பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2. கற்பித்தலில் வளர்ச்சியும் எழுச்சியும்
(TEACHING PROCESS)

கல்வியின் தரமும் பெருமையும், தரமுள்ள ஆசிரியர்களின் கற்பிக்கும் திறமையில் தான் அமைந்திருக்கிறது.

கற்பித்தல் என்பது சாதாரண காரியமல்ல

ஏதோ வகுப்புக்கு முன்னே வந்து நின்று, மாணவர்களிடம் புத்தகத்தில் உள்ள பாடத்தைக் கூறி, பரிட்சை வைத்து மதிப்பெண்கள் அளிக்கின்ற, அன்றாட நடைமுறை செயல்களும் அல்ல கற்பித்தல் என்பது.

கற்பித்தல் என்பது ஏதோ எந்திரம் போல் இயங்கி செயல்படுவதும் அல்ல, அது தந்திர நுணுக்கம் நிறைந்த, சாதுர்யம் மிகுந்த, எதிர் நீச்சல் போடச் செய்கின்ற, கை வந்த கலையாகும்.

மாணவர்கள் கூட்டத்தின் முன்னே வாய்ப்பந்தல் போடும் வேலையல்ல கற்பித்தல் என்பது. மாணவர்களின் அறிவு பூர்வமான, (Intellectual), உணர்வு பூர்வமான (Emotional) சமூகத் தொடர்பான (Social): ஆத்மார்த்த மான (Spiritual) மற்றும் உடல் வளர்ச்சிக்காக உதவும் வகையில் தான், கற்பிக்கும் காரியம் நடை பெறுகிறது.