பக்கம்:கரிகால் வளவன்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

புதத்தைச் செய்யவேண்டும். என் தங்கைக்குப் பிரசவ வலி எடுத்துவிட்டது. என் உள்ளத்திலும் வேதனை உண்டாகியிருக்கிறது. குழந்தை இன்னும் இரண்டு நாழிகை கழித்துப் பிறக்க வேண்டும். இப்போது பிறக்கக் கூடாது. இப்போது பிறப்பதை விடப் பிறக்காமலே இருக்கலாம். இதற்கு என்ன செய்வது?”

இரும்பிடர்த்தலையார் படபடவென்று பேசினார். ஆண்டில் முதிர்ந்த வைத்தியர் அவர் கூறியவற்றைக் காதிலே வாங்கிக்கொண்டார். யோசித்தார். தலையை இப்படியும் அப்படியும் அசைத்தார். அவர் என்ன சொல்லப் போகிறாரோ என்று இரும்பிடர்த் தலையார் ஆவலோடு அவரையே கவனித்துக் கொண்டு நின்றார். கிழவர் பேச ஆரம்பித்தார்.

“நீங்கள் சொல்வது சாத்தியமான காரியந்தான்.”

“அப்படியா! எப்படி, எப்படி?”

“பொறுங்கள். ஆனால் தாயின் உயிருக்குத் தீங்கு நேர்ந்தாலும் நேரலாம். பிரசவத்தைச் சில நாழிகைகள் தாமதப்படுத்த வழி உண்டு. அதனால் உண்டாகும் வேதனை தாய்க்கு அதிகம். முதலில் அதை அவள் தாங்கிக்கொள்ள வேண்டும். அந்த வேதனையால், பிரசவமானவுடனே தாயின் உயிருக்கு ஒருகால் ஆபத்து நேரலாம்.”

இரும்பிடர்த்தலையார் குறுக்கிட்டார்.

“குழந்தை உயிருடன் பிறக்கும் அல்லவா?”

“குழந்தை பூரண சுகத்துடன் பிறக்கும். தாயின் நிலையைப் பற்றித்தான் சொல்கிறேன்” என்று நிதானமாகப் பேசினார் வைத்தியர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/16&oldid=1340564" இலிருந்து மீள்விக்கப்பட்டது