பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35

காண்பவர்களுக்கு மகிழ்ச்சியும், மரியாதையும் ஊட்டக் கூடிய தன்மையில் அமைந்த தூய நல்லாடை, நிமிர்ந்த நடை தளராத ஆளுமை; பிறரைக் கவர்ந்திழுக்கும் சொல்லாற்றல்; கனிவான கணீரென்ற பேச்சு: நகைச்சுவை இழையோடும் பாங்கு; இவை நிறைய வேண்டும்.

அடுத்தவர்க்கு அறுவெறுப்பூட்டுகின்ற அங்க அசைவு; தேவையற்ற சைகைகள், பண்பாடில்லாத பழக்க வழக்கம் போன்றவற்றைத் தவிர்த்திருக்க வேண்டும்.

இத்தகைய வெளித்தோற்றமும், எடுப்பான நடை முறையும் கொண்டிருப்பதுடன், பற்பல உடலியக்க செயல் முறைகளையெல்லாம் சிறந்த முறையில் செய்து காட்டும் திறன்மிக்கவராகவும் ஆசிரியர் விளங்க வேண்டும்.

இதில் ஒரு சிறப்புக் குறிப்பு என்னவென்றால், ஆசிரியர் ஒருவரின் நடைமுறை, மற்ற மாணவர்களுக்கு முன் மாதிரியாகவும்; (Example) அவரே ஒரு முன்னோடியாகவும் (Model) அமைந்திருப்பது போல் இருப்பதுதான்.

2. நுணுக்க பொருளில் நுணுக்க நிலை

மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டிய பாடப் பொருளை முதலில் வரிசை முறையாக வகுத்து, நிரல்படுத்திக் கொள்ள வேண்டும்.

பயிற்றுவிக்கும் பாடத்தை, ஒரு நோட்புத்தகத்தில் குறிப்பெடுத்துக் கொள்ளலாம். அல்லது மனதில் பதிய வைத்துக் கொள்ளலாம்.

பயிற்றுவிப்பதற்கேற்ற துணைப் பொருட்கள், உதவி சாதனங்கள், முக்கியமான கருவிகள் ஆகியவற்றைத் தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.