓயப்போவதும் இல்லை.

அன்னவடிவு, சுற்றும்முற்றும் நோக்கினாள். ஓலத்தை உள்வாங்கி பாசத்தைக் கண்ணீராய்க் காட்டும் பாட்டாளிப் படையைப் பார்க்கிறாள். அவள் துயரத்தை எல்லோரும் பங்குப் போட்டுக் கொண்டதால் தனது சுமை ஐயாயிரத்தில் ஒன்றாய்க் குறைந்ததுபோல் தோன்றியது. வாழ்ந்த காலத்தைவிட செத்தபிறகு பலவானாக- பல்லாயிரக்கணக்கான இதயங்களை ஒன்று கூட்டி - ஒருங்கே இணைப்பவனாகத் தோன்றும் - தன் கணவனின் சடலத்தை பெருமிதத்தோடு பார்க்கிறாள். அவள் அழக்கூடாது. அவள் ஒரு போர் வீரனின் மனைவி. அவள் நடை தளரக்கூடாது; அவள் ஒரு வீராங்கனை.

அன்னவடிவு தனக்குத் தோள் கொடுத்த இரண்டு பெண்களையும் பாசம் பொங்கப் பார்த்துவிட்டு, கைகளை எடுத்து அவற்றை வீச்சாக்குகிறாள். தள்ளாடிய கால்களை சக்கரமாய் மாற்றுகிறாள். கம்பீரமாக நடக்கிறாள். கண்ணில் தெறிக்கும் நீர்த்துளிகளை எதையோ, யாரையோ, எந்த அமைப்பையோ சுண்டிவிடப் போகிறவள் போல் சுண்டி விடுகிறாள்.

‘நான் என்பதும்... நீ என்பதும் விலகி, எல்லாமே பொது’ என்பதுபோல் உறுதியாகி-

அவள் –

அந்த ஊர்வலத்தில் ஒருத்தியாகிறாள்.
அந்த ஒருத்தியே ஊர்வலமாகிறாள்.


"https://ta.wikisource.org/w/index.php?title=வேரில்_பழுத்த_பலா/018&oldid=1860390" இலிருந்து மீள்விக்கப்பட்டது