பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்

காளியும் மாறி மாறி ஆடுகின்றனர். ஒருவருக்கு ஒருவர் சளைக்காது ஆடுவதனால், வெற்றி தோல்வி யாருக்கு என்று நிர்ணயிக்க முடியவில்லை. இந்த நிலையில் ஆடும் பெருமானின் காதில் அணிந்திருந்த குழை ஒன்று கழன்று கீழே விழுந்து விடுகிறது.

ஆட்டத்தை நிறுத்திக் குழையை எடுக்க விரும்ப வில்லை இறைவன். ஆட்டத்தோடு ஆட்டமாகவே, தன் இடக்காலை தரையில் ஊன்றி, வலக்காலின் பெரு விரலாலே குழையை எடுத்து, அக்காலை அநாயாசமாக உயர்த்தி காதிலே குழையைப் பொருத்தி விடுகிறான். இப்படி ஊர்த்துவ தாண்டவம் ஆடிய ஆட்டத்தை பெண் பாலான காளியால் ஆட முடியவில்லை.

அதனாலே தன் தோல்வியை ஒப்புக் கொண்டு, தில்லையை விட்டே ஓடி, எல்லைக் காளியாக நின்று விடுகிறாள் என்று கதை. இதைத்தானே திருவள்ளுவர் இழை நக்கி நூல் நெருடும் ஏழை அறிவேனோ குழை நக்கும் பிஞ்ஞகன் கூத்து என்று, குறிப்பாக உணர வைத் தார் என்பர். இந்த ஊர்த்துவ நடனத்தை கண்டு தானே,

            தா ளொன்றால் பாதாளம்
                  ஊடுருவி, நீள் விசும் பில்
            தாளொன்றால் அண்டம்
                  கடந்துருவி - தோள் ஒன்றால்
            திக்கனைத்தும் பேரி
                  திறன் காளி காளத்தி
            நக்கனைத்தான் கண்ட
                  நடம்

என்று நக்கீரரும் பாடுகிறார்