பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

45

அருள்நெறி முழக்கம்


மேற்கொண்டார்களேயன்றி வேறில்லை. சாக்கிய நாயனார்க்கு இடம் கொடுத்த சமயம் இவர்களுக்கும் இடம் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.

“உண்மையுமாய் இன்மையுமாய்” இருக்கின்ற ஆண்டவன் “ஒளியாகவும் ஒலியாகவும் இருக்கின்ற ஆண்டவன்" தின்கின்ற வெற்றிலையாகவும் உண்கின்ற சோறாகவும் காட்சி தருகின்ற ஆண்டவன் “உடைப்பாரிடத்தும் எரிப்பாரிடத்தும்" உறுதியாக அன்பு காட்டுவான். அடக்கம்தான் என்றும் நன்மையைத் தரும்.

உலகில் இருளை ஒட்ட யாரும் முற்படுவதில்லை. ஒளியினை உண்டாக்கினால் இருள் தானாக ஓடிவிடும். நமக்கு வேண்டிய ஒன்றிலேயே அதன்வளர்ச்சி குறித்துக் கண்ணோட்டஞ் செலுத்தினால் வேண்டாத - விருப்பப்படாத ஒன்று தானாக விலகிச் செல்லும் என்பதை இளமையுள்ளங்கள் உணர்ந்து வாழ முற்பட வேண்டும். மாற்றாரின் தகாத செயல்களுக்குப் பரிகாரம் தேட முனைகிற காலத்து அவைகளைப் பற்றிச் சிந்திப்பதை விடுத்து நாம் நமது காரியங்களிலேயே கண்ணோட்டம் செலுத்தினால் நலமுண்டு. உங்களுடைய பிரார்த்தை உள்ளம் தோய்ந்ததாக இருக்கட்டும்.

சந்தேகப் பிராணிகள் எது வேண்டுமானாலும் கூறிக் கொள்ளட்டும். அவர்களின் கூற்றைப் பெரிதென மதித்து நாம் செவி சாய்க்கக்கூடாது. “சந்தேகம் தங்குகின்ற நெஞ்சு தவறுடை நெஞ்சு” என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. நாம் சந்தேகம் என்ற ஒன்றிற்கு எக்காரணத்தைக் கொண்டும் இடங்கொடுத்தல் கூடாது. நாம் சந்தேகத்தைக் கைக்கொண்டிருந்தால் நம்முடைய வாழ்வில் நாம் முன்னேற்றம் காணமுடியாது. முன்னேற்றம் காண்பது ஒருபுறமிருக்க இருக்கின்ற தகுதியையும் இழக்க நேரிடும். சந்தேகப் பேய்க்கு இடங்கொடுத்தால் அதனின்றும் தப்பி வாழ வழி கிடையாது.