பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

28

அருள்நெறி முழக்கம்


வெற்றியைத் தருவான். "கடவுளை நம்பினோர் கைவிடப்படார்” என்ற பழந்தமிழ்ப் பழமொழியும் உண்டு. “அவனன்றி ஒர் அணுவும் அசையாது” என்பதும் எல்லோரும் படித்த ஒன்றேதான். நாம் நம்பிக்கையுடன் அவன்தாள் பணிந்து வாழ்த்தி வணங்கி வழிபட்டால் அவன் நிச்சயமாக நமக்கு உதவி புரிவான் என்பதில் சந்தேகம் இல்லை.

சந்தேகம் இன்றி வாழ்வதுதான் மனித வாழ்வு. "சந்தேகம் மனிதர்களுடன் பிறந்த ஒரு தொற்றுநோய். சந்தேகம் தங்குகின்ற நெஞ்சு தவறுடை நெஞ்சு" என்று ஒரு மேல்நாட்டு அறிஞன் கூறுகின்றான். ஆதலால் நாம் நமது வாழ்க்கையில் சந்தேகத்திற்கு இடங்கொடுத்தல் கூடாது. சந்தேகத்திற்கு நாம் இடங்கொடுத்தால் நாம் முன்னேற முடியாது. அதனின்றும் தப்பி வாழ வழியும் கிடையாது.

கடவுள் நெறி வாழ்க என்பது நாம் வாழத்தான் என்பதை எல்லோரும் நன்கு உணர வேண்டும். வெள்ளம் ஆற்றில் சென்றாலும் அது தானாக நம்முடைய வீட்டிற்கு வாராது. அன்பான கடவுள் எங்கும் பரந்து இருப்பினும் நாம் உள்ளத் தூய்மையுடன் அவன்தாள் பணிந்து வழிபட்டாலன்றி அவனருள் கிடைக்காது.

கடவுள் வழிபாடு எப்பொழுது தோன்றியது? ஏன் தோன்றியது? என்ற வினாக்களைக் கண்டு, அதற்கு அறிவின் துணைகொண்டு - அருளின் துணை கொண்டு விடையைக் காணுங்கள். நீங்கள் காணுகின்ற முடிவு அறிஞர் பெருமக்களும், அறிவுடைப் பெருமக்களும் ஒப்பத்தக்கதாக இருக்க வேண்டும். அந்த ஒப்பற்ற முடிவில் உயரிய கருத்துக்கள் இருப்பதால் கடவுள் வழிபாடு தோன்றிய காலமும் காரணமும் நன்கு தெரியவரும். காலமும் காரணமும் கண்டபின்னர் எவரும் அதனைப் பற்றித் தவறாகக் கருத முடியாது. தவறாகக் கருதுகின்ற தோழர்கள் திருந்திவாழ வழி கிடையாது.