பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காமத்துப்பால்

திருக்குறள் காமத்துப்பால் பலரை மிரட்டியிருக்கின் றது. திருவள்ளுவரா இதனைப் பாடினார்! இவ்வாறு பாடினார்! அவர் பாடலாமா? என்றெல்லாம் எண்ணச் செய்துள்ளது, பேசச்செய்துள்ளது. அறத்துப்பால் பொருட்பால் மட்டும் கற்றவர் உண்டு. அம்மட்டும் பாடஞ் சொன்னவர் உண்டு. திருக்குறளை இலத்தீன் மொழியில் பெயர்த்த வீரமா முனிவர் (பெஸ்கி) என்னும் இத்தாலி நாட்டுத் துறவியார் கூட காமத்துப்பாலை விட்டுவிட்டார்.

ஏனைய பால்களினும் முதலில் காமத்துப்பால்தான் பரவவேண்டும்; உலகெங்கணும் பரவவேண்டும். பரவினால், விலங்குகள் போலவே மக்களிடம் இன்று காணப்படுகின்ற இழிநிலைக் காம உணர்ச்சி மாறும். மணவிலக்குக் குறைந்து மறையும். ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்ற உயரிய வாழ்வுமுறை உலகெங்கணும் நின்று நிலைக்கும். அதற்கு வழிகோலுகிறது வள்ளுவரின் காமத்துப்பால். இதனினும் இவ்விருபதாம் நூற்றாண்டில் செய்யவேண்டிய தலையாய பணி வேறு யாதோ? வீடு திருந்தின் நாடு திருந்தாதா? இனிக் காமத்தைப் பற்றிச் சிறிது ஆய்வாம்.

காம உணர்வு பசியுணர்ச்சியைப்போன்ற தொன்றாம். ஆயினும், அவ்வளவு கொடிய தன்று; அதற்கு அடுத்த வரிசையில் நிறுத்தலாம். பசியில்லாதவர் இலர்; காமம் இல்லாதாரும் இலர்; பசியை ஒழித்தவர் இலர்; காமத்தை ஒழித்தவரும் இலர். பசியை எவராலும் ஒழிக்கவும் முடியாது;