பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

அணுவின் ஆக்கம்



அமைந்திருக்கின்றன என்றுகூடச் சொல்லலாம். அம்மொழியிலுள்ள கலைச் சொற்களை எந்த நாட்டிலுமுள்ள சாதாரண குடிமகன் புரிந்துகொள்ள முடியாது. அந்த முடிவுகளைச் செய்தித்தாள்கள் கையாளும் மொழியிலமைத்தாலும், அல்லது அவை வானொலிப் பேச்சிலமைந்தாலும் அவற்றைப் புரிந்து கொள்வது எளிதன்று; அவை மருட்சியைத்தான் விளைவிக்கும். எனினும், புதிதாகப் பெற்ற அணுவாற்றல் சமூக விசையாக12 அமைந்திருக்கின்றது. நாம் அதனை அறிவியலறிஞர்களுக்கு மட்டிலும் சொந்தமானது என்று வாளாவிட்டுவிடுதல் கூடாது. அவற்றின் பயன்களை மக்கள் நலத் திற்காக மக்களே ஆட்சி செய்ய வேண்டும். சிந்தனையுள்ள ஒவ்வொரு நாட்டு மக்களும் அதனைப் புரிந்து கொள்ளத் துடித்து நிற்கின்றனர். தமிழ் நாட்டு மக்களும் அவற்றைப் புரிந்துகொள்ள வேண்டியது அவர்களது தலையாய கடமை என்பதை எடுத்துக் கூறவா வேண்டும் ? தமிழில் எழுதப் பெற்றுவிட்டால் அனைத்தையும் புரிந்துகொண்டு விடலாம் என்று ஒரு சிலர் எண்ணுகின்றனர். அது தவறு ; பெருந்தவறு. அறிவியல் நமக்குப் புதிய துறை. அதில் பல கலைச் சொற்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொருளையும் அனுபவத்தையும் விளக்குகின்றது. அப்பொருள்களையும் அனுபவங்களையும் புரிந்துகொள்ள வேண்டுமானல், ஆழ்ந்து கற்றல் வேண்டும். அறிவினைப் பெறுவதற்கு அதைத் தவிர வேறொரு குறுக்கு வழியும் இல்லை. அணுவியலைப்பற்றி ஒரு சில அடிப்படையான கருத்துக்களே அறிந்து கொண்டால் தான், அணுவாற்றலின் அற்புதப் பயன்களை நன்கு புரிந்து கொள்ள இயலும். எனவே, அணுவியலைப்பற்றி ஒரளவு முதலில் அறிந்துகொள்ள முற்படுவோம்.


12சமூக விசை-social force