பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24


அவன் பேசியபொழுது அவன் கூறிய பாராட்டுரைகளைக் கேட்டு மகிழவில்லை பாணன். "காலை நேரத்தில் பாடவேண்டிய பண்ணை இப்போது பாடலாமா?” என்று சுட்டிக் காட்டுவது போலவே தோன்றியது. தன்னுடைய பிழையை அப்போதுதான் உணர்ந்தான். முறைப்படி மாலைக்குரிய செவ்வழிப் பண்ணைப் பாடியிருக்கவேண்டும். காலையிலே பாடிய மருதப்பண் அவனை ஆட்கொண்டு முழுக்கிவிட்டது. அதனால் இவ்வளவு பெரிய பிழையைச் செய்துவிட்டான்.

நள்ளியின் பேச்சு, பாணனுக்கு உண்மையை உணர்த்தியது. அவன் முகம் வாடியது; உடம்பு வேர்த்தது. நள்ளி குறை கூறும் முறையில் ஒன்றும் சொல்லவில்லை. ஆயினும் அவன் மருதம் காலைப் பண் என்பதை உணர்ந்து பேசினன். சிறந்த புலமையும் மானமும் உடைய பாணனுக்கு அந்தக் குறிப்பே போதுமானதாக இருந்தது.

பாணன் சித்திரப் பாவைபோல இருந்தான். அவனுடைய மனம் ஏதோ பெரிய பிழையைச் செய்து விட்டது போலத் துன்புற்றது. அவன் அகத்திலே தோன்றிய வேதனை முகத்திலே தெரிந்தது. புலவர் வன்பரணர் அவன் முகத்தைக் கவனித்தார். நள்ளியின் பேச்சினால் தான் செய்த பிழையை உணர்ந்து செயலற்ற நிலையில் அவன் இருப்பதை உணர்ந்தார். 'கலைஞன் தவறு செய்தால் அதற்கு ஏதோ காரணம் இருக்கவேண்டும். அதைத் தெரிந்துகொள்ள இப்போது முடியவில்லை. என்ன காரணம் என்ற ஆராய்ச்சியைச் செய்துகொண்டிருப்பது இப்போதுள்ள நிலையைப் பின்னும் நயமற்றதாக்கி விடும். ஆகவே இந்தக் குழப்பமான நிலையை மாற்ற வேண்டும்' என்று எண்ணினார் அவர்.