பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

தொகுப்புரை


தமிழ்த் தலைவராகக் கருதிப் போற்றுகிறார். அதனால் தானோ என்னவோ மணவையார் உள்ளத்துள் டாக்டர் கலைஞரும் டாக்டர் கலைஞர் உள்ளத்துள் மணவையாரும் அழுத்தமாக இடம்பெற நேர்ந்துள்ளது.

இன்றைய அறிவியல் வளர்ச்சியின் விளைவாக உலகம் கணினி மயமாகி வருகிறது. அத்துறையில் தமிழினம் தனித்திறன் காட்டி முன்னிலை பெற முனைந்துள்ளது. இதை நன்கு உணர்ந்து தெளிந்துள்ள டாக்டர் கலைஞர் தமிழகத்தை கல்வி, வணிகம், சமுதாயம் ஆகிய அனைத்து மட்டங்களிலும் தமிழ்நாட்டை கணினி மயமாக்க முனைந்துள்ளார். இதை பல ஆண்டுகட்கு முன்பே தன் தூரநோக்குப் பார்வையால் உய்த்துணர்ந்தவர் போன்று, தமிழில் மட்டு மல்லாது, இந்திய மொழிகளிலேயே முதலாவதாக "கணினி கலைச் சொல் களஞ்சியம்" அகராதி நூலை வெளியிடுவதோடு, அதனை டாக்டர் கலைஞர் அவர்களின் பவள விழாவுக்குக் காணிக்கையாக்கியுள்ளார். இஃது டாக்டர் கலைஞர் மீது மணவையார் கொண்டுள்ள பெருமதிப்பையும் ஆழ்ந்த நம்பிக்கையையும் முழுமையாக வெளிப்படுத்துவதாயுள்ளது.

தமிழ் வளர்ச்சிக்காக முனைப்பான முயற்சிகளை மேற்கொண்டு கடுமையாக உழைத்து ஆக்கப் பணிகளை முறைப்படி, திட்டமிட்டுச் செயல்படுத்தி வரும் தமிழ்த் தாயின் தலையாய தமிழ்த் தொண்டரை - அவரது பணிகளை அவரது வாழ்நாளின்போதே தக்கவாறு ஆய்வு செய்ய வேண்டும் என்பது என் பேரவா. அதன் மூலம் அவரது பணியின் குறை, நிறைகளை சுட்டிக்காட்டி ஆய்வதோடு, அவரொத்த பணி செய்ய முற்படும் தமிழார்வலர்களை தமிழ் வளர்ச்சிப் பணியாளர்களை ஊக்குவிக்கவும் இதன் மூலம் வாய்ப்பேற்படும் என்பது என் திடமான நம்பிக்கை. அதற்கு இந்த ஆய்வு நூல் ஆற்றல்மிகு அருங்கருவியாகப் பயன்படும் என்பது திண்ணம்.

- தொகுப்பாசிரியர்