பக்கம்:கரிகால் வளவன்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
3. ஏற்றிய விளக்கு

ரிகாலன் உயிரோடிருப்பது சிலருக்குத் தெரிந்தாலும் ஆபத்து என்ற எண்ணம் இப்போது இரும்பிடர்த்தலையாருக்கு வந்துவிட்டது. அவன் சிங்காதனம் ஏறுவது கிடக்கட்டும். உயிரோடு வாழ வேண்டுமே! அவனுக்கு இடையூறு ஒன்றும் வராமல் கண்ணை இமை காப்பது போல் பாதுகாப்பதைத் தவிர வேறு எந்தக் காரியத்தையும் செய்யக் கூடாதென்று இரும்பிடர்த்தலையார் உறுதி பூண்டார். காவிரிப்பூம்பட்டினத்திற்குப் போவதைக் கூட நிறுத்திக்கொண்டார். அங்குள்ள சான்றோர்கள் மிகவும் வருத்தம் அடைவார்கள் என்பதை அறிந்திருந்தும், கடவுள் விட்ட வழியே யாவும் நடக்கட்டும் என்று கருவூரிலேயே இருந்து விட்டார்.

அது புதிய ஊர்; ஆகையால் அவர்கள் ஊருக்குப் புதிய மனிதர்களாகவே இருந்தனர். சோழ இளவரசன் தம்மிடையே வாழ்கிறானென்பதை அந்நகரில் உள்ள மக்கள் அறிய வகையில்லை. யாரோ அகதிகளாக, பிழைக்க வந்தவர்களாக அவர்கள் அங்கே இருந்தார்கள்.

காவிரிப்பூம் பட்டினத்தில் அமைச்சர்களும் சான்றோர்களும் தழல்மேல் இருப்பவர்களைப் போலத் தவித்தார்கள். சோழ இளவரசன் விடு விடுவென்று வளர்ந்து சிங்காதனத்தில் அமர்ந்துவிட வேண்டுமென்ற வேகம் அவர்களுக்கு இருந்தது. நாட்டில் பலவகை வதந்திகளைப் பகைவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/32&oldid=1344674" இலிருந்து மீள்விக்கப்பட்டது