Minniyambooks

விக்கிமூலம் இலிருந்து
உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community ( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx. 

அறிவுக் கதைகள்

நூறு



முத்தமிழ்க் காவலர், கலைமாமணி,

டாக்டர் கி. ஆ. பெ. விசுவநாதம் டி.லிட்




பாரி நிலையம்

184,பிராட்வே சென்னை 600 108


முதற் பதிப்பு: 1984
இரண்டாம் பதிப்பு : 1992
மூன்றாம் பதிப்பு : 1998
பதிப்பு : உரிமையுடையது




விலை 35—00




அச்சிட்டோர் :
ஸ்ரீ வெங்கடேஸ்வரா அச்சகம்,
7/40, கிழக்கு செட்டித் தெரு,
பரங்கிமலை, சென்னை—600 016.

பதிப்புரை

கதைகள் மலிந்த காலம் இது. கதை சொல்வோரும் பெருகியுள்ளனர். ஆனால் வெளிவரும் கதைகள் பெரும் பாலும் பொழுதுபோக்குக் கதைகளாகவும், அழிவுக் கதைகளாகவுமே விளங்குகின்றன. இது நாட்டிற்கு நன்மை தராத போக்கு என்று கருதுபவர் பலர்.

கதைகளை இனிமையாகச் சொல்லவும் வேண்டும்; அந்தக் கதைகளைக் கற்கும் பிஞ்சு நெஞ்சங்களிலே நல்லறிவுச் சுடர்களையும் ஏற்றவேண்டும். நல்லறிவு பெற்ற மக்களே நல்லவர்களாக விளங்குவார்கள் நல்லவர்கள் வாழும் நாடே நல்ல நாடாகவும் விளங்கும்; அந்த நல்லறிவின் வளர்ச்சிக்குக் கதைகள் பெரிதும் உதவும்.

தமிழர்கள் நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் நெறியோடு வாழவேண்டும் என்று கருதுபவர் டாக்டர் முத்தமிழ்க் காவலர், கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்கள். இந்த நோக்கில் அவர்கள் அரிய பல கருத்துச் செல்வங்களை வழங்கி வருகின்றார்கள். இப்போது, "அறிவுக் கதைகள் நூறு' என்னும் இந்த நூலையும், அருளோடும். அன்போடும் ஆக்கித் தந்துள்ளார்கள்.

இத்தகைய அருமையான கதைகளைச் சுவையாகவும் இனிமையாகவும் அமைத்து, அவற்றை நூல்வடிவில் வெளியிட்டு மகிழ எங்களுக்கு வாய்ப்பளித்த முத்தமிழ்க் காவலர் அவர்களுக்கு எங்கள் நன்றியும் வணக்கமும் உரியன.

-பாரி நிலையத்தார்

என்னுரை

“அறிவுக் கதைகள் நூறு” இன்று வெளிவருகிறது. சில் படித்தவை. சில பார்த்தவை. சில் கேட்டவை சில கற்பனை.

இவை அனைத்தும் தமிழில், தமிழரின், தமிழகத்தின் சொத்துக்கள். இவை அழிந்து போகும்படி விட்டுவிட முடியாதவை.

சிறியோரும், பெரியோரும் கதைகளை விரும்பி ப்டிக்கும் காலம் இது. ஆகவே, கதைகளைப் படிப்பதன் மூலம் அறிவை வளர்த்துக்கொண்டு நல்வழியில் நடக்க இக் கதைகள் துணை புரியும் என நம்புகிறேன். தமிழக மக்கள் படித்துப் பயன் பெறுவது நல்லது.

என் நூல்கள் பலவற்றையும் வெளியிட்டு உதவுகிற பாரி நிலையத்தாருக்கும், அச்சிட்டு உதவுகிற மாருதி அச்சகத்தினர்க்கும் என் நன்றியும், வணக்கமும்.

திருச்சிராப்பள்ளி—8
தங்களன்பிற்குரிய
12 — 8—1984
கி. ஆ. பெ. விசுவநாதம்

பொருளடக்கம்

1. அறிவுக் கதைகள்

பக்கம்
1. 9
2. 10
3. 12
4. 17
5. 18
6. 19
7. 21
8. 22
9. 23
10. 25
11. 28
12. 29
13. 30
14. 31
15. 32
16. 34
17. 37
18. 39
19. 40
20. 42
21. 44
22. 46
23. 47
24. 48
25. 49
26. 51

27. 52
28. 53
29. 55
30. 56
31. 58
32. 59
33. 61
34. 62
35. 64
36. 65


2. நாடும் மக்களும்
37. 67
38. 69
39. 70
40. 73


3. குடும்பம்
41. 75
42. 76
43. 77
44. 78
45. 79
46. 81
47. 82
48. 83
49. 84
50. 84
51. 86
52. 87
53. 88

54. 90
55. 91
56. 92
57. 92


4. சமூகம்
58. 94


5. அரசு—அரசியல்
59. 96
60. 98
61. 100
62. 101
63. 102
64. 104
65. 104
66. 106
67. 107
68. 108
69. 110


6. மொழி
70. 111
71. 112
72. 113
73. 113
74. 115


7. மருத்துவம்
75. 118
76. 120
77. 122

8. நகைச்சுவை
78. 124
79. 125
80. 127
81. 128
82. 129
83. 130
84. 131
85. 133
86. 134
87. 136
88. 136
89. 137
90. 139
91. 140
92. 141
93. 142
94. 144
95. 145
96. 146
97. 148
98. 149
99. 150
100. 152


அறிவுக் கதைகள்

1. கல்வியும் கல்லாமையும்

கவிராஜர் ஜெகவீர பாண்டியனார் ஒரு பெரும் புலவர். கட்டபொம்மன் மரபிலே வந்தவர். மிகவும் சிறந்து விளங்கிய தமிழ்ப் பெருங்கவிஞர்.

ஒருநாள் மதுரையிலே நான் அவருடன் பேசிக் கொண்டிருந்த சமயத்தில்,

சிற்றுாரிலிருந்து அவரைப் பார்க்க ஒருவர் வந்திருந்தார். அவரைக் கண்டதும் ஜெகவீர பாண்டியர் என்னோடு பேசுவதை நிறுத்திவிட்டு,

‘வாருங்கள், அமருங்கள், என்ன செய்தி?’ —என்று கேட்டார்.

அதற்கு அவர், ‘ஒன்றுமில்லை, தங்களைப் பார்க்க வந்தேன்!’ என்றார். ‘பார்த்தாயிற்றே; பின் என்ன செய்தி’ என்று மறுபடியும் கேட்டார். வந்தவர் அதற்கும், திரும்பத் திரும்ப—

‘ஒன்றுமில்லை, தங்களைப் பார்க்க வந்தேன் என்றே சொன்னார். கவிராஜர் சிறிது யோசித்து — சற்றுப் பேசி அனுப்ப எண்ணி, 'தங்களுக்குக் குழந்தை உண்டா?’ என்று கேட்டார். ‘இருக்கிறான், ஒரே பையன்’ —என்றார் வந்தவர். ‘என்ன படித்திருக்கிறான்?—என்று இவர் கேட்க—வந்தவர் ‘எங்கே படித்தான், ஒன்றும் படிக்கவில்லை’ என்று. சொல்ல, கவிஞர்— ‘என்ன செய்கிறான்?— என்று கேட்க, அவர் — ‘வீட்டிலே இரண்டு எருமைகள் மேய்த்துக் கொண்டிருக்கிறான்’ என்று சொன்னார். உடனே கவிராயர் எழுந்து, அவரை எழச்செய்து, தட்டிக் கொடுத்து, வெளி வாயிற்படி வரை அழைத்துக் கொண்டு போய் நின்று,

‘இனி யாராவது உங்களுக்கு எத்தனை எருமைகள்’ என்று கேட்டால், ‘இரண்டு’ என்று சொல்ல வேண்டாம். மூன்று எருமைகள் உண்டு என்று சொல்லுங்கள்’ என்று சொல்லி அவரை வழியனுப்பி விட்டார்.

கல்லாமையின் இழிவைக் கவிஞர் உணர்த்தியது — காலம் பல கடந்தும் என் உள்ளத்தை விட்டு அகலவில்லை.


2. கருமியும் தருமியும்

இரண்டு பெருஞ்செல்வர்கள் ஒர் ஊரிலே வாழ்ந்து வந்தார்கள். ஒருவன் தருமி; மற்றவன் கருமி, ஒரே நாளில் இருவருமே இறந்து விட்டனர். அவ்வூரினர் திரண்டு வந்து இரண்டு பிணத்தையும் ஒரே நேரத்தில் எடுத்துச் சென்று சுடுகாட்டில் எரிக்கச் செய்தனர், இரண்டு சடலங்களும் தனித்தனியே எரிந்து கொண்டிருக்கின்றன.

அப்போது தருமியின் உடலைச் சுற்றிச் சூழ்ந்து. ஊரில் உள்ள யாவரும்,

'ஐயோ அள்ளிக் கொடுத்த கை எரிகிறதே,
இன் சொல் கூறி வாழ்த்திய வாய் எரிகிறதே,
எல்லோரும் வாழ எண்ணிய நெஞ்சு எரிகிறதே.’

என்று அழுது புலம்பிக் கொண்டிருந்தனர்.

ஆனால், கருமியின் சடலம் எரியும் இடத்திலோ ஒருவர் கூட இல்லை.

வள்ளுவர் ஒருவர் மட்டும் நின்று மிகத் துடி துடித்துப் பதறி அழுது கொண்டிருந்தார். ஊரவர் எல்லார்க்கும் வள்ளுவர்மேல் கோபம் வந்தது.

அவர்களிலே ஒருவன் துணிந்து, ‘தங்களிடம் கேட்கக் கூடாதுதான், என்றாலும் கேட்கிறேன்—என்று சொல்லி,

‘நாங்கள் எல்லாம், தருமி சடலம் பற்றி எரிகிறதே என்று இங்கே நின்று அவன் புகழ் பெருமை சொல்லி அழுகின்றோம்’— கருமி எரியும் இடத்திலே நீங்கள் மட்டும் நின்று அழுகிறீர்களே, என்ன காரணம்? என்று கேட்டு விட்டான்.

அதற்கு வள்ளுவர்— “இன்பத்திலே ஈத்துவக்கும் இன்பம் என்று ஒன்று உண்டு. இல்லாத மற்றவர்கட்குத் தன் பொருளை வாரி வழங்கிப், பெற்றுக் கொண்ட மக்களின் முகம் மலர்ந்து மகிழ்ச்சியடைவதைக் கண்டு தாம் மகிழ்ச்சியுறுவது—அந்த இன்பம் எப்படி இருக்கும் என்பதை (தருமி) அவன் வாழ்நாள் முழுதும் செய்து மகிழ்ந்து, மகிழ்ந்து—சவித்துப் போய் எரிகிறான்.

இந்தப் பாவிப் பயல் (கருமி) அவ்வின்பம் எப்படி இருக்கும் என்று அறியாமலே மரித்து எரிகின்றானே ஐயோ—என்று, அலறி அழவேண்டிய இடம், அது வல்ல; இது—என்றார்.

அன்று வள்ளுவரால் ‘ஈகையின் சிறப்பு’ ஊரார் எல்லோர்க்கும் உணர்விலே தைத்து ஊன்றியது. பின் ஈத் துவக்கும் இன்பத்திலே திளைத்து வாழ்ந்தனர்.

நாம் இன்றுதான் உணர்கின்றோம். நாம் அப்படி வாழ்கின்றோமா? இனியேனும் வாழ்வோமா?

—எனச் சிந்திக்கச் செய்கிறது. இக் குறள்.

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர் — குறள்


வார்ப்புரு:Xx—larger

பள்ளி வாசல் கட்டவேண்டுமென்று எண்ணிய மவுல்வி நபி நாயகமவர்களிடம் சென்று பொருள் வேண்டு மென்று கேட்டார். அவர் ஒரு செல்வனைக் குறிப்பிட்டு அவனிடம் கேட்டுப் பெறும்படி அனுப்பினார்.

அப்படியே மவுல்வியும் செல்வனைக் காணச் சென்ற போது, அங்கே —

“வேலைக்காரனைக் கையை மடக்கி மரத்தில் வைத்துக் கட்டி—குத்து 10 குத்திக் கொண்டிருந்தான் செல்வன். ‘ஏன் இப்படி’—என்று அருகில் உள்ளவரைக் கேட்க,

“வேலைக்காரன் கடையில் பருப்பு வாங்கி வரும் போது வழியில் 10 பருப்பு சிந்திவிட்டானாம், அதற்காக 10 குத்துகள் அவனைக் குத்திக் கொண்டிருக்கிறான் செல்வந்தன்” என்றான்.

—இது கேட்டதும், மவுல்வி பயந்து, பணம் கேட்காமலே திரும்பி வந்து விட்டார். பின், நபி பெருமானார் மவுல்லியை ‘செல்வன் எவ்வளவு கொடுத்தான்?’ என்று கேட்க,

“அங்கே செல்வன், தன் வேலைக்காரன் பத்து பருப்பு சிந்தியதற்குப் பத்து குத்து குத்திக் கொண்டிருந்தான். அதைப் பார்த்துப் பயந்து நான் கேட்காமலே திரும்பி வந்துவிட்டேன்"—என்றார்.

“இப்போது போய்க் கேளும்” —என்று நாயகத்தின் கட்டளை பிறந்தது.

மவுல்வி—சிறு நடுக்கத்துடன் அப் பணக்காரனிடம் போனார். அப்போது அங்கே, அவன்,

ஒரு வேலைக்காரனைத் தூணிலே கட்டிவைத்து சவுக்காலே அடித்து—10 சொட்டு இரத்தம் எடுக்க அடித்துக் கொண்டிருப்பதைக் கண்டார். அது என்ன என்று பக்கத்தில் உள்ளவர்களைக் கேட்க,

‘அவன் எண்ணெய் வாங்கி வரும்போது 10 சொட்டு சிந்திவிட்டான். அதற்கு அவன் உடலிலே ரத்தம் 10 சொட்டு எடுக்கச் சவுக்கால் அடிக்கிறார்கள்'—

இது சொல்லக் கேட்டதும் மவுல்வி நடுங்கி, பணக்காரனிடம் சென்று கேட்காமல் திரும்பினார். நாயகமிடம் வந்தபோது—

‘எவ்வளவு பணம் கொடுத்தார்?’ என்று பெருமானார் கேட்கவே—சவுக்கால் அடித்து ரத்தம் எடுத்த கதையைச் சொல்லி,

இம்மாதிரிப் பேர்வழிகளிடம் சென்று, நல்ல காரியத் துக்கு (பள்ளி வாசல் கட்ட) பணம் கேட்க நாவு கூசுகிறது. அச்சமாக இருக்கிறது—பயந்து வந்து விட்டேன் என்று மவுல்வி சொன்னதும், 'மீண்டும் போய்க் கேளும்’—என்று பெருமானார் உத்தரவிடவே,

மவுல்வி சென்றார். நல்ல வேளையாக, அங்கே கடு நிகழ்ச்சியொன்றும் நடைபெறவில்லை. செல்வந்தனைக் கண்டதும், அன்புடன் வரவேற்று, வந்த காரியம் என்ன?” என வினவினான்.

தான் பள்ளிவாசல் கட்டிக் கொண்டிருப்பதாகவும் அதற்குப் பொருள் வேண்டி வந்திருப்பதாகவும் மவுல்வி கூறினார்.

செல்வர் கேட்டார்—'அந்த ஊரில் பள்ளி வாசல் இல்லையா?’

மவுல்வி — ‘ஆமாம்: இல்லை.’

செல்வர் — ‘என்ன செலவாகும்?’ என்னிடம் எவ்வளவு எதிர்பார்க்கிறீர்கள்?’——

மவுல்வி — செலவு (பள்ளி வாசல் கட்ட) ஒரு லட்ச ரூபாய் ஆகும்.

நம் ஊரைச் சுற்றியுள்ள சிலர் 50,000 ரூ. வசூலிக்க முடிவு செய்துள்ளனர். தாங்கள் ஒரு பெருந் தொகையாக ரூ. 50, 000 கொடுத்தால் நல்லது என்று சொன்னார்.

உடனே அப்பணக்காரர், ஒரு லட்ச ரூபாயும் மவுல்வியிடம் கொண்டு வந்து கொடுத்து,

“உடனே பள்ளிவாசல் கட்டத் தொடங்குங்கள் மற்றவர்களிடம் சென்று பணம் வசூலிக்க—காலத்தைக் கடத்திக் கொண்டிருக்க வேண்டாம்—"

“நல்ல பணியை உடனே செய்யுங்கள்"—என்று கூறி அனுப்பினார்.

மவுல்விக்கு—‘என்னடா இது?— என்று தலை சுற்றியது.

10 பருப்பு சிந்தினதற்கு 10 குத்து குத்தினான்.

10 சொட்டு எண்ணெய்க்கு 10 சொட்டு இரத்தம் எடுக்க சவுக்கால் அடித்தான்.

—இப்படிப்பட்ட கருமி—நாம் ரூ. 50,000 கேட்டால், ஒரு லட்சம் எடுத்துக் கொடுக்கின்றானே—‘இது என்ன விந்தை?’

என்று வியந்து எண்ணிக் கலக்கமுற்று, நபி பெருமான் அவர்களிடம் சென்று,

‘கருமியின் நடத்தை புரியவில்லையே, காரண்ம் என்ன?’—என்று மவுல்வி கேட்டார்.

பெருமானார் :

‘நீ அவனைக் கருமி என்று நினைத்தது தவறு—அவன் எந்தப் பொருளையும் பாழாக்காமலும் வீணடிக்காமலும் சிக்கனமாக இருந்து பொருள்களைச் சேமித்து வைத்ததனால்தான் செல்வம் சேர்க்க முடிந்தது. இப்படி நல்ல காரியத்துக்கு அள்ளி வழங்கவும் முடிந்தது—என்று விளக்கமாக எடுத்து விளம்பினார்.

நபியின் விளக்கம் கேட்ட பின்பு—சிக்கனம் வேறு, கருமித்தனம் வேறு—என்பது மவுல்விக்குப் புரிந்தது.

நமக்கு புரிந்ததா!

எட்டு மைல் தூரம் உள்ள ஊருக்கு 20 ரூபா தந்து (டாக்சி) வாடகை வண்டி ஏறிப்போவது ‘இடம்பம்’. அதே தூரத்து ஊருக்கு பேருந்து (பஸ்) போகிறது என்றால் 50 காசு கொடுத்து அதில் ஏறிப் பயணம் செய்வது ‘சிக்கனம்’.

அதுவும் கொடுப்பது ஏன் என்று 5 காசுக்கு அவல் கடலை வாங்கித் தின்று கொண்டே நடப்பது ‘கருமித்தனம்

ஐநூறு, ஆயிரம் ரூபா என்று விலையுள்ள பட்டாடை புடவைகளை வாங்கிக் கட்டி வாழ்வது ‘டம்பம்

தூய்மையான எளிய—அழகான ஆடை (புடவை) அணிவது ‘சிக்கனம்’.

அப்படியின்றி, அழுக்குடையும் கிழிசல் துணியும் தையல் தெரியும்படி உடுத்திக் கொண்டே இருப்பது ‘கருமித்தனம்’.

இவ்வாறாக, நமக்கு ஏற்ற முறையில் நம் உள்ளத்தில் பதியவைத்துக் கொண்டால், நம் வாழ்விலே ஒளியும் மகிழ்ச்சியும் உண்டாகும், —

இதற்கும் இலக்கணம் உண்டு.

அஃது—தேவைக்கு மேல் செலவு செய்வது ‘இடம்பம்

தேவையின் அளவு செலவு செய்வது ‘சிக்கனம்

தேவைக்கும் செலவு செய்யாதது ‘கருமித்தனம்

இதிலிருந்து சிக்கனம் எது?

கருமித்தனம் எது?—என்று நமக்கு நன்றாகப் புரிகின்றது.

நமக்கு மட்டும் புரிந்து...என்ன? நம் இல்லத்தில்

உள்ள ஒவ்வொருவருக்கும் புரியவைத்து—வாழ வைப்பதே நல்லது.

வார்ப்புரு:Xx—larger

மேலை நாட்டிலே எழுத்தாளன் ஒருவன்—அவன் நூல்கள் மிக வேகமாகப் பரவின. எல்லோரும் படிக்க விரும்பினர். அவனுக்குப் புகழ் மேலும் மேலும் ஓங்கியது.

இத்தனைக்கும் அவன் ஒரு படிப்பாளியும் அல்லன்: பட்டதாரியும் அல்லன்; எழுத்தாளனுமல்லன்; பேச்சாளலுமல்லன்; ஒரு குதிரை வண்டி ஒட்டுபவன்.

பத்திரிகை நிருபர்கள் அவனிடம் நெருங்கி— ‘உனக்குத்தான் படிக்கத்தெரியாதே? நீ படித்ததில்லையே? எப்படி நூலாசிரியன் ஆனாய்? இவ்வளவு பெருமை, புகழ்ச்சி எங்கும் பரவி வருகிறது. பெரிய பட்டதாரிகளும் எழுத்தாளர்களும் உன்னைக் காணப் பொறாமைப் படுகிறார்களே! நீ எழுதிய முதல் நூல் எது?—என்று கேட்டார்கள்.

அதற்கு அவன்—

நான் எழுதிய முதல் நூலின் பெயர்— ‘கண்டதும் கேட்டதும்’—என்று சொன்னான்.

பத்திரிகை நிருபர்கள் திரும்பிப் போய்விட்டார்கள்.

இதிலிருந்து தெரிவது என்ன?

அவன் வெற்றி யடைந்த வழி :

அவன் ஒரு வண்டியோட்டி. பலரும் வண்டியில் பயணம் செய்வார்கள். எல்லோரும் பேசிய (அவரவர் குடும்ப) சங்கதிகளை எல்லாம் கேட்டு, அதையே ஒரு நூலாக எழுதியிருக்கிறான்.

வண்டியில் பயணம் செய்யும் போது—பெரும்பான்மையோர் வண்டியோட்டி—அவன் ஒரு மனிதன் வண்டிக்குள் இருப்பதாகவே நினைப்பதில்லை. தாங்கள் மட்டுமே இருப்பதாக எண்ணிக்கொண்டு, எந்த நிகழ்ச்சிகளையும்—இரகசியங்களையும் பேசி விடுகிறார்கள். ஏழை முதல் பணக்காரர் வரையுள்ள பலரது வாழ்க்கை—நடைமுறை—சிக்கல்—அல்லது— துயரம் எல்லாம் எப்படி எப்படி வாழ்கிறார்களோ—அவையெல்லாம் கேட்டுள்ளதனால்—அப்படியே நூலாக எழுதவே—எல்லோருடைய உள்ளத்திலும் நன்கு தைத்தது.

“தங்கள் வாழ்க்கையோடு அது மிகவும் ஒட்டியிருக்கிறது. தெரியாத செய்திகள் பல தெரிய வைக்கப்படுகின்றன. புரியாத செய்திகள் புரிய வைக்கப்படுகின்றன.”

ஆகவே, அவன் எழுதிய முதல் நூல் பல லட்சக்கணக் கான (படிகள் பிரதிகள்) விற்பனை யாயின.

அவன் பெரிய எழுத்தாளன் ஆனான்.

அடுத்த பதிப்புகள் பல லட்சக்கணக்கில் விற்பனை யாகாமல் என்ன செய்யும்?

நல்ல எழுத்தாளனாக, நூலாசிரியனாக விளங்க ஒருவன் படிப்பாளியாக பட்டதாரியாக வேண்டுமென்பதில்லை; அனுபவம் ஒன்றே போதும் எனத் தெரிகிறது.

வார்ப்புரு:Xx—larger

அழுக்கு மூட்டைகளை இறக்கியபின் கழுதைகளை முன்னங்கால்களை மட்டும் கட்டி மேயவிட்டான் சலவைத் தொழிலாளி. அவை வெளியில் போய் மேய்ந்து கொண்டிருந்தன.

அப்போது அவ்விடத்தில் குதிரைப்படை ஒன்று வந்திறங்க, குதிரைகளின் சேணத்தை இறக்கி, கொள்ளும் புல்லும் கொடுத்து, அவற்றின் அலுப்புத்தீர உடல்களைத் தேய்த்தும் விட்டனர் போர்வீரர்கள்.

இதுகண்ட கழுதைகள், இவையும் நம்மைப் போல் தான் இருக்கின்றன. இவைகளுக்கு மட்டும் என்ன கொள்ளு, புல்லு, தேய்ப்பு, சிறப்பு! நமக்கும் இம்மாதிரி எல்லாம் செய்ய வேண்டும் என நம் எஜமானரிடம் நாம் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தன.

சற்று நேரத்திலேயே வேறொரு குதிரைப்படை அங்கே வந்தது; போர் மூண்டது.

பல குதிரைகளுக்கு குத்தும் வெட்டும் விழுந்தன. தலை, கால்கள் முறிந்தன.

இதையும் பார்த்த கழுதைகள்—

நமக்குக் கொள்ளும் வேண்டாம், இந்தக் குத்து வெட்டும் வேண்டாம் என்று, உடனே தமக்குள் முடிவு செய்து கொண்டன.

நாம் எவ்வளவுக்கெவ்வளவு இன்பங்களை எதிர்பார்க்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு துன்பங்களும் ஏற்படும் என்பதை இதனால் அறிய முடிகிறது.


வார்ப்புரு:Xx—larger

அடுத்த ஊரில் நிகழும் தம் உறவினர் திருமணத்துக்கு அவசியம் போக வேண்டியிருந்தது முதலாளிக்கு. வேலைக் காரனிடம் வண்டியைக் கட்டச் சொன்னார். இரவு 10 மணிக்கு வண்டியும் புறப்பட்டது. வண்டியோட்டியும் உறங்கிவிட்டான். முதலாளியும் வண்டியில் ஏறி அமர்ந்ததும் உறங்கிவிட்டார். வண்டி ஒடிக்கொண்டே இருந்தது வெகு நேரம் ஆனபின்பு முதலாளி விழித்துக் கொண்டு வண்டி ஒட்டியைப் பார்த்து “ஊர் வந்து விட்டதா?” என்று கேட்டார். அதற்கு அவன், “எஜமான்! வண்டி நமது வீட்டைச் சுற்றித்தான் ஒடிக் கொண்டிருக்கிறது” என்றான். “ஏண்டா இப்படி?” என்றார். வருத்தத்தோடு. “சாமி தூக்கத்தில் செக்கு மாட்டைப் பூட்டிவிட்டேன், அது வீட்டிலே சுற்றிச் சுற்றி வருகிறது” என்றான் வண்டியோட்டி.

உடனே முதலாளி கோபமாக “வேறு மாட்டைப் பூட்டி வண்டியைச் சீக்கிரம் ஒட்டு” என்று சொல்லிவிட்டு மறுபடியும் உறங்கிவிட்டார். வண்டியோட்டியும் அதை அவிழ்த்துவிட்டு வேறு மாட்டைக் கொண்டு வந்து பூட்டி விட்டு, அவனும் உறங்கிவிட்டான். வண்டியும் ஒடிக் கொண்டிருந்தது.

பொழுது விடியும் நேரத்தில் முதலாளி விழித்து, ‘எங்கே ஊர் வந்துவிட்டதா?’ என்று கேட்டார். உடனே வண்டி ஒட்டி விழித்துக் கொண்டு “சாமி வண்டி நமது வீட்டண்டையேதான் ஒடிக்கிட்டிருக்கு, மன்னிக்கணும். நான் துரக்கக் கலக்கத்திலே ஏத்து (ஏற்றம் இறைக்கிற) மாட்டைக் கட்டிவிட்டேன். அது முன்னே போகவும் பின்னே வருவதுமாகவே இருக்கிறது. என்ன செய்வேன்?” என்றான்.

என்ன செய்வான் எசமானன்? முன்பு தூங்கினான்; இப்போது விழிக்கிறான்?

எப்படி? தூங்குமூஞ்சி முதலாளியும், தூங்குமூஞ்சி வேலையாளும். இப்படியும் நாட்டில் சிலருடைய வாழ்க்கைகள் நடைபெற்று வருகின்றன.
வார்ப்புரு:Xx—larger

ஒரு கிழவன் தான் தேடிய சிறு பொருளைத் தானும் உண்ணாமல், பிறர்க்கும் வழங்காமல் பொன்கட்டியாக, பொரிவிளங்காயளவு உருட்டி, அடுக்குப் பானை இருக்கும் இடத்தின் அடியில் புதைத்து வைத்திருந்தான்.

அவன் மக்களிடமும்கூட இதைச் சொல்லி வைக்கவில்லை. சொன்னால் சொத்துப் பறிபோய்விடும் என்பது அவன் கருத்து.

திடீரென ஒரு நாள் நோய்வாய்ப்பட்டான். படுத்து விட்டான். தொண்டையும் அடைத்துவிட்டது. அவனால் பேச முடியவில்லை.

கடைசிக் காலத்தில் அதைத் தன் பிள்ளைகளுக்குக் கொடுக்க எண்ணி, அனைவரையும் கூப்பிட்டு, அடுக்குப் பானை இருக்கும் இடத்தைக் காட்டி தன் 3 விரல்களையும் அடுப்புக் கட்டிபோல சேர்த்துக் காட்டி ‘அங்கே இருக்கிறது போய் எடுத்துக் கொள்ளுங்கள்’ என சாடை காட்டினான்.

அவன் மக்கள் கூடி, அவனுக்கு சாகப்போகிற நேரத்திலே பொரிவிளங்காய் மேல் ஆசை வந்திருக்கிறது என எண்ணி, அடுக்குப் பானையில் இருக்கும் பொரி விளங்காய் என்ற பலகாரத்தை எடுத்து வந்து தட்டி நசுக்கிக் கிழவன் வாயில் திணித்தார்கள். ஏற்கனவே அடைத்துக் கொண்டிருந்த தொண்டையில் இதுவும் சேர்ந்து அடைத்து, அப்போதே உயிரும் பிரிந்து போய் விட்டது.

பாவம்! அவனைப் பொறுத்தவரையில் பொன்னும் பொரிவிளங்காயாய்ப் போயிற்று.

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைக்கும்
கேடுகெட்ட மானிடரே! கேளுங்கள்—கூடுவிட்டு
ஆவிதான் போன பின்பு யாரே அனுபவிப்பர்
பாவிகாள் அந்தப் பணம்!

என்ற ஒளவையாரின் வாக்கு எவ்வளவு உண்மையாயிற்று.


வார்ப்புரு:Xx—larger

புதிதாகத் திருமணம் செய்து கொண்ட கணவனும், மனைவியும் ஒரு வேலையும் இல்லாதபோது வீண் பேச்சுக்களைப் பேசிக்கொண்டிருந்தனர்.

கணவன் சொன்னான் ‘நான் நாள்தோறும் பால் குடிக்க வேண்டும்’ என்று. மனைவி சொன்னாள்: ‘நல்ல யோசனை: ஒரு பசு வாங்கி விடுங்கள்.’

கணவர் : நேற்றே ஒரு பசு , மாட்டைப் பார்த்து வந்தேன். நாளைய தினம் போய் வாங்கி விடுவேன்.

மனைவி : மாடு வாங்கி வரும்போதே இரண்டு பித்தளைச்சொம்பும் வாங்கி வந்துவிடுங்கள்.

கணவர் : எதற்காக இரண்டு பித்தளைச் சொம்பு?

மனைவி : ஒன்று பால் கறக்க; மற்றொன்று எங்கம்மா வீட்டுக்குப் பால் அனுப்ப.

கணவர் : ஏண்டி! நான் பணம் போட்டு வாங்கும் மாட்டுப் பாலைக் கறந்து உங்க அம்மா வீட்டுக்கு அனுப்புவது எதற்காக?

மனைவி : என்னைப் பெற்று வளர்த்து உங்களுக்குக் கட்டிக் கொடுத்தார்களே அதுக்காக.

கணவர் : அப்படியானால் நீ இங்கு இருக்காதே என அதட்டினான்.

இப்படியாக வாய் முற்றி, தடியால் அடித்து, மனைவியைத் தாய் வீட்டுக்கு விரட்டிவிட்டான். அவளும் அங்கு போய் பல மாதங்கள் ஆயிற்று.

இருவருமே தங்கள் தவறுகளை உணரும் காலம் நெருங்கியது.

மனைவியோடு பிறந்தவன், ‘ஒருநாள் மைத்துனனிடம் வந்து ‘அத்தான், நீ வாங்கிய மாடு எங்கள் வீட்டுக்குவந்து வைக்கோலை மேய்ந்து கொண்டிருக்கிறதே’ என்றான்.

அதற்கு மைத்துனன், ‘நான் மாடும் வாங்கவில்லை. பாலும் கறக்கவில்லை. வேலையில்லாதபோது வீணுக்குப் பேசிய பேச்சு அது’ என்று கூறி, மனைவியை அழைத்து. வந்து குடும்பத்தை நடத்தினான்.

இல்லறம் நடத்துவோர் இம்மாதிரி வேலையொன்றும் இல்லாதபோது வீண் பேச்சுக்களைப் பேசித் தொல்லை. க்ளை விளைவித்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.


வார்ப்புரு:Xx—larger

ஒர் ஊரிலே குயவரும் கம்மாளரும் நெருங்கிய நண்பர்கள். பிழைப்பில்லை; பெரும்பசி—வெளியூருக்குப் புறப்பட்டனர்.

வழியிலே, ஊர் நடுவிலே அக்கிரகாரம்—திருமணம் நடந்து கொண்டிருக்கிறது.

இருவரும் யோசித்தார்கள். நம் இருவருக்கும் பூணூல்தான் இருக்கிறதே. இந்த ஊரிலே நம்மை யார் அடையாளம் கண்டு பிடிப்பது—திருமண வீட்டிலே போய்ச் சாப்பிடலாமே, சாப்பிட்டுவிட்டே போகலாமே— என்ற முடிவுக்கு வந்து, ஐயர் வீட்டுத் திருமணத்திலே நுழைந்து விட்டார்கள். கும்பல்—ஒரே கூட்டம். இருவரும் சேர்ந்து போக முடியவில்லை. தனித்தனியாக பிரிந்து போய்ப் பந்தியில் உட்கார்ந்து விட்டார்கள்.

எல்லாம் பரிமாறிய பிறகு, பிராமணாள் எல்லாரும் கையில் தண்ணிரை வாங்கினார்கள். குயவரும் வாங்கி னார். எல்லோரும் கண்ணை மூடுவதைப் பார்த்தார்; தானும் மூடிக் கொண்டார்.

எல்லோரும் நீர் விளாவி, சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

குயவன் கண்ணைத் திறவாததால், மற்றவர்கள் உண்பதைக் காண முடியவில்லை, அதனால் கையில் நீரோடு கண்ணை மூடியபடியே உட்கார்ந்திருந்தார்.

சாம்பார் பரிமாற வந்த ஐயர்— ‘என்னாங்காணும், குசப்பிராமணனா யிருக்கிறீரே. சாப்பிடுங்காணும்’—என்று சொன்னார்.

இவர் உடனே கண்ணை விழித்து, ‘அதோ, கதவிடுக்கிலே உட்கார்ந்து கொண்டு சாப்பிடுகிற அந்தக் கம்மாளப் பையலா—என்னைக் குசவன்’ என்று சொன்னான்; அவனைப் பார்த்துக்கிறேன்—என்று கூறியதும்,

பந்தியில் உள்ள அனைவரும் உண்ணாமல் எழுந்து கூடி—

பாவம்! இவர்கள்.

போகாத இடந்தனிலே போகவேண்டாம் என்ற ‘உலக நீதி’ யைப் படித்திருந்தால், இப்படி நடை பெற்றிராது.


10. விக்டோரிய மகாராணியும்
ஐந்தாம் ஜார்ஜும்

இந்தியாவை ஆண்ட இங்கிலாந்து அரசி விக்டோரியா மகாராணி அவர்கள், தன் பேரன் ஐந்தாம் ஜார்ஜை {பிற்காலத்தில் மன்னன்) இளமையில் வெளிநாட்டில் ஒரு கப்பல்கட்டுந் துறையில் பணிபுரிய அனுப்பியிருந்தார். பேரனுடைய செலவுக்கு அங்குக் கிடைக்கும் சம்பளம் போதாது என்று எண்ணித் தானும் ஒரு ஐம்பது பவுன் மாதந்தோறும் அனுப்பிக்கொண்டிருந்தார்.

‘தன் செலவுக்கு இந்தப் பணமும் போதவில்லை’ என்று ஐந்தாம் ஜார்ஜு பாட்டி விக்டோரியா மகாராணிக்கு, ‘இனி நூறு பவுனாக அனுப்புங்கள்’ என்று எழுதிக் கேட்டிருந்தார்.

இதனைக் கண்டதும், மகாராணியார் சிந்தனையில் ஆழ்ந்தார். அதிகமாக அனுப்ப விரும்பவில்லை. அனுப்பாமல் இருக்க மனமும் ஒருப்படவில்லை அனுப்பாவிட்டால் பேரன் வருந்துவானே என்ற கவலை ஒருபுறம். அனுப்பினால் பேரன் அதிக செலவாளியாகிக் கெட்டுவிடுவானே என்ற வேதனை மற்றொருபுறம் என் செய்வார்! இந்தக் குழப்பத்திலே அவரால இன்னது செய்வது என்றே புரியல்லை.

பேரனை எண்ணி, கடிதம் எழுதுவார்; அதை அனுப்பாமல் கிழித்துக் போடுவார். எழுதுவதும், கிழித்துப் போடுவதுமாகச் சிலநாட்கள் சென்றன.

இறுதியாக,

‘உலகத்தையாளும் சக்கரவர்த்தினி, தன் பேரனுக்கு (வருங்கால மன்னனுக்கு)பணம் அனுப்ப மறுக்கலாமா?’ — என்று எண்ணிக் கடைசியாகப் பணம் அனுப்பப்போகும் போது, மனம் வரவில்லை; பணத்தையும் அனுப்பவில்லை.

பின், ஒருநாள் கடிதம்—அதில், அவன் பெருஞ் செல்வத்தில் பிறந்து வளர்ந்த குடிமகனாயினும், எப்படிச் இக்கனமாக இருந்து வாழ்க்கையை நடத்தவேண்டும் என்பது பற்றிய விதிகளை, அதற்குரிய வழிகளை எல்லாம் நன்கு விளக்கமாக விவரித்து எழுதி—கடிதத்தை உறையிற் போட்டு, அஞ்சலில் அனுப்பச் சொன்னார்.

அஞ்சலிற் போட்டுவிட்டு வந்தவனை நோக்கிப் பதைபதைத்து—‘அஞ்சல் நிலையத்துக்குச் சென்று, அக் கடிதத்தைத் திரும்பி வாங்கிவா’ என்று, அவனை அனுப்பினார்.

அங்கு போய் வந்த வேலையாள், “அஞ்சல் கட்டு எடுத்தாயிற்று; போய்விட்டது” என்று சொன்னான்.

விக்டோரியா மகாராணிக்குப் பெருங் கவலை—

‘பேரன் என்ன நினைப்பானே? என்ன செய்வானோ? எப்படிக் கஷ்டப்படுகிறானோ?’ — என்ற கவலையினாலே அவ்வாரம் முழுதும் சரியாக உண்ணாமலும் உறங்காமலுங் கூட இருந்து வருந்தினார்.

பேரனிடமிருந்து—

பத்தாம் நாள் கடிதம் வந்தது. அதைக் கண்டதும், பேரன் என்ன எழுதியிருக்கின்றானோ எப்படித் துயருறுகிறானோ? என்ற கவலையால், உடல் நடுங்கி, கைநடுக்கத் தோடு கடிதத்தைப் பிரித்துப் பார்த்தார்கள்.

அதில். இந்த நான்கு ஐந்து வரிகள்தான் இருந்தன :

“பாட்டி, இனிமேல் நீங்கள் இந்த ஐம்பது பவுனும் அனுப்ப வேண்டாம். நான் பணம் கேட்கும் போதெல்லாம் எனக்குச் சிக்கன வாழ்க்கைக்கான விவர விளக்கவியல் எல்லாம் எழுதி அனுப்பிக்கொண்டே இருங்கள் . அது போதும்! ‘சிக்கனமாக வாழ்வது எப்படி?'” எனும் புத்தகத்தின் ஆசிரியர் விக்டோரியா மகாராணி என்று— இதனை, ஒரு புத்தக வியாபாரிக்கு ஆயிரம் பவுனுக்கு விற்றுவிட்டேன்.”

இதைப் பார்த்ததும், உலகத்தையாண்ட மகாராணி யின் உள்ளம் எப்படி இருந்தது? எப்படி இருந்திருக்கும்?

இதனைப் படிக்கிற உங்கள் உள்ளம் எப்படி?

எதிர்காலத்தில் உலகை ஆளப்போகிற தன் பேரனுக்குப் பாட்டி எண்ணி எழுதியது?—பேரன்—வருங்காலத் தில் சக்கரவர்த்தியாக விளங்கப்போகிறவன் தன் பாட்டிக்கு தெய்தது? இவ் இரண்டையும் பற்றி—

உங்கள் உள்ளம் என்ன எண்ணுகிறது?

11. பெண் கேட்டல்!

பெரிய கடைவீதியில் நடந்து போய்க்கொண்டிருந்த ஒருவரிடம் மற்றொருவன் சென்று குறுக்கிட்டு, என்னவோ கேட்டான். அவர் நின்று, ‘பளிர்’ என்று அவன் கன்னத் தில் ஓங்கி அறைந்தார்.

அதைக்கண்ட மற்றவர்கள், ‘ஏன் ஐயா, அவரை அடிக்கிறீர்கள்?’ என்று கேட்டனர்.

அதற்கு அவர், ‘இவன் என்ன சாதி? நான் என்ன சாதி இவனுக்கு என்ன (அந்தஸ்து) தரம்? இது என்ன இடம்? வீதியில் போய்க் கொண்டிருக்கிற போதா திடீரென்று வந்து பெண் கேட்பது?’—என்றார்.

கூடியிருந்தவர்கள், அடிப்பட்டவனை நோக்கி, “ஏம்பா, இம்மாதிரித் தவறு செய்யலாமா? நம் வீட்டுப் பெண்களுடன் அவர் வீட்டுக்குச்சென்று கேட்கிறது என்ற ஒருமுறை இருக்கிறதே! இப்படி நடுரோட்டில், சே!—நீ கேட்கலாமா?”—என்றார்கள்.

அடிப்பட்டவன் கன்னத்தைத் தடவிக் கொண்டே; “நான் அவரைப் பெண் ஒன்றும் கேட்க வரவில்லை, சட்டைப் பையில் இருக்கிற பேனாவைத்தான் எழுதக் கேட்டேன். ‘பேனா’ என்றிருந்தால்: இது நடந்திருக்காது— ஆங்கிலத்தில் ‘பென்’ (Pen) என்று கேட்டதனால் வந்த வினை இது.”

இது அவர் வினை மட்டுமல்ல. பிறமொழிச் சொற் களைத் தம்மொழியுடன் கலந்து பேசுவதால் இன்னும் வரும் வம்புகள் எவ்வளவோ!

12. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!

நாற்பது ஆண்டுகட்குமுன் பள்ளிப்பாடப் புத்தகத்தில் உள்ள கதை இது.

வயதான தன் தந்தையைத் தெருத்திண்ணையில் உட்காரவைத்து, ஒரு சட்டியைக் கொடுத்து, நாடோறும் அதில் சோறு போட்டுவைத்து, அவர் உண்ணும்படிச் செய்யத் தன் மனைவியிடம் சொல்லிவைத்திருந்தான் ஒருவன்.

பல நாட்கள் இந்தத் தொண்டு நடந்துவந்தது.

ஒருநாள் சோறு போடப் போகும்போது, கிழவனிடம் அச் சட்டி இல்லை. இச்செய்தியைக் கணவனிடம் சொல்லுகிறாள் மனைவி.

சட்டி எங்கே என்று கேட்டு, அவரைத் திட்டி அடிக்கவும் கை ஓங்குகிறான் அவன். அப்போது அவன் பிள்ளை ஒடி வந்து, “அப்பா, நான் தான் அந்தச் சட்டியை எடுத்து ஒளித்து வைத்திருக்கிறேன்” என்று சொன்னான்.

‘ஏன் அப்பா?’ என்று கேட்டதற்கு, ‘சிறுவன்’ “உங்களை இம்மாதிரித் திண்ணையில் உட்கார வைத்துச் சோறு போட எனக்கு ஒரு சட்டி வேண்டாமா? அதற்காக எடுத்துப் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன்” என்றான்.

மகனுடைய சொல்லைக் கேட்டு, ‘தனக்கும் இப்படி நேரிடுமோ’ என்று தந்தை பயந்தான்.

தன் தந்தைக்குத் தான் செய்யும் கொடுமைகளையே தன் மகன் தனக்கும் செய்வான் என்று அஞ்சித் திரும்பினான்; திருந்தினான்.

இக் கதை நமக்கு, ஓர் உண்மையை விளங்குகின்றது.

'தினை விதைத்தவன் தினை அறுப்பான்
வினை விதைத்தவன் வினை அறுப்பான்’

இதுதான் அந்த உண்மை.

நாம் செய்கின்ற செயல்களின் பலன்களை பெரும் பாலும் இப்பிறவியிலேயே அனுபவிக்க நேரிடும் என்பதற்கு இது ஒரு சான்று.


வார்ப்புரு:Xx—larger

நாயை வளர்த்தான் வண்ணான். துணிகளைத் திருடாமல் காவல் காத்துவந்தது அது. ஒரு சமயம் திருட வந்தவனைக் கண்டு குலைத்தது. வீட்டுக்கார வண்ணான் விழித்துக் கொள்ளவே, வந்த திருடன் ஓடிப்போய் விட்டான். இதனால் நாயைக் கண்டு பெரிதும் மகிழ்ச்சியடைந்தான். இப்படியிருக்க.

சில நாட்களுக்குப் பின்,

வேறொரு திருடன் துணிமணிகளைத் திருட வந்தான். நாய் அங்கு இல்லை. திருடனைப் பார்த்த கழுதை சத்தம் போட ஆரம்பித்தது.

வண்ணான் எழுந்தான்; தடியை எடுத்து வந்தான். “பகலெல்லாம் உழைத்து இரவிலே தூங்குகிற என்னைத் தூங்கவிடாமல் கத்தித் தொந்தரவு படுத்துகிறாயே! இது சரியா?” என்று, அடித்து நொறுக்கினான். இதிலிருந்து ஒருவர் வேலையை மற்றொருவர் செய்யக் கூடாது என்று தெரியவருகிறது.

சில வேலைகளைச் சிலர் தான் செய்யவேண்டும் ; அந்த வேலையை மற்றவர் செய்யக்கூடாது என்பது உண்மைதானே!


14. அபாயமும் உபாயமும்!

வேற்றூர்க்குப் பயணமாக நடந்து கொண்டிருக்கிறான் ஒருவன். வழியிலே பாழ் மண்டபம். அதில் இரண்டொரு தூண்கள் விழுந்தும் உடைந்தும், மண்டபத்திலே கருங்கற்கள் சில சிதைந்தும், சிதறியும் கிடந்தன.

அதைக் கண்டதும், வழிப்போக்கன், ‘இதன் உள்ளே நுழைந்து சென்றால் நம்முயிர்க்கு ஆபத்து; மண்டபத்தின் கருங்கற்கள் நம் தலைமீது விழுந்துவிடும்’ இவ்வாறு சற்று நேரம் சிந்தித்தான் சுற்று முற்றும் பார்த்தான்.

மண்டபத்தைச் சுற்றி ஒற்றையடிப் பாதை இருந்தது. அதிலே நடந்து சென்றான் இருள் கவ்வும் நேரம், செடி கொடிகள் நடுவே படுத்திருந்த பாம்பை அவன் மிதிக்கவே, அது கடித்தது; கீழே விழுந்தான்; உயிர் துடித்தது.

அப்போது ‘அவன் : நினைப்பு

“அபாயம் வரும் என்று நம்பி ஒர் உபாயம் தேடினேன். உபாயம் தேடிய வழியிலேயே அபாயம் வந்தது. சிறிதும் சிந்திக்காமல், மண்டபத்தைக் கடந்து வந்திருக்கலாம்; இந்த அபாயமும் வந்திராது மண்டபமும் நிலைத்து நின்று கொண்டிருக்கிறது. இதற்கு ஒரு உபாயம் தேடியதுதான் தவறு."

அதிகமாகச் சிந்தித்து — உபாயம் தேடியதே— அபாயமாய் முடிந்தது. இம்மாதிரி அனுபவம் தம் வாழ்க்கையில் பலருக்கு நேரிடுவதுண்டு. என் செய்வது? ‘அளவுக்கு மீறிய யோசனைகளால் ஆபத்து வருவது உண்டு’—என்பதற்கு இதுவும் ஒரு சான்று.


15. இரு கிளிகள்

இரண்டு கிளிகளை ஒருவன் மிகச் செல்லமாக வளர்த்தான். தீனி கொடுப்பான்; சுதந்திரமாகப் பறக்க விடுவான். அவைகளும் பறந்து திரிந்து, அவனது கூண்டுக்கே திரும்பி வந்து தங்கிக்கொள்ளும்.

அவை இப்படி வளருங்காலத்திலே, ஒருநாள் வெளியே பறந்தபோது ஒரு வேடனின் வலையிலே சிக்கிக் கொண்டன. அவ் வேடன் அவ்விரண்டையும் தனித் தனியே இருவரிடம் விற்றுவிட்டான்.

வளர்த்த பாசத்தினாலே — பல நாட்கள் — அவன் — கிளிகளை வளர்த்தவன்—எங்கெங்கோ அலைந்து தேடிக் கொண்டேயிருந்தான்.

கடைசியாக ஒருநாள், தங்கி இளைப்பாறிப் போகலாம் என்று ஒர் ஆசிரமத்தின் உள்ளே நுழைந்த போது—தான் வளர்த்துக் காணாதுபோன பச்சைக்கிளிகளில் ஒன்று, ஆசிரமத்தின் கூண்டில் அடைப்பட்டிருப்பதைக் கண்டான். கண்டதும் தனது கிளியே என மகிழ்ச்சியுடன் பார்த்தான்.” அது “வாருங்க சாமி, வாருங்கோ, வந்து உட்காருங்க. ஆகாரம் என்ன சாப்பிடு நீங்க? சில நாள் ஆசிரமத்தில் தங்கிப் போங்க"—என்று சொல்லியது. தான் வளர்த்த கிளி ஆசிரமத்திலே சந்நியாசிகள் பேசும் சொற்களையே திருப்பிச் சொல்கிறது என்று எண்ணி மிகவும் களித்தான்.

மற்றொரு கிளியும் எங்கே என்று தேடிக் கண்டுபிடித்து, இதையும் சேர்த்து வாங்கிப் போகலாம் என்று அதையும் தேடினான்

சற்று தூரம் சென்றபின் அங்கே ஒரு கசாப்புக் கடையில் கிளி இருந்தது; அது தன் கிளியா எனப்பார்க்கப் போனான்.

இவனைக் கண்டதும் கிளி,

“வா ஐயா, வா, ஆட்டுக்கறி வேணுமா?— கோழிக்கறி வேணுமா?

ஆட்டுக்கறி 5 பணம், கோழிக்கறி 6 பணம்; வெட்டு, கொத்து” என்றது.

அதுவும் தான் வளர்த்த கிளிதான் என்று தெரிந்து கொண்டான்.

அவனுக்குச் சிந்தனை—

“ஒரே தாய் வயிற்றிற் பிறந்து, ஒரே ஆண்டிலே வளர்ந்த இரண்டு கிளிகள், இப்படி மாறுபட்டும் வேறுபட்டும் பேசுவதேன்?” என.

கடைசியாக, அவரவருடைய அறிவு திறமை, சொல், செயல் எல்லாம் அவரவர்களின் சுற்றுச்சார்புக்கும் சூழ்நிலைக்கும் ஏற்பவே அமைகிறது என்பதைக் கண்டு, மனமுடைந்து திரும்பினான்.

எப்படி—ஆசிரமத்தில் வாழ்ந்த கிளி?

எப்படி—கசாப்புக் கடையில் வாழ்ந்த கிளி?

இதனைக் கண்ட பின்பேனும், மக்களாய்ப் பிறந்தவர்கள் சுற்றுச்சார்புக்கும் சூழ்நிலைக்கும் அடிமைப்பட்டு விடாமல் வாழ்வதே நல்லது.

16. தியாகக் கதை

தன்னல மறுப்பு

வட மொழியிலே ‘தியாகம்’ என்பது—தமிழிலே ‘தன்னல மறுப்பு’ என்றாகும்.

மக்களாகப் பிறந்தவர்கள் தன்னலமற்ற வாழ்க்கை வாழவேண்டுமென்பது தமிழ்ப் பண்பாடும், தமிழர் பண்பாடும், தமிழகத்துப் பண்பாடு ஆகும்.

இதனை, ‘பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளார்; புகழெனின் உயிரும் கொடுக்குவர். தனக்கென முயலா நோன்றாள். பிறர்க்கென முயலுநர்’ என்று,

புறநாறூறு இன்றும் கூறிக்கொண்டிருக்கிறது.

கோழி

கோழி தன்னை விலை கொடுத்து வாங்கியவனுக்கு முட்டைகள் இட்டு உதவி, இறுதியில் தன்னையே உண்ணும்படி, உதவி, மடிகிறது.

ஆடு

காடு மலை எல்லாம் தானே அலைந்து மேய்ந்துவந்து. தன்னை விலைகொடுத்து வாங்கியவன் நிலத்திலே வந்து புழுக்கையும் நீரும் ஆகிய எருவையிட்டு, அவன் நிலத்தை விளைய வைக்கிறது இறுதியாகத் தானும் மடிந்து அவனுக்கு உணவாகப் பயன்படுகிறது.

மாடு

தன்னை விலைகொடுத்து வாங்கியவனுக்காகக் காலமெல்லாம் உழைக்கிறது. அவன் போடுகிற தீனி இதன் உழைப்புக்குக் கூலியாகாது. எப்படி? எவ்வளவு (புல்), வைக்கோல்) தீனி போடுகிறானோ அந்த அளவுக்கு சாணி கொடுத்து விடும். எந்த அளவு கழுநீர் தருகிறானோ அந்த அளவு சிறுநீர் கொடுத்துவிடும்.

அன்றன்றைக்கு, அது (மாடு) பற்றுவரவு நேர் பண்ணி விடுகிறது.

அதன் உழைப்பெல்லாம் தியாகம். ஆடு கோழிகளைப் போல் அல்லாமல்,

மாடுகளின் தியாகத்தை நினைக்கும்போது, மயிர்க் கூச்செறிகிறது.

காலமெல்லாம் உழைத்து உழைத்து எலும்பும் தோலுமாகி இறந்து, அவனுக்கு உணவாகவும் பயன்படுகிறது உழவன் உரித்த அதன் தோலை மரத்திலே காய வைத்தான் —

அந்த மாட்டின் தோல் ‘சொல்கிறது’.

‘ஐயோ, கவுண்டர் தரையில் நடக்கிறாரே, அவர் காலைக் கல்லும் முள்ளும் குத்துமே—என் தோல் எதற்காக இருக்கிறது—செருப்பாகத் தைத்து போட்டுக் கொண்டு நடக்கலாமே’—என்று சொல்கிறது.

அவ்வளவு தியாகம் மாடுகளுக்கு.

இவையனைத்தும் கதையல்ல.

உண்மை நடைமுறை.

இவைகளைப் பார்க்கும்போது—

மக்களாகிய நாம் என்ன தியாகம் செய்கிறோம்? என்பதை சிந்தித்துப் பார்ப்பது நலமாகும்.

இன்னும் இதை அறிவுறுத்தவே— எல்லாச் சமய வழிபாடுகளிலும், சில தியாகப் பொருள்களைக் கையாண்டு வருகிறார்கள்.

முஸ்லீம் சமுதாயத்தில், ஊதுபத்தி கொளுத்தி வைத்து ‘பாத்தியா’ எனும் இறைவழிபாடு நடக்கும். பாத்தியா முடிந்ததும் இதற்குப் பேருதவி செய்த ஊதுபத்தி அங்கே இருக்காது. எரிந்து சாம்பலாகிக் கிடக்கும்.

கிறித்தவ சமுதாயத்தில், ‘மெழுகுவர்த்தி’ கொளுத்தி வைத்து இறைவழிபாடு நடக்கும். செபம் முடிந்ததும் அதற்குத் துணையாக இருந்த மெழுகுவர்த்தியை அங்கே காணமுடியாது: தன்னையே அது அழித்துக்கொள்ளும்.

இந்துக்களின் கோவில்களிலே, சூடம் ஒரு கட்டிகொளுத்திவைத்து இறைவழிபாடு நடைபெறுகிறது. வழிபாடு முடிந்ததும், அதற்குப் பெருந்துணை செய்த சூடத்தைக் காணமுடியாது. அது தன்னையே அடியோடு அழித்துக்கொள்ளும்.

இவையனைத்தையும் பார்க்குபோது — மக்கட் சமுதாயத்துக்கு — தியாக வாழ்க்கை இன்றியமையாதது என்பதை அறிவறுத்தவே—எல்லாச் சமயச் சான்றோர்களும் இத் துணைப் பொருட்களைக் கையாண்டிருக்கின்றனர் எனத் தெரியவருகிறது.

மழை

மழை நீரைப் பற்றிச் சிந்திப்போம்.

மழை உணவு தானியங்களையெல்லாம் விளைய வைத்துக் கொடுத்து, நீ அதிகமாக உணவு உட்கொள்ள அதற்குத் துணையாகக் காய்கறிகளையும் விளைய வைத்துக் கொடுத்து, இவை இரண்டையும் சேர்த்து உண்ணுகிறவருக்கு விக்கல் எடுத்தால்,

‘அடே நான் இருக்கிறேன்—என்னைக் குடித்துப் பிழைத்துக்கொள்’ என்று, அந்நேரத்தில் அவனுக்கு உதவி, அவன் வயிற்றிலே போய் விழுந்து உணவாகமாறி மடிந்துவிடுகிறது. இந்தக் கருத்து வெளிப்படவே திருவள்ளுவர்.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
'துப்பா யதூஉம் மழை,

—என்ற குறளில் நமக்கு விளக்கிக் காட்டுகிறார்.

பகுத்தறிவு பெற்ற மக்களாகிய நாம், நீரினிடத்தும், விலங்குகளிடத்தும், பறவைகளிடத்தும், உயிரில்லாத (சடப்) பொருள்களிடத்தும் காணப்படும் தியாக வாழ்வை நினைத்தாவது தியாகவாழ்வு வாழ்வது நலமாகும்.

ஏனெனில்,

'“வையத்துள் வாழ்வாங்கு வாழ்வது”

என்ற வள்ளுவரின் வாக்கு, பிறரை வாழவைத்து வாழ்வது என்பதும், பிறர் வாழ்வுக்குத் தான் துணை புரிந்து வாழ்வது என்பதுமாகும்.



வார்ப்புரு:Xx—larger

தன் ஒரே மகன் திடீரென்று இறந்துவிடவே. துயரம் தாங்காமல் வருந்திய ஒரு தந்தை, புத்த பகவானை அணுகி, எப்படியாவது தன்னுடைய மகனை உயிரோடு எழுப்பிக் கொடுக்கும்படி வேண்டி அழுதான்.

புத்தர் என்ன செய்வார்? அவரால் எழுப்பிக் கொடுக்க முடியும். இருந்தாலும் பிணத்தைத் தூக்கிக் கொண்டு எல்லோரும் இதே வேலையாக வர ஆரம்பித்து விட்டால் பிணங்களை எழுப்புவதைத்தவிர புத்தர் பெருமானுக்கு வேறு என்ன வேலை இருககமுடியும்? அது மட்டுமல்லாமல், சிலரை எழுப்ப மறுத்தால் பொல்லாப்பும் பகையும் ஏற்பட்டுவிடும என்பதெல்லாம் நமக்கு நன்கு விளங்குகிறது.

ஆனால் புத்தர் என்ன செய்தார் தெரியுமா? மிக அன்புடன், அவனிடம் “இந்த ஊரில் சாவு நேராத வீட்டிலிருந்து கொஞ்சம் கடுகு வாங்கி வா! உன் மகனை நான் எழுப்பித் தருகிறேன்” என்றார்.

அவன் வெகு மகிழ்ச்சியாக ஓடினான். ஒவ்வொரு வீடாகப் போய்ச் சாவு நேராத வீட்டைத் தேடினான், கடுகு வாங்குவதற்காக . ஆனால். அவனுக்குக் கிடைத்த பதில் எல்லாம் “என் தாய் இறந்துவிட்டாள்; தந்தை இறந்திருக்கிறார்: தங்கை , தமக்கை, பிள்ளை, பேரப்பிள்ளை என்று ஒவ்வொரு வீட்டிலும் யாராவது ஒருவர் அல்லது பலபேர் இறந்திருக்கிறார்கள்” என்பது தான்.

இப்படி ஊர் முழுவதும் அலைந்து திரிந்த பிறகுதான், ‘சாவை யாராலும் தடுக்க முடியாது; எல்லோருக்கும் ஏற்படும் துன்பம்தான் நமக்கும் ஏற்பட்டுள்ளது’ என்ற உண்மையை உணர்ந்தான். திரும்பவும் புத்தரிடம் போகும் எண்ணத்தையே கைவிட்டுவிட்டான்.

புத்தர் பெருமான் அவர்களது இனிய போதனை அவனுக்கு உண்மையை உணர்த்திவிட்டது.

இதைப் படிக்கும் நாமும், நம்மால் முடியாத காரியத்தைச் செய்யும்படி நம்மை யாரேனும் வேண்டினால், கடுஞ்சொற்களைச் சொல்லி அவர்கள் மனத்தைப் புண்படுத்தாமல், இனிய சொற்களால் அவர்களே உண்மையை உணரும்படி செய்வது நல்லது.


18. பொதுத் தொண்டு

நான் ஒருமுறை பெங்களுர் சென்றிருந்தபோது, 95 வயதைத் தாண்டிய ‘சர். விசுவேசுவர ஐயா’ அவர்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்தது. ஒரு கன்னட நண்பரின் துணையோடு பார்க்கச் சென்றிருந்தேன். அவரிடம், என்னைப் “பொதுத் தொண்டு செய்பவர்” என்று நண்பர் அறிமுகப்படுத்தி வைத்தார்.

பழுத்த பழமாகச் சாய்வு நாற்காலியில் படுத்திருந்த சர். விசுவேசுவர ஐயா அவர்கள், “பொதுத் தொண்டா? பொதுத் தொண்டா” என்று இரண்டுமுறை சொல்லி, “அது மிகவும் கடினமாயிற்றே? இவரால் அது எப்படிச் செய்யமுடிகிறது? என்று வியப்புடனே கேட்டார்.

அப்போது அவர் கேள்வியின் கருத்து எனக்கொன்றும் விளங்கவில்லை சர். வி. ஐயா அவர்கள் உடனே விளக்கத் தொடங்கினார் :

நான் அரசாங்க வேலையாக மேட்டூருக்குச் சென்றிருந்த சமயம் திரும்பி வந்துகொண்டிருந்தேன். வழியில் ஐந்து மைல் தூரத்தில் நண்பர் வீட்டுத் திருமணம். அதற்கும் செல்லவேண்டியிருந்தது. டிரைவர் அந்தப் பாதையில் வண்டியைத் திருப்பினார். எனக்கு உடல் எல்லாம் நடுங்கிவிட்டது. ஏனெனில், நான் சென்றது அரசாங்க வண்டி. அதை எப்படி என் சொந்த, வேலைக்குப் பயன்படுத்தலாம்?

“ஆகவே டிரைவரைக் கோபித்து, வண்டியைத் திருப்பி 20 மைல் தூரம் உள்ளே என் இருப்பிடத்திற்கு வந்து, பின்பு என் சொந்தக் காரை எடுத்துக்கொண்டு திருமணத்திற்கு சென்று வந்தேன். அதுதான் என் மனத்திற்கு நிம்மதியைத் தந்தது” என்று கூறினார். இன்னொன்று.

“நான் வேலை பார்க்கும் காலத்தில் எனது மேசையில் 2 பேனாக்கள் இருக்கும் அரசாங்க வேலைகளுக்கு தனிப் பேனாவும், என் சொந்த வேலைகளுக்கும், உறவினர் நண்பர்களுக்கு வரையும் கடிதங்களுக்கும் என் சொந்தப் பேனாவும் பயன்படுத்துவேன்’ என்று கூறி— என் பக்கம் திரும்பி, தாங்கள் வந்த செய்தி என்ன?” என்று கேட்டார்.

“நான் வந்த வேலை முடிந்துவிட்டது. பொதுத் தொண்டு செய்வது எப்படி?—என்ற பாடத்தை, இன்று முதல் முதலாகத் தங்களிடம் கற்றுக் கொண்டேன்” என்று கூறி, மகிழ்ச்சியோடு விடை பெற்றுக் கொண்டேன். இது என் பொதுவாழ்க்கைக்கு மிகவும் பயன்பட்டது.

இதனைப் படிக்கிற உங்களுக்கும் இது பயன் பட்டால் நான் பெரிதும் மகிழ்வேன்.


19. கோவில் சொத்து

தைப்பூசத் திருவிழா! எல்லாக் கோவில்களில் இருந்தும் காவிரி ஆற்றுக்குச் சுவாமி புறப்பாடு உண்டு. திருச்சி, பூலோகநாதர் சுவாமி கோவிலிலிருந்தும் சுவாமி புறப்பட்டது. நானும் என் தமையனார் ஒருவரும், கொடியைச் சுருட்டி சுவாமி கூடவே தூக்கிக் கொண்டு சென்றோம். அன்று அதற்குக் கூலி அரையணா; இன்றைய மூன்று காசு. ஆற்றுக்குப் போய்த் திரும்பவும் கோயிலுக்குக் கொடியைக் கொண்டு வந்து சேர்த்தோம் அப்போது மாலை மணி ஏழு இருக்கும். எங்களுக்கு இன்னும் காசு தரவில்லை யாதலால் எதிர்பார்த்துக் காத்திருந்தோம்.

அந்தச் சமயம், கோவிலில் எரியும் விளக்கு அணையும் நிலையிலிருப்பதைப் பார்த்த என் தமையன், சென்று அதைத் தூண்டிவிட்டார்.

அதைப் பார்த்துக்கொண்டிருந்த என் தந்தை, அவரை ஓங்கி முதுகில் ஒர் அறை அறைந்தார், அடி பட்ட அண்ணன் விபரம் தெரியாமல் திடுக்கிட்டு விழித்தார்.

பக்கத்திலிருந்த ஒருவர், என் தந்தையிடம்— “பையனை ஏன் அடித்தீர்கள்?” அவன் விளக்கைத் தூண்டியது தவறா?” என்று கேட்டார்.

அதற்குத் தந்தை, “விளக்கைத் தூண்டியது குற்றமில்லை; அதைக் குச்சியால் அல்லவா தூண்ட வேண்டும், பிறகு அதையும் அந்த விளக்கிலேயே வைத்துவிட வேண்டும். இவன் விரலால் தூண்டிவிட்டுக் கையைத் தலையிலே தடவிக்கொண்டானே! அது கோவில் எண்ணெய் அல்லவா? ‘சிவன் சொத்து குல நாசம்’ என்று நீங்கள் கேள்விப்பட்டதில்லையா?” என்றார்.

எங்களுக்கு அன்று இந்தச் சம்பவம் ஒரு படிப்பினையாக அமைந்தது.

இன்று? திருக்கோயில் சொத்துக்களையே தம் சொத்தாக நினைத்து வாழ்க்கையை நடத்துகிற அன்பர்களுக்கெல்லாம், இது பயன்படுமானால் நான் பெரிதும் மகிழ்வேன்.

20. தலைத் தீபாவளி

தலைத் தீபாவளிக்கு மகளையும் மாப்பிள்ளையையும் அழைக்கவந்த சம்பந்தியிடம். “உங்கள் மகளை மட்டும் இப்போது அழைத்துப் போங்கள். மாப்பிள்ளையைப் பிறகு அனுப்பிவைக்கிறோம்” என்றார் பையனின் தந்தை அவரும், தன் மகளுடன் புறப்பட்டுப் போய் விட்டார்.

பிறகு ஒருநாள். தந்தை தன் மகனை அழைத்து, “இப்போது நீ தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டுக்கு. சந்தோஷமாகப் போய் வா. “பெரியவர்களைக் கண்டால் வணங்கு” என்று அறிவுரை கூறி அனுப்பினார்.

அவனும் இது மறக்காமலிருக்க மார்பிலே குத்திக் கொண்டு மனப்பாடம் செய்துகொண்டே போனான்.

வழியில், ஒரிடத்தில், நாட்டாண்மைக்காரர் ஒருவர் பஞ்சாயத்தில் விசாரணை செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இவனையும், இவன் பேச்சையும் கேட்டு, “என்னினும் பெரியவர் யாரடா? ‘என்னைப் கண்டு அஞ்சடா”’ என்று சொல்லவே,

தந்தை சொன்னதை மறந்து, இப்படியே சொல்லிக் கொண்டு போகும்போது, வழியில் திருடர்கள் கூட்டம் ஒன்று, அவர்கள் களவாடிய பொருள்களைப் பங்கிட்டுக் கொண்டிருக்கும் சமயம், இவனைப் பார்த்துவிட்டார்கள். முதலில் பயந்த அவர்கள், பிறகு இவன் பேச்சைக் கேட்டுச் செம்மையாக உதைத்து, ‘“இதையும் கொண்டு வந்து வைத்து இன்னொன்றையும் கொள்ளையடிச்சு வரணும்”’ என்று அவர்கள் கூறினர்.

இப்போது, இதுவே அவனுக்கு மனப்பாடமாகச் சொல்லிக்கொண்டே சென்றான். அந்த வழியில் ஒரு கிராமத் தலைவருக்கு இரட்டைக் குழந்தை. அதில் ஒன்று விஷக் காய்ச்சலில் இறந்துவிடவே, அதைப் பாடையில் எடுத்து வந்து கொண்டிருந்தனர். இதையறியாத மாப்பிள்ளை, “இதையும் கொண்டு வந்து வைத்துவிட்டு, இன்னொன்றையும் கொண்டுபோகணும்” என்று சொல்வதைக் கேட்ட கிராமத் தலைவன் திகிலடைந்து, நன்றாக உதைக்கச் செய்து, “இன்னும் ‘விருத்தியாகணும்”’ என்று சொல்லச் செய்தான்.

இவனும் இப்படியே சொல்லிக்கொண்டு போக, அடுத்த ஊரில் மணப்பந்தல் ஒன்று தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. எல்லோரும் அதை அணைக்க முயலும்போது, இவன் மட்டும், இன்னும் விருத்தியாகணும்’ என்று கூறவே, அங்கிருந்தவர்கள் ‘“தண்ணீரை ஊற்றித் தடியால் அடிக்கச்”’ சொல்லாமல் இப்படிச் சொல்கிறானே என்று சொல்லி நன்றாக உதைத்து அனுப்பினார்கள்.

பிறகு அதையே திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டு சென்றான். அங்கு ஒரிடத்தில் குயவன் தன் மகனுக்கு மண்ணைப் பிசைந்து சட்டி பானை செய்யப் பழகிக் கொண்டிருந்தான். இவன் அங்குப்போய். ‘தண்ணீரை ஊற்றித் தடியால் அடிக்கணும்’ என்று சொல்ல, குயவனும் இவனை நையப் புடைத்து ‘“அரைப் படி முக்கால் படி, ஒரு படி”’ என்று பானைகளை சுட்டிக் காண்பித்தான்.

மிகவும் வேதனையுடன் ஒரு வழியாக மாமனார் ஊர் வந்து சேர்ந்தான். அங்கே ஆற்றங்கரையில் வழவழ. வென்று மழித்த தலையுடன் நாலைந்து பேர் வரிசையாக அமர்ந்து இறைவனை வழிபட்டுக் கொண்டிருக்கவும், உடனே, இவனுக்குப் பானை நினைவு வந்துவிட்டது. உடனே, ஒரு வாழை மட்டையை எடுத்து, ஒவ்வொருவரை யும், இது அரைப்படி இது முக்கால்படி, இது முழுப்படி என்று தட்ட ஆரம்பித்தான்.

இதை எதிர்பாராத அவர்கள், அலறிப் புடைத்து எழுந்து, அவன் செயலைக் கண்டு இரங்கி, “அடேய்? ‘பெரியவர்களைக் கண்டால் வணங்க வேண்டும்”’ என்று கூறினர்.

அப்போதுதான், இவனுக்குத் தன் தந்தை கூறியது நினைவுக்கு வந்தது. மறுபடியும் அதைச் சொல்லிக் கொண்டே மாமியார் வீடு போய்ச்சேர்ந்தான்.

மருமகனது பேச்சையும், அவனது உடம்பையும் கண்ட மாமனார்க்கு, அவனது “அறிவுக் கூர்மை” நன்கு விளங்கியது. பெரிதும் வருந்தினார்.


21. நரியும் பூனையும்

காட்டில் அலைந்து திரிகிறது நரி, ஒரு சமயம் நகரத்துக்கு வந்து, ஒரு பூனையைக் கண்டு அதனுடன் நட்புக் கொண்டது.

நட்பு முற்றவே ஒருநாள் நரி பூனையைக் காட்டுக்கு அழைத்து, முயல்கறி படைத்து விருந்து வைத்தது.

சுவையாக விருந்துண்ட மகிழ்ச்சியில் பூனை நரியைப் புகழ்ந்து ஆடிக் களிப்புற்றது.

மற்றொருநாள் பூனை நரியை நகரத்திற்குள் விருந்துக்கு அழைத்தது. நகரத்திற்குள் வர நரி முதலில் தயங்கினாலும், பூனை கூறிய ஆட்டு இறைச்சியைச் சுவைக்கும் ஆசையால் ஒப்புக்கொண்டது. பூனையும் நரியைத் தன்னுடன் மெத்தைக்கு மெத்தை தாவச் செய்து அழைத்துச் சென்று ஒரு வீட்டு மாடியில் விருந்து படைத்தது. வயிறார உண்ட நரி, முன்பு பூனை செய்ததைப் போல்பாட ஆரம்பித்தது.

அதைக்கண்டு பயந்த பூனை, “பாடாதே! பாடினால் நம் இருவருக்கும் ஆபத்து” என்று சொல்லியும் கேளாமல் நரி ஊளையிடவே, வீட்டுக்காரர் வந்து உலக்கையால் தாக்கி, நரியைக் கொன்று குப்பைத் தொட்டியில் தூக்கி எறிந்தார். பூனை தப்பி ஓடிவிட்டது.

காட்டில் தம் நண்பனைக் காணாத நரிகள் ஒன்றுகூடி இந்த நரியைத் தேடி வந்தன. செய்தியைக் கேள்விப் பட்டுக் குப்பைத் தொட்டியில் கிடந்த நரியின் பிணத்தைக் கண்டு அழுதன: அலறின.

அவற்றுள் வயதான கிழ நரி ஒன்று, “நாம் இனி அழுது என்ன பயன்? இது எப்படி நடந்தது. என்று சிந்திக்க வேண்டாமா?” என்றது. அப்போது ஒரு நரி “ஆமாம், கூடாதாருடன் கூடலாமா?” என்றது. மற்றொரு நரி கேட்டது “கூடாதாருடன் கூடினாலும் கூடங்கள் மாடங்கள் ஏறலாமா?” என்று. மூன்றாவது நரி “கூடங்கள் மாடங்கள் ஏறினாலும் இராகங்கள் சங்கீதங்கள் இழுக்கலாமா” என்றது. கடைசியாகக் கிழநரி “ராகங்கள் சங்கீதங்கள் இழுத்ததனால்தான் தாளங்கள் தப்புகள் நடந்துள்ளன” என்று கூறியது.

இப்போது எல்லா நரிகளும் உண்மையை உணர்ந்து, “நாமும் இப்படிப் போனால் நம் கதியும் இப்படித்தான் முடியும்” என்று தமக்குள்ளேயே சொல்லிக்கொண்டு, காட்டை நோக்கி ஒட்டம் பிடித்தன.

22. பனைமரமும் ஒணாங்கொடியும்

ஐப்பசி கார்த்திகை அடைமழை பெய்து ஒய்ந்தது. அடுந்து மார்கழியில், ஓணான் கொடி ஒன்று முளைத்த வேகத்தில் பக்கத்திலுள்ள பனைமரத்தின்மேல் பற்றிப் படர்ந்து வளைந்து வளைந்து மேலே சென்று ஓங்கிப் படர்ந்தது.

தை மாதத்தில், பனைமரத்து மட்டைகளையும் ஒரு சுற்றுச்சுற்றி மேலும் வளைந்து வளர்ந்து தொங்கியது. அப்போது அது பனைமரத்தைப் பார்த்து,

“ஏ—பனைமரமே! பனைபரமே 25 வருடமாக நீ என்ன வளர்ந்திருக்கிறாய்? என்னைப்பார். இருபத்தைந்து நாளிலேயே உனக்கு மேலே வளர்ந்துவிட்டேன்” என்று எக்காளமிட்டது.

ஒணாங் கொடியின் செருக்கைக் கண்ட பனைமரம், எதுவும் சொல்லாமல் மனத்திற்குள் சிரித்துக்கொண்டு சும்மாயிருந்துவிட்டது.

அடுத்து வந்த பங்குனி சித்திரை மாதங்களில் ஒணாங்கொடி வாடிப்போய்த் தலைசாய்ந்து கீழே விழத் தொடங்கியது. கடைசியில் பனைமரத்தை நிமிர்ந்து கூடப் பார்க்க முடியாமல், இருந்த இடம் தெரியாமல் அழிந்து போயிற்று.

இதைப்பற்றிச் சிறிதும் கவலையில்லாமல் முன் போலவே நிமிர்ந்து நின்றுகொண்டிருந்தது பனைமரம்.

“ஆற்றலும் அறிவும் உடையவர் எப்போதும் ஒரே தன்மையாக இருப்பர். மற்றவர் எப்படி விரைந்து வளர்கிறார்களோ, அப்படியே தளர்வர்” என்று எண்ணித் தான் பனைமரம் அப்போது மனதுக்குள் சிரித்ததோ?

இதிலிருந்து, அற்பர் வாழ்வு அவ்வளவுதான் என்று மட்டும் நமக்குப் புரிகிறது.


23. கறிவேப்பிலையும் தாழ்த்தப்பட்டோரும்

காய்கறி, சாம்பர், ரசம் என்று எல்லா உணவுப் பொருள்களையும் சமைக்கும்போது அவையெல்லாம் கமகமவென்று மணப்பதற்கு, மலைக் கறிவேப்பிலையாகப் பார்த்து வாங்கிவந்து, நன்றாக அதனைத் தாளித்துச் சமையல் செய்வர், விருந்து வைப்பவர்.

தன் வாசனையையெல்லாம் சமைக்கும்போது கலந்து மற்ற காய்கறிகளுக்குத் தந்து விட்டு மகிழ்ந்திருக்கும் கறிவேப்பிலையை மக்கள் உண்ணும்போது முதலில் கீழே எடுத்து எறிந்துவிடுகின்றனர்.

“இப்படித்தான்—எங்கள் உழைப்பின் பலனை எல்லாம் பெற்றுக்கொண்டபிறகு, மேல் சாதிக்காரர்கள் தங்களது நலனுக்காக எங்களைப் பயன்படுத்தி, எண்ணிக்கையிலே சேர்த்துக் கொண்டும் எண்ணிக்கையிலே பயன் படுத்திக் கொண்டும், காரியம் முடிந்ததும் எங்களைத் தூக்கி எறிந்து விடுகின்றனர். நாங்கள் என்ன செய்வது?” என்று தாழ்த்தப்பட்டவர் மனம் வேதனையுறுகின்றனர். இது சிந்திக்கத் தக்கவைகளில் ஒன்றாகும்.

24. பேராசிரியர் தேடிய மனிதன்

மேலைநாட்டுப் பேராசிரியர் ஒருவர், பட்டப் பகலில் 12 மணி உச்சி வேளையில், கையில் மெழுகுவர்த்தியை ஏற்றிக்கொண்டு நடைபாதையில் போவோர் வருவோரை அன்புடன் அழைத்து வாருங்கள் என்று கூறி, அவர்கள் முகத்திற்கு நேரே விளக்கைக் காட்டி நன்றாக அவர்களைப் பார்த்துவிட்டு, பிறகு அவரைப் போகச் சொல்லிக் கொண்டேயிருந்தார்.

அவர்களில் ஒருவன் வியப்படைந்து, “ஏன் ஐயா பட்டப்பகலிலே மெழுகுவர்த்தி விளக்கு ஏற்றிக்கொண்டு ஒவ்வொருவர் முகத்திலும் காட்டி அனுப்புகிறீர்களே, என்ன காரணம்?” என்று கேட்டான்.

அதற்கு அப்பேராசிரியர் அவரைக் கைகூப்பி வணங்கி, “இந்தச் சாலையிலே எவனாவது மனிதன் போகிறானா?” என்பதைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன், என்றார். “இந்த உலகத்தில் மக்களாய்ப்பிறந்தவர் எல்லோரும் மக்கள் அல்லர் : மக்களைப் போல உண்டு உடுத்துத் திரிபவர் எல்லோரும் மக்கள் அல்லர்; மக்களாகப் பிறந்து மக்களாக வாழ்பவர்களே மக்கள்” என்பதை இது தெரிவிக்கிறது.

“மனிதனாகப் பிறந்தவன் பறவையைப் போல ஆகாயத்தில் பறக்கக் கற்றுக்கொண்டிருக்கிறான். மீனைப் போல நீரிலே நீந்தக் கற்றுக்கொண்டிருக்கிறான். ஆனால் மனிதன் மனிதனாகப் பிறந்தும் மனிதனைப் போல வாழக் கற்றுக்கொள்வதில்லையே!” என்று அவர் கருதுகிறார். நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?

25. சித்தாந்தமும் வேதாந்தமும்

‘வேதாந்தம் பெரிதா? சித்தாந்தம் பெரிதா?’ என்று வாதிட்டு வேதாந்திகளும், சித்தாந்திகளும் போரிட்டுக் கொண்டிருந்தனர் இறுதியில் பகவான் இராம. கிருஷ்ணரை அணுகி, இருதிறத்தாரும் தத்தம் கருத்துக்களை எடுத்துச் சொல்லி, அவர் சொல்லும் முடிக்குக் கட்டுப்படுவதாகத் தெரிவித்தனர்.

அவர் மேற்கொண்டு வேறு எதையும் விசாரிக்காமல், “நான் ஒரு கதை சொல்கிறேன், உங்கள் கேள்விகளுக்கு விடையும் அதில் வெளிப்படும” என்று கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.

“சர்வம் பிரம்ம மயம்” என்ற கொள்கையுடைய ஒரு வேதாந்த மடத்தில் பலவிதமான செடிகொடிகளை வளர்த்து, நந்தவனம் அமைத்து, ஆசிரமத்தை அழகு படுத்தியிருந்தனர்.

ஒருநாள் எப்படியோ ஒரு கன்றுக்குட்டி உள்ளே புகுந்து ஒரு அழகிய செடியைக் கடித்து நாசப்படுத்தி விட்டது. அந்தக் காட்சியைக் கண்ட குரு, ஆத்திரம் தாளாமல், தடியை எடுத்து கன்றுக்குட்டியின் மேல் ஓங்கிப் போட, அடி தலையில் விழுந்து அந்த இடத்திலேயே அந்தக் கன்றுக்குட்டி இறந்துவிட்டது. அதை இழுத்து வெளியே குப்பைத் தொட்டியில் போட்டு விட்டனர்.

கன்றுக்குட்டியைத் தேடி வந்த அதன் சொந்தக் காரன், அது அடிபட்டு இறந்திருப்பது கண்டு, நடந்ததை அறிந்து மனம் கொதித்து, நாலு பேரை அழைத்து வந்து குருவிடம் கேட்டான், “ஏன் என் கன்றுக் குட்டியை அடித்தீர்கள்? இப்போது அது இறந்து விட்டதே” என்று.

அதற்குக் குரு, “நான் அதை அடிக்கவில்லையே...... அது (பிர்மம்) வந்தது. அதைத் தின்றது. அது அடித்தது. அது இறந்தது. அவ்வளவுதான். எனக்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது” என்றார்,

இந்த பதில் இறைவனுக்கே பொறுக்காமல், முதுகிழவராகத் தோன்றி, கன்றை இழந்தவனைச் சமாதானப்படுத்திவிட்டு, குருவைப் பார்த்து மடாதிபதி அவர்களே! நந்தவனம் மிகப் பொலிவாக இருக்கிறது. இதை யார் உண்டாக்கினார்?’ என்று கேட்டார். அதற்கு அவர், “நான்தான் இதை மிகக் கஷ்டப்பட்டு உண்டாக்கினேன்” என்றார். “இவ்வளவு அழகான செடி எங்கிருந்து கிடைத்தது?” என்றார். அதற்கும் குரு “இந்தச் செடியைக் காஷ்மீரத்திலிருந்து கொண்டு வந்தேன்” என்றார்.

உடனே இறைவன், “தம்பி, இந்த நந்தவனத்தை உண்டாக்கியது நீ. செடி கொடிகளைக் கொண்டு வந்து வளர்த்தது நீ. கன்றுக்குட்டியை அடித்தது மட்டும் பிரம்மமா?” என்று கேட்டுவிட்டு மறைந்தார்.

வேதாந்தி திடுக்கிட்டு இங்கு வந்து கேட்டு மறைந்தது இறைவனே என்று அறிந்து அஞ்சி நடுங்கினார். இப்படிப் பகவான் இராமகிருஷ்ணர் கதையை முடித்ததும், தங்களுக்கு நல்ல விடை கிடைத்தது என்று இருசாராரும் தத்தம் இருப்பிடத்தை நோக்கி நடந்தனர்.

26. குழந்தை வளர்ப்பு

என் கடையில் பலபேர் வேலை செய்துகொண்டிருந்த காலத்தில், ஒருநாள் அப்துல் கரீம் என்பவர் வேலைக்கு வரவில்லை. அவரைத் தேடி அவர் வீட்டுக்கே நான் சென்றேன்.

அப்போது அவர், தன் மகனை ஒரு பிரம்பால் “இனி மேல் பீடி குடிப்பாயா? பீடி குடிக்காதே, பீடியைத் தொடாதே” என்று சொல்லிச்சொல்லி அடித்துக கொண்டிருக்கும் போதே. அவரது இடதுகையால் பீடியை அடிக்கு ஒருதரம் இழுத்து, வாயில் புகையை விட்டுக் கொண்டே அடித்துக் கொண்டிருந்தார்.

நான் அவர் அடிப்பதைத் தடுத்து, ‘பிள்ளையை அடிக்கவேண்டாம்’ என்று கூறினேன். அதற்கு அவர் ‘நீங்கள் பேசாமல் இருங்கள் முதலாளி. இப்படியே விட்டால் அவன் கெட்டுப்போய் விடுவான்’ என்று கூறினார்.

தனது இடதுகையில் பீடியை வைத்து இழுத்துச் சுவைத்துக் கொண்டே வலது கையால் பீடி குடிக்காதே என்று அடித்தால் பிள்ளை எப்படி உருப்படும்?

இப்படித்தான் பல பெற்றோர்கள் தம், பிள்ளைகளை வளர்க்கிறார்கள். சிறுவயதிலேயே குழந்தைகள் பொய் பேசவும், திருடவும், பிறரை வஞ்சிக்கவும், குடிக்கவும் பள்ளியிலா கற்றுக்கொள்கிறார்கள். ஆகவே பிள்ளைகளைத் திருத்துவதற்குமுன் பெற்றோர்கள் தங்களைத் திருத்திக் கொள்ளவேண்டும்.

ஏனெனில் பெற்றோர்களின் கண்டிப்பு, காரமான பேச்சு இவைகள் எதுவும் பிள்ளைகள் மனதில் படாது. நடைமுறைக்கும் வராது. இவற்றைவிட அவர்களின் பழக்க வழக்கங்கள்தான் பசுமரத்தாணிபோல் பதிந்து திறகும். ஆகவே, பொடிபோடும் பழக்கத்தைக் கூடப் பிள்ளைகள் அறியாமல் செய்வது நல்லது.

வீட்டு நிலைமை இப்படி இருந்தால், நாட்டுநிலைமை என்ன ஆகும்? எங்கே போகும்?


27. கலை நுணுக்கம்

ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் நடைபெறும் கலைமகள் விழாவிற்கு வரும் புலவர்களுக்குக்கெல்லாம். இராமநாதபுரம் மன்னர் பரிசளித்து அனுப்புவது வழக்கம். சிறப்பான முறையில் விருந்தும், இருபத்தைந்து ரூபாய் பணமுடிப்பும் உண்டு.

ஒன்பதாம் நாள் இரவு, பெருமாள் மாடு வேடம் பூண்ட இருவர் அரசனைச் சந்தித்து ஆடிப்பாடி மகிழ்வித்தனர். அப்போது அரசன் தன் கைப்பிரம்பால் மாறு வேடம் பூண்டவனை ஒரு தட்டுத் தட்டினார். உடனே முகமலர்ந்து மகிழ்ச்சியோடு, அவனுக்கு ஐம்பது ரூபாய்ப் பணமுடிப்பைப் பரிசாகக் கொடுத்தார்.

இது கண்ட அரசவைப் புலவர், மன்னரிடம், “அரசே! மற்றப் புலவர்களுக்கெல்லாம் 25 ரூபாய்தானே பரிசு கொடுத்தீர்கள். இவனுக்கு மட்டும் தாங்கள் 50 ரூபாய் கொடுத்ததன் காரணத்தை நாங்கள் அறியலாமா?” என்று பணிவோடு வேண்டினார்.

அரசன் சொன்னார், ‘பெருமாள் மாடு வேடம் பூண்டவனுக்கு உண்மையிலேயே கலையுணர்வு இருக்கிறதா? அல்லது பரிசுபெறுவதற்காகமட்டும். வேடம் பூண்டவனா? என்று ஐயம் கொண்டேன். ஆகவே அவனைச் சோதித்துப் பார்த்தேன். மனிதனுக்கு இல்லாத உணர்ச்சி மாட்டுக்கு உண்டு. மாட்டை எந்த இடத்தில் தொட்டாலும் சுளித்துக் காட்டும். அதனால் அவனை ஒரு தட்டு தட்டினேன். அவனும் மாடாகவே மாறி, அந்த இடத்தை மட்டும் சுளித்துக் காட்டினான். என் உள்ளம் மகிழ்ந்தது. அதனால் இரட்டிப்பாகப் பரிசு கொடுத்து அனுப்பினேன்’ என்றார்.

இதிலிருந்து அக்கால மன்னர்கள் புரவலர்களாக இருந்ததுடன், கலையுணர்வு மிக்கவர்களாவும் இருந்தனர் என்பதையும்,

கலைஞர்களும் தாம் மேற்கொண்ட பாத்திரமாகவே மாறி நடித்து வந்தனர் என்பதையும் அறியும்போது நம் உள்ளமும் சேர்ந்து மகிழ்கிறது அல்லவா!


28. திரைப்படங்கள்

அண்மையில் வந்த திரைப்படத்தில் ஒரு காட்சி, வில்லன் ஒருவன் பதக்கத்தைப் பறித்துக்கொண்டு ஒடுகிறான். பறிகொடுத்த நாயகன் எப்படி மீட்பது என்று யோசித்தான அன்று இரவு வில்லன் வீட்டில் சன்னல் வழியே கம்பியைவிட்டுத் தொங்கிய சட்டையை இழுத்தான். அதில் பதக்கம் இருந்தது; மகிழ்ச்சியாக எடுத்துக் கொண்டு வீடு திரும்பினான்—இதுதான் காட்சி.

அடுத்து ஒரே நாள் இரவில் சென்னை தியாகராய நகரில் பல இடங்களில் திருட்டு—எப்படி? கம்பிகளை சன்னல் வழியே விட்டு பேன்ட், சட்டை, பட்டுப்புடைவை விலை உயர்ந்த துணிமணிகள் எல்லாம் கனவு போயின. இப்படித்தான்—

சுமார் 85 ஆண்டுகட்கு முன்பாக, மேலை நாட்டிலே லண்டன் மாநகருக்கு அருகிலே ஒரு பெரிய ரயில் கொள்ளை நடந்தது. அதில் சுமார் 40 பேர் குதிரைமீது வந்து இரயிலை வழிமறித்து நிறுத்தித் துப்பாக்கியைக் காட்டிப் பயணிகளிடம் உள்ள பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

இரயில்வே போலீசார் எவ்வளவோ முயன்றும் ஐந்தாறு மாதங்களாகியும் துப்புத் துலங்கவில்லை. கொள்ளையரையோ, பொருள்களையோ கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியில் மிகவும் கஷ்டப்பட்டு எப்படியோ போலீசார் அவர்களைப் பிடித்து வழக்குத் தொடர்ந்தனர்.

அந்த நாற்பது கொள்ளையரில் அனைவரும் 18 முதல் 21 வயதிற்குட்பட்ட இளைஞர்களே! அவர்களில் வசதியான குடும்பத்துப் பிள்ளைகள், படித்தவர்கள், செல்வச் சீமானின் பிள்ளைகள், ஏன் வழக்கறிஞரின் பிள்ளையும் இருப்பதைக் கண்ட நீதிபதி, பெருவியப்பு அடைந்தார். அவர்களை விசாரிக்கவும் செய்தார்.

“நீங்கள் பரம்பரைத் திருடர்களல்ல, திருடித்தான் வாழவேண்டும் என்ற நிலையில் உள்ளவர்களும் அல்ல. அப்படி இருக்கும்போது, எப்படி உங்களுக்கு இந்த எண்ணம் உணடாயிற்று?” என்று கேட்டார் .

அதற்கு அவர்கள், “அண்மையில் புகழ்பெற்ற ரயில் கொள்ளை’ என்ற படக்காட்சியைப் பார்த்தோம், அதிலிருந்து நாமும் அப்படிக் செய்தால் என்ன? வெற்றி பெற முடியுமா? என்று சோதித்துப் பார்த்தோம். வெற்றியும் பெற்றோம்” என்றனர். இதிலிருந்து நாடு திருந்த வேண்டுமானால் முதலில் நமது திரைப்படங்கள் திருந்தவேண்டும் என்பது பல்வேறு சீர்கேடுகளுக்குத் திரைப்படங்களும் காரணமாகின்றன என்பது நன்கு தெரிகிறது. இதற்கு என்ன செய்யலாம்!


29. வைரமும் கூழாங்கல்லும்!

ஞானம் பெற வேண்டும் என்ற விருப்பத்தில் ஒரு பெண் துறவி இந்தியாவுக்கு வந்தாள். ஒரு பெருந் துறவியைக் கண்டு அவருடைய ஆசிரமத்திலேயே அவரிடம் மாணவியாக இருந்து வந்தாள். அந்தத் துறவியிடம் அவள் விரும்பிய ஞானம் பூரணமாகக் கிடைக்கவில்லை என்று எண்ணினாள்.

ஆகவே அங்கிருந்து புறப்பட்டுப் பல இடங்களிலும் அலைந்து, இமயமலைச்சாரலில் ஒரு பெரிய மகான் இருப்பதாக கேள்விப்பட்டு, அங்குச் சென்று சில காலம் அவருடைய ஆசிரமத்திலேயே தங்கினார்.

ஒரு சமயம், பக்கத்து ஊர்களைப் பார்க்க மகான் புறப்பட்டபோது, சீடர்கள் பலருடன் அம்மையாரும் உடன் சென்றார். அப்போது—

நடைபாதையில் மாணிக்கக் கல் ஒன்று கேட்பாரற்றுக் கிடப்பதை மகான் பார்த்தார். அவருக்கு அதன் மீது ஆசையோ. எடுக்கவேண்டும் என்ற எண்ணமோ சிறிதும் இல்லை. ஆனாலும் தனக்குப் பின்னால் வரும் துறவி களில் யாரேனும் பார்த்தால் ஆசையினால் சபலம் அடைவரோ என்று எண்ணி, உடனே அதை மண்ணைப் போட்டு மூடி விட்டுச் சென்றார். உடன் சென்ற பெண் துறவி இதைப் பார்த்து விட்டார். மண்ணை விலக்கி, அந்த மாணிக்கக் கல்லின் மேல் ‘தூ’ வென்று காரி உமிழ்ந்துவிட்டுத் திருப்பிப் பாராமல், ஆசிரமத்துக்கும் செல்லாமல், தன் நாட்டுக்கே புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

அவர்கள் நாட்டில் பெண் துறவி திரும்பி வந்ததற்கு அனைவரும் காரணம் கேட்டபோது, அவள் சொன்னான் “உண்மையானதுறவி உலகில் எவருமே இல்லை. இந்தியாவில் இமயமலைச்சாரலில் உள்ள மகானால்கூட கூழாங் கல்லையும், மாணிக்கக் கல்லையும் ஒன்றாக மதிக்க முடியவில்லை. அவர் அதன்மேல் மயங்கி மண்ணிட்டு மூடினார். இரண்டையும் ஒன்றாகக் காணும் உண்மைத் துறவியிடம் தான் மெய்ஞ்ஞானமும் கிடைக்கும். அது எப்போது?” என்று ஏங்கினாள்.


30. மோட்சமும் நரகமும்!

மாலை வேளையில் உப்பரிகையில் உலவிக் கொண்டிருந்த தாசியொருத்தி, கீழேயிருந்த தன் வேலைக்காரியை அழைத்து, “நம் வீதி வழியே ஒரு பெரியவரின் சடலம் இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. நீ போய் அவரது ஆன்மா மோட்சத்துக்குப் போகிறதா—நரகத்துக்குப் போகிறதா என்று பார்த்து வா” என்றாள். மறுநிமிடமே, அவள் திரும்பிவந்து, “அம்மா, அந்த ஆன்மா மோட்சத்துக்குப் போய்விட்டது” என்று சொன்னாள்.

இவற்றையெல்லாம் திண்ணையிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு சந்நியாசி, வியந்துபோய் வேலைக்காரியின் காலைப் பிடிக்காத குறையாகக் கெஞ்சுகிறார். "அம்மா அறுபது ஆண்டுகளாக உலகம் முழுவதும் சுற்றி. இறந்த ஆன்மா எங்கே போகிறது என்று ஆராய்ந்து வருகிறேன். பல பெரியோர்களை அணுகியும் விச்சாரித்தேன். இன்னும் எனக்கு விடை கிடைக்கவில்லை. இப்போது நீதான் என் குரு. ஒரு ஆன்மா மோட்சத்துக்குப் போகிறதா, அல்லது நரகத்துக்குப் போகிறதா என்னும் கலையை அறிவது எப்படி? என்று வேண்டினார்.

“சுவாமி, இது தெரியாதா உங்களுக்கு பிணம் தாக்கிச் செல்வோர் பின்னே நானும் சிறிது தூரம் நடந்து சென்றேன். சாலையின் இருபுறமும் உள்ள மக்களும், உடன் செல்வோரும், “ஐயோ! நல்ல மனிதன் போய் விட்டாரே! புண்ணியவான் இன்னும் கொஞ்ச காலம் இருக்கக் கூடாதா? தருமவானாச்சே! பலருக்கும் உதவி வந்தார்: இன்றைக்குப் போய்விட்டாரே! என்று, பலவாறாக அழுது புலம்பினர். அதனால், அந்த ஆன்மா ‘மோட்சத்துக்குப் போகிறது’ என்று நான் சொன்னேன்.

“நேற்று இப்படியொரு பிணம் சென்றபோது நானும் பின்னால் தொடர்ந்து சென்றேன். அப்போது மக்கள் எல்லோரும், பாவி! ஒருவழியாகத் தொலைந்தான், இனி மேல் நல்லகாலந்தான். இந்த ஊரைப் பிடித்த பீடை ஒழிந்தது” என்று பலவாறாகப் பேசினார்கள். ஆகவே, அந்த ஆன்மா ‘நரகத்துக்குப் போய்விட்டது’ என்று சொன்னேன்” என்றாள்:

பாவம்! சந்நியாசி வெட்கித்தலை குனிந்தார்.

31. இளந் துறவியும் முதிய துறவியும்

முதிய துறவி ஒருவர், இளந்துறவி ஒருவருடன் பக்கத்து ஊருக்குச் சென்றுவிட்டுத் தன் ஆசிரமத்திற்குத் திரும்பிக்கொண்டிருந்தார்.

வழியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது, இவர்களுக்கு முன்னே இளம்பெண் ஒருத்தி, இரண்டுமாதக் கைக்குழந்தையுடன், செய்வதறியாமல் திகைத்து நின்று கொண்டிருந்தாள். அவள் ஆற்றைக் கடந்து அக்கரை போகாவிட்டால், கணவனும் மாமியாரும் சண்டையிடுவார்கள். திரும்பித் தாய் வீட்டுக்குப் போகலாம் என்றாலோ ஒரே இருட்டு; காட்டு வழிப்பாதை. ஆற்றைக் கடக்கவும் முடியாமல் திரும்பிச் செல்லவும் வழியில்லாமல் அவள் துடித்துக் கொண்டிருந்தாள்.

இந்தத் துறவிகள் இருவரையும் அந்த நேரத்தில் அங்கே கண்டதும், அவளுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. நிச்சயம் அவர்கள் உதவி செய்வார்கள் என்று, நம்பினாள்.

முதிய துறவியோ, இளம்பெண்ணைப் பார்த்ததும் பார்க்காத மாதிரி ஆற்றிலே இறங்கி நடக்கத் தொடங்கி விட்டார். இதைக் கண்டதும், அவளுக்கு ஒரே நடுக்கமாகப் போய்விட்டது.

அவளது துயரத்தைக் கண்ட இளம்துறவி, அவள்மீது இரக்கம்கொண்டு, ‘அம்மா குழந்தையை நீ உன் தோளில் பத்திரமாக வைத்துக்கொள்’ என்று சொல்லிவிட்டு, அப்படியே அவளைத் தன் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு ஆற்றைக் கடந்து, அக்கரை போய்ச் சேர்ந்த உடன் அவளை இறக்கி விட்டுவிட்டுத் தன் ஆசிரமம் போய்ச் சேர்ந்தார்.

இதைக் கண்ட முதிய துறவிக்கு, இளந்துறவிமேல் கோபமோ கோபம்! அன்று முழுவதும் அவருடன் பேசவேயில்லை. அடுத்த நாள் மாலைக் கூட்டத்தில் ‘மாசற்ற மனம்’ என்ற தலைப்பில் முதிய துறவி பேச விருந்தார். அப்போது முன்வரிசையில் இளந்துறவியைக் கண்ட அவருக்கு ஆத்திரம் பொங்கியது.

அவரைப் பார்த்து, “நீ எழுந்திரு. இந்த இடத்தில் உனக்கு வேலையில்லை. நீ ஒரு இளம் பெண்ணைத் தொட்டுத் தோளில் சுமந்தது பெரிய தவறு. சந்நியாசத்துக்கு இழுக்கு. துறவுக்குப் பழி. ஆசிரமத்திற்கே மானக் கேடு” என்று இரைந்தார்.

இவையனைத்தையும், சற்றும் படபடப்புக் கொள்ளாமல் அமைதியாகக் கேட்டு, நிதானமாக எழுந்து நின்று, இளந்துறவி சொன்னார் :

“சுவாமி, நான் அப்போதே ஆற்றங்கரையிலேயே அவளை இறக்கி விட்டுவிட்டேனே! இரண்டு நாளாக்ச் கவாமிகள் அப்பெண்ணை இன்னும் சுமந்து கொண்டிருக்கிறீர்களே!—ஏன்?” என்று கேட்டார். அவ்வளவுதான்!

முதிய துறவி இதற்குப் பதில் கூற முடியாமலும், மாசற்ற மனத்தைப் பற்றிப் பேச முடியாமலும், அவ்விடத்தை விட்டு எழுந்து போய்விட்டார்.

எப்படி இந்த மாசற்ற மனம்?


32. நாடு எங்கே போகிறது?

சுவாமி சச்சிதானந்தா என்ற தமிழகத்துத் துறவி, அமெரிக்காவில் ‘யோகிராஜ்’ என்ற சிறப்புடன் அமெரிக்க மக்களுக்கு ‘யோகாசனப் பயிற்சி’ அளித்துவருகிறார். இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்டவர் அவருக்குச் சீடராக இருந்து யோகப் பயிற்சி பெறுகின்றனர். அந்த ஆசிரமத்திற்கு அமெரிக்க அரசாங்கமே அருந் துணையாக இருந்து பேருதவி செய்துவருகின்றது.

சென்ற ஆண்டு, தில்லி மாநகரில், காய்கறி உணவு மாநாடு நடந்தது. அதற்குத் தலைமைதாங்க இந்தியப் பேரரசு இப் பெருந் துறவியை அழைத்தது.

அப்போது, தொழிலதிபர், பொள்ளாச்சி திரு. மகாலிங்கம் அவர்கள், அவரைச் சென்னைக்கு வரவழைத்து, அவருக்கும் அவரது சீடர்கள் அனைவருக்கும் சிறப்பான முறையில் வரவேற்பு நிகழ்த்தினார்.

அவர்கள் சென்னையிலிருந்து கோவைக்கு செல்வதற்குமுன், நானும் என் நண்பர்கள் சிலரும் சேர்ந்து திருச்சியிலே அவர்களுக்கு ஒரு வரவேற்பு விழாவினை ஏற்பாடு செய்தோம். சுவாமியும் வந்தார்கள்.

அந்த விழாவில் சுவாமி யோகிராஜ், அவரது சீடர்கள் 32 பேர், நாங்கள், எங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், பொதுமக்கள் அனைவரையும் சேர்த்து மொத்தம் 90 பேர்தான் அங்குக் கூடியிருந்தோம்!

அதே மன்றத்தில், அடுத்து நாள், ஒரு புகழ்பெற்ற சினிமா நடிகைக்கு பாராட்டுவிழா நடந்ததில், அவரைப் பார்க்க ஐயாயிரம் பேர் கூடிக் கொட்டகையில் புகுந்து இடித்துக் கதவு சன்னல் எல்லாம் பெயர்ந்துபோய், நாற்காலி எல்லாம் உடைந்து, அவரைப் பார்த்தவர் பார்க்காதவரெல்லாம் சட்டைகள் கிழிந்து, வீடுபோய்ச் சோர்ந்தனர் என்ற செய்தி என்னை மிகவும் வருத்தியது.

இது நம்நாடு அறிவாளிகளின் பின்னே போகவில்லை என்பதையும், யார் பின்னாலேயோ போய்க்கொண்டிருக்கிறது என்பதையும் காட்டிக் கொண்டிருக்கிறது.

33. மொட்டைத் தலைக்கு சுங்கம் உண்டா?

ஒர் ஊரிலே பெரிய மாரியம்மன் கோவிலில் திருவிழா நடந்தது. அக்கம் பக்கத்திலுள்ள ஊர்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அங்கே வந்து வழிபாடு நடத்தினர். வேண்டுதலை நிறைவேற்ற மொட்டையடித்துக் கொண்டனர்.

அவர்களில் ஒருவன், தன் குடும்பத்துடன் மொட்டை அடித்துக்கொண்டு, திருவிழாவையும் கண்டுகளித்துவிட்டு ஊர் திரும்பினான். வழியிலே ஒரு சுங்கச் சாவடி. அங்கு பலகையில் ஏதோ எழுதியிருந்தது. அருகில் அதிகாரி ஒருவனும் நின்றுகொண்டிருந்தான்.

இவன் அவனிடம் போய், ‘மொட்டைத் தலைக்குச் சுங்கம் உண்டா?’ என்று கேட்க, அவனும் ‘ஆமாம்! தலைக்குக் காற்பணம்’ என்றான். இவன் தன்னுடன் வந்தவர்களின் தலையை எண்ணிக் கணக்குப் பார்த்துக் காசைக் கொடுத்துவிட்டு ஊர் வந்து சேர்ந்தான்.

தன் ஊரில் திருவிழாவுக்குப் போய் மொட்டையடித்து வந்தவர்களைப் பார்த்ததும், ‘நீங்கள் எவ்வளவு சுங்கம் கொடுத்தீர்கள்?’ என்று விசாரித்தான். அவர்கள் அனைவருமே ‘சுங்கமா? நாங்கள் ஒன்றுமே கொடுக்க வில்லையே’ என்றார்கள். ‘பிறகு எப்படி உங்களை சுங்கச் சாவடியில் வெளியே விட்டார்கள்?’ என்று இவன் கேட்டான். அதற்கு அவர்கள் மொட்டைக்கு யாரும் சுங்கம் வசூலிக்கவில்லையே?’ என்று சொன்னார்கள்.

அப்போதுதான் அவனுக்கு உண்மை புரிந்தது. தவறு நம்முடையதுதான். நான் போய் வலியக் கேட்டதால் தானே அவன் தன் வருமானத்திற்கான வழியைத் தேடிச் செய்துகொண்டான் என்று எண்ணி வெட்கப்பட்டான்.

எத்தனையோ பேர் — இப்படித்தான், வாழ்க்கையிலே தெரியாத செய்திகளில்—தன்னலமே குறியாக உள்ளவர்களிடம் வலியப்போய் ஆலோசனை கேட்டுப் பிற்கு அவதிப்படுவதைப் பார்க்கிறோம்: அப்படித்தான் இவனும்!


34. படிக்க வைக்கும் முறை

நாற்பது ஆண்டுகளுக்கு முன், நண்பர் ஒருவரைத் தேடி, அக்கிராகரம் பக்கமாக நான் போய்க்கொண்டிருந்தேன்.

அங்கே ஒரு வீட்டுத் திண்ணையில் நின்ற பாட்டி: “தம்பி, தம்பி, இங்கே வா” என்று என்னைக் கூப்பிட்டாள்.

நான் அருகில் சென்றதும், “தம்பி! உனக்குப் பெரிய புண்ணியமாகப் போகட்டும். என் பேரனுக்குக் கொஞ்சம் புத்திமதி சொல்லப்பா. இரவு பகலாக ஓயாமல் படித்துக் கொண்டே இருக்கிறான். இப்படிப் புத்தகத்தைக் கீழே வைக்காமல் படித்தால் அவனுக்கு மூளையல்லவா கலங்கி விடும். அப்படி அவனுக்கு ஏதாவது ஒன்று ஆகிவிட்டால், தாயும் இல்லை, தந்தையுமில்லை நான் மட்டும் என்ன செய்வேன்? ஆகவே, நீ அவனைப் படிக்காதே என்று புத்தி சொல்லிவிட்டுப் போ” என்றாள். எனக்கு ஒரே வியப்பு!

நம் வீட்டுப் பிள்ளைகளை நாம் ஓயாமல் படி படி என்று சொல்லிக்கொண்டேயிருந்தாலும் அவர்கள் படிப்பதாக இல்லை. இங்கே இந்தப் பாட்டி தன் பேரனைப்பற்றி இப்படிச் சொல்லுகிறாளே என்று எண்ணிக்கொண்டே, அந்தப் பன்னிரண்டு வயதுச் சிறுவனை அழைத்து, “தம்பி பாட்டி சொல்லைக் கேட்டு நடப்பா. படிக்கிற நேரத்தில் மட்டும் படி; மற்ற நேரத்தில் விளையாடு” என்று சொன்னேன்.

உடனே அந்தப் பாட்டி, தன் தலையில் அடித்துக் கொண்டு, “ஐயோ! இன்னொரு முறை என் பேச்சைக் கேள் என்று சொல்லாதே! ஒருநாள் அவனிடம் உனக்குத் தாயும் இல்லை, தந்தையும் இல்லை. நீ நன்றாகப் படித்தால்தான் பட்டம் பெறலாம். பட்டங்கள் வாங்கினால் தான் பெரியபெரிய பதவி கிடைக்கும். அப்போதுதான் பணக்கார இடத்தில் பெண் எடுக்கலாம். கார், பங்களா எல்லாம் வரும். உத்தியோகம் செல்வாக்கு எல்லாம் உண்டாகும்’ என்று சொன்னேன். அதுமட்டுமல்ல, ‘படிக்காவிட்டால் நீ தர்ப்பைப் புல்லை எடுத்துக்கொண்டு எங்கே கருமாதி என்று அலைந்து தர்ப்பணம் பண்ணித்தான் பிழைக்கணும்’ என்றும் சொன்னேன். என்பேச்சைக் கேட்ட அன்று முதல்தான் இவன் இப்படி ஆகிவிட்டான். நான் என்ன செய்வேன்?” என்று புலம்பினாள்.

நானும் அந்தப் பாட்டிக்கு ஆறுதலும், பையனுக்கு புத்திமதியும் சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்து என் தமக்கையிடம் நடந்ததைச் சொன்னேன். உடனே என் தமக்கை, “அவர்கள் படிக்கவைக்கும் முறையைப் பார்த்தாயா? அந்த பிராமணப் பையனுக்கு உண்டான உணர்ச்சி, தாழ்த்தப்பட்ட—பிற்படுத்தப்பட்ட குடும்பத்திலுள்ள பிள்ளைகளுக்கு உண்டானால், எதிர்காலம் எவ்வளவு நன்றாக இருக்கும்?” என்று தன் விருப்பதை வெளிப்படுத்தினார்கள்.

35. நமக்கு நாமே எதிரி!

காட்டிலே ஒரு சிங்கம் மற்ற மிருகங்களைத் துன்புறுத்தி அடித்துத் தின்று கொண்டிருந்தது. இதனால் பிற வனவிலங்குகள் யாவும் கூடி ஒரு முடிவுக்கு வந்தன. சிங்கத்திடம் சென்று. “இன்று முதல் எங்களை அடித்துத் துன்புறுத்தாதீர்கள். நாங்களே முறைவைத்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவராக உங்களிடம் வந்து சேர்கிறோம்” என்று, அவை யாவும் விண்ணப்பித்துக் கொண்டன.

அதற்கு மிருகேந்திரனும் சம்மதிக்க, அவ்வாறே நடந்து வந்தது. ஒருநாள் முயலின் முறை வந்தது. அது சிங்கத்தைக் கொல்லத் திட்டுமிட்டுத் தாமதமாகவே சென்றது. சிங்கம் காரணம் கேட்க, ‘இக்காட்டில் வேறு ஒரு சிங்கம் என்னைத் தின்ன வந்தது. நான் ஒடிப்போய் அதனிடமிருந்து தப்பிவரத் தாமதமாயிற்று’ என்று விளக்கியது.

அதைக் கேட்ட சிங்கம் வெகுண்டு, ‘அச்சிங்கத்தைக் காட்டு’ என முயல் பின் தொடர்ந்து சென்றது. முயல் ஒரு கிணற்றைக் காட்டி, ‘இதற்குள் ஒளிந்திருக்கிறது’ என்றதும், சிங்கம் எட்டிப் பார்த்தது. சிங்கத்தின் நிழல் பாழுங்கிணற்று நீரில் தெரியவே, அதுவே தன் எதிரி என எண்ணிக் கிணற்றுக்குள் பாய்ந்து உயிர் நீத்தது.

இது ஒரு நீதிக் கதை. இந்தக் கதை எல்லோர்க்கும் தெரியும் ஆனால் நம்மில் பலர் இக் கதையின் நீதியைப் பற்றிச் சிந்திப்பதில்லை. ‘தனக்குத்தானே எதிரி’ என்பதை சிங்கம் உணராததால் அழிந்தது. மனிதரில் பலர், ‘நமக்கு நாமே எதிரி’ என்பதை இன்னும் உணரவில்லை.

சிங்கம் தண்ணிரில் தன் உருவத்தைப் பார்த்து எதிரி என்று பாய்ந்து இறந்தது. மனிதர்களும் தினமும் கண்ணாடியில் தங்கள் உருவத்தைப் பார்க்கும் போதெல்லாம், நமக்கு நாமே எதிரியாக இருக்கிறோம் என்று உணர வேண்டும்.

அப்படி உணராததால்தான், பலரை வைது, நாம் வையப் பெறுகிறோம்; சிலரை அடித்து நாம் அடிவாங்குகிறோம்; பலரை ஏமாற்றி நாம் ஏமாற்றம் அடைகிறோம்: பிறரைக் கெடுத்து, நாம் கெட்டுப்போகிறோம்.

இப்படிப் பார்க்கும்போது, ‘நமக்கு நாமே எதிரி’ என்ற உண்மையை மக்கள் என்று உணர்ந்து கொள்ளப் போகிறார்களோ அன்றுதான் அவர்களின் வாழ்வில் ஒரு நல்ல திருப்பமும் ஒளியும் உண்டாகும்’ என்பது தெளிவாகிறது.


36. கிளியும் ஓநாயும்

ஒரு காட்டிலுள்ள ஆலமரத்தின்மேல் அமர்ந்திருந்த கிளியும், கீழே நின்றிருந்த ஒநாயும் இவ்வாறு பேசிக் கொண்டன :

கிளி : ஒநாய் அண்ணே! ஏன் விசனமா இருக்கீங்க?

ஒநாய் : உனக்குச் சங்கதி தெரியாதா கிளித்தங்கச்சி. நான் வேறே காட்டுக்கல்லவா போகப்போறேன்.

கிளி : ஏன் வேறு காட்டுக்குப் போறீங்க?

ஒநாய் : இந்தக் காட்டிலிருக்கிற புலியும் சிறுத்தையும் என்னைக் கண்டால் கடிக்க வருதுங்க. மானும் முயலும் என்னைக் கண்டால் ஒடிப் போகுதுங்க. நான் இங்கே இருந்து என்ன பயன்?

கிளி : நீங்க போகிற காட்டிலே இப்படியெல்லாம் உங்க கிட்ட நடந்துக்க மாட்டாங்களா, என்ன?

ஒநாய் : அந்தக் காட்டிலே இருக்கிற புலி சிறுத்தை யெல்லாம் என்னைக் கண்டதும் தடவிக் கொடுக்குது; மானும் முயலும் என்னோடு ஓடி விளையாடுது.

கிளி : அப்படியா? அப்படியானால் நான் ஒரு யோசனை சொல்கிறேன், கேள் அண்ணே! “உன் விஷப்பற்களையும், கூர்மையான நகங்களையும் இங்கேயே, இந்தக் காட்டிலேயே கழட்டி வைத்துவிட்டுப் போ!”

ஒநாய் : அதையெல்லாம் இங்கே கழட்டிப்போட்டு விட்டு போனால், அந்தக் காட்டிற்குப்போய் நான் என்ன பண்ணுவேன்?

கிளி : அப்படி நீ செய்யவில்லையானால், வெகுசீக்கிரத்தில் அந்தக் காடும் இந்தக் காடு மாதிரியே ஆகிவிடும் என்று சொல்லிவிட்டுப் பறந்து சென்றது கிளி.

இதிலிருந்து காட்டின்மேல் எந்தத் தப்பும் இல்லை; ஒநாய் நடந்துகொள்ளும் முறையில்தான் தப்பு இருக்கிறது என்று அந்தக் கிளி செல்லாமல் சொல்லிவிட்டது. நமக்கும் இது ஒரு படிப்பினை அல்லவா?

வார்ப்புரு:X—larger
 


37. அக்கால இசையறிவு


ஐம்பது ஆண்டுகட்கு முன், தமிழகத்திலே சிறந்து விளங்கிய இசையறிஞர்

காஞ்சிபுரம் நாயனா பிள்ளை,
பிடில் கோவிந்தசாமி பிள்ளை,
மிருதங்கம் அழகு நம்பியா பிள்ளை,
கஞ்சிரா தக்ஷனா மூர்த்தி பிள்ளை,
கொன்னக்கோல் மன்னர்குடி பக்கிரிசாமி பிள்ளை,

இப்படிப்பட்ட இசைமாமேதைகள் சேர்ந்த இசையமைப்பு ஒருசமயம் நடந்தது—அதுபோன்ற அமைப்பு அவர்கள் காலத்துக்கு முன்பும். அவர்கள் காலத்திலும், அதற்குப் பின்பும் அமைந்ததில்லை.

அத்தகைய இசையரங்கு நிகழ்ச்சி — நாமக்கல்லிலிருந்து மோகனூர்க்குப் போகும் நெடுஞ்சாலையிலே, மாலை 6 மணிக்கு நடந்து கொண்டிருந்தது. பெரிய மண்டபம்; மேடையில் கூட்டம் அதிகமாகக் கூடியிருந்தது

அதுநெடுஞ்சாலை வழி —

அந்த ஊர்ப் பக்கத்து — பணக்காரர் ஒருவர் — சலங்கை கட்டிய இரட்டை மாட்டு வண்டியில் அமர்ந்து போய்க் கொண்டிருக்கிறார்.

கையெழுத்து மறையும் மாலை நேரம் — சாலையில் ஒரே கூட்டம். அவர் பயந்து, தன் வண்டிக்காரனை, அது என்ன கூட்டம்? பார்த்து வா’ என்று அனுப்பினார். அவன் போய் விசாரித்து வந்து,

‘எஜமான், எஜமான் —’ என்று கத்திக்கொண்டே ஒன்றும் சொல்லாமல் மாட்டைத் தட்டி விரைவாக ஒட்டிக் கொண்டிருந்தான்.

செல்வந்தர் ‘என்னடா?’—என்று அதட்டிக் கேட்கவும்,

வண்டிக்காரன்—மிகவும்—பயந்து—

எஜமான், அது பெரிய கொள்ளைக்கூட்டம்—

"யாரோ', காஞ்சிபுரம் நயினாவாம்—மீசையும் தொந்தியும் பார்த்தால் பயங்கரமாயிருக்குது அகப்பட்டுக்கொண்டு அலறு அலறு என்று அலறுகிறார்.

யாரோ’ கோவிந்தசாமியாம், அவன் விடலிங்களா—

யாரோ’ புதுக்கோட்டை தக்ஷணா மூர்த்தியாம் கெஞ்சு கெஞ்சு கெஞ்செனு கெஞ்சிராறாம்—

யாரோ’ மன்னார்க்குடி பக்கிரியாம்—அந்த ஆள் கன்னக்கோல் வைச்சிருக்கிறாரு—

அப்படியே கூட்டம் அவங்களை அமுக்கிக்கிட்டிருக்குங்க.

போலீஸ் சப்வீஸ் எல்லாம் அவங்களை வளைச்சு சுற்றிக்கிச்சுங்க—

நாம் இருட்டு முன்னே தப்பி ஊர் போய்ச் சேரனும்” என்று சொல்லிக்கொண்டே மாட்டைத் தட்டி விரட்டி ஓட்டுகிறான்.

—என்னே இசையறிவு!

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, தமிழர் தோன்றித் தமிழ்தோன்றி தமிழ்இசை தோன்றிய இசைக்கடல் இன்பத்தைச் சுவைக்கும் தமிழ்மக்கள் நடுவிலே—இப்படியும் சிலர் இருந்தனர் என்று தெரிகிறது.


38. சுருட்டும் திருட்டும்!

ஓர் ஊரிலே சுருட்டு வியாபாரிகள் இருவர். அவர்களுக்குள் போட்டி அதிகமாக இருந்தது.

போட்டி போட்டு ஒருவர்க்கொருவர் சுருட்டு விலையைக் குறைத்து விற்றுக்கொண்டிருந்தார்கள்.

தன் போட்டி ஆசாமி அசலுக்கும் குறைவாக விற்பதைக் கண்டு, மற்றவரால் அதைச் சமாளித்துப் போட்டி போட முடியவில்லை. எப்படிக் குறைந்த விலைக்கு விற்கிறார் என்பதும் விளங்கவில்லை.

இரவு கடையைப் பூட்டியதும். இவர் அவர் (போட்டி வியாபாரி) வரும் வழியையே—எதிர்பார்த்துக் கொண்டு நின்றார். அவரும் கடையைச் சாத்திவிட்டு வருகிறார்.

அவரை நோக்கி, “ஐயா, “நான், புகையிலையைத் திருடிக்கொண்டு வந்து விற்கிறேன்; எனக்கே இந்த விலை கட்டுப்படி ஆகலையே? உங்களுக்கு எப்படிக் கட்டுகிறது?” —என்று கேட்டார்.

அதற்கு அவர், “உன்னைப் போல முட்டாள் அல்ல நான்: சுருட்டையே திருடிக் கொண்டுவந்து விற்கிறேன் என்றார்.

எப்படி,

இந்த வணிகம்?

‘சுருட்டும் திருட்டும் அது கலந்த உருட்டும்’ எப்படி?

39. முதலாளிக்குத் திறமை இல்லை!

பெரும் பணக்காரர் ஒருவர். தொழில் அனுபவமுள்ள ஒருவர், ஆக இருவருமாகக் கூட்டுச் சேர்ந்து நகைக்கடையைத் தொடங்கினார்கள்.

பத்து ஆண்டு ஒப்பந்தம்; ஆளுக்குப் பாதி லாபம் எனக் கையெழுத்திட்டு—கடை நடந்து கொண்டிருக்கிறது.

மூன்று ஆண்டுகள் ஆயின, இதற்குள் உழைப்பாளி ஒரு வீடு கட்டிவிட்டான். நிலமும் வாங்கிவிட்டான்.

முதலாளிக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. “ஏதோ தவறு செய்கிறான்’ என்று சிலர் சொல்லியும் முதலாளி நம்பவில்லை. காரணம் இதுதான்

‘நமது ஒற்றுமையைக் கெடுக்க, பொறாமையால் யாரும் எதுவும் சொல்லுவார்கள்? முதலாளி, நீங்கள் அதனை நம்பிவிட வேண்டாம்’ என்று முன்பாகவே அவனும் சொல்லி வைத்திருக்கிறான்.

இம்மாதிரி நேரத்திலே, ஒருநாள் 70 ரூபாய்க்கு வாங்கின கற்களை 110 ரூபா கொள்முதல் என்று கணக்கிலே எழுதியிருந்தான். முதலாளிக்குக் கோபம் வந்துவிட்டது. உடனே கடையைப் பூட்டிச் சாவியைத் தானே வைத்துக்கொண்டார்.

உழைப்பாளி சும்மா இருப்பாரா? வக்கீலைக் கலந்து ஆலோசித்தார். அவர் மூலம் நோட்டீசும் கொடுத்து விட்டார். அந்த அறிக்கையிலே, உடனே கடையைத் திறக்கவேண்டும் என்றும், 3 வருட லாபம் விளம்பரத்திலே போய்விட்டது. ஆகவே கடையின் பெயர் மதிப்பில் பாதிப்பணம் வரவேணும் என்றும், இன்னும் எஞ்சிய 7 வருட லாபத்தில் தனக்கு ஏழு ஆயிரம் ருபாய் கிடைக்கவேண்டும் என்றும் கண்டிருந்தது.

இதை எடுத்துக்கொண்டு போய் முதலாளி பல வக்கீல்களிடம் கலந்து யோசனை கேட்டார். அவர்கள் எல்லாரும் “—கோர்ட்டுக்குப் போகவேண்டாம். போனால் சட்டப்படி இதுதான் நிலைத்து நிற்கும். யாரையாவது ஒருவரை வைத்துப் பஞ்சாயத்துச் செய்துகொள்ளுங்கள். இதுதான் நல்லது”—என்று சொன்னார்கள்.

இதனால் முதலாளி என்னிடம் வந்து இவ்வழக்கைத் தீர்த்துவைக்கும்படி கேட்டுக்கொண்டார்.

கடைவீதியில் இதைப்பற்றி விசாரித்ததில், முதலாளி சொன்னது உண்மையென்றும், கூட்டாளி செய்தது தவறு என்றும் எனக்கு விளங்கியது.

ஒர் ஆள்மூலம், ஆயிரம் ரூபாயுடன் வரும்படி முதலாளியையும், உடனே வரும்படி உழைப்பாளியையும் வரச்சொன்னேன். இருவ்ரும் வந்தனர்.

‘நான் ஆயிரம் ரூபாயை முதலாளி கொடுக்கவும், உழைப்பாளி பெற்றுக்கொள்ளவும் செய்தேன்.

‘இனி எனக்கும் உனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை’ என்று எழுதிக் கொடுக்கும்படியும் செய்தேன். எழுதித் தந்தனர்: வழக்கு முடிந்துவிட்டது.

இருவரும் என் இடத்தை விட்டுப் புறப்பட்டனர். மெத்தைப் படியிலே தயங்கித் தயங்கி நின்று, திரும்பவும் என்னிடம் வந்தார் உழைப்பாளி.

அவர் சொன்னது— "முதலாளி எங்கெங்கோ அலைந்தார். ஒன்றும் பலிக்க வில்லை, நீங்கள் சொன்ன முடிவை நான் ஏற்றுக் கொள்வேன் என்றெண்ணி கடைசியாக ஐயாவிடம் (தங்களிடம்) வந்தார். அந்தக் கடையைத் தயவுசெய்து என்னிடம் கொடுக்கச் செய்யுங்கள். அவரால் கடையை நடத்தமுடியாது.

அவருக்குத் திறமை இல்லை”—என்று சொல்லி முடித்தான். “அவருக்குத் திறமை இல்லை என்பதை எப்படிக் கண்டாய்?” என்று கேட்டேன்.

அதற்கு, “நான் ஊரில் இல்லாதபோது, 1¼ பவுன் திருட்டுத் தங்கத்தை விவரம் தெரியாமல் விலை கொடுத்து வாங்கிவிட்டார்.” போலீசார் வந்து பிடித்துக் கொண்டுபோய் காவலில் வைத்துவிட்டனர்.

அப்போது அவர் மனைவி மக்கள் எல்லாம் என்னிடம் வந்து, ‘நாங்கள் என்ன பண்ணுவோம்?"—என்று கதறினார்கள்.

நான் உடனே போய்ப் பார்க்கிறவர்களை எல்லாம் பார்த்து—பிடிக்க வேண்டியவர்களை எல்லாம் பிடித்து. செய்யவேண்டியதை எல்லாம் செய்து—அவரைக் கூட்டி, வந்துவிட்டேன். இப்படிச் செய்ய இவரால் முடியுமா?”

—என்று என்னைக் கேட்டதும், எனக்குத் தலை சுற்றியது.

பார்க்கிறவர்களைப் பார்ப்பது—

பிடிக்கிறவர்களைப் பிடிப்பது—

கொடுப்பதை எல்லாம் கொடுப்பது—

செய்வதை எல்லாம் செய்வது—

என்பனவாகிய காரியங்களை அவன் “திறமை” என்று சொன்னது—இன்னும் என் நெஞ்சை விட்டு நீங்கவில்லை.

நமது முன்னோர்கள் எது எதை அயோக்கியத்தனம் என்று கைவிடச் சொன்னார்களோ, அதையெல்லாம் இப்போது ‘திறமை’ என்று சொல்கிற காலமாகப் போயிற்று—என்ன செய்வது?


40. இது என்ன உலகமடா!

தில்லி மாநகரத்திலே ஒரு இடுகாட்டின் நடுவில் பல சமாதிகள் இருந்தன. பெரியவர் ஒருவர் மிகவும் பயபக்தியுடனே இறந்தவர்களுக்கெல்லாம் அஞ்சலி செய்து கொண்டே சமாதிகளைச் சுற்றி வந்துகொண்டிருந்தார்.

அங்கே இருபது வயதுடைய இளம்பெண் ஒருத்தி, தன் கணவனின் சமாதி அருகே அமர்ந்து, அழுது கொண்டே சமாதிக்கு விசிறிக் கொண்டிருப்பதைக் கண்டார். அதுகண்டு மனம் இளகிய பெரியவர், அவள் பதியின்பால் கொண்டுள்ள பக்தியை மெச்சி. “அம்மா, நீ விசிறுகிற காற்று சமாதியின் அடியில் புதைந்துள்ள உன் கணவரின் உடலுக்குப் போய்ச் சேரும் என்றா நினைக்கிறாய்? ஏன் இந்த வீண்வேலை. துக்கத்தை விட்டு ஆறுதல் அடைவாய் மகளே!” என்று அன்போடு புத்திமதி கூறினார்.

அதற்கு அவளோ, “ஐயா! நீங்கள் என் நிலையை உணரவில்லை என்பது நன்கு தெரிகிறது” என்று சொன்னதுமே, பெரியவருக்கு அவள் நிலைகண்டு மிகவும் இரக்கம் ஏற்பட்டதால், அவர் கண்களிலும் கண்ணிர் வழிய ஆரம்பித்தது.

உடனே அவள் பெரியவரைத் தேற்றிவிட்டுச் சொன்னாள், “எனக்குத் திருமணமாகி ஒரு வருடந்தான் ஆகிறது. என் கணவர் மரணத்தின் பிடியில் இருக்கும் போது, என்மேல் இரக்கம்கொண்டு ‘நான் இறந்தபின் நீ கல்யாணம் செய்துகொள்வாயா?’ என்று கேட்டார்.

“நான் செய்துகொள்வேன்” என்று சொன்னேன். ‘அப்படியானால், என் கல்லறையில் ஈரம் காயும் முன்பாகக் கல்யாணம் செய்துகொள்ளாதே?’ என்றார். நானும் ‘சரி’ என்றேன்.

இந்தக் கல்லறை கட்டி இரண்டு நாளாகப் போகிறது. இன்னும் ஈரம் காய்ந்தபாடில்லை. அதற்காகத்தான் சமாதி உலர விசிறிக் கொண்டிருக்கிறேன்” என்றாள்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெரியவர், ‘என்ன உலகமடா இது!’ என்று எண்ணி வியந்து, கண்ணீர் விட்டுக்கொண்டே அவ்விடத்தை விட்டு அகன்றார்.

இப்போது அவர் சிந்தும் அக்கண்ணிர் சமாதியில் உறங்கும் அவள் கணவனுக்காக!

வார்ப்புரு:X—larger


41. திருமண வீடு

ஒரு வீட்டிலே திருமணம் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. தட்டி ஒரமாக நின்ற வேலைக்காரனை அங்கு வந்த அவனது நண்பன் அழைத்தான். ‘இங்கே எப்படி உன் வேலை?’ என்று கேட்டான்.

அதற்கு வேலைக்காரன், “சாதாரண நாளிலேயே இந்த வீட்டு வேலை இழவு வீட்டு வேலை மாதிரி இருக்கும். இப்ப கலியாண வீட்டு வேலை. பேரிழலாய் இருப்பதற்குக் கேட்பானேன்"—என்றான்.

“திருமண வீட்டிலே இழவு, பேரிழவு என்று பேசலாமா” என்று நண்பன் கேட்டான்.

அதற்கு அவ் வேலையாள்—

“நேற்று சீர்வரிசை கொண்டு வரும்போது எல்லோரும், பழத்தட்டு, பாக்கு, கற்கண்டு, பூத்தட்டு தூக்கிக் கொண்டார்கள். என் தலையிலே தேங்காய்த் தட்டைத் தூக்கிவைத்து விட்டார்கள். நான் என்ன செய்வது! பிணத்தைத் தூக்குகிற மாதிரி, அவ்வளவு கனமாக இருந்தது. தூக்கித்தானே நடக்கணும்"—என்று சொன்னான்.

இதனையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த, வந்திருந்தவர்களிலே ஒரு பெரியவர்,

“என்னப்பா, தாலி கட்டப் போகிற சமயத்திலே இழவு, பேரிழவு, பிணம்—என்று பேசலாமா?’—என்று கேட்டார்.

அதற்கு வேலைக்காரன்—

“போங்கையா—தாலி கட்டியதும் நீங்கள் எல்லாம் சாப்பிட்டுவிட்டுப் போய்விடுங்க. என்பாடல்ல இங்கே தாலி அறுது”—என்று சொன்னான். அதற்கு ஒன்றும் பேசாமலே பெரியவர் எழுந்து போய்விட்டார்.

எதை, எங்கு, யார், எவரிடத்தில்—

எப்படிப் பேசுவது என்பதை இன்னும் பலர் புரிந்து கொள்ளவில்லை.

—என்பதற்கு இது ஒரு சான்று.



42. திதி கொடுத்தல்

குப்புசாமி என்ற சிற்றூர்வாசி தன் தந்தைக்கு திதி கொடுக்க நினைத்தார். ஒரு ஐயரை அணுகினார். அவர் கொடுத்த பாட்டியல்படி சாமான்களை வாங்கி வைத்திருந்தார்.

ஐயர் வந்ததும் திதி கொடுக்கத் தொடங்கினார்.

குப்புசாமி, “இந்தச் சாமான்கள் எல்லாம் எதற்காக?"—என்று ஐயரைக் கேட்டார்.

அவர், “மேல் உலகத்தில் உள்ள உன் தந்தைக்கு மந்திரங்களை ஜெபித்து—ஜெபித்து அவருக்கு இவையெல்லாம் அனுப்பி வைக்கப்பெறும்” என்றார்.

குப்புசாமிக்குப் பெரிய மகிழ்ச்சி! தந்தை இறந்த பிறகும், அவர் உண்ண உணவு கொடுக்கின்றோமே என்ற மகிழ்ச்சி!

சடங்குகள் தொடங்கின.

ஐயர் சாமான்களைப் பார்வையிட்ட போது அங்கிருந்தது ‘புழுங்கல் அரிசி,’ ‘இது வேண்டாம் பச்சரிசி கொண்டு வா’—என்று சொன்னார்.

உடனே குப்புசாமி—

“சாமி! எங்கப்பாவுக்கு பச்சரிசி ஆகாது. அதைச் சாப்பிட்டதனால்தான் வயிற்றுவலி வந்து இறந்தார்.

“மேலுலகத்துக்கும் இதை அனுப்பி அவரைத் துன்புறுத்த வேண்டமே” என்று வினயத்துடன் வேண்டிக் கொண்டான்.

ஐயருக்கு, அப்ப—என்ன சொல்வது, என்ன செய்வது என்று விளங்கவே இல்லை.

உங்களுக்கு ஏதாவது விளங்குகிறதா?


43. நரியும் திராட்சையும்

கடும்பசியால் திராட்சைப்பழத் தோட்டத்திலே நரி நுழைந்தது. பழங்களை உண்ணவேனும் என்ற ஆசை. எட்டி எட்டிப் பார்த்தது. முடியாமல் நெடுநேரத்துக்குப் பின், ‘சீசீ! இந்தப் பழம் புளிக்கும்; இது வேண்டாம்’ என்று சொல்லிப் போய்விட்டது நரி.

இந்தக் கதையை என் பேத்தியிடம் சொன்னேன்.

பேத்தி, “தாத்தா அது உங்க காலத்து நரி, இந்தக் காலத்து நரி என்றால், ‘ஸ்டுல்’—பலகை எடுத்துக் கொண்டுபோய்ப் போட்டு, அதன்மேல் ஏறி, எல்லாத் திராட்சைப் பழங்களையும் நன்றாகத் தின்று விட்டு போய்விடும்—”

என்று சொல்லவே.

நான்—"இது இக் காலத்து நரிக்கதை போலும்” என்றேன்.


44. செட்டியாரும் காகமும்

செட்டியாரின் கடையிலே தெரியாமல் ஒரு வடையை எடுத்துக்கொண்டு போனது காகம்.

மரத்தில் இருந்துகொண்டே அதைத் தின்னத் தொடங்கியபோது ஒரு நரி பார்த்துவிட்டது.

நரி—"காக்கா காக்கா—உன் குரல் எவ்வளவு அழகாக—இனிமையாக இருக்கிறது, ஒரு பாட்டுப் பாடேன்” என்றது.

காகம் அதை நம்பி,

வாய்திறந்து—கா கா என்றது.

உடனே மூக்கிலிருந்த வடை விழவே—அதை நரி எடுத்துக்கொண்டு ஓடிவிட்டது. காகம் ஏமாந்தது—

இது கேட்ட என் பேத்தி—

“தாத்தா—உங்க காலத்து காக்கா கதை அது. இந்தக் காலத்து காகம்—

நரி பாடச் சொன்னபோது, வடையை காலில் வைத்துக்கொண்டு காகா—என்று பாடியது. நரி ‘உன் பாட்டு நன்றாக இருக்கிறது. ஒரு ஆட்டம் (டான்சு) ஆடு’—என்றது. உடனே காகம்.

வடையை மூக்கில் வைத்துக்கொண்டு (டான்சு) ஆட்டம் ஆடியது.

அதுகண்ட நரி, மறுபடியும், ‘'ஏ. காக்கா—உன் பாட்டும் ஆட்டமும் நன்றாக இருக்குது. ஆனால் கொஞ்சம் பாடிக் கொண்டே ஆடு'’ என்று கேட்டது. அதற்குக் காகம், சற்று நிதானித்து, வடையை முழுதும் தின்றபின்பு, காகா என்று கத்திப் பாடியும்,

தாதை என்று ஆடிக் காட்டியும், பறந்து ஓடிப் போய்விட்டது. .

—என்று பேத்தி கூறவே, நான் இது நவீன காலத்துக் காக்கைக் கதை போலும்—என்றேன்.

இது பழங்காலக் காக்கை, நரியை மட்டும் பொறுத்த தல்ல.

இக்காலத்துக் குழந்தைகளின் அறிவு வளர்ச்சியினையும் நமக்குக் காட்டுகிற கதையாகும்.


45. தன்னம்பிக்கை

வன விலங்குகளிலே புலி சிறுத்தை முதலியன வாழும் குகைகள் மிகவும் நாற்றமடிக்கும். அழுகல் இறைச்சியும் தோலும் முடியும் சிதறிக் கிடக்கும்.

ஆனால், சிங்கம் வாழும் குகையோ தூய்மையாக இருக்கும். அதற்குக் காரணம், நாளைக்கு வேண்டுமென்று இன்றைக்கே உயிர்களைக் கொன்று குகையில் கொண்டு வந்து இறைச்சிகளைச் சிங்கம் சேர்த்து வைப்பதில்லை. குகையினுள் பல நாள் படுத்து உறங்கும். இனி பசி தாங்காது என்றதும் மெல்ல எழுந்து குகையின் வாயிற் படிக்கு வந்து உடலை அசைத்து தலையை ஆட்டி—ஆ என்று கர்ச்சிக்கும்.

அந்த ஒலி எதிர்மலையிலே தாக்கித் திரும்பவரும். அங்கே காடு முழுதும் பரவியுள்ள மானும் முயலும் இதோ சிங்கம்—அதோ சிங்கம் என்று பயந்து நடுங்கிக் குறுக்கும் நெடுக்குமாக ஓடிவரும். அப்போது,

தன் குகை வாயிலண்டையிலே வருகிற ஒரு விலங்கை அடித்துத் தின்று, மீதியை அங்கேயே போட்டுவிட்டு. உள்ளே போய்ப் படுத்துக்கொள்ளும்.

எந்தக் கணம் தேவைப்படுகிறதோ அந்தக் கணமே தனக்கு உணவு தன் வாயண்டை வரும் என்ற திடமான நம்பிக்கை அதற்கு உண்டு. அவ்வளவு நம்பிக்கை சிங்கத்திற்கு!

பகுத்தறிவில்லாத வனவிலங்குகளுக்குள்ள இந்தத் தன்னம்பிக்கை—பகுத்தறிவு பெற்ற மனிதர்கள் பலரிடத்திலே இருப்பதில்லை.

தன் அறிவை நம்புவது; தன் பலத்தை நம்புவது; தன் பொருளை, தன் சமுதாயத்தை நம்பி வாழ்வது; இதுதான் தன் நம்பிக்கை!

இதைப் படிக்கிற நாம். இனியாவது தன்னம்பிக்கை கொண்டு வாழ்க்கை நடத்துவோமாக.

46. எனக்கு என்ன சொல்கிறீர்கள்?

ஒரு பெரிய குடும்பத்திலே பெருஞ் செல்வனாக வாழ்ந்த தலைவன், நோய்வாய்ப்பட்டு மரணப் படுக்கையிலே கிடந்தான்.

அவனுக்குப் பல பிள்ளைகள், பேரன் பேத்திகள். எல்லோரும் அவனைச் சூழ்ந்து கொண்டனர். “அப்பா எனக்கு என்ன சொல்கிறீர்கள்? அப்பா எனக்கு என்ன சொல்கிறீர்கள்? தாத்தா எனக்கு... ...”

அவர் மனைவியும் அருகில் நின்று கதறி, “எனக்கு என்ன சொல்கிறீர்கள்?” என்று பதைபதைக்கின்றாள். இனி பிழைக்கமாட்டான் என்று நிலைமை வந்ததும், ஒவ்வொருவராகச் சென்று “எனக்கு என்ன சொல்கிறீர்கள்?“ எனக் கேட்கின்றனர்.

நாள் முழுவதும் கண் மூடி, வாய் மூடிக் கிடந்த அவன் சற்று நினைவு வந்து, வாய் திறந்து, இவ்வளவு. நாளா சொன்னேன்! யார் கேட்டீர்கள்? இப்பொழுது மட்டும் கேட்க”...என்று சொல்லி நிறுத்திவிட்டான்.

இதிலிருந்து—தன் வாழ்நாள் எல்லாம் சொல்லுவதை சொல்லி வந்ததை எவரும் கேட்பதில்லை; கேட்காமல், சாகப்போகிற சமயத்தில் சொல்லுவதைத்தான் கேட்க விருப்பம் என்று தெரிகிறது— அது எந்த அளவுக்குப் பயன்படும் என்பதை—

எண்ணிப் பார்ப்பது நல்லது!

47. சவாரிக் குதிரை

இங்கிலாந்தை ஆண்ட மகாராணி விக்டோரியா வுக்கு ஒரு நாள் ஒர் ஆசை—தன் பேரனைத் (ஐந்தாம் ஜார்ஜு) தூக்கி மகிழவேண்டும் என்பது.

அதைப் பிறர் யாரேனும் பார்க்கப்படாதே என்ற அச்சம் வேறு இருந்தது. என் செய்வார்? சிறு குழந்தையைத் தூக்க ஆசை.

மகாராணியாயிற்றே! யாரும் இல்லாத நேரம், ஒரு நாள் தான் பேரனைத் தன் தலைக்கு மேல்தூக்கி வைத்துக் கொஞ்சத் தொடங்கினார்.

இதனை, அந்த அரண்மனை ஆள் எங்கிருந்தோ பார்த்துவிட்டான் மகாராணியிடம் ஒடோடி வந்தான்.

குழந்தையைத் தூக்கிய மகாராணி, கீழே வைப்பதைக் கண்டான்.

சொன்னான்— “உலகத்தை ஆளுகின்ற சக்கரவர்த்தியாக இருந்தாலும். தன் பேரக் குழந்தைகட்கு முதல் சவாரிக் குதிரை அவர்கள்தான்"—

என்று கூறி நகைத்தான்.

மகாராணியும் நகைத்தாள்!

இது பேரப்பிள்ளைகட்கும் பாட்டிக்கும் உள்ள தொடர்பைக் காட்டுகிறது. இப்பொழுதும் தன் பிள்ளைகளைத் தூக்கி மகிழாத பெற்றோர்கள் பலர், பேரப் பிள்ளைகளைத் துக்கி மகிழ்வதைக் காணலாம்.

—இது ஒரு சமுதாய அமைப்பு போலும்!

48. இல்லை போ!

“அம்மா தாயே! பிச்சை போடுங்க” என்று ஒரு பிச்சைக்காரன் ஒரு வீட்டின்முன் நின்று கத்தினான். அந்த வீட்டில் இருந்து ஒரு பிள்ளை வந்து, வீட்டில் ஒன்றும் மிச்சமில்லை; போ’ என்று சொல்லி அனுப்பினாள். அவனும் முணுமுணுத்துக்கொண்டே புறப்பட்டான்.

உடனே அவ்வீட்டின் உள்ளேயிருந்த அப்பெண்ணின் மாமியார் வாசற்படியில் வந்து நின்றுகொண்டு, பிச்சைக் காரனைக் கைதட்டிக் கூப்பிட்டாள் அவனும் சோறு கிடைக்கப் போவதாக எண்ணித் திரும்பிவந்தான்?.”

“ஏம்ப்பா? அவள் சொன்னதும் நீ போய்விடுவதா” என்று அதட்டினாள் மாமியார்.

“சிறுபிள்ளை சொன்னதை நம்பித் தெரியாமல் போய்விட்டேன் தாயே! நீங்கள் போடுங்கள்” என்று சட்டியை நீட்டினான் பிச்சைக்காரன்.

“ஆம்! நான்தான் இந்த வீட்டு மாமியார். அவளுக்கு என்ன இங்கு அதிகாரம்? நான்தான் சொல்லணும். இப்ப சொல்றேன், “இல்லை நீ போ” என்றாள் மாமியார்.

“ஏம்மா? இதைச் சொல்லவா அழைத்தீர்கள்? நான் என்னவோ உங்களை நம்பி......போங்கம்மா” என்று. மனம் வெதும்பிச் சொல்லிக்கொண்டே போனான்.

பிச்சைக்காரனுக்கு இல்லை என்று சொல்கிற அதிகாரம்கூட மருமகளுக்கு இருக்கக்கூடாது என்று எண்ணும் மாமியார்களும் சிலர் இருந்தனர் என்பது இதிலிருந்தே தெரிகிறது.

49. முருக்குச் சுட்டவள்!

மாதர் சங்கத்தில் பல பெண்கள் ஒன்றுகூடி சமையல் குறிப்புப் பற்றி அளவளாவினர்.

அப்போது,

ஒவ்வொரு பெண்ணும் தத்தம் வீட்டில் புதுப் புதுப் பலகாரங்கள் செய்தது பற்றிக் கலந்துரையாடினர். அதிலே ஒரு பெண், “இன்றுதான் நான் சுத்தமான நெய்யிலே முருக்குச் சுட்டேன். மிகமிக அருமையாக இருந்தது” என்று சொன்னாள்.

அதற்கு அடுத்தவள், “ஏன் இவ்வளவு நாட்களாக நீங்கள் முருக்குச் சுட்டதே இல்லையா?” என்று கேட்டாள்,

அதற்கு முருக்குச் சுட்டவள் “நேற்றுத்தானே என் மாமியாருக்கு, டாக்டர் எல்லாப் பற்களையும் எடுத்து விட்டார்’ என்று பதில் சொன்னாள்.

எப்படி மருமகள்?

முன்னே சொன்ன மாமியார்கள் மத்தியில் இப்படியும் சில மருமகள் இருந்தனர் என்றும் தெரிகிறதல்லவா?


50. வேலை வாங்கும் முதலாளி

தன்னிடம் வேலைக்கு வரும் வேலைக்காரர்கள் அனைவனரயும் முட்டாள்கள் என்றே கருதி, எதையும் விபரமாக எடுத்துச் சொல்லி அனுப்புவார் முதலாளி.

ஒரு சமயம், அவர் தன் வேலையாள் ஒருவனை அழைத்து, ‘நான் சொல்வதை மட்டும் நீ செய்தால் போதும். மற்றதைச் செய்யாதே’ என்று கண்டிப்பாய்ச் சொல்லி அனுப்பினார்.

அன்று மாலை குழாயிலிருந்து குடிநீர் கொண்டுவரக் குடத்தை கொடுத்து அனுப்பினார். “குடத்தை நன்றாக விளக்கி, உள்ளேயும் கை போட்டு நன்றாகக் கழுவணும். பிறகு குழாய்க்கு நேராகக் குடத்தை வைக்கணும் நீர் நிரம்பியதும் குடத்தை எடுத்து வரணும்” என்றெல்லாம் சொல்லி அனுப்பினார்.

அப்படியே அவன் குடத்துடன் சென்றான். குடத்தை விளக்கினான், கழுவினான். குழாய் அடியிலே குடத்தை வைத்துவிட்டு, நின்று கொண்டிருந்தான்.

வெகுநேரமாகியும் குடிநீர் கொண்டுவரச் சென்றவனைக் காணவில்லையே என்று எண்ணி, முதலாளி, வெளியே வந்து எட்டிப் பார்த்தார்.

“டேய், அங்கே இன்னும் என்ன செய்கிறாய்? தண்ணிர் வரவில்லையா?” என்று கேட்டார்.

“இல்லை எசமான். தண்ணிர் நன்றாகத்தான் வருகிறது. குழாய்க்கு நேராகத்தான் குடத்தை வைத்திருக்கிறேன். இன்னும் நிரம்பவில்லை” என்றான்.

“ஏண்டா அப்படி? என்று குழாய்க்குச் சென்று பார்த்தபோது, அவன் குடத்தை தலைகீழாக கவிழ்த்து வைத்து இருந்தான். அதை முதலாளி நிமிர்த்து வைத்ததும் குடம் நிறைந்தது.

“தாங்கள் இதைச் சொல்லவில்லையே எசமான்” என்றான் வேலையாள்.

வேலையாள் முட்டாள் என்று நடத்துவதால் முதலாளிகளுக்கும் புத்திக் குறைவு நேர்கிறது போலும்.

51. மருமகன்களின் அறிவுத் திறமை

பெருஞ் செல்வந்தர் ஒருவர் தன் பெண்ணுக்கு வெகு நாட்களாக ஒரு அறிவாளி மாப்பிள்ளையைத்தேடிக் கொண்டிருந்தார்.

ஒருநாள் இரண்டு பேர் தங்களைப் புத்திசாலிகள் என்று சொல்லிக்கொண்டு வந்தனர்.

செல்வந்தரும் வந்தவர்களை வரவேற்றுத் தன் மூத்த மாப்பிள்ளைக்கும் சேர்த்து மூன்று இலைகள் போட்டு உணவு பரிமாறி, அவர்களைச் சாப்பிடச் செய்தார்.

அப்போது பரண்மேல் ஏதோ ஒடுகிற சத்தம் கேட்கவே ‘அது ஒன்றுமில்லை; எலி ஒடுகிறது’ என்றார் மூத்த மாப்பிள்ளை.

வந்தவரில் ஒருவன் ‘அட தெரியாமல் போச்சே! காது குடைய அதிலே ஒர் இறகு பிடுங்கியிருக்கலாமே? என்றார்.

அது கேட்டு, அடுத்தவன் ஓயாமல் சிரித்தான். ‘என்ன சிரிக்கிறீர்கள்?’ என்று கேட்டதும், அவன் சொன்னான்,

“அந்த ஆள் ஓடினது உடும்பு’ என்று நினைத்து அப்படிச் சொல்கிறான். அதனால்தான் சிரித்தேன்’ என்றார்.

உடனே செல்வந்தர், “உங்கள் புத்திசாலிதனத்தை மிகவும் மெச்சினோம். மிக மிக நன்றி, நீங்கள் இருவருமே போய் வாருங்கள்” என்று அவர்களை அனுப்பி வைத்தார்.

52. அறத்தால் வருவதே இன்பம்

“அறத்தால் வருவதே இன்பம்” என்பது ஒரு குறட்பாவில் பாதி அடி. கடமையைச் செய்து மகிழ்வது தான் உண்மையான ம்கிழ்ச்சி என்பது இதன் பொருள்.

இரவு 11 மணி அடித்தும் உறங்காமல் படுக்கையிலே புரண்டு கொண்டிருந்த கணவனைப் பார்த்து, “ஏன் இப்படிப் புரண்டு புரண்டு படுக்கிறீர்கள்; துரக்கம் வரவில்லையா?” என்று கேட்டாள் மனைவி.

‘ஒன்றும் இல்லை’ என்றான் கணவன். மணி 12 ஆகியது. ஒன்று அடித்தது, இரண்டும் ஆகிவிட்டது. அப்போதும் உறங்காமல் இருந்த கணவனைப் பார்த்து உண்மையைச் சொல்லுங்கள், என்ன காரணம்?” என்று. வருத்தத்துடன் மனைவி கடுமையாகக் கேட்டாள்.

எதிர் வீட்டுக்குப்பக்கத்தில், மாடியில் உள்ள வங்கியில் ரூ 10,000 கடன் வாங்கியிருந்தேன். நாளையுடன் கெடு முடிகிறது. நாளை காலை 10 மணிக்குள் பணத்தைக் கட்டியாக வேண்டும். கையிலும் பணம் இல்லை. என்ன செய்வதென்று தெரியாமல், உறக்கம் வராமல் தவிக்கிறேன்” என்றான் கணவன். “தெரிந்தவர் யாரிடமாவது கேட்டுப் பார்த்தீர்களா?” என்றாள்; “இன்று காலை முதல் இரவு வரை, போகாத இடமெல்லாம் போய், கேட்காதவரிடமெல்லாம் கேட்டும் பலன் ஒன்றும் இல்லை. அலைச்சல் தான் மிச்சம்” என்றான் கணவன்.

இது கேட்ட மனைவி, “கொஞ்சம் இருங்கள் வருகிறேன்” என்று சொல்லிச் சென்றாள். அந்த வங்கி மாடிக்குச் சென்று, கதவைத் தட்டி, உறங்கிக் கொண்டிருக்கும் மானேஜரை எழுப்பினாள். “என்னம்மா! இந்த நேரத்தில்?” என்று அவர் கேட்க,

“என் கணவர் உங்கள் வங்கியில் வாங்கிய 10 ஆயிரம் ரூபாயை நாளை கட்டவேண்டுமாமே! அவரிடம் கையில் பணம் இல்லை. யார் யாரையோ கேட்டுப் பார்த்திருக்கிறார். கிடைக்கவில்லை. அவரால் நாளைக்கு அந்தப் பணத்தைக் கட்ட முடியாது. இதை சொல்விப் போகத் தான் வந்தேன்” என்று, அவரிடம் சொல்லிவிட்டு வந்து, தான் வீட்டில் நுழைந்து கதவைச் சாத்திவிட்டு வந்து, கணவரிடம்—

“இனி அவன் தாங்க மாட்டான். நீங்கள் தூங்குங்கள்” என்று சொன்னாள், சுடமை தவறாத அன்பு மனைவி.


53. மாப்பிள்ளை தேடுதல்!

முப்பது வயதான தன் பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடப் புறப்பட்ட ஒர் அந்தணனுக்கு கட்டுச் சோறு கட்டிக்கொடுத்து வழியனுப்பினாள் அவன் மனைவி.

நடையாய் நடந்து, அலைந்து அலுத்துப்போய், ஒரு வீட்டுத் திண்ணையிலே அந்தணன் தங்கியபோது, தன் கவலையையெல்லாம் அந்த வீட்டுக்காரனிடம் சொன்னான். அது கேட்ட அவன், “எனக்கு ஒரு மகன் இருக்கிறான். வயது 32 ஆகிறது. வரதட்சணை எல்லாம் வேண்டாம். உன் பெண்ணை அவனுக்கு மண முடிக்கலாம்” என்றான்.

அவனும் அகமகிழ்ந்து ‘சரி’ என்றான். அப்போது வீட்டுக்காரன் “ஒன்று மட்டும் சொல்லிவிடுகிறேன், பின்னால் பழி சொல்லாதே. என் மகன் வெங்காயம் சாப்பிடுவான்” என்று சொன்னான்.

அதைக் கேட்ட அந்தணனும், தன் வீட்டுக்கு வந்து மனைவியிடம் நடந்ததைச் சொல்ல. அவள் மகிழ்ந்தாள். ஆனால் “மாப்பிள்ளை எப்போதுமே வெங்காயம் சாப்பிடுவாரா?” என்று மட்டும் போய்க் கேட்டு வாருங்கள் என்று அனுப்பிவைத்தாள்.

இவனும் அதுபோலவே வந்து கேட்டான். அதற்கு மாப்பிள்ளையின் தந்தை, “எப்போதாவது மாமிசம் உண்ணும்போது மட்டும் வெங்காயம் சாப்பிடுவான்” என்றான்.

“எப்போதும் மாமிசம் சாப்பிடுவானா?” என கேட்க அவன் “சே.சே.கள்ளுக் குடிக்கிறபோது மட்டுமே மாமிசம் உண்பான்” என்றான்.

“எப்போதும் கள்ளுக் குடிப்பானா?” என்று கேட்க ‘சூதாட்டத்திலே தோற்றுப் போகிறபோது மட்டும் தான் குடிப்பான், கவலையை மறக்க” என்றான்.

இன்னும் என்ன பாக்கி? “வைப்பாட்டியும் உண்டா?” என்றான் இவன். அதற்குப் பையனின் தந்தை அவன் 8 மாதமாக ஜெயிலில் இருக்கிறான். எப்படி இப்போது வைப்பாட்டி வீட்டிற்குப் போவான்? வைப்பாட்டி பணம் கேட்டதால்தானே திருடிவிட்டு ஜெயிலில் இருக்கிறான் வேறு ஒண்னுமில்லிங்க.

“பொழுது போகச் சூதாடுவான் கவலையை மறக்கக் கள்ளு குடிப்பான். கறிதின்பான். கறி வாடைக்கு வெங்காயம் தின்பான். அவவளவுதான். வேறு என்னங்க அவனிடம் தப்பு இருக்கு?” என்றான்.

“போதும் ஐயா! போதும்! மாப்பிள்ளை அழகும், நீ வரதட்சணை வேண்டாம் என்ற கருணையும் இப்போது தான் புரிகிறது” என்று சொல்லிக்கொண்டே, திரும்பிப் பார்க்காமல் நடந்தான் அந்த அந்தணன்.

54. நாம் திருந்துவோமா?

ஒரு தந்தைக்கு நான்கு பிள்ளைகள். அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வரும். அது கண்ட தந்தைக்கு வருத்தம் தாங்கவில்லை. எவ்வளவோ நீதி சொல்லியும் அவர்கள் கேட்பதாக இல்லை. மறுபடியும் ஒருவருக்கொருவர் சண்டையிடத் தொடங்கினர்.

மனம் வெதும்பிய தந்தை ஒரு நாள், ‘கரும்புக்கட்டு’ ஒன்றை வாங்கிவரச் செய்து, அவர்களை அழைத்து ‘இந்தக கரும்புக் கட்டை அப்படியே உடையுங்கள்’ என்றார். அவர்கள் நால்வரும் எவ்வளவோ முயன்றும் கட்டோடு கரும்பை உடைக்க முடியவில்லை.

பின் தந்தையானவர் கட்டை அவிழ்த்துவிட்டார். கடைசி மகனை அழைத்து, அவற்றை உடைக்கச் சொன்னார். பையன் வேகமாக ஒவ்வொரு கரும்பாய் எடுத்து, அத்தனையையும் அவன் ஒருவனாகவே ஒடித்துத் தீர்த்தான்.

தந்தை தம் மக்களைப் பார்த்துச் சொன்னார் : “கரும்பு கட்டோடு இருக்கும்போது அதை ஒடிக்க முடிய வில்லை. கட்டு அவிழ்ந்து தனித்தனியானதும் உங்களில் சின்னப் பையன்கூட ஒடித்துவிடுகிறான்.

“அப்படியே, நம் குடும்பமும் ஒற்றுமையாக இருந்தால் இந்த ஊரில் உள்ளோர் அனைவரும் ஒன்று சேர்ந்தாலும் நம்மை ஒன்றும் அசைக்க முடியாது. உங்களுக்குள் வேற்றுமை வளர்ந்து, நீங்கள் பிரிந்திருந்தால், சிதறிப் போன கரும்புக்கு ஏற்பட்ட கதிபோல உங்களையும் விரைவில் ஏமாற்றி அழித்துவிடுவார்கள்” என்றார்.

அவன் மக்களும் மனம் திருந்தினர். நாம் திருந்துவோமா?

55. பந்தலிலே பாகற்காய்

பக்கத்து ஊரிலே ஒர் இழவு. இரண்டு பெண்கள் அந்தச் சாவுக்குப் போனார்கள். அங்கே ஒரு பந்தலின்கீழ் மேடையில் பிணத்தைச் சாத்தி வைத்து, பலருடைய பார்வையிலும் படும்படி வைத்திருந்தார்கள்.

இழவுக்குப்போன இரண்டு பெண்களும் மாறி மாறி எதிர் எதிராக அமர்ந்த பல பெண்களோடு சேர்ந்து அழத் தொடங்கினர். அதில் ஒருத்தி, பந்தலில் கொத்துக் கொத்தாய்ப் பாகற்காப் காய்த்துத் தொங்குவதைப் பார்த்துவிட்டாள். இதைத் தன்னோடு வந்த கூட்டாளிக்கு எப்படித் தெரிவிப்பது என்று யோசித்து, ராகம் இழுத்து, “பந்தலிலே பாகற்காய், பந்தலிலே பாகற்காய்” என்று ஒப்பாரி வைத்தாள்.

இதைப் புரிந்துகொண்ட மற்றவள், “போகையிலே பார்த்துக்கலாம்; போகையிலே பார்த்துக்கலாம்” என்று ஒப்பாரியிலேயே பதில் சொன்னாள்.

இவர்களிருவரும் ஒப்பாரியிலேயே பேசிக்கொண்டதைக் கவனித்த வீட்டுக்காரி, நாம் சும்மாயிருந்தால் பாகற்காய்க்கு ஆபத்து வந்துவிடும் என்று பயந்து, உடனே—

‘அது விதைக்கல்லோ விட்டிருக்கு, அது விதைக்கல்லோ...... விட்டிருக்கு’ என்று ஒப்பாரியிலேயே பதிலுக்குப் பாடி மூடித்தாள்.

இது கேட்ட இரண்டு பெண்களும் அதிர்ச்சியடைந்து, தம் முயற்சி பலிக்காமல் ‘கணவனைப் பறிகொடுத்தவளுக்கு பாகற்காயைப் பறிகொடுக்க மனமில்லையே’ என்று புலம்பிக்கொண்டே, வீடு வந்து சேர்ந்தனர்.

56. மூத்த மாப்பிள்ளை

ஒருசமயம் நான் என் நண்பர் ஒருவர் வீட்டிற்குப் போயிருந்தபோது, அவர் தன் அருகில் இருந்தவரை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். “இவர்தான் எங்கள் வீட்டு முதல் மாப்பிள்ளை. பெரிய மாப்பிள்ளையும் கூட. இவர் மிகவும் நல்லவர். ஏனெனில் எங்கள் குடுப்பத்துக்குப் பெரிய உதவி செய்துள்ளார். இதற்காக எங்கள் குடும்பமே இவருக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளது” என்று முகமலர்ச்சியுடன் கூறினார்.

நான் வியப்படைந்து, அப்படிப்பட்ட உதவி இவர் என்ன செய்தார்?” என்று வினவினேன்.

அவர் மிக அமைதியாகச் சொன்னார். “இவருக்குப் பெண் கொடுத்த பின்புதான், இனிமேல் எவருக்கும் பெண் கொடுத்தால் நன்கு ஆலோசித்து கவனித்துப் பெண் கொடுக்க வேண்டும் என்ற அனுபவமே எங்களுக்கு உண்டானது. அது இவர் எங்களுக்குச் செய்த மிகப் பெரிய உதவியல்லவா?” என்றார்.

நான் இடிந்துபோய் உட்கார்ந்திருந்தேன். என்னத்தைச் சொல்ல?

57. நீதிபதியின் மகன்

சென்னை உயர்நீதி மன்றத்தில் பல ஆண்டு பண யாற்றிய நீதிபதி ஒருவர்க்கு, ஒரே மகன்தான் துணை. அவனை நல்லமுறையில் வளர்த்துப் பெரிய ஆளாக்க எண்ணினார்.

தானே சமையல் செய்து, மிக எளிமையாகக் குடும்பம் நடத்தி, வேலைக்கும் சென்று வந்தால், மகனுடைய படிப்பில் தனிக்கவனம் செலுத்த அவரால் முடியவில்லை. அவனோ ஒழுங்காகப் பள்ளிக்குச் செல்லாமல் கூடாநட்புக் கொண்டு, நெறிதவறிய செயல்களில் ஈடுபட்டு, உல்லாசமாக வாழ்ந்துவந்தான். இதை அறிந்த நீதிபதி, மிகவும் அதிர்ச்சியடைந்து, தன்னைத்தானே வெறுத்து மனம் சலித்தார்.

பையன் வாலிபன் ஆனான். அவனுடைய தேவைகளுக்கு நிறையப் பணம் வேண்டியிருந்தது. ஆகவே, அவரை அதட்டியும், மிரட்டியும் பணம் பறித்து வந்தான். இதையெல்லாம் எண்ணி நாள் முழுவதும் துன்பப்பட்டார் நீதிபதி. மனம் வருந்தித் தன் உறவினர் சிலரை விட்டு மகனுக்குப் புத்தி புகட்டச் செய்தார். ஒன்றும் பலனளிக்கவில்லை.

ஒருநாள் இரவு மகன் தந்தையை அணுகிப் பணம் கேட்டபோது, அவர் அவனைத் தன் அருகில் அன்போடு அழைத்து, மிகநெருக்கமாக அமர்ந்து, “தம்பி! என் தந்தை ஒரு புரோகிதர். பரம்பரைச் சொத்து எதுவும் கிடையாது. சாப்பாட்டிற்கே கஷ்டம். புரோகிதம் பண்ணி வந்தால்தான் சாப்பாடு. தெரு விளக்கு வெளிச்சத்தில் தான் நான் படித்தேன். புத்தகங்களை இரவல் வாங்கித் தான் படித்தேன். என் செலவுக்குக் காலணாக்கூட கிடைக் காது. நான் இப்படிக் கஷ்டப்பட்டு வளர்ந்திருக்க, நீ இப்படி, நோட்டு நோட்டாகச் செலவழிக்கிறாயே! இது நியாயமா?” என்று கேட்டார்.

அதற்கு அவன் உடனே எழுந்து, “நீ புரோகிதருடைய மகனாகப் பிறந்தாய்; அதனால் கஷ்டப்பட்டாய்! நான் நீதிபதியின் மகனாகப் பிறந்திருக்கிறேன். நினைவு இருக்கட்டும்.” என்று கூறிவிட்டு வெளியேறினான். என்ன செய்வார் நிதிபதி?

வார்ப்புரு:X—larger


58. சீர்திருத்தம்

இன்றைக்கு 65 ஆண்டுகட்கு முன்பு, 1919ம் ஆண்டு, அமெரிக்காவில் ஒரு பெரிய கோடீசுவரர் இருந்தார், அவருக்குத் தன்னிடம் எத்தனை கோடி டாலர்கள் இருக்கிறது என்பதே தெரியாது. அவ்வளவு பெரிய செல்வந்தர்.

அவருடைய ஒரே மகன் யுத்தத்தில் இறந்ததைத் தொடர்ந்து, சகோதர பாசத்தால் மகளும், புத்திர சோகத்தால் மனைவியும், அவரை விட்டு மறைந்தனர்.

குடும்பத்தினர் அனைவரையும் இழந்த அவர், தன்னையும் ஒருநாள் சாவு தழுவ வரப்போவதை எண்ணி சிந்திக்கத் தொடங்கினார். உறவினர் என்று சொல்லவும் எவரும் இல்லை. தான் சாவதற்குள் இந்தச் சொத்துக் களை நல்ல வழியில் பயன்படுத்தச் செய்து மறைய எண்ணினார்.

இந்த எண்ணத்தை அவர் வெளிப்படுத்தியபோது, நண்பர்கள் பலர் கோயில் கட்டவும், மருத்துவமனை, கல்விக் கூடங்கள், அறநிலையங்கள் அமைக்கவும் அவருக்கு ஆலோசனை கூறினர்.

இதைக் கேட்ட செல்வந்தரோ, “இவையெல்லாம் அமெரிக்காவில் இருக்கின்றன. ஆனால் ‘சமூக சேவை’ என்பதே இங்கு இல்லை. இந்த அமைப்புக்கே என் சொத்துக்கள் பயன்பட வேண்டும்” என்று கூறினார். சமூக சீர்திருத்தத் தொண்டு செய்பவர்களை உண்டாக்கவும், நன்கு பிரச்சாரம் செய்யவும், சொற்பொழிவாளர்கள் தேவை என்றும், அவர்களுக்குப் பெருந்தொகை சம்பளமாகக் கொடுக்கப்படும் என்றும் விளம்பரம் செய்தார். இதற்கு அறிஞர்கள், பேராசிரியர்கள். சொற் பொழிவாளர்கள் ஆகிய பல துறையினரிடமிருந்தும் 832 விண்ணப்பங்கள் வந்து சேர்ந்தன.

அப்போது செல்வந்தர் கூறினார், “நான் ஒரு மூடன் அமெரிக்காவில் சீர்த்திருத்தம் இல்லை என்று நினைத்தேன். சமூகத் தொண்டு புரிந்து நம் நாட்டைச் சீர்த் திருத்த 832 பேர் வந்திருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் சமூக சீர்திருத்தம் என்ன என்பதை நன்கு உணர்ந்தவர்களும், அதை மக்களுக்கு போதிக்கும் ஆற்றல் உள்ளவர் களாகவும் இருக்கிறீர்கள். ஆகவே,...

“என் பணத்தை இதற்கு வீணாகச் செலவிட விரும்ப வில்லை. தயவு செய்து நீங்கள் 832 பேரும் எவரையும் திருத்த வேண்டியதில்லை. உங்களை நீங்களே திருத்திக் கொண்டால் போதும். நம்நாடு உருப்பட்டுவிடும்.” என்று சொல்லி, விடை கொடுத்து அனுப்பிவிட்டார்.

வார்ப்புரு:X—larger


59. யார் தவறு?

படிப்பறிவில்லாதவர் சட்டசபைத் தேர்தலில் நின்றார். வெற்றி பெற்றார். மந்திரியாகவும் ஆனார்.

அந்த ஊர்ப் பொதுமக்கள் மிகவும் மகிழ்ந்தனர் தங்கள் பள்ளிக்கூடக் கட்டிடத் திறப்பு விழாவிற்கு அவரை அழைத்தார்கள். அவரும் இசைந்துவிட்டார். ஆனால் அங்கே என்ன பேசுவது என்பது தெரியவில்லை.

தன் செயலரைக் கூப்பிட்டார்; பேசவேண்டிய பேச்சு—கேட்டுத் தெரிந்துகொண்டார்.

திறப்பு விழா மண்டபத்தே—

“இது ஒரு நல்ல பணி; இது போன்ற கட்டிடங்கள் இன்னும் பல கட்டியாக வேண்டும். இதிலே படிக்கின்ற மாணவர்கள் தொகை, மேலும் அதிக அளவில் பெருகி யாக வேண்டும் என்று நானும் வாழ்த்துகின்றேன். பெரு மக்களும் இது பெருகவேண்டுமென்று வாழ்த்துச் சொல்வார்கள்” என்றார். அவருக்கும் மகிழ்ச்சி, கூடியிருந்த எல்லோருக்கும் மகிழ்ச்சி

இதற்கு அடுத்த நாள் பக்கத்து ஊரிலே புதுக் கட்டிடம் — சிறைச்சாலைக்காக கட்டப்பட்டுத் திறப்பு

விழாவுக்கு எதிர்பார்த்திருந்தது. மாவட்ட ஆட்சியாளர். மந்திரியைத் திறப்புவிழாவுக்கு அழைத்தார். அமைச்சரின்

செயலாளர் அப்போது ஊரில் இல்லை. வெளியூர்

போயிருந்தார். அதனால் என்ன?

அமைச்சர் நினைத்தார், நமக்குக் கட்டிடம் திறந்து வைக்கிற பழக்கம் இருக்கிறதே என மகிழ்ச்சி.

சிறைச்சாலைக் கட்டிடத் திறப்பு விழா —

அங்கே அந்நேரத்திற்கு வந்தார்; மேடை ஏறினார் . பேச ஆரம்பித்தார்;

“இது ஒரு நல்ல பணி. இம்மாதிரிக் கட்டிடங்கள் இன்னும் பல பெருக வேண்டும். பலபேர் விரும்பி இங்கு வந்து தங்கியிருக்க வேண்டும். மேலும் இது ஓங்கி வளர்க—"என்று பேசி முடித்தார்.

—அவ்வளவு தான்.

மாவட்ட ஆட்சியாளருக்கு, என்ன செய்வதென்றே” தெரியவில்லை.

அவரும் விழித்தார்; அமைச்சரும் விழித்தார்.

அன்று மாலை, ஊர் மக்கள் எல்லாரும் கூடினர்பேசினர்.

‘இது அமைச்சர் தவறல்ல —

அவருக்கு ஒட்டுப் போட்டவர்களின் தவறு.” —என்று கூறி விருத்தம் தெரிவித்துக் கொண்டனர்.

60. பெரியாரும் ராஜாஜியும்

ஐம்பத்தைந்து ஆண்டுகட்கு முன், ஈரோட்டில் பெரியார் மாளிகையின் மாடியிலே ஒருநாள் உண்டியல் காசுகளை எண்ணிக் கொண்டிருந்தேன் நான்.

பெரியார் குடியரசு பத்திரிகைக்கு ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். அந் நேரம், அவர்கள் வீட்டுப் பையன் மாடி ஏறி வந்து, ஐயாவிடம், ‘ராஜாஜி வந்திருக்கிறார்’ என்று சொன்னான்.

உடனே பெரியார், தன் சால்வையை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு, கீழே இறங்கி ஒடோடிச் சென்று வணங்கி, அவரை மேலே அழைத்துவந்தார்.

‘ஏது தலைவர் இவ்வளவு தூரம்’ என்று கேட்டார் பெரியார்.

‘காரணம் இருக்கிறது’ என்று சொல்லிக் கொண்டே, தம் ஒரக்கண்களால் ராஜாஜி அவர் என்னைப் பார்த்தார்.

இக் குறிப்பை உணர்ந்த பெரியார். “அவர் நம்ம ஆள்தான். செய்தியைத் தாராளமாக சொல்லலாம் என்றார்.

அவர் (ராஜாஜி), “ஒரு சந்தேகம்; உங்களிடம் சொல்லி ஆலோசனை பெற வந்தேன்” என்றார்.

உடனே பெரியார்,

“சந்தேகமா — தலைவர்க்கா?”

“ஆலோசனையா — அதுவும் என்னிடமா?”

—என்று அடுக்கினார்.

“ஆமாம் நாயக்கரே, உம்மிடந்தான்—அது கேட்க வந்தேன்” என்று ஒரு சங்கதியைச் சொல்லி, “இதற்கு என்ன செய்யலாம்—என்று ஆலோசனை கேட்டார்,

“எனக்கும் கூடச் சிக்கலாகத்தான் தோன்றியது"பெரியார் ஒரு விநாடிகூடச் சிந்திக்காமல்,

“இப்படிச் செய்தால் என்ன?” என்றார். அதற்கு ஆவர்.

அதை நானுல் யோசித்தேன் நாயக்கரே. அப்படிச் செய்தால், பொதுஜனங்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்?—என்று திரும்பக் கேட்டார்.

அதற்குப் பெரியார்பொது ஐனங்கள்—என்ற சொல்லை மற்றவர்கள் யாரும் சொல்லலாம்; தாங்களும் நானும் (அதை) நினைக்கலாமா?"—என்று கேட்டார்.

உடனே இராஜாஜி—அப்ப சரி என்று எழுந்து போய்விட்டார்

இந்த உரையாடலின் கருத்து—எனக்குப் பெரு வியப்பை உண்டுபண்ணியது.

—தங்களைத் தவிர வேறு எவரும் பொது ஜனம் என்று இல்லை—தங்களின் கருத்துத்தான்—பொதுஜன வாக்கு—நாம்தான் பொதுஜனங்களை உண்டாக்கு வின்றோம்—என்பது அதன் முடிவு. —

அதுதான், நான் கற்றுக்கொண்ட அரசியலின் முதல் பாடம்.

61. இந்தி புகுத்தும் கதை—இட்லி, சட்னி, வேட்டி சட்டை

1982இல் தமிழக மந்திரி சபையில் இராஜாஜி அவர்கள் முதல்வராக இருந்தபோது, இந்தி கட்டாய பாடம் ஆக்கப்பட்டது. அதற்குத் தமிழ்நாடு முழுதும் கொதித்து எழுந்து பெரும் போராட்டம் நடைபெற்றது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தினால் பெரியார் பல்லாரிச் சிறையில் இருந்தார். அதை நடத்தவேண்டிய முழுப் பொறுப்பும் நான் ஏற்கவேண்டி நேர்ந்தது.

சட்டசபையில், ராஜாஜி ஒருநாள். ‘தமிழ் என்றால் இட்லி; இந்தி என்றால் சட்னி; இரண்டையும் கலந்து சாப்பிடுவதுதான் நல்லது’ என்றார்.

மற்றொருநாள், “தமிழ் என்றால் வேட்டி; இந்தி என்றால் சட்டை இரண்டையும் போட்டுக் கொள்வது தான் தமிழ் மக்களுக்கு நல்லது” என்றும் கூறுனார்.

அடுத்த நாள் திருவல்லிக்கேணியில் பெரிய கூட்டம்—மக்கள் திரண்டு நின்றனர்.

அந்த உவமைகளைப் பற்றி

மேடையில் நான் எழுந்து,

“சட்னி இல்லாமலே இட்லியைச் சாப்பிட்டாலும் சாப்பிடலாம்; இட்லியே இல்லாத போது சட்னியை எப்படி, சாப்பிடுவது?"—என்றும்

“சட்டை இல்லாமல் வேட்டியைக் கட்டிக்கொண்டு வீதியில் போகலாம்; ஆனால் வேட்டி இல்லாமல் சட்டையை மட்டும் போட்டுக்கொண்டு விதியில் எப்படி நடப்பது?—என்றும் கூறினேன்.

அதன் பிறகு—

அதிலிருந்து ராஜாஜி அவர்கள் இந்த உவமைகள் கூறுவதை விட்டுவிட்டார்,

அந்த ராஜாஜி அவர்களே—

1965—திருச்சிராப்பள்ளியில் நான் கூட்டிய இந்தி எதிர்ப்பு மாநாட்டில் வந்து கலந்துகொண்டு, பலமாக இந்தியை எதிர்த்துப் பேசினார். அது நாட்டில் பெரும் வியப்பை உண்டாக்கியது.

62. இளவரசனும் அரசனும்

அதிக வரி வாங்கி நாட்டு மக்களைத் துன்புறுத்திக் கொண்டிருந்தான் அந்நாட்டு அரசன். மக்கள் அனைவரும் ஒன்றுகூடித் தங்கள் மேல் கருணை காட்டுமாறு அரசனை மிகவும் மன்றாடி வேண்டினர்.

மறுநாள் அரசன் குடிமக்கள் அனைவரையும் அழைத்து, “தாங்கள் கோரிக்கைகளைப் பற்றிச் சிந்தித்தேன். இன்று முதல் நீங்கள் அனைவரும் வந்து, அரண்மனையிலிருந்து ஒரு மூட்டை நெல் எடுத்துக் கொண்டுபோக வேண்டும். ஒரு மூட்டை அரிசியாகத் திருப்பிக் கொண்டுவந்து கொடுத்துவிட வேண்டும். இது என்னுடைய உத்தரவு” என்றான்.

இதனால் மிக வருந்திய நாட்டு மக்கள் புலம்பவும், அரசனைத் திட்டவும் ஆரம்பித்தனர். இது அரசன் காதுக்கும் எட்டியது.

சிறிது காலம் கழித்து அரசன் நோய்வாய்ப்பட்டு இறக்கும் தருவாயில், தான் குடிமக்களுக்குச் செய்த தவறுகளுக்கு வருந்தி, தன் மகனை அழைத்து, “நான் மக்களை மிகவும் வருத்தி வரிகளை வாங்கிக் கெட்ட பெயர் எடுத்தேன். நீ இனிமேல் அப்படி நடக்கக் கூடாது. எனக்கு நல்ல பெயர் வரும்படி நடந்துகொள்ள வேண்டும் என்று பலவாறு புத்திமதிகள் சொல்லி உயிர் துறந்தான்.

இளவரசன் ஆட்சிக்கு வந்ததும், குடிமக்களைக் கூட்டினான். “என் தந்தையின் வேண்டுகோளை நான் எப்படியாவது நிறைவேற்றியாக வேண்டும். ஆகவே என் இமல் வருத்தப்படாதீர்கள்” என்று சொல்லி, “நாளை முதல் குடிமக்கள் அரண்மனையிலிருந்து ஒரு மூட்டை உமி எடுத்துக்கொண்டு போய், அதற்குப் பதிலாக ஒரு மூட்டை அரிசி கொண்டுவந்து இங்குப் போடவேண்டும். இன்று முதல் இது புது உத்தரவு” என்று கூறினான்.

இது கேட்ட மக்கள் அதிர்ச்சி அடைந்து ஐயோ அந்தப் புண்ணியவானே தேவலையே! நெல் கொடுத்து அரிசி கேட்டான். இந்தப் பாவி உமியைக் கொடுத்து அரிசி கேட்கிறானே?” என்று இறந்த அரசனைப் புகழ்ந்து இளவரசனை இகழத் தொடங்கினர்.

இளவரசனும் நாம் தந்தையின் சொல்லை நிறை வேற்றிவிட்டோம் என்று மகிழத் தொடங்கினான்.


63. குரங்கும் குருவியும்

மழைக்காகப் பயந்து மரத்தடியில் ஒதுங்கி நின்றது ஒரு குரங்கு.

அப்போது அம் மரத்தில் கூடு கட்டிக்கொண்டு வாழ்ந்துவரும் தூக்கணாங் குருவி, குரங்கைப் பார்த்து, “அண்ணே, நீ உருவத்தில் மனிதனைப் போலவே இருக்கிறாயே, உன் கை கால்களை உபயோகித்து ஒறு நல்ல குடிசை உனக்காகக் கட்டிக் கொள்ளலாமே! அதைவிட்டு நீ ஏன் இப்படி மழையில் நனையவேண்டும்?” என்று கேட்டது.

அதைக் கேட்ட குரங்கு, உடனே ஆத்திரமடைந்து, குருவிக் கூண்டைப் பிய்த்து எறிந்து நாசமாக்கியது.

அதனால் வருந்திய குருவி, அரசனிடம் சென்று முறையிட்டு, தனக்கு நீதி வழங்கும்படி கேட்டது.

அரசனும் விசாரணைக்காக குரங்கை அரண்மனைக்கு அழைத்தான். குரங்கும் ஒரு பெரிய பலாப்பழத்தைத் தன் தலையில் தூக்கி வந்து, யாருக்கும் தெரியாமல் அரசனுக்குப் பின்னால் வைத்துவிட்டு, எதிரில் வந்து நின்றுகொண்டது.

மிகவும் பயபக்தியுடன் தன்னை வணங்கி நின்ற குரங்கைப் பார்த்து அரசன், “ஏ அற்பக் குரங்கே உனக்கு எவ்வளவு திமிர்! ஒரு சிறு பிராணி உனக்கு நல்ல புத்திமதி சொன்னால், அதற்காக இப்படியா பழி வாங்குவது?” என்று கேட்டான்.

அதற்குக் குரங்கு, “மகாராஜா முன்னே பின்னே பார்த்துப் பேசுங்கள்” என்றது. அரசனும் திரும்பிப் பின்னால் பலாப்பழம் இருப்பதைக் கண்டான்.

உடனே அரசன் குருவியைப் பார்த்து. “ஏ அற்பக் குருவியே! உனக்கு என்ன திமிர் இருந்தால் குரங்குக்குப் போய் புத்தி சொல்வாய்? உன்னுடைய முட்டாள்தனத்திற்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும். சரி, தொலையட்டும். இத்தோடு நீ ஒடிப்போ” என்று கூறி, குருவியை விரட்டிவிட்டான்.

எப்படி பலாப்பழம் செய்த வினை.

64. உலகம் போச்சு

வெள்ளம் ஆற்றில் கரைபுரண்டு ஒடும்போது, அதில் அடித்துச் செல்லப்பட்ட நரி ஒன்று, “ஐயோ உலகம் போச்சு, உலகம் போச்சு’ என்று சத்தமிட்டுக் கொண்டே போனது.

கரையின் அருகிலிருந்த ஒரு குடியானவன் அது கேட்டு ‘ஐயோ, பாவம்’ என்று இரங்கி நீந்திப் போய் நரியைப் பிடித்துக் கரை சேர்த்துக் காப்பாற்றிய பிறகு கேட்டான். ‘உலகத்துக்கு என்ன ஆபத்து?” என்று.

அதற்கு நரி சொன்னது, ‘ஆமாம் நீ என்னைத் தூக்காவிட்டால் நான் இறந்திருப்பேன். எனக்கு உலகம் போச்சு அல்லவா? அதனால்தான் அப்படிக் கூவினேன்’ என்றது.

அதுகேட்ட குடியானவன். ஒரு தனிமனிதன் தன் நலம் கருதி எப்படிச் சமயத்திற்குத் தகுந்தாற்போல் பேசுவானோ, அப்படிப் பேசி தன் காரியத்தை சாதித்துக் கொண்டதே இந்தப் பொல்லாத நரி என்று மனதுக்குள் எண்ணி வியந்துகொண்டே சென்றான்.

65. அமைச்சர் பதவி

தன் உடன் பிறந்தவனுக்கு மந்திரி பதவி கொடுக்கும் படி அரசனை வற்புறுத்திக் கொண்டிருந்தாள் அவன் மனைவி. அரசனும், அரண்மனையில் இருந்தபடியே தன் மைத்துனரை வரச்சொல்லி உரையாடிக்கொண்டிருந்தான்.

அப்போது வீதியில் ஏதோ வண்டிச் சத்தம் கேட்கவே, அரசன் ஏதோ யோசனை செய்து, உடனே தன் மைத்துனனிடம், ‘அது என்ன வண்டி? விசாரித்துவா’ என்று சொல்லி அனுப்பினான்.

மைத்துனனும் ஒடிப்போய் விசாரித்து வந்து, அரசனிடம் ‘நெல் வண்டி’ என்று கூறினான். அரசன் ‘என்ன நெல்?’ என்று கேட்க, உடனே வெளியே ஒடிப் போய்வந்து ‘சம்பா நெல்’ என்று கூற, அரசன் “எங்கே போகிறது?” என்று கேட்டான். மீண்டும் வெளியே வண்டியின் பின்னால் ஒடிப்போய்க் கேட்டுவந்து ‘பக்கத்து ஊர் சந்தைக்குப் போகிறது’ என்றான். அரசன் என்ன விலை?’ என்றான். மீண்டும் மைத்துனன் வெகுதூரம் ஓடிவந்து வண்டியை விசாரித்து, “மூட்டை 7 ரூபாய்” என்று கூறினான். அரசன் ‘எவ்வளவு மூட்டைகள் வந்துள்ளன?” என்று கேட்டான். அதை விசாரிக்கப் போன மைத்துனன் மிகவும் களைத்துப்போய் திரும்பிவந்து கொண்டிருந்தான்.

சற்று நேரம் ஆகியும் மைத்துனன் திரும்பி வராததை அறிந்த அரசன், தெருவில் மீண்டும் வேறு வண்டிச்சத்தம் கேட்டதும், தேவியின் முன்னிலையிலேயே, மந்திரி பதவிக்காகத் தான் வரவழைத்திருந்த ஒருவனை அழைத்து, “வீதியில் என்ன வண்டி? விசாரித்து வா” என்றான்.

அவன் திரும்பி வந்து அரசனிடம், “வண்டியில் கேழ் வரகு, ஒரு வண்டியில் பத்து மூட்டை இருக்கிறது. மொத்தம் ஐந்து வண்டிகள். ஏழாவது மைலில் உள்ள சந்தைக்கு விற்பனைக்குப் போகின்றன. மூட்டை 6 ரூபாய் என்று சொல்கின்றனர். என் மதிப்பு 5 ரூபாய், மன்னரின் கட்டளை என்ன?” என்று சொல்லி நின்றான்,

அரசன், உடனே தன் தேவியைப் பார்த்து, “எங்கே மைத்துனரை இன்னும் காணோம்? இப்போது சொல்; யாரை அமைச்சராக்கலாம்?” என்று கேட்க, புதில் ஒன்றும் கூற முடியாமல் தலைகுனிந்து நின்றாள் பெருந்தேவி.


66. பல்லக்கும் கன்றுக்குட்டியும்

ஒரு மடத்திற்குச் சொந்தமான கன்றுக்குட்டியைக் காணாமல் தவித்த அந்த மடாதிபதி, தம் பல்லக்குத் தூக்கும் ஆட்கள் நால்வரையும் அழைத்து, கன்றுக் குட்டியைத் தேடி வரும்படி ஏவினார் அவர்கள் நால்வருமாகச் சேர்ந்து,

“சாமி, பல்லக்குத் தூக்குவதுதான் எங்கள் வேலை; கன்றுக்குட்டியைத் தேடுவது எங்கள் வேலையல்ல” என்று சொல்லிவிட்டனர்,

உடனே மடாதிபதி, “சரி, நானே கன்றுக்குட்டியைத் தேடப் புறப்படுகிறேன். பல்லக்குத் தயாராகட்டும்” என்றார். வெற்றிக் களிப்புடன் பல்லக்கைக் கொண்டு வந்தனர்.

மடாதிபதி அதில் ஏறி அமர்ந்து, ஊர் முழுவதும் பெரிய சாலைகள் எல்லாம் அலைந்து, பிறகு, சந்து பொந்து மூலை முடுக்குகளில் எல்லாம் பல்லக்கைக் கொண்டுபோகச் சொன்னார். மிகக் குறுகிய, நெருங்கடியான சந்துகளில் எல்லாம் போகமுடியாமல் கஷ்டப் பட்ட அந்த நால்வரும், பல்லக்கைக் கீழே இறக்கி வைத்து,

“சாமி, தாங்கள் இங்கேயே இருங்கள். நாங்களே போய்க் கன்றுக்குட்டியைத் தேடி வருகிறோம்” என்றனர்.

உடனே மடாதிபதி புன்னகையுடன் அவர்களைப் பார்த்து, “இவ்வளவு தூரம் நீங்கள் பல்லக்கையும், என்னையும் சுமந்துவந்து இங்கே இறக்கிவிட்டு, இப்போது தேடுவதை அப்போதே தேடியிருக்கலாமே!” என்றார்.

அவர்கள் வெட்கித் தலைகுனிந்து கன்றைத் தேடப் புறப்பட்டனர்.

இப்படிப்பட்ட வேலையாட்களும் உண்டு.


67. உள்ளுர் நிலைமை

தன்னை விந்து பார்க்கும்படி அந்த ஊர் பஞ்சாயத்து தலைவனுக்குக் கட்டளையிட்டிருந்தார் மாவட்ட ஆட்சியாளர். அவர் போய்ப் பார்க்கவில்லை. கடுமையான கோபத்துடன் அப் பஞ்சாயத்து போர்டு தலைவரை அழைத்துவரச் செய்து, ‘ஏன் வரவில்லை’ எனக் காரணம் கேட்டார் மாவட்ட ஆட்சியாளர்.

அதற்கு அவர் சொன்னார். “நான் எப்படி வரமுடியும். எங்க ஊரில் இஞ்சினீயர், தான் கட்டிய வீடு இடிந்து விட்டதே என்று அழுகிறார். டாக்டருக்கே காய்ச்சல் வந்து என்ன செய்வது என்று கதறுகிறார்.

“இதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தபோது, பள்ளிக்கூட வாத்தியார் தம் பிள்ளைகள் மூவருமே வகுப்பில் தேறவில்லையே. நான் என்னசெய்வேன் என்று என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டு அழுகிறார். ஊர் இப்படி இருக்கிறதனாலே நான் வரமுடியவில்லை. என்னை மன்னிக்கனும் எஜமான்” என்று பணிவோடு வேண்டிக் கொண்டார்.

அதற்கு ஆட்சியாளர் கேட்டார். இது உங்கள் ஊரில் மட்டும்தானா நடக்கிறது; நாட்டில் எல்லா இடங்களிலும் இப்படிதானே நடைபெறுகிறது. இதற்கா நீங்கள் வராமல் இருக்கலாமா? சரி நீங்கள்தான் வரவில்லையே, இதற்காக அங்கிருந்துகொண்டு நீங்க என்னதான் செய்தீர்கள்? அதையாவது சொல்லுங்கள்” என்றார் கலெக்டர். என்ன சொல்லுவார் பஞ்சாயத்துத் தலைவர்.

இது நம் நாட்டின் நிலை என்றா சொல்லுவார்?


வார்ப்புரு:Xx—larger

1929ல், அதாவது அறுபத்திஇரண்டு ஆண்டுகளுக்கு முன், நானும் பெரியாரும் திருநெல்வேலியில் ஒரு சொற் பொழிவுக்காகச் சென்றிருந்தோம்.

எங்களுக்காக ஏற்பாடு செய்திருந்த இல்லத்தை நாங்கள் அடைந்ததும், எதிர்பாளர்கள் அன்றைய கூட்டத்தை நடக்கவிடாமல் செய்வதற்காக அச்சடித் திருந்த எதிர்ப்பு நோட்டீசுகள் சிலவற்றைக் கண்டோம். அதில் பெரியார் புராணங்களையெல்லாம் பொய் என்று சொன்னவர். நாத்திகர்—பெரியார். அவரை இன்று நெல்லையில் பேசவிடக் கூடாது. என்றிருந்தது.

கூட்டம் மாலை 6 மணிக்கு என்பது எங்களுக்குத் தெரியும். மணி 6½யும் ஆயிற்று. எங்களை அழைத்தவர்களும் அங்கே வரவில்லை. ஆகவே, நான் பெரியாரிடம், நாம் பேசாமல் திரும்பிப் போய்விடுவது நல்லது என்றேன். அவரும் சரி என்று இரயில் நிலையத்திற்குப் போக ஏற்பாடு செய்யும்படி சொன்னார். நான் போய் எட்டணாவுக்குப் பேசி ஒரு குதிரை வண்டியைக் கூட்டிவந்தேன்.

வண்டியில் முதலில் என்னை ஏறச் சொல்லிவிட்டுப் வண்டியில் பின் ஏறி அமர்ந்து பெரியார் வண்டிக்

காரனிடம் கூட்டம் நடக்கும் இடத்தின் வழியாக இரயிலடிக்குப் போகும்படி சொன்னார். அந்த இடம் , வந்ததும் பெரியார் பார்த்தார். சுமார் ஐநூறு அறுநூறு பேர்கள் அங்கு கூடியிருந்தனர். மேடையில் மேசை நாற்காலிகள் எல்லாம் இல்லை, எங்களை வரவழைத்த ஆட்களும் இல்லை

உடனே பெரியார் வண்டியை நிறுத்தும்படி, சொல்லிக் கீழே இறங்கினார். தனியாகவே போய் மேடையில் ஏறினார். “பொதுமக்களே! நான் உங்கள் முன் இப்போது பேச வரவில்லை. ஒரு உண்மையைச் சொல்லிப் போகவே வந்தேன். புராணங்களைப் பொய் என்று நான் சொன்னதாக என்னை எதிர்த்து நோட்டீசு போட்டிருக்கிறார்கள். அது நான் சொல்லவில்லை.

“சைவப் புராணங்களை எல்லாம் பொய் என்று கண்டு பிடித்துச் சொன்னவர்கள் வைணவப் பண்டிதர்கள். வைணவப் புராணங்ளையெல்லாம் பொய் என்று கண்டு பிடித்துச் சொன்னவர்கள் சைவப் பண்டிதர்கள். இந்த இரண்டு புராணங்களுமே பொய்யாக இருக்குமோ என்று நான் எண்ணியதுண்டு. ஆக, புராணங்களைப் பொய் என்று சொன்னவர்கள் சைவ—வைணவப் பண்டிதர்கள் தான். இதைச் சொல்லிப் போகத் தான் நான் வந்தேன். என்மேல் பழிபோடாதீர்கள்” என்று சொன்னதும் ஒயாமல் கைதட்டி மக்கள் ஆரவாரம் செய்தார்கள், தொடர்ந்து ஒன்றரை மணி நேரம் பேசிக் கொண்டே யிருந்தார் அனைவரும் அமைதியாக இருந்து கேட்டார்கள்.

அந்தக் காலத்தில், பெரியாரும் நானும் சேர்ந்து பிரச்சாரப் பணியில் ஈடுபட்டதில் நடந்த இம்மாதிரி நிகழ்ச்சிகள் பலர் என் நினைவை விட்டு அகலவில்லை.

69. எழுவாய், பயனிலை

மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் வாழ்ந்த காலத்தில், அவர்களிடம் புலவர் பெருமக்கள் மேலும் கல்வி கற்க அடிக்கடி சென்றுவருவதுண்டு. பலரும் கவிபாடிப் பெருமையடைவதை அறிந்த பள்ளி மாணவன் ஒருவன் தானும் கவிபாட விரும்பினான். பிள்ளையவர்களை நெருங்கிக் கவிபாடச் சொல்லிக் கொடுக்கும்படி வேண்டிக் கொண்டான். அவர்கள் அவனது தமிழறிவை அறிய விரும்பி ஒரு சொற்றொடரைக் கூறி, இதன் (வாக்கிய உறுப்புகள்) எழுவாய், பயனிலை, செயப்படு பொருள் என்ன என்று கேட்டார். பையனும் சொன்னான். தவறுதலாக, உடனே மகாவித்துவான் அவர்கள்—

தம்பி, நீ எழுவாய்
உன்னால் ஏதும் பயனிலை,
நீ எழுந்து நடப்பதே இப்போது செயப்படுபொருள்.”

என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

கவிதைபாட எழுவாய் பயனிலையாவது தெரிந்திருக்க வேண்டும் என்பது அவர் கருத்து.எதுகை மோனை கூட இல்லாமல் இக்காலத்தில் கவிதை பாடுபவர்களைக் கண்டால் அவர் என்ன செய்வார்?

என்ன சொல்லுவார்?

வார்ப்புரு:Xx—larger


70. கரூர் திருச்சிப் புலவர்கள்

இருவரும் மாமன் மைத்துன உறவினர். கரூர்ப் புலவர், மாமன்; திருச்சிப் புலவர், மைத்துனர். கரூர்ப் புலவர் தன் மைத்துனரிடம் ஒரு காரியத்தைச் செய்யச் சொன்னார். திருச்சிப் புலவரோ பிடிவாதமாகச் செய்ய மறுத்துவிட்டார். அவருக்குக் கோபம்.

‘மைத்துனரே, எம் கால்வழியே வருகிற நீரைக் குடிக்கிற உமக்கு இவ்வளவு இருந்தால், எமக்கு எவ்வளவு இருக்கும்’—என்று நிமிர்ந்து பேசினார்.

இதற்கு மூன்று பொருள்—

கால்வழி நீர்: 1. எம் கால் மிதிபட்டு வருகிற நீர்

2. தாம் குடித்த எச்சில் நீர்

3. கால்வழியே விரும் சிறுநீர்.

சொன்னவரோ பெரியவர்! கேட்டவரோ சிறியவர்! வெட்கப்பட்டார்; வருந்தினார். பெரியவர் ஆயிற்றே என்று அஞ்சினார்.

‘தமிழ் இருக்கும்போது நமக்கு எதற்கு அச்சம்’ என்று பேசத் துணிந்தார்.

‘மாமா, நீரே வந்து எம் காலில் விழுந்தால்—ஏற்றுக் கொள்ளாமல் என்ன செய்வது?’—என்றார். (நான் தேடிப் போகவில்லை).

ஏதோ, தவறாகப் பேசிவிட்டோம் என்று தாங்கள் வருத்தப்பட்டு, எம் காலில் விழலாமா—அப்படி விழுந்தால், நான் என்ன செய்வது? (நீரே—தண்ணிரே; காலில் வாய்க்காவில்.)

எப்படி மாமன் மைத்துனர்! எப்படி தமிழ்!

71. காட்டாரும் பண்டிதமணியும்

‘ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்களும், பண்டித மணி கதிரேசஞ் செட்டியார் அவர்களும்,

திருச்சிக்கு மேற்கே, சொற்பொழிவாற்ற மாலை நேரத்தில் சென்றிருந்தனர்.

அங்கே, குளத்தங்கரையில், அனுட்டானம் செய்து கொண்டிருந்த நாட்டார் ஐயா அவர்கள்—பண்டிதமணி அவர்கள் (ஒரு கால் நடக்க விராது) தடியை ஊன்றி தட்டுத் தடுமாறி வருவதைப் பார்த்து, ‘ஐயா, கொஞ்சம் விழிப்பாக இருங்கள்; அவ்விடத்தில் ஒரு படி இல்லை’ என்று சொன்னார்.

அதற்குப் பண்டிதமணி சொன்னார் :

“தாங்கள் சிவப்பழம் ஆயிற்றே, இறைவன் இருக்கும் இடம் வந்தும்,

“எனக்குப் படியில்லை’ என்று சொல்லலாமா? என்று கேட்டார்,

72. திரு.வி.க.—மறைமலையடிகள்

சென்னை மாநகரில் மாளிகையிடத்தில் திரு. சச்சிதானந்தம் பிள்ளை, திரு.வி.க., மறைமலையடிகள் இவர்களுடன், விருந்துக்கு அமர்ந்து உண்டுகொண்டிருந்தார்.

அப்போது, சச்சிதானந்தம் பிள்ளை ரசத்தைப் பருகிக் கொண்டிருக்கும்போது சிறிது இருமினார். அருகில் இருந்த திரு.வி.க. கேட்டார்—'அது என்ன? ரசம். அதிகாரமோ!” இருமும்போது—ரசம் அதிகாரம் பண்ணுகிறதா—என்பதும்.

‘ரசம் அதிக காரமாக இருக்கிறதா?’ எனக் கேள்வியாகவும் பொருள்பட இருந்தது.


73. வாழைப்பழம்

தமிழ் எழுத்துக்களில் ‘ழ’—என்னும் எழுத்து தமிழுக்குச் சிறப்பு தருவது.

தமிழ் மொழியைத் தவிர, பிற எந்த மொழியிலும் ‘ழ’ என்று உச்சரிக்கக்கூடிய எழுத்து கிடையாது. அதனால் புலவர் பெருமக்கள் ல, ள என்ற எழுத்துக்களோடு இதனைச் ‘சிறப்பு ழகரம்’ என்றே கூறுவர்.

இந்தச் சிறப்பு ‘ழ’—ஒலி—தமிழ் மக்கள் சிலரால் உச்சரிக்கப்படுவதில்லை.

திருச்சிக்குத் தெற்கே சில ‘ழ'ளை ‘ள’ ஆக உச்சரிப்பர்.

(எ—டு) ‘ஐயா, கடைக்காரரே உங்களிடம் வாளபளம் உண்டுமோ?’ என்பர்.

திருச்சிக்கு கிழக்கே, தஞ்சை மாவட்டத்தில் சிலர் ‘ழ’வை ‘ஷ’ ஆக உச்சரிப்பர்.

(எ—டு) மார்கழித் திருவிழா—(வியாழக்கிழமை)

இதனை மார்கக்ஷதித் திருவிஷா வருகிறது என்றால் விசாஷக் கிழமையில் வருகிறது என்று விடையும் கூறுவர்.

இனி, தமிழகத்து வடக்கே சென்னை போன்ற இடங்களில் சிலர் ‘ழ'வை ‘ஸ்’ ஆக்கிப் பேசுவர்.

(எ—டு) இழுத்துக்கொண்டு—என்பதை ‘இஸ்த்துக்கினு’ என்பர்.

திருச்சிக்கு மேற்கே கோவை போன்ற இடங்களில் சிலர்—'ழ'வை ‘ய’ ஆக ஒலிப்பர்.

வாழப்பழத்தை—வாயப்பயம் என்று கூறுவர்.

நான் ஒருதடவை கோவைக்கு சென்றபோது—கடைத்தெருவில்—வாழைப்பழத்தை விற்கும் ஒருவன், ‘வாயப்பயம்’—என்றே கூறி விற்றுக் கொண்டிருந்தான்.

நான் அவனைப் பார்த்ததும், அவன் என்னிடம் வந்து, தட்டை இறக்கி வைத்து—'வாயப்பயம் வேணுங்களா’ என்றான்.

எனக்கு வியப்பு ஒருபுறம்; கோபம் ஒருபுறம். ‘நீ எந்த ஊர் அப்பா’ என்றேன்.

அவன்—'கியக்கேங்க’ என்றான்.

நான் (கிழக்கு) கியக்கேயிருந்து இங்கே எதுக்கு வந்தீங்க?—என்றேன்.

அவன், (புயக்க—பிழைக்க) புயக்க வந்தேங்க—என்றான்.

கியக்கேயிருந்து புயக்க வந்தேன்—என்றதும் எனக்குக் கோபம் அதிகமாகியது.

“ஏம்பா, தமிழை இப்படிகொலை பண்ணுகிறீர்கள்?” என்று அதட்டிக் கேட்டேன்.

அவன் இரண்டு கைகளையும் சேர்த்துக் கும்பிட்டுக் கொண்டே, அது எங்க வயக்கங்க என்றான்.

நான் உடனே அவனை விட்டு எழுந்தே போய் விட்டேன்.

தமிழுக்கே உள்ள சிறப்பு ‘ழ'கரம். இது தமிழ் மக்களிடத்துப் படுகிற காட்டை இது நன்றாக விளக்கிக் காட்டுகிறது.

இது தவறு.

சிறியவர்களோ பெரியவர்களோ யார் பேசும்

போதும் சொற்களைச் சரியாக உச்சரிக்கப் பழகிக்

கொள்வது நாட்டுக்கும் நல்லது; மொழிக்கும் நல்லது; நமக்கும் நல்லது.

74. மரக்கவிப்புலவர்

சென்ற நூற்றாண்டிலே மரக்கவிப்புலவர் என்று ஒருவர் வாழ்ந்தார். அவர் எதனைப் பாடினாலும் மரத்தை வைத்துப் பாடுவது வழக்கம். — —

ஒருமுறை, மன்னர் ஒருவரைப் பார்த்துப் பாடிப் பரிசில் பெறஎண்ணிச் சென்றார். அப்போது மன்னர்

அங்கு இல்லை. வேட்டைக்குப் போயிருந்தார். மன்னர் திரும்பி வரும்வரை காத்திருந்த புலவர், அவர் வந்த பின்பு தாம் இயற்றிய கவிதையைப் பாடினார்.

'மரமது மரத்திலேறி மரமதைத் தோளில்வைத்து
மரமது மரத்தைக் கண்டு மரத்தினால் மரத்தைக்குத்தி
மரமது வழியே மீண்டு வன்மனைக் கேகும்போது

மரமதைக் கண்ட மாதர் மரமொடுமரம் எடுத்தார். அரசனும் கேட்டு மகிழ்ந்தான்.

பொருள் தெரியாமல் புலவர்கள் விழித்தனர். அரசனோ பெரும்பொருள் பரிசாக அளித்து, மரக்கவிப் புலவரை மரியாதை செய்து அனுப்பிவைத்தான்

பொருள் தெரியாமல் விழித்து, பொறாமையால் வெதும்பி நின்ற மற்றப் புலவர்களை அழைத்து, அவர்கள் அறியாமை நீங்க மரக்கவிப் புலவரின் பாட்டுக்கு அரசனே பொருளை விளக்கினான்.

மரமது மரத்திலேறி அரசன் குதிரை மீது ஏறி

(அரசமரம்—மா மரம்)

மரமது தோளில்வைத்து — தோமரத்தைத் தோளில் வைத்து

(தோமராயுதம்)

மரமது மரத்தைக் கண்டு — அரசன் வேங்கையைக் கண்டு

(வேங்கை மரம்

மரத்தினால் மரத்தைக் குத்தி—தோமரத்தால் வேங்கையைக் குத்தி

மரமது வழியே மீண்டு — அரசன் சென்ற வழியே திரும்பி

வன்மனைக் கேகும்போது — அரண்மனைக்கு வந்த போது

மரமதைக் கண்ட மாதர் — அரசனைக்கண்ட பெண்கள்

மரமொடு மரம் எடுத்தார் . (ஆல்—அத்தி) ஆலத்தி எடுத்தார்கள்.

அக்காலத்து மன்னர்கள் தாம் புலவர்களாக இருந்த தோடு, புலவர்களை வாழவைக்கும் புரவலர்களாகவும் இருந்தனர் என்பதற்கு இஃது ஒரு சான்றாகும்.

வார்ப்புரு:X—larger


75. அகத்தியரும் தேரையரும்

தீராத தலைவலியால் தன்னிடம் வந்த நோயாளியின் மண்டையை அறுவைச் சிகிச்சை முறையால் பிளந்து பார்த்தார் அகத்திய மாமுனிவர். அவன் மூளையிலே ஒரு தேரை—கையால் எடுக்க வரவில்லை. அவன் மூளையைக் காலால் பற்றிக் கொண்டிருந்தது. எடுக்கவும் இயல வில்லை; நசுக்கவும் முடியவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தபோது,

அவர் அருகில் இருந்த மாணாக்கர்களில் ஒருவர்—கொட்டாங்குச்சியிலே நீரைக் கொண்டுவந்து தேரையின் முன்னே காட்டினார். அது மூளையை விட்டுத் தண்ணிரிலே தாவிக் குதித்தது. நோயாளிக்கு வலியும் தீர்ந்தது.

முனிவருக்குப் பெரிதும் வியப்பு—நோயாளியை அறுவைச் சிகிச்சை முடித்து அனுப்பிவைத்தார்.

அதிலிருந்து அம் மாணக்கர்க்கு ‘தேரையர்’ என்றே பெயர் வழங்கலாயிற்று—

தம்மைவிடத் தம் மாணாக்கர் சிறந்திருப்பதா? அதை விரும்பாத அகத்தியரும், வடக்கே வெகு தொலைவில் உள்ள ஊருக்குத் தேரையரை மருத்துவம் செய்ய அனுப்பி விட்டார்.

ஆண்டுகள் பலவாயின. தன் மாணாக்கர் (தேரையர்) இன்னும் உயிரோடு—இருக்கின்றாரா என்று அறிய வேண்டி, அறிந்துவரும்படி மற்றொரு மாணவரை அனுப்பினார். போகும்போது அவரிடம், நீ சாலையிலே போகுங்காலத்துப் புளியமர நிழலில் தங்கி இளைப்பாறு: புளியங்குச்சியால் பல்துலக்கு; புளிய விறகைக் கொண்டு சமைத்து உண்டு செல் என்றார்.

அம் மாணவரும் குரு கட்டளைப்படியே முப்பது நாளாக நடந்துசென்று தேரையர் இருப்பிடம் சேர்ந்தார். வந்தவர் எலும்பும் தோலுமாக உடல் இளைத்திருப்பது கண்டு ‘என்ன காரணம்?’ என்று தேரையர் அவரை விசாரித்தார் அவர் அகத்தியர் சொல்லியனுப்பிய முறையை நவின்றார். (புளியங்கதை)

தேரையர் அவருக்கு ஆறுதல் கூறி, தன் வணக்கத்தை அகத்தியருக்கு தெரிவிக்கும்படி சொன்னார். அவர் புறப்படும்போது, நீ வேப்பமர நிழலில் தங்கி இளைப்பாறு; வேப்பங்குச்சியால் பல்துலக்கு, வேப்ப விறகு கொண்டு சமைத்து உண்ணு” என்று சொல்வி அனுப்பிவைத்தார்.

திரும்பும்போது அப்படியே செய்துகொண்டு நடந்து அகத்தியரை பார்த்தார் அவரிடம் பேச வாயைத் திறந்தார் அந்த மாணவர்.

அதற்குள் அகத்தியர், மாணவரை நோக்கி, “நீ ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை. எனக்கு எல்லாம், தெரியும். தேரையர் உயிரோடு இருக்கிறான். நன்றாகவும் இருக்கிறான். மருத்துவத்தில் சிறந்து விளங்குகிறான். நீ அவனைக் காணும்போது மிகவும் இளைத்திருந்தாய்— காணாவிட்டால் திரும்பி இங்கே வந்திருக்கமாட்டாய்; இறந்திருப்பாய்; அவன் சொல்லித்தானே. வேப்பமர நிழலில் தங்கி, வேப்பங்குச்சியால் பல்துலக்கி, வேம்பு விறகால் சமையல் செய்து உண்டு நலமாக இங்கு வந்து சேர்ந்திருக்கிறாய்’—என்றார்.

சித்த மருத்துவத்திலே இப்படி ஒரு வரலாறு உண்டு.

இது சித்தமருத்துவ வரலாற்றையும், சித்த மருத்துவர் களின் போக்கையும், புளியின் கொடுமையையும், வேம்பின் நன்மையையும் நமக்குக் காட்டுகிறது.


76. கடுக்காய் வைத்தியர்

ஒரு குடும்பத்தில் பரம்பரை பரம்பரையாக கொள்ளுத் தாத்தா, தாத்தா, அப்பா, மகன் என்று எல்லோரும் வைத்தியம் செய்து பிழைத்து வந்தனர். கடைசியில் ஒருபேரன் அதைக் கவனிக்காமல் ஊர் சுற்றி வந்தான். பிறகு ஒருநாள் திருந்தி, நாமும் வைத்தியம் செய்து பிழைக்கலாமே என எண்ணி, பழைய மருந்து களை தேடினான். கடுக்காய் மூட்டை ஒன்றுதான் கிடைத்து, இதை வைத்தே பிழைக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்தான்.

ஒரு சமயம், இரண்டு பெண்டாட்டி கட்டிய ஒருவன் எப்போதும் மூத்தவளுடன் சண்டை போட்டான். மூத்தவள் இவனிடம் வந்தாள்.இவன் யோசித்து, ‘இந்தா, எட்டுக் கடுக்காய். இதைக் கொண்டுபோய் நன்றாக அரைச்சு, உன் வீட்டுக்காரருக்குக் கொடுத்துப் பாரு’ என்று சொல்லி அனுப்பினான்.

என்ன செய்வது என்று கேட்க,

அரைத்து உள்ளுக்கு குடிக்க கொடுக்கச் சொன்னான்.

அவள் அப்படியே செய்தாள். அவள் கணவனுக்கு ஒரே பேதி நிற்காமல் போய்க்கொண்டிருந்தது. இளையவள் பார்த்தாள். துர்நாற்றம் தாங்கவில்லை. நம்மால் இதைச் சகிக்க முடியாது என்று போய்விட்டாள். மூத்தவள் அவன் உடனிருந்து வேண்டிய உதவிகள் செய்து காப்பாற்றினாள். ஆகவே அவனுக்கு மூத்தவள் மேல் பரிவும் பாசமும் ஏற்பட்டு அவளுடனேயே வாழ்ந்து வந்தான். இந்த செய்தி ஊருக்குள் பரவியது.

இன்னொரு சமயம், பக்கத்து ஊரில் ஒரு எருமை மாடு காணாமற் போய்விட்டது. மாட்டுக்குச் சொந்தக் காரன் ந் து வைத்தியனிடம் முறையிட்டான். அவனுக்கும் 8 கடுக்காயைக் கொடுத்து அரைச்சுக் குடிக்கும்படி சொன்னான். அவனும் அப்படியே செய்ததும் வயிற்றுப்போக்கு அதிகமாகியது. தாங்க முடியாமற் போகவே ஏரிக் கரையிலேயே உட்கார்ந்து விட்டான். அப்போது அவனது காணாமற்போன எருமை தண்ணிர் குடிக்க அங்கே வந்தது. அதைக் கண்டதும் மகிழ்ச்சியோடு பிடித்து வீட்டுக்குக் கொண்டுவந்தான். இந்தச் செய்தியும் ஊரில் பரவி, வைத்தியருக்குப் பெருமை சேர்த்தது.

மற்றொரு சமயம் பக்கத்து ஊர் அரசன் பட்டாளத் துடன் படையெடுத்து வந்தான். எல்லோரும் என்ன செய்வது என்று பயந்து இருந்தனர். கடுக்காய் வைத்தியரோ பத்துக் கடுக்காய்களை அரைத்துப் படைவீரர் களுக்குக் கொடுத்தான். அவ்வளவுதான், எல்லோருக்கும் வயிற்றுப்போக்கு ஏற்பட்ட உடன். அரசன் பார்த்தான், ‘இந்த ஊரில் காலரா பரவுகிறது’ என்று பயந்து, சண்டை போடும் எண்ணத்தையே கை விட்டுவிட்டு அவ்வூரை விட்டே தனது படையுடன் திரும்பிப் போய்விட்டான்,

இப்படியாகப் பெயரும் புகழும் பரவிக் கடுக்காய் வைத்தியனுக்குப் பாராட்டுகள் குவிந்தன. அவ்வூர் அரசனும் வைத்தியனை அழைத்துப் பாராட்டிக் கெளரவித்தான்.

இதைக் கேள்விப்பட்ட மற்றொரு வைத்தியர் இவரிடம் வந்து “உங்களுக்கு எப்படி வைத்திய ஞானம் வந்தது? இவ்வளவு குறுகிய காலத்தில் பெயரும் புகழும் கிடைத்தது?” என்று கேட்டார்.

கடுக்காய் வைத்தியர் சொன்னார்

‘இளம் பெண்டாட்டிக்காரனுக்கும் எட்டுக்கடுக்காய்

‘எருமை கெட்டவனுக்கும் எட்டுக் கடுக்காய்’

‘படை எடுத்த மன்னனுக்குப் பத்து கடுக்காய்’

என்று தனக்குப் புகழ்வந்த விதம் அவ்வளவுதான் என்று தன் கதையைக் கூறினார்.


77. இரு குரங்கின் கைச்சாறு

பரம்பரை அனுபவம் என்பது சிறிதும் இல்லாமல், குருவை அணுகிக் கேளாமல், தானே ஒருவன் ஒலைச் சுவடிகளைப் படித்து வைத்தியம் செய்யத் தொடங்கினான்.

‘ஒத்தைத் தலைவலிக்கு இரு குரங்கின் கைச்சாறு தடவக் குணமாகும்’ என்று ஒலைச் சுவடியிலிருந்தது.

இவன், இதற்காகக் காட்டிற்குச் சென்று இரண்டு குரங்குகளைப் பிடித்துக் கொண்டுவந்தான். பாறையிலே அதன் கைகளை வெட்டி நசுக்கிச் சாறு பிழியலானான்.

அப்போது அங்கே வந்த பெரியவர், ‘தம்பீ! என்ன இது?’ என்று காரணம் கேட்டார் இவன் தான் ஒலையில் படித்த செய்தியைச் சொன்னான்.

அவனது அறியாமையைக் கண்டு இரங்கிய பெரியவர் சொன்னார்—"தம்பி, இரு குரங்கின் கைச்சாறு என்பது மறைமொழி. அது குரங்கின் சாறு அல்ல; முசு என்றால் குரங்கு. இரு குரங்கின் கைச்சாறு என்றால் முசுமுசுக்கைச் சாறு என்பது பொருள்.”

“இனி நீ வைத்தியம் செய்வதனால் அறிந்த அனுபவம் உள்ள பெரியோரை அணுகிக் கேட்டு, அவர் கைப்பாக முறையைத் தெரிந்து தொழில் செய்ய வேண்டும். நூலைப் படித்துத் தானே தெரிந்து, கொண்டதாக நினைப்பதும் தவறு, பெரியோரை அணுகிக கேட்க வெட்கப்படுவதும் தவறு. நன்கு தெரிந்து தெளிந்து தொழில் செய்யவேண்டும் என அறிவுரை வழங்கிச் சென்றார்.

வார்ப்புரு:X—larger


78. ஊர்வலம்


திண்டுக்கல்லில் பெரிய இடத்துத் திருமணம்; பூப் பல்லக்கு அலங்காரம்; ஊர்வலம் வருகிறது.

மதுரைப் பொன்னுசாமிப்பிள்ளை நாயனம். பைரவி ராகம் ஆலாபரணம் பண்ணிக்கொண்டிருக்கிறார். பெருங் கூட்டம் கூடிவிட்டது. எல்லோரும் அந்த இசையின்பத்திலே தோய்ந்துதிளைக்கின்றனர்.

அந் நேரம் அந்தக் கும்பலை விலக்கி கையிலே பூமாலையை எடுத்துக்கொண்டு ஒருவர் வேகமாக உள்ளே நுழைந்தார். ஒத்து ஊதிக்கொண்டு பக்கத்தில் நின்றவருக்கு மாலையைப் போட்டார். எல்லாரும், ‘என்னங்க’ யாருக்கு மாலையைப் போட்டிங்க’ என்று கேட்க.

அவர் ‘மதுரை பொன்னுசாமிக்கு’ தான் என்றார்.

அவர்கள், ‘அவரல்ல, இவர்தான் பொன்னுசாமி’ என்று சுட்டிக்காட்டிச் சொன்னதும்—

வந்தவர். ‘இவரைவிட அவர் நல்லா வாசித்தாரே'– என்றார்.

‘எப்படி ஐயா கண்டீர்கள்’ — என வியந்து கேட்க மாலை போட்டவர்,

‘இவர் விட்டுவிட்டு ஊதுகிறார்?

‘அவர் விடாமல் ஊதுகிறாரே’

—என்று சொன்னார்.

அறுபது ஆண்டுகட்கு முன்பே—

நம்மில் சிலர் இசையைச் சுவைத்த அழகு இது—


79. அரசனும் அறிஞனும்

அறிவிலும் செல்வத்திலும் வலிமையிலும் தனக்கு இணையாக எவரும் இல்லை என்று இறுமாப்பு கொண்டிருந்தான் ஒரு மன்னன். அவனைத் திருத்த அறிஞர்கள் பலரும் முயன்று தோல்வியடைந்தனர்.

அரசன் தன் பிறந்தநாளில் தன் அரண்மனையைச் சுற்றி நான்கு வீதிகளிலும் ஊர்வலம்வரப் பல்லக்கில் புறப்பட்டான். அப்போது ஒர்அறிஞன் பிச்சைக்காரனைப் போல் வேடம் பூண்டு, தன் கையில் செல்லாக்காக ஒன்றை வைத்துக்கொண்டு, “இவ்வரசன் என்னிலும்பணக்காரனல்ல; இவ்வரசன் என்னிலும் பணக்காரனல்ல” என்று கூவிக்கொண்டேயிருந்தான்.

அரசனது காவலர்கள் அவனை தாக்க முயன்றனர். இதுகண்ட அரசன் அவனை அடிக்க வேண்டாம் என்று தடுத்து, ‘அந்தக் காசைப் பிடுங்கிக் கொண்டு அவனை விரட்டிவிடுங்கள். அப்போதுதான் அவனுக்குப் புத்தி வரும்’ என்று கட்டளையிட்டான். 

ஆட்கள் அவ்வாறே செய்தனர். பல்லக்கு தெற்கு வீதியில் வந்து கொண்டிருந்தது. பிச்சைக்காரன் அங்கு வந்து நின்று கொண்டு, “என்னிலும் ஏழையான அரசன் என் காசைப் பிடுங்கிக் கொண்டான். என்னிலும் ஏழையான அரசன் என் காசை பிடுங்கிக்கொண்டான்” என்று உரத்துக் கூவினான்.

அதுகண்ட அரசன், தன் காவலாளியிடம், “முன்பு அவன் தன்னைவிடப் பணக்காரணல்ல என்றுதான் சொன்னான். இப்போது தன்னைவிட ஏழை என்று என்னைச் சொல்லுகிறான். இது என் செல்வத்தையே பழித்துக் காட்டுவதாக இருக்கிறது. போனால் போகிறான் காசை அவனிடம் கொடுத்து விரட்டுங்கள்” என்று கூறினான். காவலர்களும் அப்படியே செய்தனர்.

பல்லக்கு மேல வீதியில் வந்தது. அங்கு நின்று கொண்டிருந்த அப்பிச்சைக்காரன், “அரசன் எனக்குப் பயந்து காசைக் கொடுத்துவிட்டான். அரசன் எனக்குப் பயந்து காசைக் கொடுத்துவிட்டான்” என்று உரக்கக் கூவிக் கொண்டிருந்தான்

அரசன் சினந்து, அவனைக் கொல்ல தன் வில்லையும் அம்பையும் எடுத்தான். பிச்சைக்காரன் ஒடி மறைந்தான்.

பல்லக்கு வடக்கு வீதியில் வந்தது, அங்கு நின்று கொண்டிருந்த பிச்சைக்காரன். “பேடியான அரசன் ஆயுதமில்லாத என்னோடு சண்டைக்கு வருகிறான். பேடியான அரசன் ஆயுதமில்லாத என்னோடு சண்டைக்கு வருகிறான்” என்று அலறிக் கொண்டேயிருந்தான். காவலர்கள் அவனைப் பிடித்துத் துன்புறுத்த முயன்றனர்.

அவர்களை அரசன் தடுத்து, அவன் பிச்சைக்காரணல்ல அறிஞன் என உணர்ந்து அறிவிலும், செல்வத்திலும், வீரத்திலும் எனக்கு இணை எவருமில்லை என்ற என் இறுமாப்பை அழித்து ஒழித்த பேரறிஞன் இவனே.” எனப் பாராட்டிப் பொருளுதவியும் அளித்து அனுப்பி வைத்தான்.

அக்கால அரசர்களில் இப்படியும் சிலர் இருந்ததாகத் தெரியவருகிறது.


80. சாட்சிக்காரனின் சொத்து மதிப்பு

அடிக்கடி நீதி மன்றத்திற்கு வந்து பொய்ச்சாட்சி சொல்லிக்கொண்டே காலங் கழித்து வந்த ஒருவரை வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்தார்.

வக்கீல் : உமக்கு என்ன வேலை?

சாட்சி : பொதுமக்களுக்குத் தொண்டு செய்வது.

வக்கீல் : உமக்கு சொத்து ஏதேனும் உண்டா?

சாட்சி : ஆம். இருக்கிறது.

வக்கீல் : எல்லாம் ரொக்கமாகவா? நிலமாகவா ? கட்டிடமாகவா ?

சாட்சி : கட்டிடமாக.

விக்கீல் : அதன் மதிப்பு எவ்வளவு

சாட்சி : ஒரு லட்ச ரூபாய் பெறும்.

வக்கீல் : ஊர்க்கடைசியில் கோவில் மதிற்சுவரை ஒட்டிப் போட்டிருக்கும் கூரைத் தாழ்வாரம் தானே உன் வீடு.

சாட்சி : ஆமாம்.

வக்கீல் : அதுவா ஒரு லட்சம் பெறும்?

சாட்சி : கட்டாயம் பெறும். அதற்கு மேலும் பெறும். ஒருவர் 95 ஆயிரம்வரை கேட்டார்; மறுத்து விட்டேன். 99 ஆயிரத்திற்குக் கேட்டாலும் தரமாட்டேன்.

வழக்கறிஞர் அயர்ந்து போனார். நீதிபதி சிரித்து மகிழ்ந்தார். என்ன செய்வது? இப்படியும் சில சாட்சிகளை நீதிமன்றங்கள் சந்திக்கின்றன.


81. வரத நஞ்சையபிள்ளை

50 ஆண்டுகட்கு முன்பு.

தஞ்சையை அடுத்த கரந்தையில் தமிழ்ச்சங்கத்தின் ஆண்டுவிழா.

த.வே. உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள் முன்நின்று நடத்திக் கொண்டிருந்தார்கள்.

முதலில் ந.மு. வேங்கடசாமி நாட்டார் ஐயா பேசினார்கள், அதன்பின் பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார் அவர்கள் பேசினார்கள். இறுதியாக சேலம் மாவட்டத்துச் சிற்றுார் தாரமங்கலம் அ. வரதநஞ்சைய பிள்ளையவர்கள் பேச வந்தார்கள்.

அவர் பேசத்தொடங்கும் பொழுதே ‘இந்த நாட்டாரும் நகரத்தாரும் பேசிய பிறகு. இந்தக் காட்டானை ஏன் ஐயா பேசவிட்டீர்கள், என்றார்.

கூட்டத்திலே சிரிப்பும் கைதட்டலும் அடங்கவே பல மணித்துளிகள் ஆயின.

குறிப்பு—சேலம் மாவட்டத்தில் சிற்றூரில் பிறந்தவர் அப்படி, அன்றி, உடையும் தோற்றமும் கூட அவர் கூற்றுக்குத் துணையாக இருந்தன.


82. தோல்வியிலும் மகிழ்ச்சி

மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்கள். நல்ல அறிஞர். ‘பிரதாபமுதலியார் சரித்திரம்’ —என்ற நாவலை முதன்முதல் எழுதியவர். கடந்த நூற்றாண்டில் புதினம் எழுதிய பெருமை அவரைச் சாரும்.

அக்கதையில், முதலியார் குதிரைப் பந்தயத்தில் கலந்துகொள்கிறார். மற்றும் எட்டுப் பேருடன் இவரும் குதிரைமேல் ஏறி ஒட்டுகிறார். குதிரைவேகமாக ஓடுகிறது. எல்லாக் குதிரைகளும் பந்தயத்தில் விரைவாக ஒடின முதலியார் குதிரைதான் 9 வது குதிரையாக வந்தது.

எல்லாரும் சிரித்தார்கள்.

தன் குதிரையைக் கையில் பிடித்துக்கொண்டே சிரித்த மக்களிடம் வந்து. என் குதிரை கடைசியாக வந்தது எனக்கும்தெரியும் உங்களுக்கும் தெரியும். இந்த தொத்தக் குதிரையைப் பார்த்து, நல்ல குதிரைகள் ஏன் மிரண்டு ஓடின—என்பதுதான் தெரியவில்லை—என்றார்.

இதைக் கேட்டதும் எல்லாருமே ஆரவாரத்துடன் சிரித்து மகிழ்ந்தனர். இது நகைச்சுவை. கருத்து மிக ஆழம்.

தோல்வியைக் கண்டு அஞ்சாமையும் தோல்வியையே பெருமைப்படுத்தி மகிழ்வதும் மக்காளய்ப் பிறந்தவர்கட்கு

மிகவும் தேவை என்பது அவரது கருத்து.

‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்பார் திருவள்ளுவர் நம் வாழ்வில் துன்பம் வரும்போதெல்லாம் இதனை

நினைவில் வைத்துக்கொள்வது நல்லது.


83. விலையேற்றம்

சிற்றூரிலே வாழும் குடியானவர் நகரத்திற்கு வருவார். என்னிடம் எல்லாச் சாமான்களும் விலையேறி விட்டதே என்று வருத்தப்படுவார். அவரிடம் நான் சொன்னேன்—

ஆம்,ஆம், யானை விலை குதிரை குதிரை விலை மாடு மாட்டின் விலை ஆடு ஆடு விலை கோழி கோழி விலை குஞ்சு குஞ்சு விலை முட்டை முட்டை விலை கத்தரிக்காய் ஆமாம் விற்கிறது—என்ன செய்வது? என்றேன்.

அதற்கு அவர், ஐயா, நீங்கள் சொன்னது சென்ற ஆண்டு விலை.

இப்பொழுது விற்பது— யானை விலை குதிரையல்ல மாடு; மாட்டு விலை ஆடல்ல கோழி” என்று சொல்லிக் கொண்டே போனார்.

‘எப்படி வாழ்வது’ என்று வருந்தினார். இதைக் கேட்கும் நமக்கும் விருத்தமாக இருக்கிறது—என்ன செய்வது?

84. நல்ல வைத்தியர்

செவிடன் ஒருவன் நோயாளியைப் பார்க்கப் போகிறான். போகும்போதே அவனுக்கு ஒரு யோசனை. நோயாளி சொல்வது நம் காதில் விழாதே அவன் என்ன சொல்வான், அதற்கு நாம் என்ன சொல்வது என்று தானே சிந்தித்தான்.

முதலில் நாம் போனதும் நோயாளியை, ‘நோய் எப்படி இருக்கிறது’—என்று கேட்போம். அவன், ‘கொஞ்சம் குணமாக இருக்கிறது’— என்று சொல்வான். பின் நாம் ‘ஆகாரம் என்ன’—என்று கேட்போம். அவன், ‘ஏதோ கஞ்சி’—என்று சொல்வான். நாம், யார் டாக்டர்’ என்று கேட்போம். அவன் யாராவது டாக்டர் பெயரைச் சொல்வான்.

அவற்றிற்கு ஏற்றபடி பதில் சொல்வோம். இவ்வாறு (பேச்சு நடைமுறை) முன்கூட்டியே முடிவு செய்து கொண்டே, செவிடன் நோயாளியைப் பார்க்கப்போனான் போனதும், முதற்கேள்வி—'நோய் எப்படி இருக்கிறது’ —என்று கேட்டான்.

அவன் வரவர முற்றிக் கொண்டே இருக்கிறது.’

பிழைப்பேன் என்ற நம்பிக்கையே இல்லை’ என்றான்.

செவிடன் (காதுதான் கேட்காதே) தன்திட்டப்படியே ‘நானும் அப்படித்தான் நினைத்தேன்—அதுதான் சரி விரைவில் எல்லாம் சரியாய்விடும்’—என்று சொல்லிவிட்டு, (அடுத்த கேள்வியாக) ‘ஆகாரம் என்ன உண்கிறீர்கள்?—என்று கேட்டான்,

அவனது முதல் பதிலையே கேட்டதனால் வருந்திய நோயாளி—"ஆகாரம் மண்ணுதான்” என்று மிகவும் வெறுப்புடனே கூறினான்.

(இதைக் கேளாத செவிடு) “அதையே சாப்பிடு; அதுதான் நல்ல உணவு” என்று சொன்னான்.

அடுத்து, ‘எந்த வைத்தியர் வந்து பார்க்கிறார்?’ என்று கேட்டான்.

நோயாளி (புண்பட்ட மனத்துடனே நொந்து) ‘எமன்தான் டாக்டர்—’ என எரிசலாகச் சொன்னான்.

உடனே செவிடன்,

“அவரே நல்ல டாக்டர். அவரையே வைத்துப்பாரு, அடிக்கடி வருகிறாரா?—எல்லாம் சரியாப் போய்விடும்’— என்று சொல்லித் திரும்பி வந்துவிட்டான்.

நோயாளி—துயரம் தாங்காது வருந்தினான்—இவன் செவிடன், காது கேட்காது என்பது அவனுக்குத் தெரியாது. ஆனால் செவிடனுக்குத் தன் காது செவிடு எனத் தெரியும். இதை நோயாளிக்குத் தெரிவித்திருந்தால், இருவருக்குமிடையே— இந்தத் தொல்லைகள் வளர்ந்திருக்காது.

உள்ளதை மறைத்து வீண் பெருமை பாராட்டுவதனால் நேரிடுகின்ற விளைவுகளில் இதுவும் ஒன்று.

85. குருவும் சீடர்களும்

தன் சீடர்களை முட்டாள்கள் என்று கருதிவந்த குரு, தன் சீடர்களிடம் எதையும் விவரமாகச் சொல்லிச் செய்ய வைப்பார். அவர்களும் குரு சொன்ன பின்புதான் எந்தவேலையையும் செய்வர். ஆகவே அவர்களுக்கு சிந்தனையறிவே வளரவில்லை.

ஒருசமயம் குரு அருகில் உள்ள ஒரு ஊருக்குக் குதிரையில் ஏறிப் புறப்பட்டார். சீடர்களும் அவரைப் பின் தொடர்ந்தனர். ஐந்து மைல் தூரம் சென்றதும் தன் பட்டாக்கத்தியைக் காணாத குரு சீடர்களை அழைத்து. ‘வெள்ளிப் பிடியில் தங்கமுலாம் பூசிய என் பட்டாக்கத்தி எங்கே? என்று கேட்டார். அவர்கள் மிகவும் பயபக்தியுடன் “குருவே, அது அப்பொழுதே கீழே விழுந்துவிட்டது. ஆனால் நீங்கள் எதுவும் சொல்லவில்லையாதலால் நாங்கள் எடுத்துவரவில்லை” என்று சொன்னார்கள். அதைக் கேட்டு மிகவும் வருந்திய குரு, ‘இனிமேல் எது கீழே விழுந்தாலும் எடுத்து வரவேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

மறுமுறை பயணம் போகும்போது, நடுவழியில் சீடர்கள் “பயணத்தை நிறுத்துங்கள். குரு சொன்னதுபோல் செய்ததில் குதிரைச் சாணம் கொண்டு வந்த சாக்குகளில் நிரம்பிவிட்டது. இனி வேறு வழியில்லை” என்று குருவிடம் முறையிட்டனர். உடனே குரு “அட முட்டாள்களே! எதை எடுப்பது; எதை விடுவது என்பது தெரியாதா” என்று கூறி எடுக்கிற பொருள்களுக்கு ஒரு பட்டியலும், விடுகிற பொருள்களுக்கு ஒரு பட்டியலும், குரு எடுத்துச் சொல்ல, சீடர்கள் அதைக் கவனமாக எழுதிக் கொண்டனர்.

வேறொரு சமயம், குருவானவர் குதிரையில் ஏறிச் சவாரி செய்துகொண்டு மலைப்பக்கம் போனார். அப்போதுகுதிரை கல் தடுக்கி விழுந்தது. கீழே விழுந்த குரு, அருகில் உள்ளப் பள்ளத்தாக்கை நோக்கி உருண்டு கொண்டே போனார். அவரைப் பிடிக்க ஒடிய சீடனை மற்றொருவன் தடுத்து, “அடேய்! அவரைத் தொடாதே. நமக்கு கொடுத்தப் பட்டியலில் குருவின் பெயர் இல்லையே! பெயர் இல்லாதபோது அவரை எடுக்கலாமா?” என்று விவாதம் பண்ணிக் கொண்டிருந்தான்.

குதிரையிலிருந்து விழுந்த குருவும் அடிபட்டு இரத்தம் கசியப் புலம்பிக்கொண்டே பள்ளத்தாக்கில் விழுந்துகிடந்தார்.


86. எருமைமாடு சொல்வதை நம்ப வேண்டாம்

ஒரு நல்ல குடும்பம். அவர்களுக்கு ஒரே பையன். பெற்றோர் அவனுக்கு நல்ல இடத்தில் மணமுடிக்க எண்ணினர். பையனோ தாசி வீட்டில் ஒரு பெண்ணைக் காதலித்தான். பலத்த எதிர்ப்புக்கிடையே அவளைத் திருமணமும் செய்துகொண்டு, பெற்றோருடனேயே நல்ல முறையில் குடும்பம் நடத்திவந்தான்.

அந்தச் சமயத்தில் ஒருநாள், அத் தாசிப் பேண்ணின் பழைய காதலன் அவளிருப்பிடத்தை எப்படியோ கேள்விப்பட்டு அறிந்து யாருமில்லா நேரம் பார்த்து அவள் வீட்டிற்கு வந்து, அவளுடன் பேசிக்கொண்டிருந்தான்.

அப்போது அங்கு கூடத்தில் கட்டியிருந்த எருமை மாடு தலையை வேகமாக ஆட்டி ‘ம்மா’ என்று கத்தியது. வந்தவன் உடனே பயந்து, இது எங்கே நம்மைக் காட்டிக் கொடுத்து விடுமோ என்று ஒடியே போய்விட்டான். உடனே தாசிப்பெண் எருமைமாட்டின் காலைப்பிடித்துக் கொண்டு கெஞ்சினாள்—இந்தா இதை யாரிடமும் சொல்லிவிடாதே என்று மீண்டும் மீண்டும் கெஞ்சுவதை அந்த நேரத்தில் வந்த அவள் கணவன் பார்த்துவிட்டுக் காரணம் கேட்டான். அவளும் ‘பழைய சிநேகன் ஒருவன் வந்தான் அவனுடன் பேசிக் கொண்டிருந்தேன்’ என்ற செய்தியைச் சொல்லிவிட்டாள்.

உடனே இவனும் ‘நம் குடும்பக் கெளரவம், பேர் எல்லாம் கெட்டுப்போகுமே என்று கருதி, இதை யாரிடமும் சொல்லாதே’ என்று, எருமையின் மற்றொரு காலைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டான்.

வெளியே போயிருந்த தாயும் தந்தையும் வரவே, அவர்களும் இதுவெல்லாம் என்ன என்று மகனை விசாரித்து, செய்தியைத் தெரிந்துகொண்டதும், ‘ஐயோ! எங்கள் மானமே போகிறதே. எங்களைக் காப்பாற்று’ என்று எருமையின் மற்ற இரண்டு கால்களையும் பிடித்துக்கொண்டு கெஞ்சினார்கள்.

எருமை மிரண்டுபோய்க் கயிற்றை அறுத்துக் கோண்டு ஓடியது.

நம்ம வீட்டு எருமை ஊரெல்லாம் போய்ச் சொல்லி விடுமே என்று பயந்து, நாலுபேரும் கூடி என்ன செய்வது என ஆலோசித்தனர்.

உடனே ஒரு தமுக்கு அடிப்பவனைக் கூப்பிட்டு, “எங்க வீட்டு எருமை கயிற்றை அறுத்துக் கொண்டு வெளியே வந்து விட்டது. அது எங்கள் மருமகள் அயலான் ஒருவனுடன் பேசிக்கொண்டிருந்ததாகத் தவறாக வந்து சொல்லும். அது உண்மையல்ல. ஆதை யாரும் நம்ப வேண்டாம்” என்று ஊர் முழுவதும் நன்றாகப் பறை அறைந்து சொல்ல ஏற்பாடு செய்தனர்.

எப்படி இச்செய்தி பரவுகிறது பாருங்கள்!


87. கரையேறுதல்

ஒரு தவசி சாலையோரமாகப் போய்க் கொண்டிருந்தார். வழியில் ஒரு குளம் இருந்தது. அப்போது, அங்கே ஒருவன் தூண்டில், முள்ளிலே புழுவை மாட்டிக் குளத்திலே மீன் பிடிப்பதற்காக இறங்கிக் கொண்டிருந்தான்.

குளத்தின் ஒரத்தில் இருந்து இதைக் கவனித்துக் கொண்டிருந்த தவசி, அவன்மேல் இரக்கம் கொண்டு மிகவும் உளம் விருந்தி தம்பி, நீ எப்போது கரையேறப் போகிறாய்? என்று அவனைப் பார்த்துக் கேட்டார்.

அவனோ உடனே பதில் சொன்னான். ‘என் பறி நிரம்பினால் கரையேறுவேன்’ என்று அவன் சொன்னதும் அவருக்கு உண்டான அதிர்ச்சி சொல்லில் அடங்காது.


88. கடையும் உடையும்

தமிழ்நாட்டிலுள்ள ஒரு சிற்றுாரிலிருந்து ஒரு குடியானவன் பம்பாய் பார்க்கப் போயிருந்தான். ஊர் முழுவதும் சுற்றிப்பார்த்தான். மாலையில் கடற்கரையைப் பார்க்கப் போனான்.

அங்கே, கடற்கரையில் ஒரு சிறுபையன் அலையை நோக்கி வேகமாக ஒடுவதும், தண்ணிரைக் கண்டதும் பின்வாங்குவதும் பிறகு அலையிலேயே காலை வைத்துக் கொண்டு விளையாடுவதுமாக இருந்தான். அப்போது ஒரு பெரிய அலை வந்தது.

அதைக்கண்ட குடியானவன் பயந்துபோய், அப் பையனின் கூட வந்தவரைப் பார்த்து, “சிறுபையன் சுட்டித்தனமாக விளையாடினால் நீங்கள் பார்த்துக் கோண்டிருக்கிறீர்களே, அவனை அழைத்து உங்கள் அருகில் வைத்துக்கொள்ளுங்கள்” என்றான்.

அதுகேட்ட ஆள் சிரித்து, “அது பையன் அல்ல; பெண்” என்றார். அப்படியா? நீங்கள்தான் அப் பெண்ணின் தந்தையா?” என்று கேட்டான். குடியானவன்.

அவர் “இல்லையில்லை. நான் அந்தப் பெண்ணுக்குத் தந்தையல்ல. தாய்” என்று சொன்னவுடன் குடியானவனின் வியப்புக்கு எல்லையே இல்லை.

பெண்ணாக ஆணும், ஆணாகப் பெண்ணும் வேற்றுமை தெரியாத அளவுக்கு நடை, உடை, பழக்கங்களை , மாற்றி நடந்துகொள்ளும் வேடிக்கையைப் பம்பாயில் பார்த்துவிட்டு வந்த அவன், தன் ஊர் வந்ததும் அனைவரிடமும் அதைச் சொல்விச் சொல்லி சிரித்தான்.

எப்படி நம்நாட்டில் நடையும் உடையும்?


89. சிந்தனை செல்லும் வழி

சிந்தனை ஒரு செல்வம். மக்கள் சிந்திக்கக் கற்றக்கொள்ளவேண்டும். சிந்திக்கத் தெரியாதவன் வறுமை வாய்ப் பட்டவனே! இறைவன் அருளை அடையவும் சிந்தனை தேவை என்பதை நன்கு அறிந்த ஒருவர் இப்படிக் கதறுகிறார்—

‘இறைவா, உன்னை சிந்தித்தறியேன். அரைக்க மும் தரிசித்தறியேன். ஒருநாளும் வந்தித்தறியேன், மறவாதே வழுத்தியறியேன் கனவினிலும். எனக்கு உன் அருள் எப்படி கிடைக்கும்?’ என்று. ஆனால் பலர் இன்று. சிந்திப்பதே இல்லை. சிலர் குறுக்குவழியிலேயே சிந்தின்கின்றனர்.

அத்தகைய நிகழ்ச்சிகளில் ஒன்று—

ஏணிமரத்தின் மீது ஏறி சுவரில் ஆணி அடிக்கிறான் ஒருவன். மற்றொருவன் கீழே நின்று ஏணிமரததைப் பிடித்துக் கொண்டிருக்கிறான்.

சற்றுநேரம் அதிகமாகவே, கீழே நிற்பவன் அவனை “ஆணி இறங்கவில்லையா? கான்கிரீட் சுவரா?—” என்ன? என்று கேட்கவே,

“மண் சுவர்தான். விரைவில் அடித்து விடுகிறேன்.” என்று சொல்வி, மீண்டும் வேகமாகச் சுத்தியால் அடிக்க ஆரம்பித்தான்.

ஏணியைப் பிடித்துக்கொண்டிருந்தவன், நன்றாக மேலே பார்த்துவிட்டு “கொண்டையை சுவரில் வைத்துக் கூர்ப்பக்கமாக சுத்தியால் அடிக்கிறாயே” என்று கோபித்தான். அதற்கு அவன் சிந்தித்துவிட்டு சொன்னான். “என்மேல் தப்பில்லை, ஆணி கம்பெனிக்காரன் கூர் இருக்க வேண்டிய இடத்தில் கொண்டைலையும் கொண்டை இருக்கவேண்டிய இடத்தில் கூர்மையையும் சிந்திக்காமல் வைத்துவிட்டான், சுவற்றில் இது எப்படி இறங்கும்” என்றான்.

அதற்குக் கீழே இருப்பவன் சொன்னான் “ஆணிக் கம்பெனிக்காரன் மீதும் தப்பில்லை, இந்த ஆணி எதிர்ச் சுவரில் அடிக்கிற ஆணி—” என்று கடைக்காரனிடம் கொடுத்துவிட்டு பின்பு நன்றாக சிந்தித்து போய்ச் “இந்த சுவருக்கான ஆணியை வாங்கிக்கொண்டு வா” என்று அனுப்பினான்.

எப்படி? குறுக்குவழிச் சிந்தனைகள் பலவற்றுக்கு இது ஒன்று போதுமானது.


90. ஒற்றுமைக்காக

ஒரு தென்னந் தோப்பைக் குத்தகைக்கு எடுத்தவன், ஒருமுறை நிறையத் தேங்காய்களைப் பறித்தான். மட்டையை உரித்தான். உரித்த மட்டைகளை விட்டிற்கு அனுப்பிவிட்டு, தேங்காய்களை விற்பனைக்காக சந்தைக்கு அனுப்பினான்.

தோப்பிலே எங்குப் பார்த்தாலும் ஒரே தேங்காய் நார்த் தூசியாகக் கிடந்தது.

மேல்தூசி, கீழ்தூசி இரண்டும் ஒன்றோடொன்று பேசிக்கொண்டது. ‘நாம் தேங்காயோடு இணைந்திருக்கும் போது துன்பமில்லை. இப்போது நம்மைப் பிரித்து விட்டார்கள், இப்படிச் சிதறிக் கிடக்கின்றோம்’ என்றது கீழ்தூசி.

அதற்கு மேல்துரசி “இது தோப்புக்காரன் தப்புமல்ல; குத்தகைக்காரன் தப்பும் அல்ல; நம் தப்புதான். நாம் சேர்ந்து வாழக் கற்றுக்கொண்டால் எல்லாம் சரியாகி விடும்."

“நாம் சேர்ந்து இழைந்து வாழ்ந்துவருகிற சிறு இழுக்கும் கயிறாகி மணிக்கயிறாகி, பந்தல்கயிறாகி, வால் கயிறாகி, தேர்வடக் கயிறாகி ஒன்றாக இணைந்து ஒற்றுமையாக இருந்தால், நம்மைவிட்டுப் பிரிந்த நமது எதிரிகளான தேங்காய்கள்கூட நம்மேல் மோதி தானாகவே “டாண் டாண்” என்று உடைபடும் என்றது.

அப்படியே, தேங்காய் நார்த்தூசிகளின் ஒற்றுமை வலுவினால் உண்டான தேர்வடக் கயிற்றில் மோதித் தேங்காய்களே உடைபடுகின்றன.

ஒற்றுமைக்கு இவ்வளவு பலம் உண்டு’ என்று அறிந்த நாமும் இனி சேர்ந்து வாழக் கற்றுக்கொள்வோமா?


91. தென்னைமரத்தில் புல் பிடிங்கியது

ஒருவன் அயலான் வீட்டுத் தென்னந் தோப்பில் தேங்காய் பறிக்க ஏறிக்கொண்டிருந்தான். இதைத் தோப்புக்காரன் பார்த்துவிட்டான்.

தென்னைமரப் பக்கத்தில் தோப்புக்காரன் வருவதைக் கண்ட திருடன் தேங்காய் பறிக்காமல் கீழே இறங்கி விட்டான்.

தோப்புக்காரன் கேட்டான், “எதற்காக என் மரத்தின் மீது ஏறினாய்?” என்று.

திருடன் சொன்னான், “கன்றுக்குட்டிக்குப் புல் பிடுங்க.” என்று.

தென்னை மரத்திலா புல் இருக்கும்? என்று தோப்புக் காரன் கேட்டான்.

“இல்லாமல் இருப்பதைக் கண்டுதான் இறங்கி விட்டேனே” என்று பதில் சொல்லிப் போய்விட்டான். தென்னை மரத்தில் ஏறியவன்.

இப்படியும் சில திருடர்கள். அவர்கள் தங்கள் திறமையை செயலில் காட்டுவது மட்டுமல்ல; பேச்சிலும் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.


92. நண்பனின் ஆலோசனை

ஒருவன், தன் நண்பன் ஒருவனிடம் சென்று “எனக்கு என் தாய்தந்தையர் இரண்டு பெண்களைப் பார்த்து முடிவுசெய்து, என் விருப்பத்தைக் கேட்கிறார்கள். அதில் ஒரு பெண் அழகு. படிப்பு சிறிது உண்டு. நல்ல குணம் உள்ள பெண். ஆனால் பரம ஏழை.

“மற்றொரு பெண் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண். அக்குடும்பத்தில் ஆண் குழந்தை இல்லாததால் அவ்வளவு சொத்தும் அந்தப் பெண்ணுக்குத் தான் சேரும். ஆனால் அழகு சிறிது குறைவு என்று கூறி என் விருப்பத்தைக் கேட்கிறார்கள். எனக்கு மூளை கலங்குகிறது. இந்த இரண்டு பெண்களில் நான் எந்தப் பெண்ணை மணக்கலாம்? ஒருநல்ல யோசனை சொல்” என்று கேட்டான்.

அதற்கு அவன் நண்பன் “பணம் இன்றைக்கு வரும் போகும். அது நிலைத்தது அல்ல. வாழ்நாள் முழுதும் வருகின்ற மனைவிதான் உனக்குத் துணையாக இருந்தாக வேண்டும். பெண் ஏழையாக இருந்தாலும் குணம், அழகு இருப்பதால் அப்பெண்ணையே மணந்துகொள்” என்று கூறினான்.

அவன் நண்பனுக்கு நன்றி சொல்லிவிட்டு. திரும்பும் பொது நண்பன் திரும்ப அவனை அழைத்து,

“ஏதோ ஒரு பணக்காரவீட்டுப் பெண் என்று சொன்னாயே! அந்தப் பெண்ணின் முகவரியை எனக்குக் கொடுத்துவிட்டுப் போ” என்றான்.

இப்படியும் சில நண்பர்கள் தன்னலங்கொண்டு, ஆலோசனை கூறுவதும் உண்டு என்பதை நாம் அறிந்து கொள்வது நல்லது.


93. “பாரக் கழுவுக்குப் பழுத்த கோமுட்டி"

ஒருவிட்டில் கன்னம் வைத்துத் திருடும்போது சுவர் இடிந்து விழுந்து கள்வன் ஒருவன் இறந்து போனான. கள்வனின் மனைவி, “ஈரச் சுவரை கட்டி வைத்து என் கணவரைக் கொன்றுவிட்டார்கள்” என்று வழக்குப் போட்டாள். மன்னன் விசாரிக்கப் போனான். வீட்டுக்காரன் சொன்னான்.

“சுவரை நான் வைக்கவில்லை. ஒட்டன்தான் வைத்தான்” என்றான்.

ஒட்டனைக் கூப்பிட்டு விசாரித்தபோது, “இதற்கு நான் பொறுப்பு அல்ல. சித்தாள்தான் ஒரு குடம் தண்ணிரை அதிகமாக ஊற்றிவிட்டாள்” என்று கூறினான். சித்தாளைக் கூப்பிட்டு விசாரித்தபோது, “ஒரு வண்டி மண்ணுக்கு 9 குடம் தண்ணிர்தான் கணக்கு. நானும் 9 குடம் தண்ணிர்தான் ஊற்றினேன். குயவன் தான் அந்தப் பானையை சற்றுப் பெரிதாகச் செய்து விட்டான் நான் என்ன செய்ய என்றாள்.

மன்னன் குயவனைக் கூப்பிட்டு விசாரித்தான். நான் வழக்கம்போல்தான் பானையைச் செய்து கொண்டிருந்தேன். நம் கோவிலில் சதிராடும் தாசி என் வீட்டின் வழியே போய்க்கொண்டிருந்தாள், அதை நான் பார்த்துக் கொண்டிருந்தபோது குடம் சற்று பெரியதாகப் போய்விட்டது. நான் என்ன செய்ய?” என்று அவன் சொன்னான். மன்னன் தாசியைக் கூப்பிட்டு விசாரித்தான்.

நான் நகை செய்யக் கொடுத்திருந்த ஆசாரி ஒரு மாதமாகியும் நகையைக் கொடுக்கவில்லை. அதைக் கேட்கத்தான் நான் அப்பக்கம் போனேன்; என்மீது தவறில்லை என்று அவள் கூறினாள்.

மன்னன் ஆசாரியைக் கூப்பிட்டு விசாரிக்க, அவன் ஒன்றும் சரியாக பதில் சொல்லவில்லை. கோபம் கொண்ட மன்னன் அவனைக் கழுவில் ஏற்ற உத்தரவு போட்டுவிட்டான் காவலர்கள் அவனை கழுமரத்தின் அருகே அழைத்துப் போனார்கள். வேடிக்கைப் பார்க்க ஒரு கூட்டமே தொடர்ந்து போயிற்று. கழுமரத்தில் நின்ற ஆசாரியோ “சிரி சிரி” என்று சிரித்தான். காவலர்கள் ஆசாரியை இதுபற்றி விசாரித்தபோது இந்தக் கழுமரம் “நான் எவ்வளவு மொத்தமாக இருக்கிறேன். நீ தட்டைக் குச்சிமாதிரி இருக்கிறாயே; என்று என்னைப் பார்த்து சிரித்தது. அதனால்தான் நானும் சிரித்தேன்” என்றான்.

கழுவிலேற்ற வந்த காவலர்கள். கூட்டத்தில் இருந்தவர்கள் பலரையும் உற்றுப் பார்த்தார்கள். அங்கு ஒரு கோமுட்டி செட்டியார் வருத்த உடலும், தொந்தியுமாகக் காட்சியளித்தார். காவலர்கள் ஆசாரியை விட்டுவிட்டு, அந்தப் பழுத்த கோமுட்டி செட்டியாரைக் கழுவிலேற்றிப் போய்விட்டார்கள்.

இப்படி ஒரு நாடு; இப்படி ஒரு மன்னன்: இப்படி ஒரு திருடன்: இப்படி ஒரு வழக்கு இப்படி ஒருமக்கள்: இப்படி ஒருகதை உண்டா? என்று கேட்காதீர்கள். எனக்கு அதுபற்றி தெரியாது. “பாரக் கழுவிற்கு பழுத்த கோமுட்டி” என்ற பழமொழி மட்டும் தமிழகத்தில் இருந்து வருகிறது. என்பது உண்மை.


94. குளிர்காய நேரமில்லை

ஒரு பேராசை கொண்ட மன்னன் தன் நாட்டைவிட பிற நாடுகளையும் பிடித்து ஆளவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தான். அவன் நாள்தோறும் மாறுவேடம் கொண்டு காலை 4 மணிமுதல் 8 மணிவரை தன் நகரைச் சுற்றிப்பார்க்கும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தான்.

ஒருநாள் அதிகாலையில் சருகு அரித்துக் கொண்டிருந்த ஒரு கிழவியைக் கண்டு, “பாட்டி காட்டி! என்ன செய்கிறாய்” என்று கேட்டான் அரசன். கிழவி, குளிர் காய சருகு அரிக்கிறேன்” என்றாள். அதற்கு மன்னன் “இதுவரை எவ்வளவு சருகு அரித்திருக்கிறாய்? என்று கேட்டான். கிழவி இதுவரை “42 மூட்டை” என்றாள். மன்னன் “நானும் 20 நாட்களாகப் பார்க்கிறேன். காலமெல்லாம் நீ சருகு அரித்துக் கொண்டிருக்கிறாயே தவிர, ஒருநாளாகிலும் நீ குளிர்காய்வதை நான் பார்க்கவில்லையே!” என்றான். கிழவி, சருகு அரிக்கவே. எனக்கு நேரம் போதவில்லையே குளிர் காய்வதற்கு. எனக்கு ஏது நேரம்?” என்று கேட்டாள்.

மன்னன் சிந்திக்கத் தொடங்கினான். காலமெல்லாம் பொருளைத் தேடித் தேடி பொருளை சேர்த்து வைக்க மக்கள் முயற்சிக்கிறார்களே தவிர சேர்த்துவைத்த பொருளில் சிறிதுகூட அனுபவிக்காமல் மேலும் மேலும் சேர்த்துக்கொண்டே சாகிறார்களே என வருந்தினான். சருகு அரிக்க நேரமின்றி தீக்காய நேரமில்லாத் தன்மை தன்நாட்டு மக்களிடம் இருப்பது கண்டு மன்னன் மேலும் வருந்தினான். வருந்தி என்ன செய்ய? மன்னனின் கதையும் இதுதானே?

தன் ஆட்சியில் இருக்கும் நாட்டை செம்மைப்படுத்தி திருத்தி ஆளவேண்டும் என்று எண்ணாமல், மேலும், மேலும் நாடுபிடிக்க பேராசை கொண்டு முயல்வது. அவினாலும் அரிய முடிவதில்லை. இப்படித்தான் பலரும். இதுதான் உலகம்.


95. மறதி!

ஒரு பெரியவர் ரயிலில் பயணம் செய்து கொண்டு இருந்தார். பயணச்சீட்டு பரிசோதகர் எல்லோரிடமும் கேட்டு சரிபார்த்து விட்டு இவரிடமும் வந்து பயணச்சீட்டு கேட்டார்.

இவர் தன் சட்டைப்பையைப் பார்த்துவிட்டு பணப் பையையும் பார்த்துவிட்டு கைப்பையையும் பெட்டியையும் பார்த்துத் தேடிக் கொண்டே இருந்தார். பயணச்சீட்டை சரிபார்ப்பவர் இவரின் தோற்றத்தைப் பார்த்து, “பெரியவர் பயணச்சீட்டைக் கட்டாயம் வாங்கியிருப்பார். வைத்த இடம் தெரியாமல் தேடிக்கொண்டே இருக்கிறார் என்றெண்ணி “பெரியவரே, பரவாயில்லை; நீங்கள் துன்பப் படவேண்டாம், அமைதியாக இருங்கள்.” என்று சொல்லிவிட்டு அடுத்தப் பெட்டிக்குப் போய்விட்டார்.

சிறிதுநேரம் கழித்து பயணச்சீட்டை சரி பார்ப்பவர் அந்தவழியாக வரும்போது, பெரியவர் மறுபடியும் தேடிக் கொண்டிருப்பதைக் கண்டு, “பெரியவரே, நான் தான் துன்பப்படவேண்டாம் கம்மாயிருங்கள் என்று சொன்னேனே! மறுபடியும் ஏன் அச்சீட்டை தேடிக் கொண்டே யிருக்கிறீர்கள்” என்று கேட்டார். அதற்குப் பெரியவர்.

நான் எந்த ஊருக்குப் போகிறேன் என்பதை அந்தப் பயணச்சீட்டைப் பார்த்தால்தான் தெரிந்துகொள்ள முடியும் என்று கடுமையாகக் கூறினார்.

மறதி எல்லோருக்கும் இருக்கலாம். ஆனால் இவ்வளவு பெரிய மறதி எவருக்கும் இருத்தல் கூடாது.


96. சர்க்கரை சாப்பிடாதே

ஒருமுறை நபிகள் நாயகம் அவர்கள் சொற்பொழிவு செய்து கொண்டிருந்தார்கள். ஒருகிழவி பையன் ஒருவனை உடனகூட்டிக் கொண்டு வந்து அவர் முன்னே வந்து நின்றாள். என்ன என்றார்கள். “இவன் சர்க்கரையை அதிகமாகச் சாப்பிடுகிறான். சாப்பிட வேண்டாமென்று புத்தி சொல்லுங்கள், நான் சொல்லி இவன் கேட்கவில்லை. அதற்காகத் தங்களிடம் அழைத்து வந்தேன்” என்றாள் “அப்படியா” என்று சற்று எண்ணி இன்னும் மூன்று நாட்கள் கழித்து அழைத்து வாருங்கள் என்றார். போய்விட்டார்கள். மூன்றாம் நாள் நாயகம் அவர்கள் பேசிக்கொண்டு இருப்பதை அறிந்து, பல மைல்களுக்கு அப்பால் மிகவும் துன்பப்பட்டு தன் பையனை அழைத்துக் கொண்டுபோய் பழையபடி நின்றாள். “நீங்கள் யாரம்மா என்றார்கள் நாயகம் அவர்கள். மூன்று நாட்களுக்கு முன்பே, இந்தப் பையன் சர்க்கரை சாப்பிடுகிறான்; கொஞ்சம் புத்தி சொல்லுங்கள் என்று சொன்னேனே! நான்தான் என்றாள். ‘ஒ அவனா? தம்பி! இனிமேல் நீ சர்க்கரை சாப்பிடாதே போ” என்றார்கள். அந்த அம்மாவுக்கு சிறிது வருத்தம். “இவ்வளவுதானா? இதைச் சொல்லவா மூன்று நாட்கள். இதை அன்றைக்கே சொல்லியிருக்கலாமே!” என்று கேட்கவில்லை. நினைத்தாள். அவ்வளவுதான்

உடனே நாயகம் அவர்கள், தாயே! நீ என்ன நினைக்கிறாய் என்பது எனக்குத் தெரிகிறது. உன் பேரன் மட்டு: சாக்கரை சாப்பிடுகிறனன் அல்ல; நானும் அதிகமாகச் சாப்பிடுகிறவன். மூன்றாம்நாள் விட முயன்றேன்: முடிய வில்லை, நேற்று விடப்பார்த்தேன். பாதிதான் முடிந்தது. இன்றைக்கு முயன்றேன்; சக்கரையே சாப்பிடவில்லை; என்னால் அதை விட முடிந்தது. அதனாலேதான் அறிந்தேன்; சர்க்கரை சாப்பிடுவதை விடமுடியும் என்று. அதன் பிறகுதான் பையனுக்கு என்னால் சொல்ல முடிந்தது என்றார்கள்.

இது நம் உள்ளத்தைத் தொடுகிறது. தொட்டு என்ன பயன்? நம் நாட்டில் உள்ள பேச்சாளர்களின் உள்ளத்தைத் தொடவேண்டும். நபிகள் நாயகம் அவர்கள் எதைச் சொல்லுகிறார்களோ, அதையே அவர்கள் செய்வார்கள். செய்யக் கூடியதை மட்டுமே சொல்லுவார்கள். செய்துகொண்டே சொல்லுவார்கள்.

இப்பழக்கம் நம்நாட்டில் பரவுவது நல்லது.

97. மனித குணம்

நபிகள் நாயகம் ஒருநாள் மாலைநேரத்தில் பள்ளி வாசலுக்குத் தொழப் போனார்கள். அங்குள்ள தண்ணிரி தொட்டியில் கைகால்களை சுத்தம் செய்யும் பொழுது மரத்திலிருந்து ஒருதேள் தண்ணீர் தொட்டியில் விழுந்து துடியாய் துடித்துக் கொண்டிருந்தது. நாயகம் அவர்கள் இரக்ககுணம் கொண்டு, அத் தேளைத் தரையில் எடுத்துவிடத் தொட்டார்கள். அவ்வளவுதான். தேள் கொட்டி விட்டது. கையில் நெறி ஏறுகிறது. அந்த நிலையிலும் தண்ணியில் நீந்த முடியாமல், உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் துடியாய் துடிக்கும் தேளின் துன்பத்தைப் பார்த்து, மனம் சகியாமல் மறுபடியும் அதை தண்ணிரிலிருந்து எடுத்து விட முயற்சித்தார்கள்.

உடனே, பக்கத்திலிருந்த அசரத் அபூபக்கர் அவர்கள் “என்ன பெருமானே! தேள், தங்களைக் கொட்டுகிறது; மறுபடியும் அதை எடுத்துவிடப் போகிறீர்களே!” என்று கூறித் தடுத்தார்கள்.

அதற்கு நபிகள் நாயகம் அவர்கள், “நஞ்சுள்ள ஒரு உயிரே தன் குணத்தைக் காட்டத் தவறாதபோது மனிதன் தன் குணத்தைக் காட்டத் தவறலாமா?” என்று கூறிக் கொண்டே இருகைகளாலும் அத்தேளை தண்ணிரோடு சேர்த்து அள்ளி வெளியில் விட்டுவிட்டு, அதற்குப்பின் தொழுகைக்குச் சென்றார்கள் என வரலாறு கூறுகிறது.

இப்போதனை தன்னை மனிதன் என்ற நினைத்துக் கொண்டிருக்கிற ஒவ்வொருவரையும் சிந்திக்கத் தூண்டுகிறது.

98. எது அறிவு?

நாட்டு மன்னன் தன் நண்பனைப் பார்த்து, “என்ன எழுதிக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டான். நண்பன் சொன்னான் “நம்நாட்டில் உள்ள முட்டாள்களின் பெயர்களை எழுதிக் கொண்டிருக்கிறேன்” என்று.

மன்னன் : எத்தனை பேர் இருக்கிறார்கள்?

நண்பன் : நேற்றுவரை 6 பேர்களை எழுதி வைத்திருந்தேன். இன்று 7வது நபராக தங்கள் பெயரை எழுதிக் கொண்டிருக்கின்றேன்.

மன்னன் : [ஆச்சரியமுற்று] முட்டாள்களின் பெயர்களில் என் பெயருமா?

நண்பன் : ஆம்! அரபு நாட்டான் ஒருவன் வந்தான். ஊரும் தெரியாது; பெயரும் தெரியாது! அவனிடம் போய் 5 குதிரைக்கு 500 பொன் பேசி குதிரை கொண்டு வரும்படி, முன்பின் யோசியாமல் பணத்தைக் கொடுத்தனுப்பியிருக்கிறீர்களே! இது முட்டாள்தனமல்லவா?

மன்னன் : நாளைய தினம் அவன் குதிரைகளைக் கொண்டுவந்து அரண்மனையில் சேர்த்து விட்டால் நீ என்ன செய்வாய்?

நண்பன் : நான் என்ன செய்வேனா? உங்கள் பெயரை அடித்துவிட்டு அந்த இடத்தில் அவன் பெயரை எழுதிவிடுவேன் என்றான்.

எப்படிக் கதை நகைச்சுவையைக் காட்டுகிறது. இது நாட்டில் உள்ள சிலரின் நடைமுறைகளைக் காட்டுமே தவிர, நல்லறிஞர்களின் வாழ்வைக் காட்டாது. நேர்மையாக நடப்பது ‘மூடத்தனம்’ என்றும் ஆகாது.

“மனம்” செல்லும் இடமெல்லாம் செல்லாமல் தடுத்து நிறுத்தி, தீமையை உணர்த்தி, நல்லவழியில் மனத்தை செலுத்துவது எதுவோ, அது “அறிவு” என்பதும், இவன் “அறிஞன்” எனப்படுவான் என்பதும் வள்ளுவர் வாக்கு.


99. சங்ககால நூல்களில் ஒரு காட்சி

வெளியில் சென்றுவந்த ஒரு தாய், வெகுகாலமாகியும் திருமணமாகாதிருந்த தன் மகளை வீட்டில் காணாமல் தெருவில் ஒடி தேடியலைந்தாள். ஒரு வயது சென்ற கிழவர், “உன் மகள் தன் காதலனோடு இப்பொழுது தான் தென்புறச் சாலை வழியாகப் போனாள்” என்றார்.

அத் தாய் தென்புறச் சாலை நோக்கி விரைந்தோடி தேடினாள். நெடுந்தூரம் சென்றும் காணவில்லை. எதிரே ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வந்தனர். அவர்களிடம் கேட்டாள், “என் மகள் ஒரு காளையோடு இவ்வழிச் செல்வதைக் கண்டீர்களா?” என்று.

வந்தவன் கூறினான், “ஆம் கண்டேன். திரண்ட தோள்களும், பரந்த மார்பும், விரிந்த நெற்றியும் உடைய ஒரு ஆண்மகன் செல்வதைக் கண்டேன்” என்று கூறி. “அயலே” என்று அருகிலுள்ள தன் மனைவியைப் பார்த்தான்.

அவள் கூறினாள். ஆம்! மயிலின் சாயலையுடைய அழகிய பெண்ணொருத்தி ஒரு ஆடவனுடன் செல்வதைக் கண்டேன்” என்று

என்ன பண்பு? ஆண், ஆணை மட்டுமே கண்டான். அருகில் சென்ற பெண்ணைக் காணவில்லை. பெண். பெண்ணை மட்டுமே கண்டாள். உடன் சென்ற ஆணைக் காணவில்லை.

அவர்களிடம் அத் தாய் கேட்டாள், “எவ்வளவு தூரத்தில் செல்லுகிறாள் விரைந்து சென்றால், அவளைக் கண்டுபிடிக்க முடியுமா? அவளைக் காணாமல் பெற்று வளர்த்த வயிறு பற்றி எரிகிறதே!” என்று அழுதாள்.

அவர்கள் கூறினார்கள், “வீணாக ஒடித் தேடியலையாதே அவர்கள் வாழத் துவங்கி விட்டார்கள். பக்குவம் அடையும் வரையில்தான் அவள் உனக்குச் சொந்தம். பக்குவமடைநது விட்டால், அவள் பிறருக்குச் சொந்தம். செந்தாமரை மலர் சேற்றில்தான் பிறக்கிறது. அது சேற்றிலேயே கிடந்தால், அது அழுகித்தானே போகும்? சேற்றைவிட்டு வெளியேறி மக்கள் முடியை அலங்கரிக்கும் போதுதானே அது பெருமைடைகிறது.

“முத்துக் கடலில்தான் பிறக்கிறது. கடலிலேயே கிடந்துவிட்டால் அதற்கு என்ன பெருமை? அது கடலை விட்டு வெளியேறி மன்னர்களின் முடியை அலங்கரிக்கும் போதுதானே அது பெருமையடைகிறது. திரும்பிக் செல்லுங்கள்” என ஆறுதல் கூறி அனுப்பிளைத்தார்கள்.

கதை நமக்கு ஒரு படிப்பினையை உண்டாக்குகிறது. அது, “இறக்கை முளைத்த பறவையை கூண்டில் அடைத்து வைத்திருப்பதைப்போல. மணம் செய்விக்காமல் பக்குமடைந்தப் பருவப் பெண்களை மணம் செய்விக்காமல் வீட்டில் அடைத்து வைத்திருப்பதும் தவறு” என்பது.


100. எப்போது புத்தி வரும்?

நிலக்கிழார் நல்லுச்சாமி பிள்ளை என்றால் கீரனூரில் அனைவருக்கும் தெரியும். அவருக்கு இரு மனைவிகள் இருந்தும் குழந்தைகள் இல்லை. அவர் இறந்த பதினாறாம் நாள் சடங்கு முடிந்த அன்று, அவரது விழக்கறிஞர் அவரது இல்லத்திற்கு வந்து, அவருக்குள்ள 24 ஏக்கர் நஞ்சை நிலத்தையும் ஆளுக்கு 12 ஏக்கர் வீதம் எழுதி வைத்திருக்கிறார் என்றும், அவற்றிற் குரிய ஆதரவுகளை இரு மனைவிகளிடமும் பிரித்துக் கொடுத்தார். அவரது பெரிய வீட்டைமட்டும் இளம் மனைவிக்கு எழுதி வைத்து இருக்கிறார் என்று கூறி, அந்த ஆதரவை மட்டும் இளம்மனைவியிடம் கொடுத்து விட்டுப் போய்விட்டார் வழக்கறிஞர். அவ்வளவுதான்,

அடுத்த நாள் பெரிய மனைவி காமாட்சியம்மாளைச் சேரிந்தவர்கள் தான்தான் முதல் மனைவி; இந்த வீடு எனக்குத்தான் கிடைக்க வேண்டும் என்றும், தனக்குப் பின்தான் இளம்மனைவிக்குப் போய்ச் சேரவேண்டும் என்றும் கூறி வழக்குத் தொடரச் செய்தார்கள். இளம் மனைவி மீனாட்சியம்மாளைச் சேர்ந்தவர்கள் எதிர் வழக்காடினார்கள். நான்கு ஆண்டுகள் முடிந்தும் வழக்கு முடியவில்லை. காமாட்சியம்மாளுக்கு நான்கு ஏக்கர் நிலமும், மீனாட்சியம்மாளுக்கு மூன்று ஏக்கர் நிலமும் செலவானது. ஐந்தாம் ஆண்டில், “இறந்துபோன கணவன் உயில் எழுதி வைத்திருப்பதால் இளம்மனைவி மீனாட்சி யம்மாளுக்கே வீடு சொந்தம்” எனத் தீர்ப்பாகி விட்டது.

சும்மா விடுவார்களா காமாட்சியம்மாளைச் சேர்ந்தவர்கள், “அவ்வீடு பரம்பரையாக வந்த வீடாதலால் நீலமேகம் பிள்ளைக்கு உயில் எழுதிவைக்க உரிமை யில்லை” என்று கூறி மேல் முறையீடு செய்தார்கள். வழக்கு மூன்று ஆண்டுகள் நடைபெற்றன. மேலும் இரண்டிரண்டு நஞ்சை நிலங்கள், கோர்ட்டு செலவிற்கும், வீட்டு செலவிற்கும், கூட்டாளிகளின் செலவிற்கும், இருவர்க்கும் செலவாயின.

இளம் மனைவி மீனாட்சியம்மாள் தன் சிறிய தாயாரை அனுப்பி, மூத்த மனைவி காமாட்சியம்மாளைப் பார்க்க விரும்புவதாக சொல்வி அனுப்பினாள். காமாட்சி யம்மாள் ஒடோடி வந்து தன் சக்களத்தியிடம் “என்னடி செய்தி” எனக் கேட்டாள். இளையவள் தன் கையிலிருந்த ஒரு நாளிதழைக் கொடுத்து, “அக்காள்! இதைப் படித்துப் சார்!” என்றாள்.

அந்த இதழில் வெளிவந்திருந்த செய்தி இதுதான்.

“இலண்டனில் ஒருவன் வீதியில் நடந்து கொண்டிருந்தான். அவன் கைக்குட்டைதவறிப் போப் கீழே விழந்து விட்டது. பின்னால் வந்தவன் அதை எடுத்து வைத்துக் கொண்டான். முன்னால் வந்த ஒருவன், “அது தன் கைக்குட்டை கொடு” எனக் கேட்டான். பின்னால் வந்தவனோ “கீழே கிடந்த கைக் குட்டையை நான்தான் கண்டெடுத்தேன். எனக்குத்தான் சொந்தம்” எனக் கூறினான். இருவரும் நீதிமன்றம் சென்று வழக்காடினார்கள். வழக்கிற்கு இருவருடைய சட்டைகளும், கால்சிராய்களும் விற்று செலவாகி விட்டன. ஆனால் கைக்குட்டை யாருக்குச் சொந்தம் என்று இன்னும் முடிவாகவில்லை” என்று இருந்தது.

காமாட்சியம்மாள், மீனாட்சியம்மாளிடம் கேட்டான், “என்னடி செய்வது” என்று,

மீனாட்சி : அக்கா! உனக்கு 6 ஏக்கர் நிலம் போச்சு; எனக்கு 5 ஏக்கர் நிலம் போச்சு இன்னும் வீடு யாருக்குச் சொந்தம் என்று முடிவாகவில்லை. நாம் மீதம் இருக்கும் நிலத்தையாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டாமா?

காமாட்சி : அதற்கு என்னடி செய்வது?

மீனாட்சி : எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. வீட்டின் நடுவில் ஒரு சுவர் எழுப்பி, நீ மேல் பாகத்தில் இரு நான் கீழ்பாகத்தில் இருக்கிறேன். அவரவர் நிலத்தை வைத்து அவரவர் சுகமாக வாழலாம்.

காமாட்சி : உன் யோசனை எனக்குப் பிடிக்கவில்லை; நான் ஒப்ப மாட்டேன்.

மீனாட்சி : அக்கா பிடிவாதம் பிடிக்காதே இன்னும் வழக்காடிக் கொண்டிருந்தால் இருக்கின்ற நிலமும் போய்விடுமே!

காமாட்சி : என் யோசனைப்படி நடப்பதானால் மட்டுமே இதற்கு சம்மதிப்பேன்.

மீனாட்சி : உன் யோசனை என்ன? காமாட்சி : வீட்டைப் பங்குபோடுவது கூடாது; நடுவில் சுவர் எழுப்புவதும் கூடாது. நம் இருவர்க்கும் மிஞ்சியிருக்கிற “ஏக்கர் நஞ்சை நிலத்தை ஒன்றாக வைத்துக் கொண்டு, நாம் இருவரும் ஒன்றாக சமைத்து உண்டு, ஒன்றாகவே இந்த வீட்டில் சேர்ந்திருந்து வாழவேண்டும் என்பதுதான் என் யோசனை.

மீனாட்சி : அக்கா! நீ ஏன் இதை முன்னதாகவே சொல்லவில்லை?

அதற்கு காமாட்சி, “எனக்கு இப்போதுதானே புத்தி வந்தது” என்றாள்.

கதை முடிந்தது. இவர்களுக்கு இப்பொழுதாவது புத்தி வந்து இருக்கிறது. நீதிமன்றங்களில் அலைந்து திரிந்து கொண்டிருக்கும் நம்மவரில் சிலருக்கு எப்போது புத்திவரும்.


"https://ta.wikisource.org/w/index.php?title=Minniyambooks&oldid=1493854" இலிருந்து மீள்விக்கப்பட்டது