பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

அணுவின் ஆக்கம்


ஓரிடத்தான்கள்27: அணுவாற்றலால் இன்னொருவித நன்மையும் உண்டு. அணு உலை28களினின்று நூற்றுக் கணக்கான 'கதிரியக்க ஓரிடத்தான்கள்’ எனப்படும் கதிரியக்கமுள்ள தனிமங்களும் வேதியற் பொருள்களும் உடன்விளைப் பொருள்களாகக்29 கிடைக்கின்றன. இவை மருத்துவம், உழவுத் தொழில், தொழில்துறை முதலிய பல்வேறு துறைகளில் ஆயிரக் கணக்கான முறைகளில் பயன்படுகின்றன. அவை உமிழும் தெளிவான கதிர்களைக் கொண்டே அவை அத்துறைகளில் பயன்படுத்தப் பெறுகின்றன. இன்று மிகக் குறைவாகக் கிடைக்கும் ஓரிடத்தான்கள் உழவுத் தொழிலிலும் தொழில் துறையிலும் பயன்படுத்துவதிலிருந்து பல இலட்சக்கணக்கான டாலர் மிச்சப்படுகிறது என்று அறிஞர்கள் கணக்கிட்டுக் கூறுகின்றனர். மருத்துவத் துறையிலும் உயிரியல் துறையிலும் இவற்றால் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் விலை மதிக்க முடியாதது. அமைதிக்காக என்று பல அணு உலைகள் செயற்படத் தொடங்கியவுடன் அவற்றின் விலையும் மலிவாகும்; அவை பயன்படும் அளவும் மிகும். இந்தக் கதிரியக்க ஓரிடத்தான்கள் எனப்படும் உடன்விளைப் பொருள்களும் அணுவாற்றலைப் போலவே மக்கள் நலனுக்குப் பெரிதும் பயன்படும் காலம் மிகத் தொலைவில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவற்றினைப் பயன்படுத்தும் முறை இன்னும் குழவிப் பருவத்தில்தான் இருக்கிறது; அதுவும் இவ்வுலகெங்கும் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள ஆய்வகங்களிலும் ஆராய்ச்சி மருத்துவ நிலையங்களிலும் சிதறிய நிலையில் அமைந்திருக்கின்றது. பல்வேறு அறிவியல் துறைகளிலும் அவை எவ்வெவ்வாறு பயன்படுத்தப்பெறுகின்றன என்பதும், அவை பயன்படுத்தப்பெறும் யுக்தி முறைகள்30 யாவை என்பதும் அவற்றை முழு அளவில் பயன்படுத்துவதற்கு முன்னதாக அறியப்பெற வேண்டியவை. ஜெனிவா மாநாட்டின் முக்கிய பகுதிகளில் இதுவும் ஒன்று.


27 ஓரிடத்தான் - isotope. (அணுவில் ஒருவகை, இது.) 28அணு உலை - nuclear reactor. 29 உடன்விளைப் பொருள் - by-product, 30 யுக்தி முறைகள் - techniques.