பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

செல்வதற்குமாறாக, வேட்டைக்கு ஏவிய வேட்டைக்காரனையே முதலில் கடித்துக் குதறிவிடும். இதையே அழகிய உவமான, உவமேயத்தோடு பொருள் பொதிந்த கவிதை வரிகளாக,

"வேட்டை பெரிதென்றே வெறிநாயைக் கைக்கொண்டு காட்டிற் புகலாமோ கண்மணியே ரகுமானே."

எனக் குணங்குடி மஸ்தான் கூறித் தெளிவுபடுத்துகிறார்.

இறைவனுடைய அருளைப் பெற வேண்டும்; அதற்காக இறை நெருக்கம் அடைய வேண்டும்; அப்போது இறைவன் தரும் வெகுமதிகளை நாம் பெற வேண்டும் என்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கக் கூடியவர் தன் உள்ளத்தை வேட்டை நாயாக வைத்துக்கொள்ள வேண்டும். அந்த உள்ளத்தில் எந்த விதமான தவறான உணர்வு, தவறான சிந்தனை, எண்ணங்களுக்கு, செயல்களுக்கு இடமே இருத்தல் கூடாது. இதயம் மாசு மறுவற்ற பளிங்கு போல் இருக்க வேண்டும். அப்போது, அந்த இதயமே வேட்டை நாயாக அமைந்து இறையருளைப் பெற்றுக் கொண்டு வந்து தரும். மாறாக உள்ளத்தில் காம, குரோத உணர்வுகளை வளர்த்துக் கொண்டு, அழுக்காறு, அவா, வெகுளி போன்ற உணர்வுகளை நிறைத்துக் கொண்டு, 'நான் இறையருளைப் பெறுவதற்கு முயற்சி செய்கிறேன்' என்றால், அவனை அவனது தீய உணர்வுகளும் சிந்தனைகளுமே பலி கொண்டு விடும். இத்தகையவர்கள் இறையருளை அறவே பெற முடியாது என்பதைத்தான் குணங்குடியார் தெளிவாக்குகிறார். ஆன்மீக உணர்வு பொங்க வாழ்வதே இறையருள் பெறும் பெரு வழி.

ஆன்மீகம் பற்றி அனைத்து நபிமார்களும்

இந்த ஆன்மீக உணர்வு பொங்க வாழும் வாழ்க்கை முறையைத்தான் நபிகள் நாயகம் (சல்) அவர்கட்கு முன்னதாக வந்த நபிமார்கள் உலகுக்கு உணர்த்திச் சென்றார்கள்.