பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

தான் கற்பிக்கப் போகின்ற பாடப் பொருளுக்கு ஏற்ப, ஓர் ஆசிரியர் உண்மையான பொருட்களை நேரில் காட்டி, நெஞ்சில் படும்படி நினைவில் நிறுத்தி, தன் கற்பித்தலை மேம்படுத்திக் காட்ட உதவுகின்ற பொருட்களையே துணைப் பொருட்கள் என்று கூறுகிறோம்.

இப்படிப்பட்ட துணைப் பொருட்களை நாம் 3 பிரிவாகப் பிரித்து அறியலாம்.

1. சமுதாய சூழ்நிலை (Community)

2. கிளைப் பாடத் திட்ட செயல்கள் : (Co-curricular Activities)

3. கண்டும் கேட்டறியும் உதவிப் பொருட்கள் (Audio - visual aids)

1. சமுதாய சூழ்நிலை

மனிதனை கூடி வாழும் மிருகம் என்பார்கள். மனிதர்கள் கூடி வாழ்வதைத் தான் சமுதாய அமைப்பு என்கின்றனர். தனிப்பட்டவர்கள் தங்கள் உரிமைகளைக் காத்துக் கொண்டு, பொதுமைகளுக்குக் கட்டுப்பட்டு, ஒன்றுபட்டு, உணர்வாலும் செயலாலும் கட்டுக் கோப்புடன் வாழ்வதையே சமுதாயம் என்கிறோம்.

சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக சகலவிதமான ஆக்க வேலைகள் மக்களால் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வேலைகளே கட்டிடமாக, கலா சாலையாக, காட்சியகமாக அமைந்து விடுகின்றன.

அத்தகைய இடங்களை மாணவர்கள், நேரில் பார்க்கிற போது, அவர்களால் உண்மையை உணர முடிகிறது.