பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

அவர்களுக்கு உணவு இல்லாவிட்டால் படை ஏது? வெற்றி ஏது? உழுபடையின் சாலிலே விளைந்த நெல்லைக் கொண்டுதான் பொருபடையின் போரிலே விளைந்த வெற்றியைப் பெறவேண்டும். உலகத்தில் பஞ்சம் தோன்றினாலும் இயற்கையல்லாத உற்பாதங்கள் நிகழ்ந்தாலும் அரசர்களைத்தான் மக்கள் பழிப்பார்கள். ஆகையால் அரசனாக இருப்பவன் நியாயம் வழங்க எப்போதும் சித்தனாக இருக்கவேண்டும். படை வீரர்களைப் பாதுகாப்பதைக் காட்டிலும் பெரிதாக எண்ணி உழவர்களைப் பாதுகாக்க வேண்டும்."

"புலவர் பெருமானே, என்னிடம் குறையிருந்தால் குறிப்பாகச் சொல்லாமல். நேராகவே சொல்லலாம்” என்று அரசன் முகம் நிமிர்ந்து சொன்னன், அவன் குரலில் பச்சாத்தாபம் ஒலித்தது.

"சொல்கிறேன். நான் சொன்ன உண்மைகளை மனம் கொண்டாயானால், மற்றவர்கள் கூறும் வார்த்தைகளைச் செவியிலே கொள்ளக் கூடாது. நாலு பேர் நாலு கூறுவார்கள். அரசன் உண்மையை நேரிலே கேட்டு உணரவேண்டும். குடிமக்களுடைய குறையை உணரும் திறத்தில் நடுவில் அயலாருக்கு என்ன வேலை? தாய்க்கும் பிள்ளைக்கும் இடையே அன்பை வாங்கிக் கொடுக்கக் கையாள் எதற்கு? நீ அத்தகையவர்களின் புல்லிய வார்த்தைகளைக் காதிலே வாங்கவே கூடாது. எருதுகளைப் பாதுகாத்து நிலத்தை வளப்படுத்தும் குடியானவர்களின் பாரத்தை நீதான் தாங்க வேண்டும். அவர்களால்தான் நாடு வளம் பெறுகிறது; படை பலம் பெறுகிறது; அாசன் புகழ் பெறுகிறான். இதனை நன்கு உணரவேண்டும். குடிகளின் குறையை உணர்ந்து நீ பாதுகாப்பாயானால் பகைவர்கள் யாவரும் உன் பெயரைக் கேட்டாலே நடுங்குவார்கள். காணிக்கையுடன்