பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

35

அருள்நெறி முழக்கம்


கொள்கையை உலகிற்கு உணர்த்தியது சமயப் பெரியார்தான். அதனைப் பின்பற்றி பிடி அரிசித் தொண்டை மேற்கொண்டு சமுதாய நலத்திட்டத்தைப் பின்பற்றி பிரார்த்தனையின் வழிநின்று அருள்நெறியின் துணைகொண்டு வாழ்வோமாக.

கலை வேறு கடவுள் வேறு அல்ல. கலை கலைக்காகவும் அல்ல, கலை வாழ்க்கைக்காகத்தான். கலை வேறு கடவுள் வேறு என்று என்றும் இருந்ததில்லை. இன்றும் இல்லை. நாளையும் இருக்க முடியாது. தமிழ்மொழியைப் பழமை என்று கருதுவதுபோல கலையும் பழமைதான் என்பதை யாரும் மறக்கவோ - மறுக்கவோ முடியாது. பரந்து கிடக்கின்ற மக்கள் வாழ்க்கையிலும் கலை உண்டு.

இன்று கலை பொழுதுபோக்காக வந்துவிட்ட காரணத்தால் நாம் கலையை அனுபவிக்கின்ற உணர்ச்சியை இழந்து விட்டோம். கலை கலைக்காகத்தான் என்று மேல்நாட்டு அறிஞன் கூறினான். அவனது சொல் தமிழர்களது கலையின்முன் ஆட்டம் கண்டுவிட்டது. சிற்பத்தைச் சிற்பம் என்று கருதியது மேல்நாடு. சிற்பத்துடன் கலந்து வாழ்க்கையை நடத்தியது தமிழ்நாடு. இதனை உணர்த்துவதுதான் உருவ வழிபாடு, திருக்கோவில்களில்தான் கலையும் - இசையும் ஒன்றுபட்டு வளர்ந்தன. சிற்ப விழாவிற்கு எதுவும் இணையில்லை என்பதை திருக்கோயில்களில் காணப்படும் சிற்பங்கள் நமக்கு உணர்த்துகின்றன. கலை தமிழ்நாட்டில்தான் தோன்றியது - வளர்ந்தது - வளம்பெற்றது என்பதையும் அவை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.

நாம் புதிதாகக் கலையை உண்டாக்க வேண்டியதில்லை. இருக்கின்ற கலையைக் காப்பதுதான் நமது கடமை. சமயத்தின் அடிப்படையில் எழுந்தது கலை. கலையுடன் வாழ்ந்தனர் அன்றைய தமிழர். அவர்களின் வாழ்வைப் பின்பற்றி வாழ்ந்தால்தான் பண்டைய நாகரிகத்தைக் காக்க முடியும். நமது முன்னோர்களின் வாழ்வும் தாழ்வும் கலையில்தான் இருந்தன. நன்றாகக் கலைக்கண் கொண்டு உருவாக்கப்பட்ட சிற்பத்தில் கடவுளைக் கண்டனர்.