பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

அறிவியல் திருவள்ளுவம்.

இதுபோன்று 'ஞாலம்' என்பதும் ஒரு காரணப் பெயர். 'ஞால்' என்பது 'தொங்கு' என்னும் பொருள் தருவது.

வானக்கோள் அறிவியலில் கோள்கள் யாவும் தனித் தனியே வானத்தில் தொங்கிக்கொண்டு இயங்குகின்றன. தொங்குவது என்றால் ஒரு கயிற்றில் கட்டப்பட்டிருக்க. வேண்டுமன்றோ? அக்கயிற்றின் ஒருமுனை மேலும் மறுமுனை தொங்கும் பொருளிலும் பொருத்திக் கட்டப் படவேண்டும்.

ஆம், ஞாலத்தைத் தொங்கவிட்டிருக்கும் கயிறு ஈர்ப்பு ஆற்றலாகும். ஞாயிற்றின் ஈர்ப்பு ஆற்றல் மேல் முனை. அந்த ஈர்ப்பில் அகப்பட்டாலும் ஞாயிற்றை ஒட்டாமல் ஞாலத்தின் ஈர்ப்பாற்றல் காப்பாற்றிக் கொள்கிறது. இந்த ஈர்ப்பாற்றல் கயிற்றின் கீழ்முனை. இது ஞாயிற்றிலிருந்து பிரிந்த கோள்களுக்கெல்லாம் பொருந்தும்.

உலகம்-ஞாலம் சுழன்று சுற்றுகிறது என்பதும், அது ஞாயிற்றின் ஈர்ப்பால் பிணைக்கப்பெற்று உலகின் ஈர்ப். பால் ஞாயிற்றை அடையாமல் தொங்குகிறது என்பதும் 15ஆம் நூற்றாண்டின் கண்டுபிடிப்புகள்.

தமிழ்ப்பெருஞ் சான்றோர் தம் அறிவியல் கூர்மையால் ‘உலகம், ஞாலம்’ என்னும் சொற்களைப் படைத்தனர். இவ்விரு சொற்களும் அவற்றின் பொருள் ஆழத்துடன் கூர்ந்து நினைவுகூரத்தக்கவை.

தொங்கும் உருண்டை என்னும் உள்ளிட்டுப் பொருளுடன் 'ஞாலம்' என்னும் சொல்லைத் திருவள்ளுவர் தம் குறட்பாக்களில் பெய்தார். ஆனால் 'ஞாலம்' என்னும். சொல் திருவள்ளுவரால் படைக்கப்பட்ட சொல் அன்று.