ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/002
ஹிராடெடஸ் என்ற சரித்திரத்தின் நாயகன் - வரலாற்றின் ஆதித் தந்தை என்று, வரலாற்று ஆசிரியர்கள் போற்றுகிறார்கள், வாழ்த்துகிறார்கள். வரலாறு என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரைமுறையை உலகுக்கு முதன்முதலில் விளக்கி எழுதியவரும் ஹிராடெடஸ் என்ற மேதைதான். அப்படியானால், ஹிராடெடசுக்கு முன்னால் வரலாறு என்ற துறையே இல்லையா? இவருக்கு முன்பு வேறு யாரும் எந்த வித வரலாற்றையும் எழுதவில்லையா? என்று கேட்கக் கூடும்.
ஹிராடெடசுக்குப் பின்னர், சில நூற்றாண்டுகள் ஓடி ஓய்ந்த பின்புதான், வரலாறு ஒரு வரம்போடு, ஒழுங்காக, விவரமாக எழுதவே துவங்கப்பட்டது. எனவேதான், சரித்திரத்தினை எழுதப் புகுந்தவர்களுள் ஹிராடெடஸ் முதன்மையானவர் என்ற பெயரைப் பெற்றார். இக் காரணத்தால் தான் ஹிராடெடசை வரலாற்றின் ஆதித் தந்தை என்று வரலாற்று உலகம் வாழ்த்துகிறது; போற்றுகிறது!
வரலாற்றுச் சம்பங்கள் ஒவ்வொன்றும் அழிந்து விடாமல் காப்பாற்றப் படவேண்டும். என்று, அவர் ஏன் குறிப்பிட்டார் என்பதை நாம் நன்கு சிந்திக்க வேண்டும்.
வரலாற்றை எழுதிய வரலாற்று மேதை ஹிராடெடசினுடைய வாழ்க்கைக் குறிப்புக்கள், அவரது வாழ்க்கைச் சம்பங்கள், சரியாகவே இன்றும் கூடக் கிடைக்கவில்லை என்றால், அவர் எழுது கோலை ஏந்திய போது மட்டும் எப்படிக் கிடைத்திருக்க முடியும்? அதனால்தான், வரலாறு எழுதும் போது தான் அனுபவித்த அவல அனுபவங்களை எண்ணி, எதிர்கால உலகத்திற்கு அறிவுரை கூறும் எண்ணத்தில், வரலாற்று நிகழ்ச்சிகளை அழிந்து போகாமல் காப்பாற்றப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு ஓர் அடையாளமாக தனது நூல் அமையவேண்டும் என்ற சிந்தனையிலே அவர் தனது ‘வரலாறுகள்’ என்ற நூலை எழுதிக் காட்டினார்.
கிரேக்க நாட்டிற்கும் பாரசீகப் பேரரசகளுக்கும் இடையே நடந்த போர்க்களை நிகழ்வுகளையே அவர் ‘வரலாறு’ என்று பெயரிட்டார். பாரசீகர்களின் பழக்க வழக்கங்களையும், பாபிலோனிய மக்கள், எகிப்தியர்கள், இந்தியர்கள், பினீசியர், லிபியர் போன்ற மற்ற பிற மன்னர்களின் அன்றைய பழக்க வழக்கங்களையும் அவரது நூலிலே விரிவாக விளக்கி எழுதியுள்ளார். எனவே, நுணுக்கமாகப் படிக்க வேண்டிய ஒரு வரலாற்று நூலாகவே அது அமைந்துள்ளது.
இந்திய வரலாற்றில் பாலைவனப் பகுதி மணல்களிலே வாழும் பொன் அகழும் எறும்புகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அந்த எறும்பு குள்ள நரியை விடப் பெரியதாம், நம் நாட்டு எறும்புகள் மண்ணை வெளியே கொண்டுவந்து தள்ளுவதைப் போல, பொன் அகழும் எறும்புகளும் குவியல் குவியலாக மண்ணை வெளியே கொண்டு வந்து தள்ளுகின்றனவாம். அந்த மண்ணிலே உள்ள பொன்னை எடுக்க மக்கள் ஒட்டகச் சவாரியோடு போய் பொன்னை எடுத்து வருவார்களாம்!
இந்த அற்புத இந்திய வரலாற்றைத் தேடிக் கண்டுபிடித்து வரலாற்றுச் சம்பவமாக்கியவர் யார் தெரியுமா? வரலாற்று ஞானி ஹிராடெடஸ்.
இத்தகைய அரிய வரலாற்று மேதையான ஹிராடெடஸ், ஆசிய மைனர் Asia minor என்ற நாட்டின் தென்மேற்கே இருந்த காரியா எனும் நகரப் பகுதியைச் சேர்ந்த ஹரிகார்னனஸ் என்ற ஊரிலே கி.மு. 484 ஆம் ஆண்டில், லிக்சஸ் என்ற தந்தைக்கும், டிரேயா என்ற தாயாருக்கும் பிறந்தார்.
அவர் பிறந்த நேரத்தில் அந்தப் பகுதியிலேயும், ஊரிலேயும் வாழ்ந்த மக்கள் எப்படி வசித்தார்கள் என்பதையும் நாம் சற்று கவனித்தால் அவர் வாழ்ந்த காலக் கட்டத்தையும் நாம் அறிந்து கொண்டவர்களாவோம்.
அடர்ந்த மலைகளும், மலைக்குன்றுகளும் தொடர்ந்து சரிந்து கடற்கரைவரை பரவி, சில வளைகுடாக்களை ஏற்படுத்தியிருந்தன. அந்தக் கடற்கரைப் பகுதிகளிலே கிரேக்க நாட்டு மக்கள் குடியேறி இருந்தார்கள். அவர்கள் வாழ்ந்து வந்த இடங்களின் உட்பகுதியிலே காரியர் என்ற இனத்ததாரும் வாழ்ந்து வந்தார்கள்.
இந்த காரியா இனத்தவர்களைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருந்த கிரேக்கர்கள், அவர்களை மிக இழிவாக நடத்தி, அடிமைகளாகக் கருதினர். அப்போது அந்த நாடு அரசர்களாலும் அரசிகளாலும் ஆளப்பட்டு வந்தது. அந்த அரச பரம்பரையினர் ஹிராடெடஸ் பிறந்த ஊரான ஹலிகார்ன சகில் என்ற இடத்தையே தங்களது இருப்பிடமாக நிறுவிக் கொண்டார்கள். அவர்களுள் சிலர் மேன் மக்களாகவும் - மேதைகளாகவும், கல்விமான்களாகவும் வாழ்ந்தனர்! வேறு சிலர், லிடியர்களுடனும் பாரசிகத்தினர்களுடனும் சேர்ந்து போரில் திறமை பெற்று வாழ்ந்தார்கள்.
இத்தகைய காரியர் இனமக்களுள், ஹிராடெடஸ் கல்வியாளர்களது பிரிவினர் பரம்பரையிலே பிறந்தவர் ஆவார். அப்போது, ஒரு காரியப் பெண்ணரசி, ஆட்சி செய்து வந்தாள். அவள் பெயர் அர்டி மசியா என்பதாகும். அவள், பாரசீகப் போரில் மன்னர் செர்க்சிசுக்குப் படைப்பலம் உதவிசெய்தவள். அந்தப் போரில், அந்த மன்னரிடம் - இருபத்தாறு லட்சத்து நாற்பத் தோராயிரம் படைவீரர்கள் இருந்ததாக ஹிராடெடஸ் தனது வரலாற்றில் குறிப்பிட்டுள்ளார்.
மன்னன் செர்க்சிஸ் பிறகு இருபதாண்டு காலம் ஆட்சி செய்து கி.மு. 465 ஆம் ஆண்டின் போது அர்டபான்ஸ் என்ற படைத் தளபதியால் படுகொலை செய்யப்பட்டார் என்று அவர் கூறுகிறார். காரியர் இனப் பெண்ணரசி அர்டிமிசியாவின் பதினான்கு ஆண்டுக்கால ஆட்சிக்குப் பிறகு, அவளது பேரன் லிக்டமிஸ் கொடுங்கோலாட்சி செய்தவந்தான். அப்போது, அந்த நாட்டில் இரண்டு பிரிவினர் இருந்தனர். அவர்களுள் ஒரு பிரிவு கொடுங்கோலன் ஆட்சியை ஒழிப்பது என்றும், மற்றப் பிரிவினர் அடிமையாகவே வாழ்ந்து சாகலாம் என்ற முடிவிலும் இருந்தார்கள்.
கொடுங்கோல் அரசனை ஒழிக்கும் புரட்சிக் குழுவுக்கு ஹிராடெடஸ் தாய்மாமனும், சிறந்த கவிஞருமான பான்யாசிஸ் தலைமை வகித்தார். மன்னன் அக்கவிஞரைக் கைது செய்து தூக்கிலிட்டுக் கொன்றான். இந்தப் பயங்கர நிகழ்ச்சியைக் கண்ட ஹிராடெடஸ் - சாமோஸ் என்ற தீவுக்கு ஓடிவிட்டார்.
அந்த தீவிலே அவர் தங்கியிருந்த எட்டாண்டுகளில் அத்தீவின் அயோனிய மொழியைக் கற்றுக் கொண்டார். அந்த மொழியிலேதான் ஹிராடெடஸ் தனது வரலாற்று நூலை எழுதினார். கொடுங்கோலன் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அறிந்து, மீண்டும் அவர் தனது பிறந்த ஊரான ஹாலிகார்னனஸ்க்கே திரும்பினார்.
சொந்த ஊர் திரும்பிய அவர், பதவி நீக்கம் செய்யப்பட்டவனுக்குப் பதிலாகப் பதவியேற்றவனும் கொடுங்கோலனாக ஆட்சி செய்ததைக் கண்டார். எனவே தனது சொந்த அனுபவங்களுக்காக பல ஊர்களையும், நகரங்களையும், நாடுகளையும் சுற்றி, ஆப்பிரிக்கா, ஐரோப்பா போன்ற கண்டங்களுக்குச் சென்று ஆங்காங்கே உள்ள மக்கள் வாழ்க்கை முறைகளைக் கண்டறியப் புறப்பட்டார்.
அந்த நேரத்தில் கிரேக்க நாட்டின் ஒரு பகுதியான ஏதென்ஸ் சிறப்பான புகழைப் பெற்று, உலக நாடுகளில் பெருமை அடைந்த நகரங்களில் ஒன்றாக விளங்கியது. அதனால், ஹிராடெடஸ் ஏதென்ஸ் நகரையே தனது சொந்த ஊராகக் கருதி அங்கேயே தங்கி வாழ்ந்தார்.
கிரேக்கத்தின் மாபெரும் நாடகப் பேராசிரியர்களுள் ஒருவரான, தத்துவ மேதை சோபாக்கிளிஸ் என்பவர் அவருக்கு நண்பரானார். இவர் கி.மு. 495க்கும் 406 ஆம் ஆண்டிற்குமிடையே வாழ்ந்தவர். சோபாக்கிளிஸ் ஹிராடெடஸ் மீது கவிதை பாடுமளவுக்கு மிக நெருங்கியவரானார். ஹிராடெடஸ், சோபக்ளிஸ் போன்றவர்களது சிந்தனைகளால் ஏதென்ஸ் மேலும் பெரும் புகழைப் பெற்றது.
உலகப் பண்பாட்டின் சிறந்த நகரங்களுள் ஒன்றாக விளங்கிய தென்ஸ் நகரத்து வீதிகள் கூடுகின்ற சந்திப்புக்களில், ஹிராடெடஸ் தான் எழுதிய ‘வரலாறுகள்’ என்ற நூலை மக்கட் கூட்டத்தினிடையே படித்துக் காண்பித்தார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த மக்கள் அனைவரும் தங்களது கையொலிகளை எழுப்பி மகிழ்ச்சியோடு அதனை வரவேற்றார்கள். ஏதென்ஸ் நகரத்தின் பொது நிதியிலே இருந்து அவருக்குப் பத்து டேலண்டுகள் TALENTS, அதாவது 2400 பவுன்களைப் பரிசாக அளித்து மகிழ்ந்தார்கள்.
ஏதென்ஸ் நகரத்து மக்களில் வேறு ஒரு பிரிவினர், ஹிராடெடஸின் ‘வரலாறுகள்’ நூலினது கருத்துக்களைக் கேட்டுக் கையொலி எழுப்பியது மட்டுமல்லாமல், அந்த நூலின் வாசகங்களைத் திரட்டி அந்த நகரிலே நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுகளில் மகிழ்ச்சிப் பொங்கிட ஓதினார்கள் என்றும் வரலாற்றுச் சம்பவங்கள் கூறுகின்றன.
ஏதென்ஸ் நகரத்திலேயே அவர் தொடர்ந்து தங்கிவிடாமல், மேலும் பல சரித்திரச் சம்பங்களைத் தொடர்ந்து திரட்டிட, ஹிராடெடஸ் அங்கிருந்து உலகின் பல இடங்களுக்குப் பயணம் செய்தார்! ஆங்காங்கு தான் கண்ட சம்பவங்களையும் சேகரித்து வந்தார்.
இன்றைய ஆப்பிரிக்கா கண்டத்திற்கு அவர் வந்த காலத்தில் நைல் நதி நாகரிகங்களை எல்லாம் அறிந்து கொண்டு, வட எகிப்து நாடு வரை சென்றார். அதே பயணத்தின் போது, ஆசியா, பாபிலோன், சூசா, எக்படன போன்ற நகர்களுக்கும் சென்று வரலாறுகளைத் திரட்டினார். கருங்கடல், பகுதிகளையும், டான்யூப் நதி டெல்டா பகுதி மக்களையும் சந்தித்த பின்பு, கிரிமியா, கோல்கே, புது ஜார்ஜியா, மாநிலங்களுக்கும் சென்றார். சிரியா, திரேசியன், சைரினில், லிபியா, எபிரஸ், திசாவியா, அட்டிகா, பெலபோனீசயா போன்ற நாடுகளுக்கெல்லாம் சென்று, அந்தந்த நாடுகளின் உட்பகுதிகளிலே புகுந்து, அங்கங்கே வாழ்கின்ற மக்களை எல்லாம் சந்தித்து, ஒரு வரலாறு எழுதப்படுவதற்கான காரண, காரியங்களை எல்லாம் கேட்டறிந்து, தக்க குறிப்புக்களை எடுத்துக் கொண்டும் அவற்றைத் தனது மனத்திலே பதித்துக் கொண்டும் வரலாறுகளைத் திரட்டி பல அரிய செயல்களைச் செய்தார்!
இவ்வாறு, உலகைச்சுற்றி ஒரு வரலாற்றை எழுதிட செயற்கரிய செயல்களைச் செய்த முதல் வரலாற்று ஆசிரியர் ஹிராடெடஸ்தான் என்றால், அவர் அந்த நூலை எழுதிட எவ்வளவு அக்கறையோடு அரும்பாடுபட்டிருக்கிறார் என்பதை இன்றும் நாம் எண்ணும் போது உடல் சிலிர்க்கின்றது.
அவர் மக்களிடம் கேட்ட செய்திகளையும், தான் பார்த்த உண்மைகளையும், மக்களால் கூறப்பட்ட சிறு சிறு கதைக் குறிப்புகளையும், மன்னர்களது வாழ்வில் நடந்த சம்பவங்களையும், நன்கு விசாரணை செய்து, இவற்றை எல்லாம் சேகரித்து, அவற்றுக்கு ஓர் உருவம் கொடுத்த பின்பே - தனது ‘வரலாறுகள்’ என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளார்.
ஏதன்ஸ் நகர மக்கள் ஒன்று திரண்டு கி.மு. 444 ஆம் ஆண்டின் போது இத்தாலி நாட்டின் தென்பகுதியில் ஒரு குடியேற்றத்தை அமைத்துக் கொண்டு, அதற்குத் ‘தூரிக்’ என்று பெயர் வைத்துக் கொண்டனர். அந்தக் குடியேற்ற மக்களில் லைசியர், சைரக்கியூஸ் நாடுகளைச் சேர்ந்தவர்களும் இருந்தார்கள். லைசியர்கள் இடையே அப்போது லைசியாஸ் என்ற ஒரு சிறந்த பேச்சாளரும் இருந்தார். இவருக்கும் ஹிராடெசுக்கும் நட்பு ஏற்பட்டதால் ஹிராடெடசும் அந்தக் குடியேற்ற மக்களிடையிலேயே தனது இருப்பிடத்தை அமைத்துக் கொண்டு அவர்களுடனேயே வாழ்ந்தார்.
அந்தப் பகுதியிலே அவர் ஏறக்குறைய முப்பது ஆண்டுகள் தொடர்ந்து வாழ்ந்தபின்பு, தான் எழுதியவற்றை எல்லாம் ஒன்பது நூல்களாகத் தொகுத்தார்.
கி.மு. 414 ஆம் ஆண்டு வரை அங்கே வாழ்ந்த பின்பு, மீண்டும் வரலாற்றுச் செய்திகளைச் சேகரிக்கப் புதிய பயணத்தை மேற்கொண்டார். இறுதியில் அவர் தனது நூலை முடிக்க முடியாமலேயே கி.மு.408 ஆம் ஆண்டில் மீண்டும் ஏதென்ஸ் நகர் வந்தபோது, தனது 76 ஆம் வயதில் இறந்தார்.