பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கோவை, இளஞ்சேரன்

35.

தின் அடக்கமாகத்தான் ’அறிவறிந்து' என்னும் சொல் ஆக்கப்பெற்றது.

எனவே, அறிவு அறிந்த என்பதற்கு 'ஆக்கத்தைத் தரும் அறிவை அறிந்த' என்பது பொருளாகும். இவ்வறிவுச் செயற்பாடுதான் ’அறிவியல்’ எனப்படுகின்றது.

இக்கருத்திற்கு உரமூட்டுகின்றது அடுத்தொரு குறள்:

“செறிவறிந்த சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்“
(123)

என்னும் குறளிலும் 'அறிவறிந்து' என்னும் சொல் அமைந்துள்ளது.

இக்கால அறிவியலின் விளைச்சல் ’செறிவறிந்த சீர்மையைப் பயப்பது’ என்பதை அறிவோம். புதிய கருத்துக்கள் செறிந்த சீர்மைகளே அறிவியலின் கண்டு பிடிப்புகள். இவ் வகையிலும் 'அறிவறிந்த’ என்பது அறிவியலைக் குறிக்கும். இது அக்கால அறிவியலின் அடையாளச் சொல்லாகத் திருவள்ளுவரால் ஆக்கப் பெற்றுள்ளது. ”செறிவறிந்த சீர்மை” பெறுவதற்கும் ஒரு விதிப்பு வைத்துள்ளார் திருவள்ளுவர். அது “அறிவறிந்து ஆற்றின் அடங்கப் பெறுதல்”. இக்காலத்தும் அறிவியல் வல்லுநர் எவரும் தம் கண்டுபிடிப்பால் இறும்பூது எய்துவர். கண்டுபிடித்த முதல் உணர்ச்சியில் துள்ளியும் குதிக்கலாம். ஆனால் அக்கண்டுபிடிப்பை பயன்படுத்துவதன் நல்ல பண்பு நெறியாக அடக்கமே கொள்வர். அறிவியல் வல்லுநர்களின் வாழ்வியலைக் கூர்ந்து நோக்கினால் இந்த அடங்கும் உண்மை புலப்படும்.

எனவே, இரண்டாவதாக ’அறிவறிந்து’ அமைந்த இக்குறளும் இக்கால அறிவியற் பாங்கைக் குறித்துக் காட்டுவதாக உள்ளது.