பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னுரை
டாக்டர் இரா,நாகசாமி எம்.ஏ.
(தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறை இயக்குநர்)

ரு நாட்டில் கலை சிறந்து விளங்கியது என்றால் அந்நாட்டு மக்கள் கலையறிவு நிரம்பித் திகழ்ந்தார்கள் என்று தான் பொருள். கலைத்திறன் உடையவர்தாமே கலையைப் போற்ற முடியும்? ஒரு நாட்டு வரலாற்றில் எப்பொழுதும் கலையறிவு நிரம்பி நிற்கும் என்பதற்கு இல்லை. ஒரு காலத்தே ஓங்கி நிற்கும். பிற்காலத்தே குறைந்தும் நிற்கும். அதுபோன்ற காலங்களில் சிறந்த கலா ரசிகர் தோன்றி மக்களிடையே கலை ஆர்வத்தை அதிகரிக்க முனைந்தால்தான் கலை மறுமலர்ச்சி அடையும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சிற்பக் கலையிலும், கட்டிடக் கலையிலும் ஈடுபாடு கொண்டிருந்தவர்கள் இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் மிகச் சிலரே இருந்தனர் என்றுதான் கொள்ள வேண்டும். திரு, ஆனந்த குமாரசாமி டி.ஏ. கோபிநாதராவ் ஷோவோதுபரே, போன்ற தமிழ்க் கலைகட்கு தொண்டாற்றிய தலைசிறந்த பெரியார்கள் இருக்கத்தான் செய்தார்கள். அவர்கள் எழுதியவை எல்லாம் ஆங்கிலத்தில் இருந்ததால் அவர்கள் உலகப் புகழ் பெற்றனர். ஆனால், தமிழ் பேசும் மக்கள் அவற்றை நன்கு அறிந்து சிற்பச் செல்வங்களை போற்றும் வகையில் தமிழில் எழுந்த நூல்கள் இல்லை என்றே சொல்லிவிடலாம்.