பக்கம்:கரிகால் வளவன்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

சோழ நாட்டின் பெருமை மங்கியது. காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பும் குறையத் தொடங்கியது.

பகைவர் வர வர உரம் பெற்றனர். பாண்டிய மன்னனோடும், சேரனோடும் சேர்ந்து சூழ்ச்சி செய்தனர். சோழ இளவரசனாகிய குழந்தை எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். குழந்தை பிறக்கவே இல்லை என்ற வதந்தியைப் பரப்பினர். திருமாவளவன் வளர்ந்து வந்தான். தங்கத் தொட்டிலில் வளர வேண்டியவன் மரத்தொட்டிலில்கூட வளரவில்லை. எந்தச் சமயத்தில் குழந்தைக்கு அபாயம் நேருமோ என்ற பயத்தால் அவனைத் தாய் ‘மார்த் தொட்டில்’ இட்டு வளர்த்தாள். பனி நீரால் குளிப்பாட்டினாள். மகிழ்ச்சி பொங்க உடல் பூரிக்க நாளுக்கு நாள் ஆனந்தம் அடைய வேண்டிய அவள் ஒவ்வொரு கணமும் குழந்தைக்கு யாரால் என்ன தீங்கு நேருமோ என்று அஞ்சி நடுங்கினாள்; உள்ளம் சாம்பினாள்; உடல் மெலிந்தாள்.

தாயின் அன்பணைப்பிலே வளவன் வளர்ந்தான். காட்டிலே ஓடி வேட்டையாடி விளையாட வேண்டிய சிங்கக் குட்டி கூட்டிலே கிடந்தது. வளவனுடைய மேனி அழகும், துள்ளிக் குதிக்கும் தோற்றமும், துடியான பேச்சும் தாய் வயிற்றைக் குளிரச் செய்தன; அடுத்த கணம் தீயை மூட்டின. ‘கடவுளே! என் கண்மணி, சோழர் குலத் தோன்றல், இருக்க வேண்டிய நிலையில் இருந்து விளங்கும் காலம் வருமா?’ என்று அவள் அங்கலாய்த்தாள். “காலம் வரும்” என்று ஆறுதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/21&oldid=1232462" இலிருந்து மீள்விக்கப்பட்டது