பக்கம்:கடவுள் பாட்டு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

வானம் நோக்கும் மலரிடத்து
மணத்தைப் போலே அன்பருளத்
தானம் எங்கும் நிறைந்தவனே
தலைவா, என்றன் பெருமானே!

10


கால மறிந்து பாலூட்டும்
கடமை மறவாத் தாயினைப்போல்
ஞாலத் தன்பர்க் கருள்புரியும்
நாளை யறிந்து நலஞ்சேர்ப்பாய்!
கோலங் காட்டா விட்டாலும்
குருவாய் அறிவைத் தெளிவித்து
மாலம் நீக்கி நன்னெறியில்
மனத்தை ஈர்ப்பாய் பெருமானே!

11


அழியும் பொருள்கள் பல கொண்டே
அழியா உலகைப் படைத்தாய் நீ
பிழியும் தேனைப் போலினிய
பெரிய குணத்தை யுடையவனே,
தொழிலைத் தவறா தியற்றிடுவார்
சுகத்தை யடையச் செய்திடுவாய்
தொழில்செய் யாத பேர்களுக்கே
துன்பம் என்று வகுத்தாயோ?

12


உள்ளி உள்ளித் தொழுவார்க்கே
உருவங் கொண்டு தோன்றிடுவாய்
எள்ளி எள்ளி நகைப்பவர்க்கோ
இன்மை யாகிச் சென்றிடுவாய்
அள்ளி அள்ளிப் பருகிடவே
ஆறாய் ஓடும் அருட்புனலே
துள்ளித் துள்ளி வந்தென் உளத்
தூரிய கோயில் புகுவாயே!

13
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடவுள்_பாட்டு.pdf/12&oldid=1201934" இலிருந்து மீள்விக்கப்பட்டது