பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னுரை

ஒரு மொழியின் உண்மையான வளர்ச்சி, எந்த அளவுகோலைக் கொண்டு மொழியியல் வல்லதுர்கள் அளவிட்டுக் கணிக்கிறார்கள் என்பது மிக முக்கியமான கேள்வி.

காப்பியம் முதலான மரபுக் கவிதை வடிவிலான இலக்கியப் படைப்புகளைக் கொண்டா அல்லது புதுக்கவிதை, சிறுகதை, புதினம், நாடகம் போன்ற நவீன புத்திலக்கியப் படைப்புகளைக் கொண்டா அல்லது அம்மொழியில் பெரும் எண்ணிக்கையில் உருவாக்கப்படும் பல்வேறு துறைகளைச் சார்ந்த ஏராளமான நூல்களின் பெருக்கத்தைக் கொண்டா?

இவை மட்டுமே மொழி வளர்ச்சியின் முழுமையான அளவு கோல்கள் ஆகா. 'மொழியில் புதிது புதிதாக வந்து இணையும் சொல் வளத்தை, குறிப்பாக, கலைச்சொற்களின் பெருக்கத்தைக் கொண்டே ஒரு மொழியின் வளர்ச்சியின் அளவு கணிக்கப்படும்' என்பதுதான் உலக மொழியியலார் தரும் முடிவு. இதிலிருந்து 'சொல் வளமே ஒரு மொழியின் உண்மையான மொழி வளம்' என்பது தெளிவாகிறது.

இன்றைய அறிவியல் வளர்ச்சிச் சூழலுகேற்ப, ஆயிரமாயிரம் கலைச்சொற்கள், குறிப்பாக அறிவியல், தொழில்நுட்பக் கலைச் சொற்கள் தமிழில் உருவெடுக்க வேண்டியது காலத்தின் இன்றிய மையாக் கட்டாயமாகும் எனக் கூற வேண்டியதில்லை.

'இன்றைய அறிவியல் துறைகளின் வளர்ச்சி முழுக்க முழுக்க மேனாட்டவர்களால் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்டது. அவற்றிற்கான அறிவியல் கலைச்சொற்களும் அவர்களாலேயே ஆங்கிலத்தில் படைக்கப்பட்டுள்ளன. அவை உலகினரால் 'உலகப் பொதுமொழி' போன்று பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றை நாமும் ஆங்கில வடிவில் அப்படியே ஏற்றுப் பயன் படுத்த வேண்டியதுதானே? தமிழில் எதற்குப் புதிதாகக் கலைச்சொற்கள்? வேண்டுமானால் விளக்கங்களைத் தமிழில் எழுதிக்கொள்ளலாம். முழுமையாகத் தமிழிலும் இதற்கான கலைச்