பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

தருவதால் ஏற்படும் இழப்பு எதுவுமில்லை. பயனோ ஏராளம், ஏராளம்!

எனவே, எழுத்தறிவின் உச்சத்தைப் பெறாத நம் மக்களிடையே அறிவியல் அறிவையும் உணர்வையும் அதிகரிக்க தாய்மொழியாம் தமிழ் மூலம் சொல்வதே சாலச்சிறந்ததாகும்.

அறிவியல் நுட்பங்களைத் திறம்பட விளக்கவல்ல மொழியாகத் தமிழ் அமைந்திருக்கிறதா என ஐயுருவோரும் இருக்கவே செய்கின்றனர். மொழியியல் பேரறிஞர் டாக்டர் கிரியர்சன் உள்ளத்தில் உருவெடுக்கும் சிந்தனைகளை மிக நுட்பமான உணர்வுகளை, எண்ணிய எண்ணியாங்கு, திறம்பட வெளிப்படுத்த வல்ல மொழியாகத் தமிழ் அமைந்திருக்கிறது எனப் புகழ்ந்துரைத்த தற்கொப்ப எத்தகைய அறிவியல்நுட்பச் செய்தியாயினும் அவற்றைச் சொற்செட்டோடும் பொருட்செறிவோடும் தமிழில் கலைச்சொல் வடிவில் சொல்ல முடிகிறது என்பதுதான் என் நாற்பதாண்டு காலக் கலைச் சொல்லாக்கப் பட்டறிவு உணர்த்தும் உண்மை. இதற்கு அடிப்படைக் காரணம் தமிழ் இயல்பிலேயே அறிவியல் மொழியாக, அறிவியலைத் திறம்பட உணர்த்துவதற்கான ஆற்றல்மிகு மொழியாக அமைந்திருப்பதுதான். இது நாமே அறிந்துணரா உண்மைநிலை.

தமிழ் மொழி வரலாற்றை, வரலாற்று வழி நுணுகி ஆராய்ந்தால், காலந்தொறும் தமிழ் பல்வேறு துறைக் கலைச் சொற்களை உருவாக்கி, வளர்ந்து வந்துள்ள வரலாறு தெள்ளத்தெளிவாகப் புலப்படும்.

‘காலத்தின் போக்குக்கும் தேவைக்குமேற்ப ஒருமொழி தன்னைத் தகைவமைத்துக் கொள்வதன்மூலமே வளர்ச்சியும் வளமும் பெறமுடியும்’ என்பது மொழியியல் வரலாறு. அவ்வகையில் சமயத்தாக்கம் ஏதுமில்லாத சங்க காலத்தில் அறிவியல் அடிப்படையில் சமுதாயப்பூர்வமாக அகம், புறம் என வளர்ந்த தமிழ், வைதீக சமய, சமண, பெளத்த, கிருத்துவ, இஸ்லாமியத் தமிழாக, தத்துவம் சார்ந்த சித்தாந்தத் தமிழாக வளர வேண்டிய தவிர்க்கவியலா சூழல். ஆங்கிலேயர் உறவால் அறிவியல் அடிப்-