பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பத்தினித் தெய்வம்

43

நெல்லாக விளையுமாம். கேட்டதற்கு ஊமை விடை கூறுவானாம். குருடன் கண்பார்வை பெறுவானாம். கடலிலே சிப்பியில் உண்டாகும் முத்து ஆற்றிலே உண்டாகுமாம்.

இவ்வாறே கண்ணகியைப்பற்றிப் பல நாடோடிப் பாடல்கள் வழங்குகின்றன. சின்னப் புலவன் என்னும் கவிஞன் 'அம்மன் பள்ளு'[1] என்று ஒரு பிரபந்தம் பாடியிருக்கிறான். அதில் கண்ணகியின் கதையைச் சுருக்கமாகச் சொல்கிறான். கண்ணகி காளியின் அவதாரமென்றும், பாண்டியனுக்குக் கிடைத்த மாங்கனியிலிருந்து பிறந்தவளென்றும் அந்தப் பாட்டுக் கூறுகிறது. நம் நாட்டில் வழங்கும் 'கோவலன் கதை' என்ற நாடோடிக் காவியமும் அதே மாதிரிதான் சொல்கிறது.

கண்ணகி தெய்வத் தன்மையுடையாள் என்ற நினைவு ஆழமாகப் பதியப் பதிய, அவளுக்கு மூலம் சக்தி, காளி, துர்க்கை என்ற கற்பனை பின்னாலே எழுந்திருக்க வேண்டும். நம்பிக்கை சிதையாமல் இருக்க இப்படியெல்லாம் கற்பனைகள் உண்டாவது வழக்கமே.

தமிழ் நாட்டிலே தோன்றிய கண்ணகி வழிபாடு இந்த நாட்டில் மறைந்து போக, இலங்கையில் அது இன்னும் சிறப்பாக இருப்பது ஆச்சரியந்தான்.

கொழும்பு மியூசியத்தில் உள்ள கண்ணகி திருவுருவத்தில் தெய்விக அமைதி நிலவுகிறது. அதைப் பார்த்தபடியே சிறிது நேரம் நின்றேன்.


  1. யாழ்ப்பாணம் கி. சதாசிவ ஐயர் பதிப்பித்த 'வசந்தன் கவித் திரட்டு'-பக்கம், 59.