பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

43


தன் கீழ் உள்ளார்க்கும் எளிய இரவலர்களுக்கும் ஏற்ற உதவிகளைச் செய்தலாம். இதற்குத் தொல்காப்பியம், நன்னூல் ஆகிய இலக்கண நூல்களிலிருந்து ஆதாரமும் அங்குக் காட்டியிருக்கிறேன். அடுத்தது அறிவு, ஒருவன் ஒழுங்காகக் காரியம் பார்க்கவில்லையென்றால் - நடந்து கொள்ளவில்லையென்றால், "உனக்கு அறிவு இருக்கிறதா?" என்று கேட்பது உலகியல். அரசனுக்கு இது மிக மிக வேண்டுமே! இறுதியாக ஊக்கம், ஆக்கத்திற்குக் காரணமான ஊக்கத்தைப் பற்றிப் பேசவும் வேண்டுமோ?

இந்நான்கும் அரசற்குச் சில நாள் சிலவேளை இருந்தால் போதாது; எஞ்ஞான்றும் எஞ்சாது நின்று நிறைந்து நிலைத்திருக்க வேண்டும்; அதுதான் அரசற்குத் தகுதி!

அறத்துப்பால்
இல்லறவியல் - இல்வாழ்க்கை
துறந்தார் முதலோர்க்குத் துணை
"துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை"

(பதவுரை) இல்வாழ்வான் என்பான் - இல்லறத்தான் என்று சொல்லப்படுபவன். துறந்தார்க்கும் - (பற்றுக்களைத் துறந்த பெரியாருக்கும். துவ்வாதவர்க்கும்--(ஏழமையால் எவ்வித இன்பத்தையும்) அனுபவிக்கமுடியாத ஏழை எளியவருக்கும், இறந்தார்க்கும் - (ஆதரவின்றித் தம் பார்வையில்) இறந்து கிடப்போருக்கும் (அஃதாவது அனாதைப் பிணங்களுக்கும்.) துணை - (தக்க) துணையாவான்,