பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

அறிவியல் திருவள்ளுவம்

"ஜலத்தின் ஜுவாலைகள்” என்கின்றது. இதனைப் புதுக்கவிதை என்பர்.

எனவே, ஒரே வகைக் கருத்து அவ்வக்காலத்தில் வழங்கிய சொல்லாட்சிகளாலும், தொடர் அமைப்பு களாலும் 'செய்யுள்' என்ற பெயரையும் 'கவிதை' என்ற பெயரையும் பெறுகின்றதைக் காண்கிறோம்.

திருவள்ளுவமும் கவிதை நூல்

இவற்றைக் கொண்டு நோக்கினால் 'தம்கால வழக்குச் சொல்லில் எளிமையாக படித்ததும் கருத்தையும் சுவை நயத்தையும் அறிந்து கொள்ளும் கவர்ச்சியுடையது கவிதை என்றாகிறது.

திருவள்ளுவர்தம் திருக்குறள் படைப்பில் செய்யுள் பாங்கும் உள்ளது; கவிதைப் பாங்கும் உள்ளது.

"முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்” (1239)

இக்குறளில், முயக்கு, தண்வளி, போழ, பசப்பு' என்னும் இலக்கியச் சொற்கள் கூர்ந்து பொருள் காணப்பட வேண்டியவை. இவற்றாலும், உள்ளீடான கருத்தாலும் இக்குறள் ஆழ்ந்து கண்டு பொருள் காணும் பாங்குடையதா கிறது. இது செய்யுட் பாங்கு.

இதே கண்ணைப் பற்றிக் குறள் ஒன்று உள்ளது. காதலி தன் காதலனை நோக்கி ஒடும் தன் நெஞ்சைப் பார்த்துப் பேசுகின்றாள்; 'நெஞ்சே! என் கண்ணையும் கொண்டு செல்' என்பவள் அதற்குக் காரணமும் கூறுகிறாள்:

"கண்ணும் கொளச்சேறி நெஞ்சே; அவைஎன்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று"(1244)