பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

ஆத்மா சிப்பிக்குள் போடப்பட்ட முத்து போல் இருக்கிறது. பளிச்சென்று இது வெளிப்படுவதுமில்லை; தெளிவாக, வெளிப்படையாகத் தெரிவதுமில்லை. அதனால் இறைவன் அளித்த ஆத்மாவின் தன்மைகளை நம்முடைய அறிவால் உய்த்துணர்ந்து, தெளிந்து இறைவனளித்த ஆத்மாவின் ஆற்றல் எந்த அளவுக்கு நம்மிடம் பொதிந்துள்ளது என்பதை ஆய்ந்து தெளிய வேண்டும். மனித ஆத்மாவின் வீரியத்தை வெளியே கொண்டு வருவதற்காக நாம் செய்யும் முயற்சி வினையே மெய்ஞ்ஞானம். அதுவே மெய்யான ஞானம். அதுவே ஆன்மீக உணர்வின் முழுமையான வெளிப்பாடு.

ஆத்மாவின் வீரியத்தை அறிதலே மெய்ஞ்ஞானம்

இறைவனின் பிரதிநிதியான மனிதன் தன்னுள் இறைவனால் பொதியப்பட்ட ஆத்மாவைப் பற்றிய ஆய்வின் மூலம் - பயிற்சி வாயிலாக ஆன்ம ஆற்றலை முழு வீச்சில் வெளிப்படுத்தும் ஆத்ம சோதனை முயற்சியில் ஈடுபட்டவர்கள்தான் சூஃபிமார்கள். இந்த ஆத்ம சோதனை முயற்சிக்கே தங்கள் முழுவாழ்வை ஒப்படைத்து, இறையுணர்வு வளத்தால் இறை நெருக்கம் பெற்றவர்கள் இம்மெய்ஞ்ஞான மேதைகள்.


உள்ளத்துள் பொதிந்துள்ள ஆத்ம ஆற்றலைப் புரிந்து கொண்டால் இறைவனையே எளிதாக அறிந்து கொள்ளலாம். எனவேதான் நாயகத் திருமேனி (சல்) அவர்கள் 'தன்னை உணர்ந்தவனே தலைவனை உணர்வான்' எனத் தெளிவாகக் கூறினார்கள். இதனை பெருமானார் (சல்) அவர்கள் வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு சிறு சம்பவத்தின் மூலம் தெளிவாக உணர்ந்தறியலாம்.


நபிகள் நாயகம் (சல்) அவர்கள் மக்காவில் வாழ்ந்த காலத்தில், தான் பெற்ற இறைச் செய்தியின் அடிப்படையில் ‘இறைவன் ஒருவனே; உருவமற்றவன்; ஆணும் இல்லை; பெண்ணும் இல்லை; அலியுமில்லை. அவன் யாராலும் பெறப்படவுமில்லை; அவன் யாரையும்