ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/010
உலகப் பெருங் கவிஞர்களுள் ஒருவரான ஹோமர் HOMER தனது ‘இல்லியட் ஒடிசி’ என்ற ஆதிக் காவியத்தில் ஹீரா என்ற பெண் தெய்வத்தை ஜியுஸ் என்ற ஆண் தெய்வத்தின் மனைவி என்று குறிப்பிடுகிறார். ஹோமர் காலம் கி.மு.850-ம் ஆண்டாகும். அக்காலக் கடவுட் கொள்கையை ஹிராடெடஸ் கூறும் போது, ஹீரா தேவதைக்குரிய திருக்கோயில்கள் சாமோஸ் தீவிலும், ஆர்க்கோஸ் தீவிலும், டெல்பி தேவதைக் கோயில் டெல்பி நகரில் இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.
ஹீரா என்ற கிரேக்கப் பெண் தெய்வம், தமிழ் நாட்டிலே உள்ள துர்க்கை தெய்வம் போலவாகும்.
அதனைப் போலவே, இந்திய நாட்டின் வராக அவதாரம் கதையின் சாயலை நினைவுபடுத்தும் கதை ஒன்று, கிரேக்க நாட்டின் சார்டிஸ் நகரத்தில் கி.மு.859-ல் நடைபெற்றுள்ளது. அக் கதையை ஹிராடெடஸ் கூறுவதை அப்படியே கீழே தருக்கின்றோம்.
சோலான் சார்டிஸ் நகரை விட்டுப் புறப்பட்டதும், அன்றிரவு குரோசஸ் மகன் பன்றி ஒன்றினால் கொல்லப்படுவதாகக் கனவு கண்டான். அதற்குப் பிறகு, மன்னனின் மனம் குழப்பமடைந்தது. அடுத்த நாள் அந்தச் சிறுவன் தூங்கிக் கொண்டிருக்கும்போது, குழந்தைக்கு மேலே மாட்டப்பட்டிருந்த பன்றி வடிவப் பொம்மை உருவம் அந்தச் சிறுவன் மீது விழுந்து, மன்னன் கண்ட கனவிற்கேற்றவாறு அரசன் மகன் இறந்து போனான். மன்னன் கண்ட கனவு உண்மையாகி விட்டது.
இந்த கிரேக்கக் கதைக்கு ஏற்றவாறு இந்திய நாட்டிலும் ஒரு கதை இருக்கிறது. இந்தியக் கதை கி.பி.505 ஆம் ஆண்டுக்கு இடையே நடந்த கதையாகும். மேற்கண்ட காலத்திற்கிடையே வாழந்தவர் வராகமிகிரர் என்பவர். இவர் ஒரு சோதிட வித்தகர். அவர் எழுதியதே ‘பிருகத் சம்ஹிதை’ என்ற சோதிட நூல் என்பர் வரலாற்றாசிரியர்கள்.
வராகமிகிரர் குப்த சாம்ராச்சியத்தின் ஆரூட நிபுணர். அவர் பத்து வயதாக இருந்த போது, அதாவது கி.பி. 515 ஆம் ஆண்டில், தம் உறவினர் ஒருவருடன் அரசவைக்குச் சென்றார். அப்போது மன்னனின் குழந்தைக்கு சோதிடம் எழுதிட அரசவை விவாதம் செய்து கொண்டிருந்தது. வழக்கம் போல வருவாய்க்குரிய வாறு ஹோ ஹோ என்று பேசும் சோதிடர்களைப் போல அந்த அரசவையும் மன்னன் குழந்தையைக் குறித்து மிகப் பிரபலமாக சோதிடப் பலன்களைக் கூறியது.
அப்போது வராகமிகிரர் எனப்படும் மிகிராகுலன் எழுந்து மன்னன் குழந்தைக்கு இரண்டாண்டு, ஆறுமாதம், மூன்று நாட்கள் வரை பாலரிட்டம் என்ற தோஷம் இருப்பதாகவும், குறிப்பிட்ட நாள் முடிந்ததும் குழந்தைக்கு ஒரு பன்றியினால் மரணம் ஏற்படுமென்றும் கூறினான். இதனால், அரசவைக்கும், அரசனுக்கும் கோபம் வந்தது. இருந்தாலும், மன்னன் சிறிது நேரம் சிந்தித்து, சோதிடம் கூறியவன் மேலெழுந்த கோபத்தை அடக்கிக் கொண்டு, சோதிடனை நோக்கி, ‘சிறுவனே நீ கூறுகிறபடி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நடை பெறாவிட்டால் தலையைத் துண்டிப்பேன், தெரியுமா?’ என்று கேட்க, மிகிராகுலன் சரியென ஒப்புக்கொண்டான்.
அரசன் ஒரு தீவில் கொண்டு போய், யாருக்கும் தெரியாதபடி ரகசியமாக ஓர் அரண்மனை போன்ற மாளிகையைக் கட்டித் தக்க பாதுகாப்புக்களுடன் குழந்தையைப் பாதுகாத்து வந்தான். சோதிடனின் கெடுநாட்கள் கழிந்தன. எடுத்துவா குழந்தையை என்று மன்னன் பணியாளர்களுக்கு ஆணைவிடுத்தான். உள்ளே சென்ற காவலர் கண்ட காட்சி என்ன தெரியுமா? களிமண்ணால் செய்யப்பட்ட பன்றியின் படிமம் ஒன்று சுவரின் மேலே மாட்டப்பட்டிருந்தது பல்லி ஒன்று அதன் மேல் ஊர்ந்து சென்ற அசைவால் குழந்தையின் தலைமேலே விழுந்து இறந்துவிட்டிருந்த காட்சியைக் காவலர்கள் கண்டு அரசனிடம் கூறினார்கள்.
குழந்தை செத்துப் போனதை அறிந்த அரசன் மிகவும் வேதனைப் பட்டான். ஆனாலும், அந்த சோதிடச் சிறுவன் கூறியபடி நடந்ததால், அன்று முதல் அவனையே தனது அரசவை கணியனாக நியமித்தார். பன்றி படிமத்தால் குழந்தை சாவான் என்று கூறியதால், மிகிராகுலன் என்ற பெயருடையவன் வராகமிகரன் என்று அழைக்கப்பட்டான். வராகம் என்றால் பன்றி என்ற ஓர் பொருளும் உண்டல்லவா? அதனால் அப்பெயர் அவனுக்கு ஏற்பட்டது.
கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் நடந்ததாகக் கூறப்பட்ட இந்தக் கதையான வராக லீலைக்குரிய ஆதாரம் ஏதுமில்லை. என்றாலும், கிரேக்க நாட்டில் கி.மு.559-ல் நடந்ததாகக் கூறப்படும் வராக லீலையின் அவதாரமாக இந்தியப் புராணம் புனையப்பட்டது என்பதுதான் உண்மையோ! சிந்தியுங்கள்.