பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

 கலைச்சொல்லாக்கப் பணியை மேற்கொள்வோருக்கு இருக்க வேண்டிய தகுதிப்பாடுகள் என்னென்ன என்பதிலும் நாம் கருத்துன்ற வேண்டியவர்களாக உள்ளோம்.

முதற்கண் எந்தத் துறை சார்ந்த சொல்லாக்க முயற்சி மேற் கொள்ளப்பட விருக்கிறதோ அந்தத் துறையில் சிறப்பறிவு பெற்றிருக்க வேண்டும். துறை சார்ந்த ஆங்கிலக் கலைச்சொல் உணர்த்தும் பொருள்துட்பத்தை நன்கு உணர்ந்து, தெளிந்து, அதனைத் தமிழில் முழுமையாக வெளிப்படுத்தத்தக்க வகையில் தமிழ் சொல்லாட்சி வல்லவராகவும் இருத்தல் வேண்டும். இதற்கு ஏதுவாக தமிழ் வேர்ச்சொற்களை இனங்கண்டு தேர்வு செய்யுமளவுக்கு தமிழ் இலக்கிய புலமை அல்லது பயிற்சிமிக்கவராக இருத்தல் வேண்டும். சரியான கட்டுக்கோப்பில் இலக்கண வரம்புகளுடன் சொல்லை வடித்தெடுக்குமளவுக்கு இலக்கண அறிவும் அவசியம். இலக்கியங்களிலோ அல்லது அன்றாட வழக் காற்றிலோ உரிய சொல் அல்லது வேர்ச்சொல்லை இனங்காணும் திறன் வேண்டும். உரிய சொல்லோ அல்லது வேர்ச்சொல்லே கிடைக்காதபோது புதிய சொல்லை உருவாக்க மொழியியல் அறிவு ஒரளவு அவசியம். இவையே கலைச்சொல்லாக்க வல்லுநருக்கு இருக்க வேண்டிய அடிப்படை தகுதிகளாகும்.

கலைச்சொல்லாக்கத்தில் முதல் உரிமையும் பொறுப்பும் உடையவர்கள் அவ்வத்துறை வல்லுநர்களே என்பதில் இரு கருத்துக்கு இடமில்லை. அவர்களில் போதிய தமிழறிவும் இலக்கியப் பயிற்சியும் இலக்கண அறிவும் உடையவர்கள் இப் பணியில் முழுமையாக ஈடுபடவேண்டும். அதிக அளவு இல்லை யென்றாலும் ஒரு சில சொற்களையேனும் உருவாக்கும் முயற்சியில் ஈடுபடலாம். இப்பணியில் ஒரு சிலர் முனைப்புக் காட்டியபோதிலும் பெரும்பாலான தமிழறிந்த துறை வல்லுநர்கள் "கலைச் சொற்கள் தமிழில் மிகுதியாக வேண்டும். அதில் நாம் உடனடிக் கவனம் செலுத்த வேண்டும்", என வேண்டுகோள் விடுவதிலும் அறிவுறுத்துவதிலும் ஆர்வம் காட்டி, காலத்தை ஒட்டுகிறார்களே தவிர, அப்பணி தங்களுக்குரியது எனக் கருதி செயல்படத்