உள்ளடக்கத்துக்குச் செல்

ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/012

விக்கிமூலம் இலிருந்து

12. உலக மக்கள் இடையே தமிழர் பழக்க வழக்கங்கள்

உலக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்தியர்களுடைய, குறிப்பாகத் தமிழர்களுடைய பழக்க வழக்கங்களை ஹிராடெடஸ் ‘வரலாறுகள்’ என்ற தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

★ கோயில்களில், குறிப்பாகச் சில அம்மன் கோயில்களில் குறிகேட்டு, சம்மதம் பெற்று அதன் வழி நடப்பது. இது அருள் வேட்டல் என்ற பழக்கத்தின் சாயலாகும். தெய்வ அருளால், யானை எவருக்கு மாலை அணிவிக்கின்றதோ அவரை அரசாராக ஏற்றுக் கொள்ளும் பழக்கம்.

★ தமிழர்களின் பழக்கம் கனவுக்குப் பலன் கூறுவது. நல்ல கனவாக இருந்தால் அதைப் பெரியோர்களிடம் கூறி, அவர்களிடம் அறிவுரை, பெறுதல். கெட்ட கனவாக இருந்தால் முகத்தைக் கழுவிக் கொண்டு, கடவுளை வணங்கி, மீண்டும் உறக்கம் கொள்ளுவது. தீய கனவுகளுக்கு ஏதாவது சடங்குகள் செய்வதானால் அவற்றைச் செய்து தீக் கனாவுக்குப் பரிகாரம் காண்பது.

★ போர்க் காலங்களிலும், சுயம்வரம் நேரத்திலும் பெண்களைக் கவர்ந்து சென்று திருமணம் செய்து கொள்வது. இதற்குரிய சான்று வடநாட்டில் பிருதிவி ராஜ், ராணி சம்யுக்தை சம்பவங்கள்

★ இந்திய நாட்டு ரிஷிகள், சாபம் கொடுக்கும் முறை. எடுத்துக்காட்டாக, பிறன் மனை புகுந்த தேவேந்திரனைக் கெளதம் மகரிஷி, இந்திரன் உடலெல்லாம் பெண் யோனிகளாகக் கடவது என்று சாபம் கொடுத்துள்ளது.

★ பெரிய புராணம் என்ற நூலை எழுதிய சேக்கிழார் பெருமான், பிள்ளைக்கறி அமுதை சிவபிரானுக்காகக் கறி சமைத்து விருந்து படைத்த வரலாறை எழுதியிருப்பது; வரலாற்றின் ஒரு சாயலே, குறிப்பாக, ஹிராடெடஸ் எழுதிய குறிப்பின் சாயலைச் சார்ந்துள்ளது.

★ தமிழ் நாட்டுக்கோயில்களில் தினந்தோறும் ஆறுகால பூசைகள் நடப்பது; தேர், திருவிழா, இறை ஊர்வலம், மக்கட்கூட்டம் கூடுதல் போன்றவை. சிலை செய்தல் உருவ வழிபாடு, கோயில் கட்டுதல், தமிழர்களின் பழம் பெரும் கால வழக்கேயாகும். எடுத்துக் காட்டாக, தஞ்சைப் பெரியகோயில், மதுரை மீனாட்சி கோயில், மாமல்லபுரம் சிற்பக் காட்சிகள் போன்ற எண்ணற்ற சம்பவங்கள் உள்ளன.

★ தமிழ் நாட்டு ஆலயங்களில், ஐந்து கருவிகளில் புல்லாங்குழல் ஊதுதலும் ஓர் இசையாக நடந்து கொண்டிருக்கின்றது.

★ நாம் பிறந்த நாடு வாழ, நாமும் வாழ்வோம் என்பது தமிழ் மக்களின் சிறந்த ஒரு கொள்கையே ஆகும்.

★ கடவுள், சிறு தெய்வங்கள் கிராம தேதைகள் எல்லாம் அவைகட்குப் படைக்கும் படையல்களை நேரில் வந்து உண்பதானது தமிழர்களின் சிறப்பான கருத்தாகவும், மரபாகவும் இன்றும் உள்ளது.

★ தமிழர்களில் பெரும் பான்மையானவர்கள், குறிப்பாகக் கிராம மக்கள், விலங்கினங்களுக்கு அதாவது பசு, நாய், காக்கை போன்றவைகளுக்கு பிடிசோறு அல்லது வயிறாற சோறு வைப்பது உண்டு. மாட்டுப் பொங்கலன்று தமிழர்கள் மாடு கன்றுகளுக்கு உணவை வலிய ஊட்டிய பின்பே தாம் உண்பார்கள். பிறநாட்களில் அவைகட்குரிய சோற்றுணவை ஒதுக்கியும் வைப்பார்கள்.

★ மற்றும் சில தமிழ் மக்கள் கொஞ்சமேனும் உணவு இறையாமல் முழுவதுமாக உண்பார்கள். இதற்கு எடுத்துக் காட்டு வள்ளுவர் வாழ்க்கை.

★ குடிபோதையில் தமிழர்கள் இருக்கும் போது எந்தப் பிரச்னைகளுக்கும் தீர்வு காண மாட்டார்கள்.

★ கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பாரசீகம், கிரேக்கம் போன்ற நாடுகளுக்கு கடல் கடந்து சென்றது.

★ தமிழ் நாட்டில் சூரிய வணக்கமும், வழிபாடும் செய்வதுண்டு, இது பாரசீக மக்கள் இடையேயும் சென்று பரவியுள்ளன. மித்திரன், மித்ரா என்றால் சூரியன் என்று நாமதீப நிகண்டும், வேதங்களும், அபிதான் சிந்தாமணி போன்ற நூல்களும் கூறுகின்றன.

★ தெய்வங்களுக்கு தூப, தீப நைவேத்யம் செய்வது பற்றி ஹிராடெடஸ் கூறுகிறார். கிரேக்க நாட்டில் இவை உண்டு என்றும், பாரசீகத்தில் இல்லை என்றும் குறிப்பிடுகிறார். ஆனால்,இது தமிழர் பண்பாடு கோயிலில் பலி பீடம் அமைத்தால், புல்லாங்குழல் ஊதுதல், மாலைகளை சிலைகளுக்கு அணிவித்தல், சோற்றைப் பலி பீடத்தின் மேல் இறைத்தல் ஆகியன எல்லாம் தமிழர் பண்பாடுகளே. இவை கடல் கடந்து சென்ற பனையேறிகளாகிய பினீசியர்களால் கடைப்பிடிக்கப் பட்டு, பிறகு கிரேக்க நாட்டில் புகுத்தப்பட்டன என்கிறார் ஹிராடெடஸ்.

கடவுளுக்குப் பலியிடுதல் பற்றி, ‘மலையுறை கடவுள் குலுமுதல் வழுத்திக், நேம்பலிச் செய்தவீரர் நறுங்கையள்’ என்று ஐங்குறுநூறு கூறுகின்றது. மற்றும் நற்றிணை 343, அகநானூறு 166, பதிற்றுப் பத்து 30, போன்ற பாடல்கள் தெய்வத்துக்குப் பலியிடும் பழக்க வழக்கம் பற்றிப் பேசுகின்றன.

★ தமிழர்கள் சாஷ்டாங்கமாக விழுந்து வணக்கம் செய்வதுண்டு. அதாவது, இரண்டு கைகள் இரு முழங்கால்கள், இருதோள்கள், மார்பு, நெற்றி ஆகிய எட்டு உறுப்புக்களும் தரையில் படும்படி வணங்குவதையே சாஷ்டாங்க நமஸ்காரம் என்பர் தமிழர். இந்த முறைகள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன என்கிறார் ஹிராடெடஸ்.

★ பாரசீகர்கள் தங்கள் பெயரின் இறுதியில் ‘இஸ்’ எனும் எழுத்தைச் சேர்த்துக் கொண்டு, அவர்கள் மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் என்பதைக் காட்டிக் கொள்வர் என்கிறார் ஹிராடெடஸ் எடுத்துக்காட்டாக, அரியாண்டில், அர்டமிஸ், சாக்ரடிஸ், அரசமிஸ், டையோனிசஸ், ஹிராடெடஸ் என்றெல்லாம் கூறலாம்.

ஆனால் தமிழர்கள் அர் என்ற எழுத்துக்களைச் சேர்த்துக் கொள்ளும் பழக்கம் உடையவர்கள். குறிப்பாக ஆதித்தினார், பரிதியார், இலக்குவனார், சிலம்பொலியார், நன்னார் என்று குறிப்பிடலாம். வடவாரியர் தமிழகம் வந்தேறிய பின்பு, கவுண்டர், செட்டியார், ஆசாரியார், ஆச்சாரியார், ஐயர், அய்யங்கார், பறையனார், கோமுட்டியார் என்றெல்லாம் மாறி, வர்ணாசிரமப் பிரிவுகள் ஆதிக்கத்துள் அமிழ்க்கப் பட்டு விட்டன.

★ உயிரே போனாலும் பொய் பேசுதல் கூடாது என்பது பாரசீகம், கிரேக்கம் பண்பாடுகள். ஆனால் பேசாமல் இருக்கிறார்களா? இருக்க முடியாது. காரணம், மனிதக் குணம் எப்போதும் மாறி மாறி ஆட்டமிடும் குரங்கு மனம் உடையது. அடக்குவது பெரும் சிரமம்.

இதை நன்கு உணர்ந்த வள்ளுவர் பெருமான், ஒரு விதிவிலக்கைக் கொடுத்துள்ளார். அதாவது

“பொய்ம்மையும் வாய்மை யிடத்து புரை தீர்ந்த
நன்மை பயக்கு மெனின்”

(குறள் 292)

என்ற திருக்குறாளால், பொய்யே சொல்லக் கூடாது, வாய்மையே பேணு என்று கூறிய தெய்வப் புலவர் மனிதன் தன்னையறியாமலே பொய் கூறினாலும் கூறிவிடுவானோ என்பதற்காக, அப்படிக் கூறி பொய் புரை தீர்ந்த நன்மை பயக்குமானால் அவனை மன்னிக்கலாம் என்று ஓர் விதிவிலக்கும் அளித்துள்ளார்.

★ ஆடைகள் அணியும் முறைகளைப் பற்றி ஹிராடெடஸ் கூறும்போது, பாபிலோனியர்களும், கிரேக்கர்களும், பாரசீகர்களும் தமிழர்கள் அணிந்து வந்த உடைகளையே அணிந்தனர் என்கிறார். அதாவது கால்வரை தொங்கும் ஆடை அல்லது வேட்டி, தலைமயிரை நீளமாகக் குடுமிபோல் வளர விட்டுப் போர்த்திக் கொள்ளல் போன்றவற்றைக் குறிப்பிடுகிறார் அவர். கி.மு.469 முதல் 399 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த தத்துவ நாவலர் சாக்ரடிஸ் தமிழர் உடைகளையே அணிந்திருந்தார் என்று கிரேக்க வரலாறு கூறுகின்றது.

★ ஆணும் - பெண்ணும் சிற்றின்பத்தில் விளையாடிய பிறகு, அவர்கள் குளித்துவிட்ட பிறகே பாத்திரங்களையும், துணிமணிகளையும் தொடவேண்டும் என்பது இன்றும் என்றுமுள்ள தமிழர் பண்பாடு. இந்தப் பண்பாடும் பழக்க வழக்கங்களும் பினீசியர்கள் என்ற தமிழர்களால் அஸ்ஸீரியா நாட்டிற்கும், பிறகு பாபிலோனுக்கும், பின்னர் அங்கிருந்து கிரேக்கத்திற்கும் சென்று பரவியது.

★ பொட்டுக்கட்டி கோயிலுக்குப் பொதுவுடைமையாகும் பெண்கள் அயலாருடன் சேர்வதைப் பாவமாக ஏற்கப்படவில்லை. தெய்வத்துக்காக, கடவுள் தொண்டுகளுக்காக விடப்பட்ட அவர்களது உடலை தெய்வத்துக்கு அர்ப்பணிக்க வேண்டும். கடவுள் அப்பெண்களுக்கு மனித உருவிலேதான் வருவார். அதனால், கோயிலுக்கு வருபவனே கடவுள் உருவம் என்று ஏற்று அவர்கள் உடலின்பம் பெறுவார்கள். இது நாட்டுக்கு நாடு வேறுபட்டுப் பின்பற்றப்படுகின்றது. ஆனால், கோயிலுக்கு வெளியே வந்ததும் எவ்வளவு பணம் கொடுத்தாலும் அவர்களை விலைக்கு வாங்க முடியாது. இது அப்பெண்களின் ஒழுக்கமன உறுதியைக் காட்டுகிறது. தேவதாசிகள் எனக் கூறப்பட்ட இவர்கள வாழ்க்கையை வளமாக்கிட தேவதாசி ஒழிப்புச் சட்டம் வந்து விட்டது. இந்தப் பழக்கம் சைப்ரஸ் தீவிலும் இருக்கிறது என்று ஹிராடெடஸ் கூறுகிறார்.

★ உலகம் எங்கும் உள்ள மக்கள், இடமிருந்து வலம்தான் எழுதிவந்தனர். ஆனால், எகிப்தியர் வலமிருந்து இடம் எழுதிவந்ததாக ஹிராடெடஸ் கூறுகிறார். இவ்வாறு வலமிருந்து இடம் எழுதும் பழக்கம் அரேபியர்களாலும், முஸ்லீம்களாலும் பிற்காலத்தில்தான் ஏற்பட்டன. சீனர்கள், ஜப்பானியர்கள் மேலிருந்து கீழாகவும், அராபியர்கள், முஸ்லீம்கள் வலமிருந்து இடமாகவும், இந்தியர்கள் தமிழர்கள், மற்ற நாட்டவர்கள் எல்லாரும் பொதுவாக இடம் இருந்து வலமாகவே எழுதி வருகின்றனர்.

★ எருது, சிவபெருமானுக்கு வாகனமாகும். எருதுவைக் காளை என்றும் நந்தி என்றும் தமிழ் இலக்கியங்களும், புராணங்களும் கூறுகின்றன. ஈஸ்வரன் கோயில்களில் எருது கோயிலின் முன்புறம் வைக்கப்பட்டிருப்பதற்குக் காரணம், அது தெய்வாம்சம் என்பதால்தான். இதே புனிதம், எகிப்தியர்களாலும், குறிப்பாக மெம்பிஸ் நகரத்தில் எருதுக்குத் தனி இடமே வசிக்கக் கட்டிதரப்படுகின்றது. எருது பிறந்த நாளை அம் மக்கள் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். அதுபோலவே, எருது இறந்தாலும் அந்த நாள் துக்க நாளாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அடுத்து ஒரு புனிதமான எருதுத் தேர்வு செய்யப்படும் வரை துக்க நாளைக் கொண்டாடிய படியே இருப்பார்கள்.

தமிழ் நாட்டில் எருது, பசு, கன்று ஆகியவைகளைக்கு கொம்புகளை சீவி, வண்ணங்கள் அடித்து, தொப்பிகளை அதன் கொம்புகளில் மாட்டி, கழுத்திலே மணியாரங்களைக் கட்டி, மஞ்சள் பூசி, குங்குமப் பொட்டிட்டு, ஆரத்தி எடுத்து, தூய தீபாராதனைகளைக் காட்டி புதுப் பானையிலிட்டு பொங்கல், கரும்பு இவற்றை வற்புறுத்தி வாயில் ஊட்டி, மாலையானதும் மந்தைக்கு ஓட்டிக் காட்சிப் பொருளாக்கி, தமிழர் வீரத்தை நிலை நாட்டும் மாடுபிடி சண்டையெனும் ஏறுதழுவுதல் நடத்தி, வெற்றி பெறுபவனுக்கும் வீரத் திருவிழாவாகக் கொண்டாடி எருதுகளுக்குப் பெருமையும் புகழும் உண்டாக்கி மகிழ்வார்கள். இந்த நாளை மாட்டுப் பொங்கல் விழா, ஏறுதழுவல் விழா, வீர விளையாட்டு விழா, என்றெல்லாம் கொண்டாடி மகிழ்வார்கள். எருதுவுக்கு தமிழ்நாட்டிலே புனிதமும் உண்டு, தெய்வாம்சம் கருதும் சிறப்பும் உண்டு. எனவே இந்தப் புனிதவிழா எகிப்துக்கும், மெம்பிஸ் நகருக்கும் அங்கிருந்து மற்ற நாடுகளுக்கும் பரவியது. இந்த எருது விழா தமிழரது பண்பாட்டு விழாவாகும். இந்த விழாவை ஹிராடெடஸ் எகிப்து பற்றிக் கூறும் போது குறிப்பிடுகிறார்.

★ மாரடித்துக் கொண்டு துக்கம் கொண்டாடாத சாவு வீடுகள் தமிழ்நாட்டில் இல்லை; ஏன், இந்தியாவிலேயும் இல்லை எனலாம். மாரடைத்து அழுவது துக்கத்தின் அறிகுறி. பிணம் விழுந்த வீட்டின் அடையாளம். இது நெடுங்காலமாக தமிழ் நாட்டில் இருந்து வரும் வழக்கமாகும்.

★ ஆலயங்கள் புனிதமான இடங்கள். அந்த இடத்தில் ஆண் பெண் சிற்றின்பம் கூடாது என்பது தமிழ் நாட்டினரின் மிகச் சிறந்த கொள்கைகளுள் ஒன்றாகும். அதனால்தான், கோயிலுக்குள் தெய்வ வழிவாடு செய்யச் செல்லும் போது, கை, கால், முகங்களை கழுவிக் கொண்டு போவது இன்றுமுள்ள வழக்கமாகும்.

★ தென் எகிப்து நாட்டில், பெலூஷியம் அருகில் டாம்ளே என்ற ஊர் இருந்தது. இங்கு தன் அண்ணனை - அரசரை - ஓர் அறையில் வைத்து, அதைச் சுற்றிலும் தீ மூட்டி எரித்தார்கள். அதுபோலவே, பாண்டவர்களை கொல்ல அரக்கு மாளிகையைத் துரியோதனன் கட்டி நெருப்பு மூட்டியதாக மகாபாரம் கூறுகிறது. இந்த இரண்டிற்குமுள்ள நிகழ்ச்சிகளில், அரச குடும்பப் பொறாமைகளில் எவ்வளவு ஒற்றுமை காணப்படுகின்றது. கிரேக்கமும் இந்தியாவும் பரிமாறிக் கொண்ட கதைகளுள் இதுவும் ஒன்று.

★ கார்த்தேஜியினியர், கார்த்தேஜ் எனும் குடியிருப்பு பினீசியர்களால் வட ஆப்பிரிக்காவில், மத்திய தரைக் கடலையொட்டி ஏற்படுத்தப்பட்டது. ரோமுலஸ் என்பவரால், ரோம் நகர் உருவாக்கப்படுவதற்கு, கி.மு. 753 ஆம் ஆண்டில் சரியாக 100 ஆண்டுகளுக்கு முன், அதாவது கி.மு.853 ஆம் ஆண்டில் கார்த்தேஜ் குடியிருப்பு நிர்மாணிக்கப்பட்டது. அதன் முதல் பெயர் போஸ்ரா என்று வழங்கப்பட்டது. போஸ்ரா என்றால் கோட்டை அல்லது அரண் என்று பொருள்.

பினீசிரியர்கள் கடலைக் கடக்கப் பரிசில் பயன்படுத்தினர். அந்த பரிசில் தென்னை, பனை மரங்களால் ஆனது. பரிசிலில் சென்று புதிய குடியிருப்பை ஏற்படுத்திய காரணத்தால் அந்த நகரம் போர்சோ என்று பினீசிய மொழியில் வழங்கப்பட்டது. அதுவே போஸ்ரா என்று மருவி, கோட்டையையும் அரணையும் குறிப்பிடுவதாயிற்று. எனவே, போஸ்ரா போர்சா இவற்றுக்குத் தமிழ் வேர்ச் சொல் பரிசு, பரிசல் என்பதே. பரிசல் என்றால் தெப்பம், ஓடம் என்பது பொருள். பரிசு என்றால் சிற்றோடம்.

★ தமிழர்கள் கோழி முதலிய சிறிய விலங்குகளின் கழுத்தைத் திருகியே பலியிடுவர்.

★ பெரிய விலங்குகளை அதற்கான பாறைகளில் வைத்து, கத்தியால் கழுத்தை வெட்டிவிடுவார்கள். எருமை, பன்றி. ஆடு முதலியவை பலியிடப்படுவனபோல.

★ தமிழர் அகழிகளைக் கோட்டையைச் சுற்றி வெட்டி, நீர் நிரப்பி அதனுள் முதலைகளை வளர்த்தார்கள்.

★ தமிழக மன்னர்களும், பண்டைய குரு குல மாணவர்களும், விற்போர், வாட்போர், மற்போர் ஆகியவற்றைக் கற்றிருந்தார்கள். அரிச்சந்திரன் வரலாறு உண்மையைப் போற்றியது.

★ கடன்கள் கொடுப்பார்கள் தமிழர்கள். திருப்பித் தர முடியாவிட்டால் தக்கத் தண்டனையைக் கொடுப்பார்கள் என்பதே அவர்களின் கொள்கை.

★ தம் சடலங்கள் கூட விலங்குகளுக்கு உணவாக வேண்டும். வீணாகக் கூடாது என்பது தமிழ் நாட்டு சைனர்களின் எண்ணம்.

★ தமிழர்கள் தலைமயிரை நீளமாக வளர்த்தார்கள். தலைப்பாகையை அணிந்து கொள்வார்கள்.

★ திருமணமான பெண்களைத் தமிழர் பரிசம் கொடுத்து விலைக்குப் பெற்றார்கள்.

★ பண்டைத் தமிழர்கள், பொதுநல மருத்துவ விடுதிகளில் நோயாளிகளைக் கவனித்துக் கொள்ள ஏற்பாடுகள் செய்வார்கள். தமிழர்களின் பண்டைய பழக்கமாகும். இன்றும் அவ்வாறே செய்து வருகிறார்கள்.

★ தமிழர்கள் தங்களின் பெண்களின் கற்பைப் பாதுகாத்து வந்தார்கள். இடைக் காலத்தில் தெய்வங்களுக்கு என்று சில பெண்கள் விடப்பட்டார்கள்.

★ தமிழ்நாட்டில் தமிழர் புதன்கிழமை, சனிக் கிழமைகளில் எண்ணெய் வைத்து தலை முழுகுவார்கள். எள்ளில் இருந்து பிழிந்த எண்ணெயினையே பயன்படுத்துவார்கள். வேட்டியையும், மேலங்கியையும் உடைகளாக அணிவது அவர்களது பழக்கமாகும்.

★ திருமணமான பெண்கள் தங்களது பெற்றோர்களைக் காப்பாற்ற வேண்டியதில்லை. கட்டாயப்படுத்தும் பழக்கம் இல்லை.

★ தமிழ் நாட்டுக் குருமார்கள் தங்களது தலை மயிரை மழித்தும் விடலாம்; வைத்துக் கொள்ளலாம்.

★ தமிழ் நாட்டில் இறந்தவரின் கூடப் பிறந்த ஆண்கள், மற்றும் தாயாதிகள் தலைமயிரை மழித்து விடுவார்கள்.

★ தமிழ் நாட்டினர் சாணத்தையும், களிமண்ணையும், தினை மாவையும் கைகளாலே பிசைகின்றனர்.

★ தமிழர்கள் மண்ணாலும், செம்பாலும், மரத்தாலும் செய்த பாத்திரங்களில் தண்ணீர் அருந்தி வந்தார்கள்.

★ தினந்தோறும் துணிகளைத் துவைத்துக் குளிப்பது அன்றும் இன்றும் தமிழர்கள் வழக்கமாகும்.

★ பெண்கள் ஒரே ஆடையைப் புடைவையாக உடுத்தி, அதில் ஒரு பகுதியால் தமது மார்பகத்தை மூடிக் கொண்டு வாழ்ந்தார்கள். இன்றும் தமிழ் நாட்டு வயல்களில் உழைக்கும் கிராமப் பெண்கள் அவ்வாறே வாழ்கிறார்கள், குளிக்கிறார்கள்.

★ வேள்வி, யாகம் நடக்கும் போது, தமிழ் நாட்டில் யாகம் செய்பவர்கள் சர்வாங்க ஷவரம் செய்து கொள்வது மரபு.

★ தமிழ்நாட்டில் மடாதிபதி, சந்நியாசிகள் முதலானோர் மூன்று வேளை குளிப்பார்கள். இது திரிகால ஸ்நானம் எனப்படும். காலை, மாலை, மதியம் இவ்வாறு செய்வார்கள்.

★ தமிழ் நாட்டில் கோயில் காளை என்றும், கோயில் மாடு என்றும், கோயில் ஆட்டுக் கடா என்றும் வழங்கப்படும் விலங்குகள் கடவுளுக்குக்கென்று விடப்படுகின்றன.

★ தீயில் நிவேதனப் பொருள் வேகும்போது மக்கள் மாரடித்துக் கொள்ளுதல், இறந்தோர்க்குச் செய்யப்படும் சடங்காக இதைச் செய்வார்கள். இறந்த பத்தாம் நாள் சடங்கில் இன்றும் பெண்கள் மாரடித்துக் கொண்டு அழுவது மரபு.

★ தமிழர்கள் பசுக்களை தெய்வமாகக் கொண்டாடுவார்கள். வாழ்த்துவதிலும் முதலில் பசுவைத்தான் வாழ்த்தினார்கள். இந்தியா முழுவதும் பசு போற்றப்பட்டு வருகின்றது. ‘கோ’ எம்ரட்சணம், பசுவைக் காப்பாற்றுதல் என்ற வழக்கம் இன்று வரை மக்களால் செய்யப்பட்டு வருகிறது.

★ தமிழர்கள் தங்கள் தெய்வங்களுக்கு ஆடுகளைப் பலி கொடுத்தார்கள்.

★ தமிழர்கள் ஏழு தலைமுறை வரையில் தங்கள் குடும்பப் பெயர்களைப் பாதுகாத்து வந்தார்கள். தென்னிந்தியாவில் கேரளத்தில் உள்ள சிரியன் கிறித்துவர்கள் 2000 ஆண்டுகளின் பரம்பரைப் பஞ்சாங்கம் வைத்திருந்தார்கள்.

★ தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பேதி மருந்தைக் கொடுப்பது வழக்கம். முன்னர் பெரியவர்களும் மாதத்திற்கு ஒரு முறை பேதி மருந்து உட்கொள்ளும் வழக்கம் உண்டு.

★ தமிழர்கள் வயதானவர்களுக்கு மரியாதைக் கொடுத்து வந்தார்கள்; இன்றும் அதைப் பின்பற்றி வருகிறார்கள்.

★ தமிழர்கள், நாட்களுக்கு கடவுளர்களின் பெயரையே இட்டனர்; ஞாயிறு, சூரியன் என்றும், திங்களை, சந்திரன் என்றும் அழைத்து வந்தார்கள். தமிழர்கள் இறந்தவரின் பத்தாம் நாள் சடங்கின் போது எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கம் கொண்டிருந்தார்கள்.

★ தமிழர்கள் கிளிகளுக்கும், குரங்குகளுக்கும் அணி செய்து அழகு பார்க்கும் வழக்கம் உடையவர்களாக இருந்தார்கள்.

★ சாரம் கட்டிப் பாறைகளை உயரே ஏற்றும் பழக்கம் தமிழர்களிடமும் இருந்தது. எடுத்துக் காட்டாக, தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலுக்கு அவ்வாறு ஏற்றிய ஊரை இன்றும் சாரப்பள்ளம் என்று அழைத்து வருகிறார்கள்.

★ தமிழ் நாட்டுக் குழந்தைகளும், அவரவர் தெய்வங்களுக்கு பிரார்த்தனை செய்து தலைமயிரை மழித்து விடுதல், அன்று தொட்டு இன்று வரை உள்ள மரபு.

★ தமிழர்கள் முற்காலத்தில் தலையை மழித்துச் சிறிய குடுமி மட்டும் வைத்திருந்தார்கள். அதனால் சூரியன் வெப்பம் பட்டு எலும்பு கடினமாகும். இதை இயற்கை மருத்துவமாக எண்ணினார்கள். சூரிய வெப்பம் படாத செடி, கொடிகள் வளருவதில்லை என்பது தமிழரின் எண்ணமாகும்.

★ யாராவது செய்கின்ற உதவியை தமிழர்கள் மறப்பதில்லை. ‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம், உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு’ என்ற திருக்குறள் தமிழர் நெறியாக இன்றும் அன்றும் இருக்கின்றது.

★ ஆசியா, ஐரோப்பா, லிபியா என்று பெண்பால் பெயர்களை மேல் நாட்டார் வைத்துக் கொண்டார்கள். ஆனால் அதற்கு முன்பே தமிழர்கள் பூமியைப் பெண் என்றும், அவர்கள் நாட்டைத் தாய் நாடென்றும், இங்கே ஓடும் நதிகளைக் காவிரி, பொன்னி, யமுனை, கங்கை, கோதாவரி, சோனை என்றும் பெண்களது பெயரையிட்டே அழைத்த வருகிறார்கள்.

★ இந்திய நாட்டினர் வில்லையோ, மரக்கோலையோ கையில் வைத்துக் கொண்டு குறி, ஜோசியம் சொன்னதுபோல, தமிழ் நாட்டு மலைவாழ் பெண்கள் அந்த நாட்டின் பழக்கத்துக்கு முன்னரே, தங்கள் கையில் சிறுகோலை வைத்துக் கொண்டு குறி சொல்லும் வழக்கம் அன்றும் இன்றும் இருப்பதைப் பார்க்கலாம்.

★ தமிழ்ப் பெண்களும், இந்தியப் பெண்களும் இன்றும் தங்கள் கால்களில் கொலுசு, காப்பு அணிந்து கொள்ளும் பழக்கத்தையே மேல் நாட்டாரும் அணிந்து கொண்டிருந்தார்கள். சிலப்பதிகாரம் இதற்குச் சான்று.

★ லிபிய மக்கள் திருமணமான பெண்ணை அரசரிடம் அழைத்துச் சென்று ஆசிபெறுவர். தமிழ் நாட்டுப் பெண்கள் திருமணமான பெண்களை சான்றோர்களின் ஆசியையும், தெய்வத்தின் அருளையும் நாடி வணங்குவார்கள்.

★ லிபியா பெண்கள் திருமண விருந்தில் வருகை தந்த விருந்தினர்களிடம் பரிசுகளைப் பெற்றதும், பரிசு கொடுத்தவர்கள் ஒவ்வொருவரும் அந்த மணப்பெண்ணிடம் இன்பம் பெறுவார்கள். அதை எதிர்த்து அங்கிருந்த பினீசியர் தமிழர்கள் பரிசுகளை மட்டுமே பெற்று, பரிசளித்தவர்களிடம் வாழ்த்துதலைப் பெற்றார்கள். இந்தப் பழக்கம் இன்றும் இங்கே இருப்பதைப் பார்க்கலாம்.

★ ஐரோப்பா, எகிப்து, கிரேக்க, லிபியா போன்ற நாடுகளில் நான்கு குதிரைகள் பூட்டிய தேரை ஓட்டி அதிலே அரசர்கள் செல்வார்கள். இதற்கு முன்னரே, அகநானூறு, இராமாயணம், பாரதம் போன்றவற்றில் நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட தேர்களில் மன்னர்கள் பவனி வந்த காட்சிகளுக்குச் சான்றுள்ளன.

★ பினீசியர் தமிழர்கள் தங்களது உடலில் விபூதி பூசிக் கொள்ளும் பழக்கம் இருந்ததைக் கண்ட லிபியர், திரேசியர்கள் தங்களது உடலில் சிவப்பு நிறக் கலவையைப் பூசிக் கொண்டார்களாம்.