ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/001
இன்றைக்கு நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, தமிழ் இலக்கண, இலக்கியங்களில் சிறந்து விளங்கி, பேசப்பட்டும், எழுதப்பட்டும் வந்த ஒரு மொழியாகும். அதே காலத்தில், கிரேக்கம்- எபிரேயம்- சீனம்- சமஸ்கிருதம் போன்ற மொழிகளும் பேசவும், எழுதவும் கூடிய நிலையிலிருந்தன.
பண்டையத் தமிழ் இலக்கண இலக்கியங்களான அகத்தியம், தொல்காப்பியம், திருக்குறள், அக நானூறு, புறநானூறு, எட்டுத் தொகை, பத்துப்பாட்டு, மணிமேகலை, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி போன்ற நூல்கள் எல்லாமே செய்யுள் வடிவிலேயே எழுதப்பட்டன.
அது போலவே கிரேக்க இலக்கணமான கிரமேடிஸ், மற்றும் ஹோமர் எழுதிய இலியட், ஒடிசி போன்ற கிரேக்க காவிய புராணங்கள் னைத்துமே செய்யுட் கோவைகளாகவே எழுதப்பட்டன.
இந்தியாவின் ஆதிக் காவியங்களான இராமயணம், பாரதம் போன்றவையும் சமஸ்கிருதச் செய்யுள் வடிவிலேயே அமைந்துள்ளன. இவை மட்டுமல்ல, நான்மறைகள், உபநிடதங்கள் ஆகமங்கள் எல்லாமே செய்யுள் வடிவிலேயே உள்ளன.
சீன மொழியின் இலக்கணமான ஷென்மிங் என்ற ஒலியிலக்கணமும் சீன மொழிச் செய்யுள் உருவத்தோடுதான், இயற்றப்பட்டிருக்கிறது.
முற்காலத்தில் வழங்கி வந்த உலகமொழிகளுள், கிரேக்கமும் தமிழுமான இரண்டு மொழிகளில் உள்ள சொற்கள் ஒன்றுடன் ஒன்று கலந்திருக்கின்றன. இந்தக கலப்பு எப்படி ஏற்பட்டது?
கிரேக்க நாடும், தமிழ் நாடும் வியாபாரத்தில் சிறப்புற்று விளங்கியபோது ஏற்பட்ட வணிகப் பரிமாற்றத்தால் மொழிக் கலப்பு ஏற்பட்டிருக்கின்றது என்பது மொழி ஆய்வாளர்களது முடிவாகும்.
கிரேக்க மொழியில் பரவிக் கிடக்கும் தமிழ்ச் சொற்களிலே சிலவற்றை எடுத்துக் காட்டுக்காகக் கீழே தந்துள்ளோம்; ஓசைகளை உற்று நோக்கிப் பொருள்களையும் பாருங்கள்:
| கிரேக்கம் | : தமிழ் |
| ஆரம் (பொன்) | : ஆரம் |
| ப்ளுமி | : பீலி அல்லது மயில்தோகை |
| ஹோரா | : சோதிடத்தில் வரும் ஒரை என்ற சொல் |
| ஆக்சிஸ் (Axis) | : அச்சு |
| அடிடே (Aditate) | : அடு (சேர்) |
| எமிஸ் (Emis) | : ஆமை |
| அனிமா (Anima) | : ஆன்மா |
| செஞ்சிம் (Sensim) | : இஞ்சி |
| ஏனம் (Aena) | : ஏனம் (பாத்திரம்) |
| யுனி (Uni) | : ஒன்று, ஒன்னு |
| கடோ (Cado) | : கட, (அகழ்) |
| குரோகோடைல் (Crocodile) | : கரா (முதலை) |
| கெனா (Kena) | : கனவு |
| கேடா (Keda) | : கேடு |
| சண்டலம் (Santalium) | : சந்தனம் |
| சேபியோ (Sapio) | : சப்பு (சுவை) |
| டிம்பனம் (Tympanam) | : தம்பட்டம் |
| டெட்ரா (Terra) | : தரை |
| தேபா (Theba) | : தெப்பம் |
| நாரி (Nari) | : நாரி அதாவது பெண் |
| நேவல் (Naval) | : நாவாய் |
| நோஸ் (Nose) | : இஞ்சி |
| பெர்ல்(Pearl) | : பரல் |
| பலிஸ் (Polis) | : பள்ளி |
| பாண்டஸ் (Pondus) | : பாண்டில் (வளைந்த) |
| பில்லா (Pilla) | : பிள்ளை, (பெண்) |
| ஃபெலிஸ் (Felis) | : புலி |
| எலிபாஸ் (Elephas) | : யாளி, யானை |
| ஹீரோ (Hero) | : வீரா |
| ஹீரா (Hera) துர்க்கை | : வீரி, காளி |
மேலே உள்ள தமிழ்ச் சொற்களுக்கும் கிரேக்கச் சொற்களுக்கும் இடையே உள்ள, பொருள் ஒலியோசைகளைப் பார்த்துப் புரிந்து கொண்டிருப்பீர்கள். இப்போது கீழே கொடுக்கப்பட்டுள்ள கிரேக்கச் சொற்களுக்குரிய சமஸ்கிருதம் மற்றும் அதற்கான ஆங்கிலச் சொற்களின் ஓசைகளையும், பொருள்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால், மொழிக் கலப்பும் அவற்றின் பொருள்களும் புரியும். இதோ கீழே தந்துள்ளோம்; நோக்குக.
| சமஸ்கிருதம் | கிரேக்கம் | ஆங்கிலம் |
| மாத | மேடர் | MOTHER |
| பிதா | பேடர் | FATHER |
| பிராதா | பிரேடர் | BROTHER |
| ஸ்வப்னா | சோம்னி | SOMNAM DREAM |
| ஏகம் | யூனு | ONE |
| துவம் | துவோ | TWO |
| திரயம் | திரிணி | THREE |
| சதுர் | குவாடர் | QUATRO FOUR |
| பஞ்சம் | குயினி | FIVE |
| சஷ்டம் | செக்ஸ்டம், ஹெக்ஸா | SIX |
| அஷ்டம் | அக்டோ | EIGHT |
| நவம் | நவம் | NINE |
| தசம் | டெசிம் | TEN |
| சர்ப்பம் | செர்பென் | SERPENT |
| அஸ்கஷ்டம் | அங்கஷ்ட | THUMB |
| ஆத்மா | அனிமா | SOUL |
கீழே தமிழ்ச் சொற்களில் சில, பீனிசிய மொழியில் கலந்துள்ளமையைக் கவனிக்கவும். அந்தச் சொற்களின் ஓசை, பொருள் ஆகியவற்றையும் கூர்ந்து நோக்கவும்.
| தமிழ் | பீனிசிய மொழி |
| பரிசு (தெப்பம்) | போர்ஸா |
| நாரி (பெண்) | நாரி (பெண்), எநாரி, பெண்கள் நோய் |
| பனை, தென்னை | பாம் |
| பனையேறிகள் | பீனிசியர் |
- மேற்கண்டவை வி.எஸ்.வி. ராகவன்
எழுதிய ‘ஹிராடெடஸ்’ என்ற
ஆய்வு நூல் குறிப்புகள்.
சமஸ்கிருத மொழியிலே எழுதப்பட்ட வால்மீகி இராமாயணத்திலே தமிழ் நாட்டைச் சேர்ந்த தற்போதைய ஊர்களான முசிறி, திருவெண்காடு, காவிரிப் பூம்பட்டினம், தனுஷ்கோடி, சேது சமுத்திரமும், சங்ககால நகரான கபாடபுரமும் வால்மீகியால் குறிப்பிடப் பட்டிருக்கின்றன.
தமிழ் நாட்டுத் துறை முகங்களிலிருந்து முத்து, பொன், மயிலிறகு, மிளகு, சடா மஞ்சி ஆகிய வாசனைப் பொருட்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட கப்பல்கள், கிரேக்கம், எகிப்து ‘ரோம்’ நாட்டு நகரங்களுக்குச் சென்று வாணிகம் நடத்தியுள்ள குறிப்புக்களை, அகநானூறு, புறநானூறு, சிறு பாணாற்றுப் படை, மதுரைக் காஞ்சி, நற்றினை, பட்டினப்பாலை, கலித்தொகை, மலைபடுகடாம், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற பண்டையத் தம்ழ் நூல்கள் இன்றும் அறிவித்துக் கொண்டே இருக்கின்றன.
நமது தமிழ் நூல்களது ஆய்வுகள் மட்டுமல்ல; கடற்பயண யாத்திரிகர்களான பிளினி, பெரிப்ளஸ், தாலமி, ஸ்டிராபோ, செனபான், மெகஸ்தனிஸ், அரியன் இண்டிகா போன்ற மேல் நாட்டு அறிஞர்களும், அவர்களது ஆய்வுக் குறிப்புகளும் மேற்கண்டவாறே கூறுகின்றன.
இவற்றால் நாம் அறிவது என்ன? தமிழ்நாட்டுக்கும் மேற்கே உள்ள நாடு நகரங்களுக்கும் இடையே, நீண்ட நெடுங்காலமாகவே, வாணிகம் வழியாக தொடர்பு இருந்தது என்றும், அதனால் தமிழ் மொழிச் சொற்கள், கலைகள், பண்பாடுகள், பழக்கவழக்கங்கள் மேல் நாடுகளிலும் பரவியிருந்தன என்பதையும் தெளிவாகவே உணர முடிகின்றது அல்லவா? மேற்கே கிரேக்க நாடு, எகிப்து, கிழக்கே சீனநாடு இம் மூன்று நாடுகளுக்கும் இடையிலே தமிழ் நாடு அமைதிருந்த தட்ப வெட்ப நிலையும் தமிழ்நாட்டின் சிறப்பு அமைப்புக்கு ஒரு காரணமாகும். கடல் கொந்தளிப்பு, மன்னர்களது போர்கள், எரிமலை வெடிப்புக்கள், பூகம்பப் பிளவுகள் அடிக்கடி நிகழாத நாடு தமிழ்நாடு ஆனால், மேற்குறிப்பிட்ட இயற்கைச் சீற்றங்கள் கிரேக்கம், சீனா, எகிப்து நாடுகளை அடிக்கடி சீரழித்து நிலைகுலைய வைத்து, பூகோள அமைப்பையே உருக்குலைத்தன. இது போன்ற ஆபத்தும் - அபாயமும் இன்றுவரை தமிழ் நாட்டுக்குள் கிடையாததும் ஒரு முக்கியச் சிறப்பாகும்.
எகிப்து நாட்டில் பாயும் நைல் நதி, மெசபடோமிய மண்ணில் பாய்ந்தோடிடும் டைக்ரிஸ், யூப்ரடிஸ் நதிகள், சீன நாட்டில் ஓடும் மஞ்சள் நதி ஆகியவற்றின் நீர்ப்பெருக்கும், வெள்ளச் சீற்றங்களும் அடிக்கடி தோன்றி அந்தந்தப் பகுதிகளின் நாகரிகங்களை நாசமாக்கிவிட்டன. அதனால், நைல்நதி நாகரிகம், பாபிலோனிய நாகரிகம், அஸ்ஸிரிய நாகரிகம், மஞ்சள் நதியின் சீன நாகரிகம் எல்லாமே நிலைபெறாமல் போய்விட்டன.
அதுபோலவே, இந்திய நாட்டின் பிரம்மபுத்ரா நதி, சிந்து நதி, கங்கை நதிகளின் வெள்ளப் பெருக்குச் சீற்றங்களும் அப்பகுதியில் வளர்ந்த வட ஆரிய நாகரிகத்தை வளர விடாமல் தடுத்துச் சீரழித்து விட்டன. ஆனால், தமிழ்நாடு அப்படிப்பட்ட நிலையிலே இருந்து தப்பித்துவிட்டது.
தமிழ் நாட்டிலுள்ள காவிரி, வைகை, தாமிரபரணி ஆறுகளின் நீர்ப் பெருக்காலும், வெள்ளச் சீற்றங்களாலும் எந்தவித ஆபத்தோ அழிவோ தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டதில்லை. கடல் கொந்தளிப்புகளாலும் சேதம் இல்லை. பூகம்ப அபாயங்களால் பாதிப்புக்கள் இல்லை. ஏனென்றால் தமிழ் நாடு ஒரு பீடபூமி அமைப்புடைய இயற்கையான நாடு. அதனால் இயற்கையான ஆபத்துகளற்ற நாடு.
இத்தகைய ஓர் இயற்கை அமைப்புக்கள் சூழ்ந்த தமிழ் நாட்டில் தோன்றிய தமிழர்நாகரிகம், பண்பாடு, பழக்க வழக்கங்களை இங்குள்ள மக்கள் காப்பாற்றிப் பாதுகாத்து வந்தார்கள்.
எனவே, கிரேக்க நாகரிகம், எகிப்திய நாகரிகம், தமிழ் நாகரிகம், ஆரிய நாகரிகம் போன்ற உலக நாகரிகங்களுள் இன்று பல நாகரிகங்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டதால், தமிழர் நாகரிகம் ஒன்று மட்டும்தான் அருகம்புல் போல் வேர் படர்ந்து பரவி, ஆல்போல விழுதுகள் விட்டு உலகிலே பழம்பெரும் நாகரிகங்களின் தாயாக இன்றும் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது.
அதனால், கிரேக்க நாகரிகத்துக்குள் தமிழர் நாகரிகமும், பண்பாடும், பழக்க வழக்கங்களும், தமிழ்ச் சொற்களும் புகுந்துள்ளதை ஆராய்ச்சியாளர்கள் தக்கச் சான்றுகளோடு விளக்கி உள்ளார்கள். அதிலும் குறிப்பாக, ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் அலாஸ்கா என்ற வட அமெரிக்கத் தீபகற்பம் வழியாக அமெரிக்கா சென்று அங்கேயும் தமிழர் நாகரிகத்தைப் பரப்பிய செய்திகளையும் நாம் வரலாற்றிலே படிக்கின்றோம்.
எனவேதான், உலக நாகரிகங்களை ஆராய்ச்சி செய்த அறிஞர்கள் எல்லாரும் தமிழ் பண்பாடுகள் தான் உலக நாகரிகங்களுக்கே பெரும் வளத்தை வழங்கியுள்ளது என்பதைத் தெளிவாகவே கூறியுள்ளார்கள். அது மட்டுமன்று, தமிழ்நாடுதான் உலக நாகரிகங்களின் தொட்டில் என்றும் வரலாற்று ஆதித் தந்தையான ஹிராடெடஸ் என்ற மேதை தான் எழுதிய வரலாற்று நூலிலே குறிப்பிட்டிருக்கிறார்.