பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



30

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்

வணக்கம் செய்த பின்பே தேர் நகர்ந்தது; 'திரிபுராந்தகர்' என்று பெயர் பெற்றார். தந்தை பாடுதான் இப்படி என்றால் தம்பி பாடும் இதே கதைதான். கோலக் குறமகள் வள்ளியை மணக்க விரும்பிய குமரனும் அண்ணன் விநாயகரை மறந்து விட்டான். அவ்வளவு தான்; எத்தனையோ இடையூறுகள் வள்ளியை மணக்க - ஏன்? - அவள் சம்மதமே பெற. கடைசியில் உணர்ந்தான். முருகன் தன் தவறை, அண்ணாவைப் பிரார்த்தித்தான் அன்போடு. அவரும் சமய சஞ்சீவியாக ஆனை உருவிலேயே வந்து, தம்பி விரும்பிய பெண்ணை, ஆம் வள்ளியை அவனுக்கு மணம் முடித்து வைக்கிறார்.

சரிதான், எல்லாத் தேவர்களும் - ஏன்? எல்லா மனிதர்களுமே பிள்ளையார் குட்டு குட்டி விட்டுத்தான் தங்கள் காரியங்களைத் துவக்குகிறார்கள். பிள்ளையார் சுழி போடாமல் எதையுமே எழுதத் தமிழன் முனைவ தில்லை. இப்படி முன்னவர்க்கும் முன்னவனாய் நிற் கின்றவர், பிள்ளையார். அதனால்தான் சிவன் கோயிலில் மட்டுமல்ல விஷ்ணு கோயிலிலுமே அக்ர ஸ்தானம் கிடைத்து விடுகிறது, அவருக்கு. சிவன் கோயிலில் பிள்ளையாராக, விநாயகராக, கணபதியாக முன் நிற்பவர் தான் பெருமாள் கோயிலில் தும்பிக்கை ஆழ்வாராக கோபுர வாயிலிலேயே அமர்ந்து விடுகிறார்; எல்லோரும் வனங்கும் முதல் தெய்வமாக ஆகிவிடுகிறார்.

இப்படி தமிழ் நாட்டிலேயே காணும் விநாயக வணக்கம் பிறநாடுகளுக்கும் பரவியிருக்கிறது. கடல் கடந்தும் சென்றிருக்கிறது. எல்லோராக் குகையில் எழுந் தருளியதோடு நின்று விடாமல், குஜராத்திலும் ஜைனர்கள் மாத்திரம் என்ன, பெளத்தர்களுமே விநாயகரை வணங்கி வருகிறார்கள். கணபதி இருதயம்' என்னும் மந்திரத்தை உருவேற்றுகிறார்கள். இத்துடன் ஜாவாவில், ஜப்பானில்,