ஹெர்க்குலிஸ்/ஹெர்க்குலிஸ்/அசுர பலமுள்ள பறவைகள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

8. அசுர பலமுள்ள பறவைகள்

மனிதர்களையும் மிருகங்களையும் ஆகாயத்திலே துாக்கிச் சென்று கொன்று தின்னக்கூடிய அசுர வலிமை பெற்ற ஏராளமான பறவைகளை வெருட்டி ஓட்ட வேண்டும் என்பது ஹெர்க்குலிஸ்க்கு இடப்பெற்ற ஆறாவது பணி. அந்தப் பறவைகள் ஆர்க்கேடியா நாட்டில் ஸ்டிம்பேலஸ் என்ற சதுப்பு நிலத்தில் கூட்டம் கூட்டமாக வசித்து வந்தன. அந்தச் சதுப்பு நிலத்தில் மனிதன் நடந்து செல்ல முடியாது. சேற்றில் கால்கள் பதிந்துவிடும். அதில் நீர் நிறையத் தேங்கியிருந்தால், ஓடத்திலாவது செல்ல முடியும். அதற்கும் வழியில்லை. அத்தகைய இடத்தில் ஸ்டிம்பேலஸ் என்ற ஓர் ஆறும் ஓடிக் கொண்டிருந்தது. அதன் கரைகளிலேயே அசுரப் பறவைகள் கூடுகள் கட்டி வாழ்ந்துகொண்டு பல்கிப் பெருகி வந்தன.


ஹெர்க்குலிஸ் அந்தப் பிரதேசத்தை அடைந்து, ஆற்றின் கரையில் நடந்து கொண்டே, ‘என்ன செய்யலாம்?’ என்று ஆலோசனை செய்தான். அவனைச் சுற்றி எங்கணும் மனித எலும்புகளும், ஆடு மாடுகளின் எலும்புகளும் சிதறிக் கிடந்தன. அசுரப் பறவைகள் சதைகளைத் தின்றுவிட்டு அந்த எலும்புகளை அங்கே விட்டிருக்கின்றன என்று அவன் எண்ணிக் கொண்டான். அங்கே நிண நாற்றம் சகிக்க முடியாமலிருந்தது. அந்த வேளையில் அதீனாதேவி அவன் முன்பு தோன்றி, பித்தளைத் தகடுகளால் செய்த பெரிய முறம் போன்ற இரு தகடுகளை அவனிடம் கொடுத்து, அவைகளை இடைவிடாமல் தட்டித் தாளம் போட்டுப் பார்க்கும்படி சொல்லிவிட்டு மறைந்தாள். அவன் அவ்வாறே அவைகளைத் தட்டிப் பேரோசை உண்டாக்கினான். புதிதாகப் பெரிய ஓசையைக் கேட்ட பறவைகள் திடீர் திடீரென்று மேலே கிளம்பி வானத்திலே பறக்கத் தொடங்கின. அவற்றின் உருவமும் தோற்றமும் பயங்கரமாயிருந்தன. ஆயிரக்கணக்கில் அவை பறந்ததால், கதிரவனை மேகங்கள் மறைப்பது போல், அவை மறைத்து, வானத்தையும் பூமியையும் இருளடையும்படி செய்தன.

தோற்றத்தில் அவை நாரைகளைப் போலிருந்தன. அவற்றின் கால் நகங்கள் இரும்பு போன்றவை; இறகுகள் பித்தளை போன்ற உலோகத்தால் அமைந்தவை; மிகவும் கூர்மையானவை, அவை நினைத்த போது அந்த இறகுகளை எதிரிகள் மீது பாய்ச்சக்கூடிய வல்லமையும் பெற்றிருந்தன. அத்தகைய இறகுகளுடன் அவை பறக்கும் பொழுது வானத்திலே பறக்கும் முள்ளம்பன்றிகளைப் போலத் தோன்றின. அவற்றின் அலகுகள் இருப்புக் கவசங்களைக் கூடத் துளைத்துவிடக் கூடிய வலிமை பெற்றிருந்தன.

கருமேகங்களைப் போல வானில் வட்டமிட்டுக் கொண்டிருந்த பறவைக்கூட்டங்களைக் கண்டு, ஹெர்க்குலிஸ் அவை அனைத்தையும் அம்புகளால் வதைக் முடியாது என்று கருதினான்; எனினும், சிலவற்றை அம்புகளால் அடித்துத் தள்ளினால், மற்றவை அஞ்சி ஓடிவிடக் கூடுமென்றும் அவனுக்குத் தோன்றிற்று. உடனே அவன், வில்லைக் கையிலேந்தி, தன்னிடமிருந்த விஷம் தோய்ந்த பாணங்களை உயரே பார்த்துத் தொடுத்து விடலானான். அவனுடைய வில் சிறிது நேரம் கணகணவென்று ஒலித்துக்கொண்டேயிருந்தது, அவன், பாணங்களை எடுப்பதும் விடுப்பதும் புலப்படாதவாறு, அப்பறவைகளின் மீது அம்புகளை மழையாகப் பொழிந்தான். அதனால் பல பறவைகள் மாண்டு எல்லாத் திசைகளிலும் போய் விழுந்தன.

மாண்டவை போக்க எஞ்சியிருந்த பறவைகளுள் சில, கீழேயிருந்து அம்பு தொடுத்த ஹெர்க்குலிஸைக் கண்டு, அவனைப் பழி வாங்க வேண்டுமென்று, ஒரே கூட்டமாய் அவன்மேல் விழுந்து, சிறகுகளால் புடைக்கவும், அலகுகளால் கொத்தவும் தொடங்கின. அவன் உருவமே வெளியில் தெரிய முடியாதபடி அவை அவனை மொய்த்துக்கொண்டன. அந்நிலையில் அவன் மூச்சுத் திணறி, மிகுந்த முயற்சி செய்து தன் கதையால் அவற்றுள் சிலவற்றை அடித்துத் தள்ளினான். அப்போழுது அவன் இருந்த நிலையை அறிந்த அதீனா தேவி, மீண்டும் அவன் முன் தோன்றித் தன்னுடைய தெய்விகக் கேடயத்தை அவனுக்குக் கொடுத்து உதவினாள். அந்தத் தங்கக் கேடயத்தைக் கொண்டு அவன். பறவைகள் தன்னைத் தாக்க முடியாதபடி காத்துக்கொண்டு, வாளாலும், கதையாலும் அவற்றை எதிர்த்து மாறி மாறி நெடுநேரம் போராடினான். அவை பெரும்பாலும் மடிந்து வீழ்ந்தபின், அவன் மீண்டும் பித்தளைத் தகடுகளை

ஹெர்க்குலிஸ்.pdf

எடுத்து, தன் முழு வல்லமையையும் பயன்படுத்தி, காடும் மலையும் அதிரும்படி அவற்றை இடைவிடாமல் தட்டத் தொடங்கினான். மறுபடி அவன் அம்புகளை எய்தான். இடையிடையே கதையையும் சுழற்றி வீசினான். அதற்குப் பின்புதான் பறவைகள் யாவும் அந்த வனத்தை விட்டகன்றன. உயிருள்ள ஒரு பறவை கூட அங்கே எஞ்சி நிற்கவில்லை.