பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புறப்பாடு

11

"ஆம்" என்றேன்.
“எந்தக் காலேஜில் படித்தீர்கள்?"
“காலேஜில் படிக்காத எம். ஏ."

அவருக்குச் சந்தேகம் உண்டாயிற்றோ, வியப்பு ஏற்பட்டதோ, எனக்குத் திட்டமாகத் தெரியவில்லை. தனியாகப் படித்துப் பட்டம் பெற்ற கதையைக் கொஞ்சம் விளக்கினேன். அந்த மூன்று பக்கங்களையும் படிக்க அவருக்குப் பொறுமை இல்லை; சில கேள்விகள் கேட்டார். அவருக்கு அது பழக்கம். நான், "எல்லாம் அதில் எழுதியிருக்கிறேன்" என்றேன். இது எனக்குப் பழக்கம். ஏதோ பேருக்குச் சில புதிய கேள்விகள் கேட்டார். “சொத்து ஏதாவது உண்டா? நிலம் உண்டா? வீடு உண்டா?" என்றெல்லாம் கேட்டார். 'ஆகா! எத்தனை அக்கறை இவர்களுக்கு நம்மைப்பற்றி!' என்று எண்ணினன்.

கடைசியில், "நீங்கள் போகலாம்” என்றார்.

"பாஸ்போர்ட்டு வேண்டுமே!" என்றேன்.

"உங்கள் விலாசத்துக்கு வரும்" என்று சொன்னர்; என் நன்றியறிவைத் தெரிவித்துக்கொண்டு புறப்பட்டேன். பகல் 11-30 மணிக்குப் போனவன் மாலை 4.30 மணிக்கு அங்கிருந்து மீண்டேன். இதைப்பற்றிச் சில நண்பர்களிடம் சொன்னபோது அவர்கள், “நீங்கள் அதிருஷ்டசாலி. இதற்குள்விட்டார்களே!"என்றார்கள்.

பாஸ்போர்ட்டு வாங்கினால் மட்டும் போதாது. விஸா என்ற ஒன்று வேறு வாங்க வேண்டும். பாஸ்போர்ட்டு இங்கிருந்து செல்ல அநுமதி தருவது. இலங்கைக்குள் போக அநுமதி தருவது விஸா. பாஸ்போர்ட்டை அனுப்புச் சீட்டு என்றும், வீஸாவை