பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45

கைகளை நீட்டி முன்புறமும், பக்கவாட்டிலும் அசைத்துப் பயிற்சி செய்ய, போதிய இடவசதியுடன் நிற்கச் செய்ய வேண்டும்.

மாணவர்கள் ஆசிரியரைப் பார்க்க, ஆசிரியர் மாணவர்களைப் பார்க்க வசதியாக இருப்பது போல, நிற்க வைத்து, நின்று கொள்ள வேண்டும்.

பொதுவாக கோடு அல்லது வரிசை முறையில் (Line or Rank) அல்லது அடுக்கு அல்லது பத்தி முறையில் (File or Column). அல்லது அரைவட்ட அணியமைப்பில், முழுவட்ட அமைப்பில் மாணவர்களை அணிவகுத்து நிற்கச் செய்யலாம்.

5. மாணவர்கள் வருகையறிதல் (Attendance)

மாணவர்கள் வகுப்புக்கு சரியாக வந்திருக்கின்றார்களா என்பதை, பல முறைகளில் கேட்டும், அழைத்தும் அறியலாம்.

அ) மாணவர்களின் பெயர்களைக் (Names) கூப்பிட்டு சரி பார்த்தல். இது ஏற்ற முறையாக இருந்தாலும், நேரம் அதிகமாகி விடும்.

ஆ) மாணவர்களுக்குத் தரப்பட்டிருக்கும் எண்களை (Roll Numbers) அழைத்து சரி பார்த்தல்.

இ) சுவற்றில் எண்களை எழுதி, அவரவர் எண்ணுக்கு முன்பாக, மாணவர்களை நிறுத்தி காலியாக இருக்கும் எண்ணைப் பார்த்து, வராத மாணவரைக் கண்டறிதல்.

பல பள்ளிகளில் விளையாடும் இடமே இல்லாத போது, இது போல அமைப்பு இருப்பதும் கிடைப்பதும் எளிதல்ல.