ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/011
ஹிராடெடஸ் கூறுகின்ற இந்த வரலாற்றுச் சம்பவம் போக, குரோசஸ் என்ற மன்னனின் கடைசிக் காலம் எவ்வாறு கல்லறையானது என்பதையும் படிப்போம்.
குரோசசுக்கு சிறு வயதில் ஒரு மகன் இருந்தான். குரோசஸ் கண்ட கனவுப்படி, பன்றியின் பொம்மை அந்தச் சிறுவனின் மேல் விழுந்தபோது மண்டை உடைந்து மாண்டான் என்பதை மேலே பார்த்தோம்.
அதே குரோசஸ் மன்னனுக்கு, இரண்டாவது மகன் ஒருவன் இருந்தான். அவன் ஊமை! வாய் பேசாதவன்! அக்குறை ஒன்றே ஒன்றைத் தவிர மற்ற எல்லா மனிதநேய இலக்கணங்களும் உடைய அழகன்! அந்த ஊமை மகன் வளர்ந்து வாலிப நிலை வந்தபோது பாவம்- மன்னன் குரோசஸ், தனது இறுதிக் காலத்தில் சிறையில் வாழும் பரிதாப நிலையில் தாழ்ந்து விட்டார்.
பாரசீகப் போர் வீரன் ஒருவன் வாளேந்திக் கொண்டு போரில் தோல்வி கண்டதால் குரோசசை வெட்டுவதற்குக் கோபாவேசமாக ஓடிவந்தான். அவன் அடக்க முடியா வெறி வேகத்தோடு வருவதைக் கண்ட குரோசஸ், எல்லாத் தடுப்புக் கலைகளும் நன்கு தெரிந்தும் கூட; தடுக்காமல் ஊமைபோல தளர்ந்து நின்று கொண்டிருந்தார். ஏன் அவ்வாறு இருந்து விட்டார் அவர்? மோசமான வாழ்க்கைப் பூகம்பத்தின் பிளவுக்குப் பலியான பிறகு, இனி வாழ்ந்தால் என்ன? செத்தால் என்ன? என்ற முடிவுக்கு அவர் வந்த பிறகு நாம் ஏன் வெட்ட வருபவனின் வாளைத் தடுக்க வேண்டும்? என்பதன் விரக்தியிலே அவர் வீழ்ந்துவிட்டார்!
இந்தப் பயங்கரக் காட்சியை, குரோசஸ் ஊமை மகன் பார்த்து விட்டான். அவன் உடல் நடு நடுங்கியது; கண்கள் படபடத்தன; நெஞ்சிலே நெருப்ப பற்றி, தனது உடலையே எரிப்பது போன்ற மோசமான கனல் சூட்டால் தவித்தான்; துடித்தான்; படபடத்தான்; “ஐயோ, ஐயோ குரோசசைக் கொன்று விடாதே, கொன்று விடாதே” என்று ஊமை கத்தினான்; அலறினான்; பதறினான்; கண்ணீர் வடித்தான் கதறினான்!
“ஐயா; குரோசசைக் கொன்று விடாதே” என்று, ஊமை வாய்திறந்து முதன் முதலில் பேசிய கூப்பாட்டுக் கூச்சலைக்கேட்டு அங்கே கூடி இருந்தோர் ஆச்சர்யப்பட்டார்கள்! அன்று முதல் ஊமை தனது இறுதிக் காலம் வரை நன்றாகப் பேசினான்!
ஊமை எவ்வாறு திடீரென்றுப் பேசினான் என்ற வியப்புணர்ச்சி ஏற்பட்டு, மகிழச்சி வெள்ளத்தைப் பாய்ச்சியது மக்களிடையே! தனது தந்தைக் குரோசசை, எங்கே கொன்று விடுவானோ என்று அவனது நெஞ்சும் நாவும் இதயமும் படபடத்து, அதிர்ச்சி நெருக்கடியின் அதிர்வுகளால் ஊமை பேசத் தொடங்கி விட்டான். இதற்கு அதிர்ச்சி சிகிச்சை என்று மருத்துவ உலகம் பெயரிடுகிறது.
குரோசசை இரும்புச் சங்கிலியால் இறுகப் பிணைத்துப் பாரசீக மன்னர் முன்பு கையிலே விலங்குடன் நிற்க வைத்தார்கள். அப்போது பதினான்கு லிடியா வாலிபர்கள் தீயிட்டுக் கொளுத்துவதற்காகத் தயாராக நிறுத்தப்பட்டிருந்தார்கள். பிறகு சிறுவர்களுக்காக அடுக்கி வைக்கப்பட்ட சிதைகளின் நடுவிலே சிறுவர்களுடன் குரோசிசையும் சிதையிலே படுக்க வைத்தது பாரசீக அரசு! இறுதியாக, ஏந்திய தீப்பந்தம் கொண்டு சிதைகளுக்கு எரியூட்ட வேண்டிய நேரத்தில் குரோசஸ், ‘சோலான், சோலான்’ என்று கூவினான்! மீண்டும் ஓங்கி உரக்கக் கூவினான்! பிறகு குரோசஸ்.
- “எந்த மனிதனும் தனக்குச் சாவுவரும் வரை மகிழ்ச்சியாக இருப்பதில்லை. சாவே, ஒரு மனிதனின் கடைசி இன்பம்”
என்று, உரக்கப் பேசினான்! மீண்டும் சோலான், சோலான் என்று கை கூப்பி வணங்கினான்!
மன்னன் சைரஸ் அந்தக் கண்ணீர்க் கூக் குரலைக் கேட்டான்! சோலான் என்பவன் யார் என்று கேட்டான்! கூடியிருந்தவர்களை எல்லாம் நோக்கி, உங்களுக்குத் தெரியுமா? யார் அந்த சோலான்? என்றான். எந்த விதப் பதிலும் எவரிடமும் இருந்து வராததால், மீண்டும் குரோசசையே கேட்டான் அந்த மன்னன்! அப்போது குரோசஸ்:
- சோலான், நீ உலகில் உள்ள ஒவ்வொரு அரசனிடமும் பேசியிருக்க வேண்டும். எனக்கு எல்லையற்ற செல்வம் இப்போது இருந்தால், எல்லாவற்றையும் அவருக்கே வாரி வாரிக் கொடுத்திருப்பேன்! சோலான், சோலான் என்றார்.
மறுபடியும் அந்தப் பாரசீக மன்னன் சோலான் யார்? என்று கேட்ட போது அடுக்கி வைக்கப்பட்டிருந்த அந்தச் சிதை மேலே படுத்துக் கொண்டே குரோசஸ் அந்த மன்னனுக்குப் பதில் கூறினார். சோலான் என்னென்ன கூறினாயோ அதெல்லாம் நடந்தேறி இருக்கின்றன என்று குரோசஸ் விளக்கமாகவே கம்பீரத்தோடு பேசினார்.
அடுக்கி வைக்கப்பட்ட குரோசசின் சிதையின் நான்கு பக்கங்களிலும் நெருப்பு எரியும் வேளையில் அரசன் சைரசுக்கு உடனே ஓர் எண்ணம் திடீரென்று வந்தது. “இவன் என்னைப் போல் எத்தனையோ நாடுகளை வென்றவன்; ஒரு காலத்தில் பேரரசு ஒன்றுக்கு மன்னனாக வாழ்ந்தவன்; மனிதரில் யார்தான் நிலையாக வாழ்பவர்? ஏதோ எனக்கு நல்ல நேரம், அதனால் இவனைச் சிறைப் பிடித்தேன்! ஏன், நானேகூட இறந்து போயிருக்கலாம் இல்லையா? எனவே, மனிதர்கள் என்ன செய்வார்கள்; அவர்களை ஊழ் என்ற ஒன்று ஆட்டிப் படைக்கும் போது?” என்பதே அந்தத் திடீர் எண்ணம்!
மன்னன், காவலர்களை உடனே கூப்பிட்டான்; எரிகின்ற சிதைகளை உடனே தண்ணீரைக் கொட்டி அணையுங்கள் என்று உரக்க ஓங்கிக் கூப்பாடு போட்டுக் கத்திக் கட்டளையிட்டான்!
சைரஸ் அரசர் தனது எண்ணத்தைக் கூறி முடிப்பதற்குள், நெருப்பு பலமாக எரிய ஆரம்பித்து விட்டது. உடனே குரோசஸ், அப்பொலோ தெய்வமே! நான் உனக்குக் கொடுத்த தெய்வக் கொடையில் ஒன்றாவது உனக்குப் பிடித்திருந்தால், எரிகின்ற இந்தத் தீயிலே இருந்து என்னைக் காப்பாற்று” என்று, அப்பொலோ கடவுளை வேண்டினார். அந்த வேண்டு கோளைக் கேட்ட இந்தத் தெய்வம்; கருணையோடு, பெரு மழை ஒன்றைப் பொழிந்ததால், எரியும் சிதை அணைந்து விட்டது. மன்னன் ஆச்சரியப்பட்டுக் குரோசசைத் தழுவிக் கொண்டான்.
குரோசஸ் ஒரு நீதிமான், நன்னெறியாளர், நல்ல மனிதர்; தெய்வ உணர்வு சுரக்கும் ஆன்மிக இதயம் கொண்டவர் என்று பாரசீக மன்னன் சைரஸ் நம்பினார்! குரோசசைப் பார்த்து, “ஐயா, என் நாட்டின் மீது படையெடுக்குமாறு உமக்குக் கூறியது யார்?” என்று கேட்டார்.
“மன்னா, யாருமிலர், கிரேக்கத் தெய்வங்கள்தான் உன் மீது படையெடுக்க ஆணையிட்டனர். இந்த யுத்தத்திற்குக் காரணம் அவர்கள் தான். அமைதியைத்தான் ஒருவன் தேடுவானே தவிர, போரை எவனும் நாடமாட்டான். அமைதிக் காலத்தில் மகன், தனது தந்தைக்குக் கல்லறை எழுப்புவான்; போர்க் காலத்தில்தான் தந்தை தனது மகனுக்குக் கல்லறைக் கட்டுவான். இவ்வாறு, நடப்பதுதான் தெய்வக் கட்டளை; விருப்பமும் கூட” என்றார் குரோசஸ்.
‘ஐயா, தாங்கள் எனக்கு ஏதாவது அறிவுரை கூறுவீர்களா?’ என்று அந்த அரசர் குரோசசைக் கேட்டார். அப்போது நெஞ்சும் நெகிழ குரோசஸ்; மன்னா, நான் தங்களுடைய அடிமை. இருந்தாலும், நீங்களே என்னிடம் கேட்டுக் கொண்டதால் கூறுகிறேன்.
“சார்டிஸ் நகரச் செல்வங்களை உமது போர்வீரர்கள் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள். எவன் அவர்களுக்குள் அதிகமாகக் கொள்ளையடிக்கின்றானோ, அவன் உங்களைப் பழிவாங்குவான். அவன் கொள்ளையடித்த பொருட்களை தங்களிடம் சேர்க்கமாட்டான்; ஏமாற்றுவான். எனவே, ஒன்று மட்டும் செய்யுங்கள். கொள்ளையடித்த பொருள்களை ஒப்படைக்கும் போது, அதில் பத்தில் ஒரு பாகம் ஜியுஸ் கடவுளுக்குக் கொடுக்கப்படும்! என்று ஓர் அறிக்கை விடுங்கள். கடவுள் நம்மைத் தண்டித்து விடுவாரோ என்ற பயத்தால், எல்லாப் பொருட்களையும் உங்களிடம் சேர்த்து விடுவான். பிறகு அவற்றிலே இருந்து பத்தில் ஒரு பகுதியை ஜீயுஸ் கடவுளுக்குத் தெய்வக் கொடையாகக் கொடுத்து விடுங்கள்” என்றார் குரோசஸ். மன்னனும் அவ்வாறே உத்தரவை அனுப்பி வைத்தான்.
மன்னன் சைரஸ் குரோசஸ் அறிவுரையைக் கேட்டு முழு மகிழ்ச்சி அடைந்தார். கொள்ளைப் பொருள்கள் ஒழுங்காக வந்து சேர்ந்தன. கொள்ளை வந்த பொருள்களில் ஒரு பகுதியையும் குரோசஸ் பிணைக்கப்பட்ட இரும்புச் சங்கிலியையும் அவர் வேண்டிக் கொண்டதற்கு ஏற்றவாறு டெல்பி கோயிலுக்கு மன்னர் சைரஸ் அனுப்பி வைத்தார்.
அப்பொழுது டெல்பி கோயிலில் எழுந்த அசரீரி, “இங்கு கடவுளர்கள் விதிவிலக்கற்றவர்களே! அவர்களும் துன்பத்தை ஏற்றே ஆக வேண்டும் சார்டிஸ் நகரம், குரோசசின் மகன்கள் காலத்தில் இழக்கப் பட்டிருக்கலாம். அப்படியில்லாமல், குரோசசே தம் நகர அழிவைக் காண வேண்டுமா என்றால், யாரும் கடவுள் விருப்பத்தை தடுத்து நிறுத்தி விட முடியாது. குரோசசை எரிநெருப்பிலே இருந்து காப்பாற்றியதும் அதே கடவுளே தானே! என்றது.
குரோசஸ், பலவகைப் பரிசுப் பொருட்களை கிரேக்கக் கோயிலுக்கு அனுப்பியதுடன், ஒரு தங்கப் பசுவையும், தங்க ஈட்டியையும், சைரஸ் மன்னனால் தான் பிணைக்கப்பட்ட இரும்புச் சங்கிலியையும், மற்றும் பல விலை உயர்ந்த பொருட்களையும் அனுப்பிவைத்தார்.
இந்தியத் தெய்வங்களான இராமர், கிருஷ்ணர், சூரியன், இந்திரன் ஆகியவர்களின் குணச் சக்திகள் ஒன்று சேர்ந்த ஒரு கலப்புக் கடவுளாக அப்பொலோ தெய்வம் உருவாக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
குரோசஸ், அப்பொலோ கடவுளிடம் ஆழ்ந்த பக்தியுடையவர். அதனால்தான் அவர் சிதையிலே படுத்துப் பிரார்த்தனை செய்ததும், அந்தத் தெய்வம் கருணை கொண்டு மழையைப் பொழிந்தார். கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்பது நமது முதுமொழி அல்லவா? பாஞ்சாலி பாரதத்தில் துகிலுரியப்பட்டபோது, அவள் கிருஷ்ணா, கிருஷ்ணா என்று கூவி முறையிட்டபோது துச்சாதனால் அவிழ்க்கப்பட்ட சேலை வளர்ந்து கொண்டே இருக்கவில்லையா!
பாரசீகப் பேரரசின் அரசர்களுள் ஒருவரான அஸ்டியகெஸ் கண்ட ஒரு கனவிற்கு, தம்பேரன் ஆசியாவின் சக்கரவர்த்தியாக வருவான் என்ற விளக்கம் தரப்பட்டது. ஆகவே, அந்தக் குழந்தையைக் கொன்று விடும்படி ஹர்பகஸ் என்ற தனது தளபதிக்குக் கட்டளையிட்டான். அதாவது, பாரதக் கதையில் கம்சன் கிருஷ்ணன் தனக்கு எதிரி என்று அசரீரி கூறிய வாக்குக்கேற்றவாறு அவன் நாட்டில் பிறக்கும் குழந்தைகளைக் கொல்லுமாறு உத்தரவிட்டதைப் போல.
இயேசு பெருமான் பிறந்த போது இரண்டாயிரம் குழந்தைகளை யூத நாட்டிலே கொன்றதைப் போல இந்தச் சம்பவங்கள் எல்லாம் அஸ்டியகசுக்குப் பின்னாலே நடந்த சம்பவங்களாகும். ஆனால், இவற்றுக் கெல்லாம் மூலக் கருவாக அகஸ்டியஸ் வழிகாட்டினான் என்றே நினைக்க வேண்டியுள்ளது.
ஹர்பகஸ் என்ற தளபதி அஸ்டியகஸ் கட்டளைப்படி இறந்த ஒரு குழந்தையை ஆட்டிடையனிடம் பெற்று, அதை ஒரு கூடையில் வைத்து மூடி, படகில் வைத்து ஆற்றில் மிதக்க விட்டுவிட்டான்.
அதற்குப் பிறகு, ஹர்பகஸ் விட்ட படகை ஓர் ஆட்டிடையன் கண்டு குழந்தையைக் காப்பாற்றி வளர்த்தான்.
கி.மு. 569 ஆம் ஆண்டின் போது, குழந்தையைக் காப்பாற்றிய் மித்ரடேடிஸ் என்ற அந்த ஆட்டிடையன் அங்கு தற்செயலாக வந்து இறந்த தனது குழந்தையை ஹர்பகசிடம் தந்து அரசனின் பேரனைப் பெற்றுக் கொண்டு போய் பத்து வயது வரை வளர்த்தான். இறந்த குழந்தையை ஹர்பகஸ் ஒரு படகிலே பெட்டியில் வைத்து மூடி மிதக்க விட்டு விட்டான்.
இறந்த ஆட்டிடையன் குழந்தையை ஹர்பகஸ் வாளால் வெட்டி அதை அஸ்டிய கெசுக்குக் காட்டி ஏமாற்றிவிட்டான். கருணை உள்ளம் கொண்டும், சிறு குழந்தையை வெட்டிவிட மனமில்லாமலும் அவன் அவ்வாறு செய்தானே அல்லாமல் அரசனை வேண்டும் என்றே ஏமாற்றுவதற்காகச் செய்யவில்லை. ஆனால், மன்னன், தன்னை ஹர்பகஸ் ஏமாற்றி விட்டதாகத் தவறாக எண்ணி விட்டான்.
இவ்வாறு தன்னை தளபதி ஏமாற்றியதற்காக, ஹர்டகஸின் மகனையே கொன்று, அவனுக்கே அரண்மனையில் அஸ்டிகெஸ், பிள்ளைக் கறியமுது விருந்து வைத்தான். இந்தக் கொடூரச் செயல் நமது பெரிய புராணத்தில் வரும் சிறுதொண்டர் நாயனார் தனது குழந்தையையே வெட்டிப் பிள்ளைக் கறி விருந்து சிவபெருமானுக்கே வைத்த சம்பவத்தை நினைவூட்டுகின்றது.
அஸ்டியகஸ் தனது மகனைக் கொன்று தனக்கே விருந்து வைத்ததைக் கண்டு ஹர்பகஸ் மனம் பதறி, மன்னனைப் பழிக்குப் பழிவாங்கிட வஞ்சம் கொண்டு, சைரஸ் மன்னன் படைக்கு தலைமையேற்று, அஸ்டியகெசைத் தோற்கடித்துச் சிறைப் பிடித்து அடிமையாக்கி, சிறையிலேயே அவனைச் சாக வைத்தான் என்று ஹிராடெடஸ் தனது வரலாற்றுக் குறிப்புகளில் கூறியுள்ளார்.