பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

மோகத்தை, அன்பின் வேகத்தை, பண்பின் ஒய்யாரத்தை எப்படி ஒவியத்துள் கொண்டு வர முடியும்? குழந்தை போன்றவர் தொண்டைமான். உத்சாகம் வந்துவிட்டால் அதை அமுக்கி மறைக்கத் தெரியாது தொண்டைமானுக்கு. குழந்தை போலவே விழுந்து விழுந்து சிரிப்பார். அவர் சிரிக்கிற சிரிப்பைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். பார்க்கப் பார்க்க பரவசமாக இருக்கும் பார்க்கின்றவர்களுக்கு. அறுபது வயதை எட்டிய ஒருவர் இப்படித் துடிப்பாக இருக்கிறாரே என்று இருபது வயது இளைஞர்கள் கூட வியப்பார்கள். அப்படி வாழ் நாள் முழுவதும் கலகலப்பாகவும் சுறு சுறுப்பாகவும் இருந்தவர் தொண்டைமான்.

முப்பது வருஷங்களுக்கு மேலாக அரசுப்பணியில் இருந்தவர் தொண்டைமான். ரெவினியூ இன்ஸ்பெக்டர் பதவியிலிருந்து, வட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், உதவி மாவட்ட ஆட்சியர், மாவட்ட ஆட்சியர் என்று உத்தியோக உலகை அலங்கரித்தவர் அவர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அவர் போய் பணியாற்றியிருக்கிறார். உத்தியோக சம்பந்தமாக இருந்த பணியாற்றிய இடங்களில் எல்லாம் தமிழ்ச் சங்கங்களை நிறுவுவார். கம்பர்விழா, வள்ளுவர் விழா, தமிழ் விழா என்று கோலாகலமாகக் கொண்டாடுவார். நந்தவனம், பசுமடம், கோயில், தமிழ் மன்றம், கருத்தரங்கம், பட்டிமன்றம், ஊர் ஒற்றிமை, சுத்தம் சுகாதாரம் அவ்வளவும் தொண்டை மானின் புண்ணியத்தில் அங்கங்கே எழுந்து நிற்கம்.