பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

சமுதாயத்தின் சிறந்த கலைகள் சிற்பம், ஓவியம், நாட்டியம் என்பவைதாம். இதில் ஒரு சிறப்பு என்னவென்றால் இவையும், இவற்றோடு ஒன்றிய கவிதையும் இசையும் சமயச் சார்புடையவைகளாகவே வளர்ந்திருக்கின்றன. அதனால்தான் இக்கலைகள் அனைத்துமே நாட்டில் எழுந்த கோயில்களைச் சுற்றிச் சுற்றியே வளர்ந்திருக்கின்றன.

கோயில்கள் என்ற உடனேயே நம் நாட்டுக் கோயில்களும், அதன் நிர்மாணமும் அங்கு வளர்ந்த கலைப் பெரும் செல்வங்களும் நம் கண்முன் வந்து போகும். பாரதத்தின் சிற்பச் செல்வங்கள் எல்லாம் நம் கோயில்களுக்குள்ளேயே பொதிந்து வைக்கப்பட்டிருக்கின்றன என்றே சொல்லலாம். சைவக் கோயிலானாலும் சரி, சமண பௌத்த ஆலயங்கள் ஆனாலும் சரி எல்லா இடத்திலும் சிற்பங்கள் நிறைந்தே இருக்கக் காண்கிறோம். 'சித்திரத்தில் மிக உயர்ந்த சிற்ப நூலின் அற்புதம் சின்னச் சின்ன ஊரில் கூட இன்றும் எங்கும் காணலாம் என்பது இன்றைய கவிஞன் வாக்கு. வடநாட்டில் ரிஷிகேசம் ஆனாலும், ஹரித்வார் ஆனாலும், காசி ஆனாலும், கயா ஆனாலும், கஜுராஹோ ஆனாலும், கல்கத்தா ஆனாலும், புவனேசுவரம் ஆனாலும், ஜகந்நாதம் ஆனாலும், எங்கும் சிற்ப வடிவங்களே நிறைந்திருக்கக் காண்கிறோம். குடை வரைகள் எல்லாம் ஒரே சிற்ப வடிவங்கள் தாம். எல்லோரா குடை வரைகளுக்குச் சென்றால் அதிலும் கைலாய நாதர் குடைவரையைக் கண்டால் நாம் நிற்பது இவ்வுலகில் தானா என்றே ஐயம் எழும். 'இப்படியன் இந்நிறத்தன் இவன் இறைவன் என்று எழுதிக் காட்ட ஒண்ணாதவனே கடவுள்' என்று!

16