பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

களுக்கு முன்னர் இவற்றை தோற்றுவித்தவர்களின் உயிர்த் துடிப்பை நம் கண்முன் கொணர்ந்து காட்டும் ஆற்றல் பெற்றவை அக்கட்டுரைகள்.

தன் அண்மையில் உள்ள கலைப் படைப்புகளை கண்டு ரசிக்கும் ஆற்றல் பெற்றவன்தான் வேறு பல நாட்டு கலைகளையும் கண்டு போற்ற முடியும். அவன்தான் இடத்தையும், காலத்தையும், மொழியையும் கடந்து நிற்க முடியும். பாஸ்கரத் தொண்டைமான் அவர்கள் தமிழகக் கலைச் செல்வங்கள் அனைத்தும் கண்டு இன்புற்றவர். தமிழ் இலக்கியங்களின் வாயிலாகவே கண்டு போற்றியவர். ஆதலின் தமிழ்நாட்டுக்கு அப்பாலுள்ள பல பகுதிகளில் உள்ள கலைகளையும், ஆர்வத்தோடு கண்டு போற்றியிருக்கிறார். ஆதலின்தான்,

பாரத பூமி பழம் பெரும் பூமி
நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்

என்ற அமரகவி பாரதியின் வாக்கைக் கோலாகக் கொண்டு ஆங்காங்கு மலர்ந்த கலைகளை நமக்குச் சுட்டிக் காட்டுகிறார். 'தேசிய ஒருமைப்பாட்டைப் பற்றி இன்று அதிகம் பேசும் நாம், எவ்வளவோ காலத்திற்கு முன்னாலேயே சமயம் மூலம், கலை மூலம் அந்த ஒருமைப்பாட்டை உருவாக்க நமது கலைஞர்களும் அவர்களை ஆதரித்த மன்னர்களும் முயன்றிருக்கிறார்கள் என்று அறிகிறபோது மிக்கதொரு உவகையே அடைகிறோம்' என்று கூறுகிறார்.

இந்நூலில், பாரத நாட்டின் பல்வேறு பகுதிகளில் காணப்பெறும் சிற்பச் செல்வங்களைப் பற்றி அவர் வானொலியில் பேசியவை கட்டுரைகளாக இடம் பெறுகின்றன. இக்கட்டுரைகளைப் படிக்கும்போது நம்மை நேரே ஆங்காங்கே அழைத்துச் சென்று காட்டுவது போலவே தோன்றுகிறது.